Kulirnilam5

உண்டாட்டுகளின் தேசம்

அரசியல் எல்லா நிலங்களிலும் உணவிலிருந்துதான் தொடங்குகிறது. என்னவிதமான உணவை உண்ணவேண்டும் என தீர்மானிப்பவர்களோ அல்லது உணவுச்சந்தையைக் கையில் வைத்திலிருப்பவர்களோதான் பெரும்பாலும் அரசுகளை நிர்மாணிக்கிறார்கள். அவற்றை மறைமுகமாக வளர்த்தெடுக்கிறார்கள். உணவுவலையின் மேலிருக்கும் மிருகம் அரசனாகிறது. மனிதர்களுக்கு உணவு வியாபாரத்தைக் கைப்பற்ற முடிந்தவர்கள் அரசர்களாக மாறுகிறார்கள். அரசர்களை உணவு ரீதியாக நெறிப்படுத்துவதாக முன்னேற்றுவதாகச் சொல்லி மதம் நுழைகிறது. வரலாறுகளைப் பொதுப்படுத்தும்போது இம்மாதிரியான முடிவுகளுக்கு நாம் வரமுடியும். ஜப்பான் பெளத்தம் பெரும்பான்மையாகக் கொண்ட தேசம். சைவ உணவுப்பழக்கம் மத அடிப்படைவாதிகளால் முன்னெடுக்கப்பட்டு சைவ உணவே பெரும்பான்மையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் எல்லா தீவு நிலங்களைப்போலவும் இங்கே மீனில் தொடங்கி மாட்டிறைச்சி வரை அசைவு உணவு முறைகள் பெரும்பான்மையாக இருக்கின்றன. மொழியைப்பற்றி பேசியதே உணவுக்கும் சொல்லலாம்.

அசைவ உணவு இங்கே ஆதிகுடிகளையுடையது (எல்லா இடத்திலும்தானே?). பெளத்தம் வெளியிலிருந்து வந்தது. வெளியிலிருந்து வந்தவற்றை தன்னுடன் இணைத்து தனக்கு வசதியான ஒரு இடைநிலை உருவாக்கத்தை இத்தீவு உருவாக்குவதை எல்லா காரணிகளின் மீதும் காணலாம். ஆங்கிலத்தை ஜப்பானியத்துடன் வளைத்து இணைத்துக்கொண்டதைப்போலவே. சைவத்தை வலியுறுத்தும் பெளத்தம், தங்களின் ஆதிவாழ்முறைகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப வளைத்து இணைக்கப்பட்டிருக்கிறது இக்காலங்களில் பிற நாடுகளைப்போலவே சைவ உணவுமுறை பரவாலாகி வருகிறது என்றாலும், புனிதம்/அபுனிதம் வகையறா பிரிவினைகள் உருவாகாமல் இருப்பதையே முக்கிய நிகழ்வாக சுட்டிக்காட்டவேண்டும். வெட்டிய ஆட்டை வேறெங்கோ கொண்டுபோய் சமைக்கும் நமது புனிதப்படுத்தல்களுக்கு நடுவில், பெளத்த புனிதத்தலங்களைச் சுற்றி மாமிச உணவுகளை , மென் — மது வகைகளை அனுமதிக்கும் நெகிழ்வுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அரசாங்க மதுக்கூடங்கள் மெல்ல மெல்ல வாழ்வியல் சீரழிவை நோக்கி கொண்டு செல்லும் தேசத்திலிருந்து வந்தவனுக்கு, இருபத்தி நான்குமணி நேரமும் மது கிடைத்தாலும் பெரும் சீரழிவை நோக்கி சென்றுவிடாத கலாச்சாரம் நிச்சயம் வியப்பை உருவாக்குகிறது. மதுஅடிமைத்தனம் தனிமனித பிரச்சினையாக மட்டும் குறுகி பொதுவெளியில் பிறரைத் துன்புறுத்தாத மன நிலைகளிலிருந்து நாம் கற்றுகொள்ள வேண்டியிருக்கிறது. அலுவலககொண்டாங்களில் மது ஒரு பங்கு வகிப்பதையும் நமதுகொண்டாங்களில் மது விலக்குதலுக்குரியதாக இருப்பதையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்கமுடிவதில்லை. தரமான மதுவும், விதிமீறல்கள் மீதான கூர்மையான கண்காணிப்பும் போதுமான பாதுகாப்பு வசதிகளும் சரியான முன்னெச்சரிக்கையுடன் உருவாக்கப்பட்டிருக்கவேண்டுமோ?

