பேபிசிட்டிங்க் எங்களுக்கு?

பாத்து பாத்து சமைச்சாலும்…

ஆயிற்று. உள்ளே கூப்பிட்டுவிட்டார்கள். சரியாக எண்ணி இருக்கைகள் போட்டிருந்தார்கள். எல்லாருக்கும் சிக்கென்று கொஞ்சம் தடியாக ஒரு ஃபைல்ஏடு. மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நிறுவனம், அதனிடம் உள்ள, பணியாளர்களுக்காக பார்த்துப் பார்த்து செய்த இன்டெர்ஃபேஸ்-ஐ சுளுவாக அழகிய காண்பிப்புகள் மூலம் விரைவாக விளக்கிவிட்டிருந்தது. இப்போது பாங்கு படிவங்கள் மற்றும் சில படிவங்களும் நல்ல இடம் பார்த்து உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்த போது இருவரிடம் தானாக பேச்சு ஒட்டிக்கொண்டது. ஒருவர் சற்று மூத்தவரும், தொழில்முறையில் என்னைக் காட்டிலும் படம் போட்டவர். கடைசி வரை என்னைப் பார்க்கும் போதெல்லாம் நின்று பேசுவார். பெரும்பாலும் பார்க்கிங்க்லாட்டில் தான் என்னை வாஞ்சையோடு பார்த்துப் பேசுவார். என்னுடன் வேலை பார்த்தவர்களில் “இவன் கொஞ்சம் தில்லாலங்கடி” என்று எனைத் தெரிந்தவர்களில், இவர் இல்லாமலிருந்தார். முற்றிலும் வேறு வேறு விதமான வேலைகள் என்பதால்..

இன்னொருவர் தான் கதையைக் கொஞ்சம் மாற்றிவிட்டார். ஆகமுதலில் இவரும் நானும் ஒரே துறையைச் சேர்ந்தவரகள். நான் கோயம்புத்தூரைச் சேர்ந்த உருது பேசுகின்ற தமிழில் சிந்திக்கின்ற ஒரு சுப்பன். இவனோ உ.பி. பரேல்லி-ஐச் சேர்ந்த பஞ்சாபி (க்ஹத்ரி) குப்பன். அந்த முதல் நாளே நாங்கள் பால்ய(!) நண்பர்களாகிவிட்டோம். ஓரிரு நாட்களில் என்னவெல்லாமோ ( உ_து கஜல் வரை __றிக் கட்லட் முதல் ) பேசிவிட்டோம். அப்புறம், எங்க தங்கி இருக்க? என்று அவன் கேட்கப்போய், நான் இதோ இந்த இடத்தில், கம்பெனி செலவில் ( 15 நாட்கள் ) இருப்பதாகக் கூறினேன். அவன் என்னை தன் வீட்டிற்கு வந்து தங்கும் படிக்கு ஐடியா கொடுத்தான். நான் தயங்கிக்கொண்டே இங்கு இன்னும் 13 நாட்கள் எனக்கு நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறதே! என்றால், அவனோ என்னுடன் என் அம்மாவும் என் மனைவியும் இருக்கிறார்கள். நீ இலவசமாகத் தங்க வேண்டாம், இவ்வளவு ரூபாய் தந்து விடு, சரியா? என்றான். இந்த மாதிரி வரவேற்புக்கு என் உள்ளம் எப்பவுமே ஓகே சொல்லிடுமென்றாலும், உள்ளே ஒரு கிள்ளல் இருந்து கொண்டே இருந்தது. இப்படியாகிவிட்டால், அல்லது அப்படியாகிவிட்டால்… என்று. அப்புறம் சீக்கிரம் யோசித்து, அவன் நமக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய துணிகிறான் என்றால், நாமும் செய்வோமே, பிரச்சினை என்றால் எப்போதும் அன்பு குறையாமல் விடை பெறலாம் என்று கணித்து பெட்டி சாமான்கள் சகிதம் அவன் வீட்டில் வந்து விட்டேன்.

ரோட்டோரமா இந்தப்பக்கம்!

