அடையாளம்

யான் ஈன்ற அடையாளம் கல்வியல்லோ!!!

Vivekvinushanth Christopher
தழலி
2 min readFeb 2, 2021

--

[ உரு .1. நான் யார் ? http://edenvillagechurch.org/sermons/who-am-i-ephesians-21-10/ ]

தீக்கோளில் கனன்றெழுந்து
தண்மையின் மார்பிடுக்கில் ஒழிந்துகொண்டு
இற்றைவரை பாரென்று இயம்புதென்றால்
இச்சால் உரையென்பேன் காரணங்கள் பத்து
உந்தன் இதயம் கசிந்துருக காதல் என்பாய்
மறத்தமிழன் ஆயிற்றே -வீரமென்பாய்
குறிஞ்சிக்கண் நின்று இன்றும் குற்றுயிராய்
போராடும் தோழனல்லோ-உழைப்புமென்பாய்

பசிக்காய் ஒருவேளை உண்டி தேடி
அன்பிற்கேங்கி ஈருயிர் ஓருடலாய் காதல் தேடி
பகைமை பின்வாங்கி புறஞ்செல்ல வீரம் தேடி
நின் கிளைகள் வளர்கவென உழைப்பும் தேடி
தேடல் ஒன்றே பிரார்த்தமானது
பாரில் உயிர் பூத்ததென்றால்
தேடல் ஒன்றே அதன் காலகால காதல் என்பேன்

காலச்சக்கரம் உராய்வின்றி முடிவிலிநோக்க
‘தேடல்’கள் திசைமாறி புதுக்களம் புகுந்து
நவீன தேடல் அடையாளம் ஒன்றிற்காய்
உலகமெனும் ஒய்யாரமேடை சுத்துது
கடுகிச்செல்லும் காலமதில்
மனிதமும் தேடுவாய்-கொஞ்சம் பொறு

உந்தன் அடையாளம் ஆயிரமாயிரமோ?
உன்னதம் உடையதுவாய் கொள்வதும் எதுவோ?
கல் பிழந்து மண் பிரிய முன் பிறந்து
கணம் வரைக்கும் கண்டம் விரி தமிழென்பாயோ ?
தமிழா……….தமிழா
உனக்கு திமிர் கொஞ்சம் அதிகம்தான்
எழுக தமிழ்: எழுகவே புகழோடு

லட்சம் கோடி விந்தணுவில்
லட்சியம் தேடி ஒன்றிணைந்து
பிண்டமாய் புறம்பெயர்ந்து
பார் உயரும் பிள்ளைக்காய்
இட்ட நாமம் மட்டும் தான் உன் அடையாளமோ?
நிறமூர்த்தம் துணைகொண்டு
நின் உடல் ஊடு கடந்த
நிறமதுவோ குணமதுவோ
நின் அடையாளம்?
கற்றோர்,மற்றோர்
குணம் கண்டு
அகம் விரும்பி புறம் ஆற்றும்
உன் நடைசெயலோ உன் அடையாளம்?

அகிம்சை,அறிவியல்,ஆன்மீகம்
முக்கூடும் பாதம் பதித்த
வீரத்தை விதையிட்டு கலையில் வளர்த்தெடுக்கும்
உன் நின்னலம் மறவாப் பேதைப்புதல்வரெல்லாம்
திண்தூணாய் தாங்கி நிற்கும்
உயர் பேறு பெற்ற அடையாளம் நீ
எவ்விடமேகினும் எத்துயர் நேரினும்
எம் அன்னை நின்னலம் மறவோம்….

இன்னும் என்னதான் உன் அடையாளம்
பணமென்பாயா?
ஊழலில் உழன்றதும் -மாற்றான்
உழைப்பில் கன்னமிட்டதும் கொட்டித்தான் கிடக்கிறது
வீரமென்பயா?
வாள்கள் இங்கே மலிந்து தான் விட்டன
வேறு எதைதான் அடையாளமாய் தேடுவாய்….
ஓ.ஓ..விடுதலையோ
பலர் தேடி துரோகத்தில் வீழ்ந்த கதை மறஞ்சல்லோ போயிற்று….

பெற்றவன் இடாப்பிச்சையும்
உற்றவன் உரிமைகொள்ளா அகல்விளக்கும்
சுற்றம் வழங்கா மணிமுடியும்
தினம் உழன்று யான் ஈன்ற அடையாளம் கல்வியல்லோ -உலகை உய்விக்கும் அடையாளம்

பொங்கு என் தமிழா
போரொன்று புணர்வோம்

அமராடும் இனமாகி-நல்
அடையாளம் எல்லாம் தொலைத்தும்
மீண்டும் மீண்டும் போர்முழக்கம்??

ஆம் சோதரா!!
தீக்குளித்த எம் சந்ததியின் சாம்பல் மேடையில்
கல்வித்தீந்தணல் மட்டும் எஞ்சியிருக்கு
தணலாய் தகிப்பதை சுடராய் ஏற்றிட
நாமெல்லாம் கல்வித்தணல் பூசி
போரொன்று புணர்வோம்
கல்விக்காய் பெருஞ்சினத்தோடு எழுவோம் . . .

--

--