குளிர் நிலங்களுக்கும் இனிப்புகளுக்கும் ஒருவித பிணைப்பு இருக்கிறது போலும். கேரளாவில் சக்கரை தேங்காய்ப்பால், மலைப்பிரதேசங்களின் இனிப்பக வரிசைகள் என மெல்ல நூல்பிடித்துச் சென்றால், ஜப்பானியர்கள் குறைந்த காரம் கொண்ட உணவுகளுக்கு வந்து சேர்ந்துவிட முடியும். இனிப்புப்பண்டங்களின் மீதான இவர்களின் ஆர்வமும் மெல்ல புரிபடக்கூடும். ஆரம்ப நாட்களில் இந்திய உணவகங்களின் மீது ஈர்ப்பு கொண்டு, எங்கு சென்றாலும், அந்த நகரத்தின் இந்திய உணவகத்தில் ஒரு முறையாவது சாப்பாடு என வைத்திருந்தேன். ஆனால் 99% திருப்தி தந்ததில்லை.தேவையற்ற இனிப்பு. இந்திய உணவகங்கள் சிறு நகரங்கள் உட்பட எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. தொலைதூரத்து மலைப்பிரதேசங்களிலும் இறங்கும் ரயில் நிலையத்தின் எதிரிலேயே எங்காவது இந்திய கொடி பறந்து கொண்டிருக்கிறது. . பெரும்பாலும் வட இந்திய ரொட்டிகள், அதற்கு காரம் குறைத்து உருவாக்கப்பட்ட குழம்புகள். சோயா சாறு கலந்த ஜப்பானிய குழம்புச்சுவையை நெருங்கிய திடம் கொண்டவை இவை பிரியாணி ஓரளவு. தென்னிந்திய உணவகம் வேண்டுமெனில் ஏழு மலை ஏழுகடல் எங்காவது ராட்சசன்களின் கிளிக்கூண்டிற்குள் ஒளிந்திருக்கிறது. கூடவே அநியாய விலை. ஒரு மசால் தோசை இந்திய ரூபாய்க்கு எழுநூறு பக்கம் வருமென்று கேட்டாலே வயிறு நிறைந்துவிடாதா… ஓடு இந்திய அங்காடிக்கு. ;)

ஜப்பானியர்கள் பாம்புக்கறி சாப்பிடுபவர்கள் என்ற எண்ணம் எங்கிருந்து தோன்றியிருக்கக்கூடும் என எத்தனையோ முறை குழம்பியிருக்கிறேன். நூடுல்ஸ்கள் நம்மூரில் புழக்கத்திற்கு வருவதற்கு முந்தைய நாளில் பாட்டையாக்கள் கண்டு உருவாக்கிய கதையாக இருக்கலாம். அல்லது தன்னைத் தவிர எல்லாரும் காட்டுமிராண்டிகள் என நம்பிக்கொள்ள விரும்பும் மனிதர்களின் ஆழ்மன ஆசையாகக் கூட இருக்கலாம். இந்தியர்கள் பாம்பாட்டிகள் எனும் கதையை நம்புகிறவர்கள் மட்டுமே ஜப்பானிய பாம்புக்கறி கதைகளை நம்பவேண்டும் என்றே சொல்வேன்.