ஆறு மாதம் அவன் வீட்டில் தங்கி இருந்தேன். தினமும் காலையில் நெய்யில் சுடப்பட்ட பராட்ஹாவும், தயிர், சாலாட், மற்றும் ராஜ்மா அவரை/தாளித்த பருப்பு/கடி குழம்பு, ஒரு நீள டம்ப்ளரில் சுடு பாலும் ( என் நண்பனுக்கு இது மிக மிக அவசியம், நீள டம்ப்ளரில் பாலருந்தா நாட்களை புலம்பிக் கொண்டே நகர்த்துவான் ), அப்புறம் “மட்ஹ்றி” என்ற ஒரு ஸ்னேக்ஸும் அம்மா எனக்கும் சேர்த்து செய்து கொடுப்பார்கள். அலுவலகத்தில் நிறைய வேலைகள் வந்து விட்டிருந்தன. ஆயினும் வீட்டில் ஒரு ஜோனில் (zone) இருந்தபடியால் — அருமையான சாப்பாடு, பெரியவர்களால் அதிகம் சச்சரவு இல்லாதிருத்தல், நண்பனோடு அளவளாவ நிறைய நேரம் ( ரயில்நிலையம், காவல்நிலையம், ஆஃபீஸ், வீடு, விடுமுறை என்று நானும் அவனும் பெரும்பாலும் அவனது பைக்கிலும் ஒட்டிக்கொண்டே தானிருந்தோம் ) — இதைத் தான் ஜோன் என்கிறேன். அவன் சொன்னபடி பணம் எடுத்துக்கொடுத்தால், ஒரேயடியாக வேண்டாமென்று சொல்லிவிட்டான். எப்படியும் நீ எங்களோடு வந்து தங்க வேண்டியே அவ்வாறு சொன்னேன். உன்னை எங்களோடு தங்கச் செய்ததே மிக்க சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறிவிட்டான். அதுவுமில்லாமல் உன் முகத்தைப் பார்த்தால் எனக்கு ஏதோ பரவசமாக இருக்கிறது. தெள்ளிய முகமாக எனக்குப் படுகிறது. நான் இதை ரசித்தேன் என்றாலும், இப்படி சக மனிதனை புகழும் ஒரு காலத்தைக் கடந்தவர்களாக நாம் பெரும்பாலும் இருக்கிறோம் — ஏன் நம் குழந்தைகளையே அளவோடு அளந்து தான் நாம் புகழ்கிறோம் — தக்க சான்றுடன் இந்த விதமான போக்குக்கு பலம் சேர்க்கும் பல அறிஞர்களையும் பார்க்கிறோம். ஆனால் எனக்கு தெரிந்த மட்டிலும், உங்கள் சிறுகுழந்தைகளுக்கு தரும் புகழாரங்களை, கெட்டுப்போய்விடுவாள், ஓடிப்போய்விடுவான், நன்றியே இல்லை, எங்க அப்பாவுக்கு பிடிக்காது, போன்ற காரணங்களுக்காக தடை போட்டு விடாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு பணம் கொடுக்கா விட்டாலும் உங்கள் நற்குணத்தின் பலனைக் கட்டாயம் கொடுத்திடுங்கள். தானாக நம் மனதில் தோன்றும் சிறப்பை நாம் நளினமாகவும் நவீனமாகவும் வேறுவேறு விதத்தில் வெளிப்படுத்தும் போது அதுவே உங்கள் சிறுகுழந்தைகளுக்கு ஒரு சிறந்த உணவைப் போன்று இருக்கிறது. நீங்கள் புகழ்வதில் டுபாக்கூராக ஆக இருந்தால் உங்கள் குழந்தைகள் அதையும் கண்டு கொள்வார்கள். ஏதாவதொரு பெற்றவரின் பரிவுக்காக ஏக்கம் கொண்ட மக்களின் பேச்சு என் சொற்களின் பயனுக்கு ஒரு உரைகல்லாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரே அறையில் நான், நண்பன், அவன் அம்மா, மற்றும் மனைவி தங்கி இருந்தோம். காலை, பகல், மாலைப்பொழுது அலுவலில் மூழ்கி இருப்பதும், காலை-இரவு உணவு வீட்டில் சாப்பிடுவதும், இரவு வீட்டில் தூங்குவதும் — ஒரே அறையில் ஏசி கருவி இருந்ததால் — அவரவர்கள் நிம்மதியாகத் தூங்கி எழுந்தோம். கொஞ்சம் நாள் கழித்து என் நண்பனின் அப்பாவும் வந்து சேர்ந்து கொண்டபோது, இன்னும் ஆச்சரியம் காத்து இருந்தது. நான் கோவை என்று தெரிந்ததும், அவர் தனக்கு துர்காலால் ஊறுகாய் கொண்டுவந்து தருமாறு கூறினார். நான் புருவத்தை உயர்த்தியவுடன் அப்பா, “நான் முன்னொரு காலத்தில் — உன் நண்பனுக்கும் தெரியாது — கோவையில் சிறிது காலம் தங்கியிருந்து வியாபாரம் செய்து இருக்கிறேன்”, என்று சேட்டுப்பேச்சுத் தமிழில் பின்னி எடுத்துவிட்டார். ஏற்கெனவே இரண்டு பேரிடமும் சாஷ்டாங்கம் செய்து விட்டபடியால், அவருடைய கோடுகள் நிறைந்த முகத்தை ஏதோவொரு புது இதத்துடன் ( மக்கா! நமக்கு முன்னாடியே பட்டய கிளப்பியிருக்காக டோய்! ) மேலும் மென்மையாகப் பார்க்கலாயினேன். கோவை சென்று துர்காலால் ஊறுகாயை வாங்கிக்கொண்டேன். அப்பா என்னிடம் எப்படி எதிர்பார்க்காமல் இருந்தார் என்று தெரியவில்லை — ஆச்சரியப் பட்டார். என்னுடைய வீடு குடி வந்ததும் இருவரையும் கூப்பிட்டு விருந்து கொடுத்தோம். என் மனைவி நன்றாகவே உபசரித்தார் என்றாலும், இவர்கள் இருவரையும் கொண்டு எனக்கிருந்த “ஜஸ்பாத்” எனப்படும் சென்டி-ஐ முழுதாகப் புரிந்து கொள்ள அவ்வளவாக முயலவில்லை. அதற்கான அவர் பக்க காரணங்களை என்ன என்ற யோசனை நூல் ஒன்று மூளையின் ஒரு கண்டில் ஒட்டி ஓட ஆரம்பித்துவிட்டது. என்னைப் போன்று அலைந்து திரிந்து கொண்டிருந்தவனின் வாழ்க்கையில் நேர்ந்த சம்பவங்களைக் கொண்டு பார்க்கையில் பணத்தின் தேவையை விட மனிதர்களின் கோர்வையே ஓங்குவதாக இருக்கும். இதற்கு முன்னரும் யாருடையதோ வீட்டில் எவ்வளவு காலம் எனத் தெரியாமல் இரு முறை இருந்தேன். என் வாழ்க்கையின் பிந்திய நாட்களோடு அந்த நாட்கள் நன்றாக பொருந்தி இருந்தது — இன்றும் நினைத்துப் பார்க்கும் அளவுக்கு. இரு முறையும் பிசினஸ் காரர்கள் — அதில் ஒன்று ஸ்டார்டப் பிசினஸ் காரர் — நானும் ஒரு ஸ்டார்டப் பிசினஸின் பிரதிநிதியாகவே அங்கு சென்றிருந்தேன். வாழ்க்கையின் குறிக்கோள்களுக்காக வாழ்க்கையின் தேவைகளை கொஞ்சமாக தணிக்கை செய்து ரிஸ்க் எடுக்க முனைந்தவர்கள்.

