குளிர்நிலம் — வேர்ச்சொல்

எல்லாவற்றுக்கும் முன்னதாக, இந்த ஜப்பானிய பயணம் சுற்றுலா அல்ல. தொழில்முறைப்பயணம். வெறும் இரண்டு மாதங்கள் தங்குவதான திட்டத்தில் கிளம்பிவந்து கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு, இன்றுடன் (அக்-26–2015) ஒரு வருடம் நிறைவடைகிறது. இப்போதைய கணக்குப்படி வரும் மேமாதம் வரை இங்கு இருக்கக்கூடும், அல்லது அதற்கு மேலும் நீளலாம். பெரியதிட்டங்கள் ஏதுமல்லாது மெல்ல மெல்ல புது இடத்தின் பழக்கமில்லாத மனிதர்களின் அடையாளங்கள் முகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழகி அவர்களின் முகச்சுளிப்புகளை சந்திக்காமல் இணைந்து நீரோட்டத்தில் கலந்து காணாமல் போகும் காலங்கள் இவை. உண்மையில், வந்திறங்கிய முதல் நாளிலிருந்தே இதைக்குறித்து எங்காவது எழுதி வைக்கும் எண்ணம் எனக்கு இருந்தது. ஆனாலும், சிறப்பு குணமான சோம்பேறித்தனம் இத்தனை காலம் தள்ளிப்போட்டு இன்றைக்கு பொழுது அமைந்திருக்கிறது.

விடுமுறை நாட்களில், நண்பர்களின் தயவில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை விடுமுறைக்காலங்களில் அளந்திருந்தாலும், உடல் பழகியிருப்பது என்னவோ சென்னைக்கும் நெல்லைக்குமான பிரத்யேக வெயிலுக்குத்தான் எனத் தோன்றுகிறது. நினைவுதெரிந்த காலந்தொட்டே நெல்லையின் குளிர்கால மென்பனிக்கே மூக்குறிஞ்சித் திரியும் நோஞ்சால் உடல்தான் வாய்த்திருக்கிறது. போலவே மனிதர்களை அதிகம் நெருங்காத தனிமை விரும்பியாகத்தான் இருந்திருக்கிறேன். மொழியற்ற குளிர்தேசம் என்பது நிச்சயம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவம். இங்கே ஒவ்வொரு தெருவில் திரும்பவும் மனிதர்களின் உதவியைக் கோரவேண்டியிருந்தது. நல்லதொரு பனிக்காலத்தில் வந்திறங்கியதால் போர்வைகளுக்குள் மாதம் ஒரு முறையாவது சுருண்டு உடல் கொதிக்க விழுந்து என்னை மீட்டெடுக்க வேண்டியிருந்தது. இப்பொழுது கொஞ்சம் உடல் பழகியிருக்கிறது.

இங்கே வருதற்குமுன் வழக்கமான தயாரிப்புகளாக, இந்த நாட்டைப்பற்றி, இ ந் நாட்டின் வழக்கங்களைப் பற்றி, பொதுவான மன நிலை, மனிதர்கள், பழக்கவழக்கங்கள் பற்றி கொஞ்சம் இணையத்தை மேய்ந்தேன். பெரும்பாலும் உயர்வுநவிற்சிகள், மிரட்டல்கள். ஆடைவழக்கத்தில் தொடங்கி, ஒரு பொருளை கொடுத்துவாங்குவதுவரை ஏராளமான வியப்பூட்டும் கதைகள். மனதளவில் பெரும் அன்புடையவர்கள் என்றபோதிலும், இந்தப்பழக்கங்களை தொடர்பாக கறாராரவனர்கள் என்ற பிம்பமே உருவானது. ஆனால் வந்த சில நாட்களிலேயே இலகுவாக இணைந்துவிட முடிந்தது. பயப்படும் அளவு சடங்குகளைச் சுமப்பவர்களில்லை என்றறிந்தேன். ஆசுவாசம். ஒருவேளை இந்தியா குறித்து பிற நாட்டவர் கதைகள் எழுதினாலும், நம் வழக்கங்களைப் பற்றியும் இப்படியான கதைகளைத்தானே உருவாக்கிக் கொடுப்பார்கள் என்றொரு எண்ணம்தான் ஏற்பட்டது.