பெரும்பாலான உணவு வகைகள், இன்றைய திடீர் பிரபல முன்னோர்-உணவு முறையின் வகைகளை ஒத்தவை. ஆனால் நானறிந்து விலக்கப்பட்ட உணவென்று எதுவும் இல்லை. சுருக்கினால் கொழுப்புக்கு கறி, மாவுக்கு அரிசி/மாவு கூடவே காய்கறிகள், ஒரு சூப். எல்லா முழுச்சாப்பாடுகளிலிம் இந்த கலவை சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்க முடிகிறது. பொறிக்கப்பட்ட கறிவகைகள் பெரும்பாலும் அதிக எண்ணையில்லாமல் முட்டையிலும் பாலிலும் சோயாச்சாறுகளிலும் புரட்டப்பட்டு மென்மையாக வறுக்கப்பட்டவை. இந்த பொதுமைகளீலிருந்து விலகி கிடைக்கும் உணவுகள் பெரும்பாலும், கே.எப்.சி, மெக்டி, சப்வே பன்னாட்டு உணவங்காடிகள் கொண்டு வந்த பதார்த்தங்களிலிருந்து உள்ளூர் உணவுப்பொருட்களை மடித்து செரித்தவை.

உணவென்பது உண்டாட்டாக மாறுவதன் பின்னால் இடமில்லாத நெருக்கடியினால் உருவான உபவிளைவென்கிறார்கள். நண்பர்களைச் சந்திப்பதும், கூடிச் சிரிப்பதற்கும் பெரும் இடமில்லாத நெருக்கலான இருப்பிடங்கள், சந்திப்பிற்கான இடங்களாக உணவகங்களை மாற்றிவிடுகிறதென்று தோன்றுகிறது. வீட்டிற்கு அழைப்பதைப் போன்ற நட்பின் சடங்காக இரவுணவை வெளியெங்காவது சந்தித்து நிறைவுசெய்துகொள்வதாகத் தோன்றுகிறது. ஜப்பானிய மொழிவகுப்புகளை ஸ்டார்பக்ஸ் காபிக்கடைகளில் நடத்திக்கொண்டிருந்த மனிதரைப் பார்த்து அதிர்ச்சி உருவாகுதலிலிருந்து என்னை விலக்கிக் கொள்ள சில மாதங்கள் ஆயிற்று. சமைக்க சோம்பலான இரவுகளில் தனியே வந்து வெறும் உணவுகளை மட்டும் வேண்டும் என் தனிமையைப் பார்த்து நண்பர்களுடன் குடித்து உண்டுகொண்டிருக்கும் அவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கக்கூடும்.

உறை உணவுகளின் சந்தையை இப்பொழுதும் ஆச்சர்யமாகவே பார்த்துக்கொண்டிருக்கிறேன். சாண்விச்கள், வேகவைத்த முட்டைகள் தொடங்கி சோறுஜப்பானிய குழம்புகள் வரை உறையுணவுகளாக பெட்டி பெட்டிகளாக நிறைந்து தீர்ந்துகொண்டிருக்கின்றது ஒவ்வொரு நிமிடமும். ஜப்பானிய குடியகம் ஒன்றில் சந்தித்த கல்லூரிப் பெண்ணின் பகுதி நேரப்பணிகளில் ஒன்று இந்த உணவுப்பெட்டிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளில் என்றார்.இத்தனை நெருக்கலான மனிதக்கூட்டங்களைத் தாண்டி வெளி நாட்டிலிருந்து (பெரும்பாலும் பிலிப்பனிய,கொரிய) பெண்கள் இந்த குடியகங்களை, உணவுத்தொழிற்சாலைகளை நம்பி இங்கே இடம்பெயர்ந்து கொண்டிருப்பது குறித்த பெருங்கதை நிச்சயம் பெற்றோர் காசில் படிப்பைத் தொடரும் பின்னணியிலிருந்து பார்க்கையில் நிச்சயம் பெருங்கதையே. இந்தக் கொண்டாட்டங்களுக்குப் பின்னாகத்தான் பகுதி நேர வேலையாட்களின் சந்தை இயங்கிக்கொண்டிருக்கிறது. கல்வியெனும் பெயரில் இடம்பெயர்கிறவர்களின் பெரும்பான்மை இந்த வருமானத்தை நம்பி வருவதாக அவர் சொன்ன கதையை தனியாக எப்பொழுதாவது எழுத முடியும் என்றே நினைக்கிறேன்.