இது தான் என் கூட்டம் என்று வட்டம் போடுவதில் பழைய முறைகளை பயன்பாடு செய்பவர்களும், புதிய மற்றும் பழைய முறைகளைப் பிடித்து ஓடுபவர்களுக்கும் எல்லாம் நல்ல ஆட்களே என்று நினைத்து வாழ வேண்டியுள்ளது. முன் கூட்டத்தவர் ஏதும் புரியாதவர் போலும் யாரையாவது பின்கூட்டத்தவரை அப்படி இப்படி என்று விமர்சனம் செய்தல் நம்மை உசுப்பி விடுவது போல் அமைந்து விடுவதால், நாம் நம்முடைய சொல்லை கட்டுக்குள் வைப்பதே பெரும் வேலையாகி விடுகிறது. இவர்களும் நம்மைப் போன்று தான் ஏதோவொரு காலத்தில் பெரிய மனதுடன்[ ! ] வாழ்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு என்று இருந்த மேஜிக் நகர்ந்து விட்டதால் பிற்போக்குத்தனமான நடத்தைக்கு ( regressive behaviour )மாறிவிட்டிருக்கிறார்கள். வாழ்க்கை நமக்கு அப்பால் பல கோடி ஆண்டுகள் செல்லும், அதே வாழ்க்கை பல கோடி ஆண்டுகளாக பெயரில்லாத பலகோடி பேர்கள் பட்ட பாடுகளினால் நமக்கு கிடைத்திருக்கிறது என்பதை உணரும் பொழுது ஒரு புது பக்குவமும் ஒரு அழகான வேகமும் நம்மை ஆட்கொள்ள ஏதுவாகிறது.

என்னுடைய நண்பனுக்கு எனக்கு உபசாரம் செய்வதில் தோழமை தவிர வேறு ஏதாவது நன்மை இருந்ததா? எனக்கு வேறு வித ஆக்கபூர்வ பயன் இருந்ததா? இரண்டு கேள்விக்கும் பதில் — ஆம் ஆம்! எங்கள் துறையில் ஆழ் வேலை ( core work ) என்று அறியப்படும் ட்ரைவர் கோடிங்க் வேலையை அவன் கற்றுக்கொள்ள மிகவும் எத்தனித்திருந்தான் — எங்கேயும் பயிற்ச்சி கிடைக்காத சமாச்சாரம் ( பொதுவாக நிறைய அப்படித்தான் ) — நான் அதே வேலைக்காகவே தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தேன், என் நண்பன் தன்னை தானே செலக்ட் செய்து கொண்டு என் அணியிலேயே என்னோடு ஒத்தாசையாக வேலை செய்யவும் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுக்கவும் வந்து விட்டான். வேலை கொஞ்சம் கடினமாக ஆனபோது என் அணியில் என்னைப் புரிந்தவனாக என் பக்கத்து ஆளாக கொஞ்சம் பேபிசிட்டிங்க் செய்தான் எனக்காக.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.