இந்தக் குறுந்தொடர், முதல்முறை தன் நிலத்தைவிட்டு வெளியே வந்த எளிய கிராமத்தானின் சொற்கள் என்பதால், இதில் மலருக்கு வாய்ப்பிளக்கும் குழந்தையின் தொனி வரக்கூடும். அல்லது என் ஊரில் ஏன் இதெல்லாம் நிகழ்வதில்லை என்ற நூற்றூக்கிழவனின் அங்கலாய்ப்பு இருக்கக்கூடும். ஆரம்பத்திட்டம் இரண்டு மாதங்களே என்பதால், முடிந்தவரை, விடுமுறைகளை புதிய இடங்களில், புதிய மனிதர்களுடன் கழிப்பதைப்பற்றிய கனவுகள் இருந்தன. சேமிப்பதைக் குறித்த எந்த எண்ணமும் இல்லை. செலவுகளை எண்ணிப்பார்க்கும் பொறுப்பு மன நிலை சுத்தமாகவே இல்லை. அதுவே பல இடங்களுக்கு இழுத்துச் சென்றது. வந்த நாளிலேயே எழுதத் தொடங்கியிருந்தால் இன்றைய மன நிலையிலிருந்து வேறுபட்டிருக்கும் எனத் தோன்றுகிறது.

இன்று, ஒருவருட காலத்தில், பயணங்களைத் திட்டமிடாமல் அமைத்துக்கொள்ள முடிகிறது. சிறு தடங்கல்களை, குழப்பங்களை சமாளிப்பதற்கான மனநிலையும், சில வார்த்தைகளும், மனிதர்களின் மீதான நம்பிக்கையும் வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில், அவ்வார இறுதிக்கான பயணம் திட்டமிடப்படாவிட்டால், கிளம்பிச் செல்வது குறித்த தயக்கங்கள் இருந்தன. இடங்களைப் பற்றிய புரிதலின்மை குழப்பங்கள் இருந்தன. இன்று அது இல்லை. அன்றைய நாளில் ஒரு புது நிலத்தில் எதை அறியவேண்டும், எதைத் தவிர்க்கலாம் போன்ற எண்ணங்கள் எழுந்ததில்லை, இன்று அது இருக்கிறது. ஜப்பானிய கோயில்கள் மூன்று மணி நேரம் கால் கடுக்க நின்று சன்னதியின் முன் நின்ற நிகழ்வுகள் இன்றைய நாட்களில் நிகழாது. நதிகளை, அதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பாலங்களை தேடி அலைவதில் நேரம் வீணாக்க இப்பொழுதெல்லாம் முடிவதில்லை. இப்படியான சொதப்பல்கள், குழப்பங்கள், சிறுபிள்ளைத்தனங்கள் பற்றித்தான் இந்த குறுந்தொடரில் எழுத எண்ணம். ஒரு வகையில் சிறு நாட்குறிப்பாகவும். முதலில் சில பதிவுகள் இதுவரை நடந்த கதை : வாரத்திற்கு ஒரு பதிவு வீதம் எழுதிவிட்டு, பிறகு அவ்வப்போது, நேரமும் புது இடமும் கிடைக்கும்போது தொடர எண்ணம்.

இந்தத் தருணத்தில் சென்னை நாவலூர் அறையைக் காலிசெய்து வீட்டிற்கான மூட்டைகளை அனுப்பிவிட்டு, கொண்டுவரவேண்டிய காகிதங்கள், பெட்டி சகிதம் ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்த பழைய என்னை நினைத்துக்கொள்கிறேன். கூடவே அந்தத் தருணத்தில் வழியனுப்ப வருவார் என நான் நினைத்திருந்த ஒரு பெண்ணின் முகத்தையும். அந்த முகம்தானே எல்லாவற்றிற்கும் இயக்கியாக இருக்கிறது.

Like what you read? Give லதாமகன் a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.