பெரும்பான்மை மதத்திற்கும், பெரும்பான்மை உணவிற்குமான இடைவெளியென்பது நிறுவனமயமாக்கப்பட்ட மதச்சூழலையும், மதத்தில் பிணைக்கப்பட்ட உணவரசியலையும் கொண்ட எனது வேர் நிலங்களுடன் பொருத்திப்பார்க்கிறேன். கடவுளைச் சுற்றி, இறை நிலையங்களில், புத்த மடாலன்யங்களின் பின்னணியில் எரிந்துகொண்டிருக்கும் தனலில் சிவந்து கிடக்கும் மாட்டுக்கறிகளும், அவற்றை ஒரு பீர்புட்டியுடன் கோபுரங்களைப் பார்த்துக்கொண்டே மெளனத்தில் அமர்ந்திருக்கும் தனித்த முதியவர்களை நீண்டகதைகளுடன் இணைத்தே பார்க்க முடிகிறது எப்பொழுதும்.

விலகும் காலத்திலேயே வரலாற்றைப்பாதுகாப்பதையும் கடமையாக வைத்திருக்கும் இவர்களின் அருங்காட்சியகத்தின் சமீபத்திய வரவு புகையிலை காட்சியகம். முன்னதாக ஒரு முறை பீர் அருங்காட்சியகமும், அதற்கு முன்பு நூடுல்ஸ்(Ramen) காட்சியகமும் சென்றிருக்கிறேன். ஒரே வடிவ நேர்த்தி. முதல் தொழிற்சாலையிலிருந்து இன்றைய தொழிற்சாலைகள் வரையிலான ஆண்டுவரிசைப்படுத்தப்பட்ட புகைப்படத் தொகுப்பு, அவற்றில் பயன்படுத்தப்பட்ட கருவிகளின் தொகுப்பு என எளிய காலப்பயணங்களை உருவாக்க வல்லவை இந்த அருங்காட்சியகங்கள்.

பீர் காட்சியகத்திலிருந்து வெளிவந்த பின் அருகிலிருந்த பூங்காவில் இளைப்பாற அமர்ந்திருந்த நேரத்தில் அவரைப்பார்த்தேன். தள்ளுவண்டியுடன் இணைக்கப்பட்ட துணிப்பைமூட்டையுடன் அமர்ந்திருந்த அந்த முதியவர் வீடற்றவர் என்பது உடையிலிருந்து அறிய முடிந்தது. பீர்புட்டி. காரமான நொறுக்குத்தீனிகள். தொலைவின் மரங்களுக்குள் மனதளவில் ஆழ்ந்திருந்தது போல் பார்த்துக்கொண்டிருந்தார். தூரத்தில் அலைந்து கொண்டிருந்த புறாக்கூட்டத்திலிருந்து ஒன்று பறந்து வந்து அவர் காலடியில் அமர்ந்தது. மெல்ல அசைந்து அழுக்கான மூட்டையிலிருந்து சிறு பாக்கெட்டை எடுத்துப்பிரித்தார். பறவை உணவு. மெல்ல சிதறவிட்டார். இப்புறா கொத்த ஆரம்பித்ததும் தொலைவில் மண்ணளைந்து கொண்டிருந்த மொத்தப்புறாக்களும் அவர் இருக்கையை சுற்றி படபடத்து கொத்திக்கொண்டிருந்தன. நான் அங்கேயே அமர்ந்திருந்தேன். இந்த ஆட்டம் முடியும் வரை. முடிந்த பிறகு இருளும் வரை. முன்னெப்போதோ வழிதவறிய ஒரு பறவைக்கும் சேர்த்தும் தினமும் உணவெடுத்து வந்த ஒரு பெண்ணை நினைத்துக்கொண்டே.

Like what you read? Give லதாமகன் a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.