அன்பின் விதிகள் தடம் மாறுவதில்லை!

Tamil Literary Association
தழலி
Published in
5 min readSep 23, 2020

கோயிலிலிருந்து அவசர அவசரமாக வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் நந்தினி.

அவள் ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டிருந்த அடர் மஞ்சள் குடையையும் தாண்டி சூரியன் தன் வெப்பக் கதிர்களால் அவளை குளிக்கவைத்துக் கொண்டிருக்க அதைப் பொருட்படுத்தும் எண்ணம் இல்லை அவளுக்கு.

அடுத்த மூன்றாவது நிமிடத்தில் வலது புறமாகத் திரும்பி, தியாகராஜ வளைவிற்குள் சிறிது தூரம் நடந்து மீண்டும் இடப்புறம் திரும்பினால் அந்த கிளை வீதியின் கடைசி வீடு அவர்களுடயது தான்.

அவர்களுடையது என்றால் அவளுடையது அல்ல, அவள் பெரியப்பாவினுடையது!

குறைந்தது பத்துப் பேராவது தங்கக் கூடிய வசதியான வீட்டில், பெரியப்பா திவாகரன், பெரியம்மா வத்சலா மற்றும் அவரின் அம்மா சுந்தரியோடு அவளும் வசித்தால் மூச்செடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் எனக் கருதிய வீட்டுப் பெண்கள் இருவருக்கும் அவளை ரொம்பவும் பிடிக்கும் என்பதாலும் பெரிய மனதோடு நந்தினியை அவர்களுடைய அனெக்ஸ் (இணைப்பு) வீட்டில் தங்க வைத்திருக்கிறார்கள்.

“கொஞ்சம் வேகமாக செயற்பட்டாயானால் உபகாரமாக இருக்கும்” — கட்டளைக்குரிய குரலோடு வத்சலா அவளைக் கடந்து போகையில்,

“வந்திட்டுது உபத்திரவம்!” என்று சுந்தரி பூஜையறையில் முணுமுணுத்தது அவளுக்கு கேட்கத்தான் செய்தது.

அவளுக்கு இதில் எல்லாம் கவனமில்லை. மரத்துப் போன உணர்வுக்குரிய வார்த்தைகளாக இத்தனை வருடங்களில் அவை மாறியிருக்க, இப்போது ஜன்னலின் ஊடாக மாவிலை பிடுங்கிக் கொண்டிருந்த திவாகரன் தென்பட்டார். எப்போதும் போல அவளுக்கென்றே தன்வசம் அவர் வைத்திருக்கும் கரிசனமும் சமாளிப்புமான இந்த புன்னகை தான் அவளை உள்ளூற வருத்தும்.அவர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவசியமேதுமில்லை தானே? இருந்தும் இன்னமும் ஒரு சுமையாக இருக்கிறோமே என்று தன்னைத் தானே பச்சாதாபமாக எண்ணிக் கொள்வாள். அந்த எண்ணத்தோடே பதிலுக்கு தானும் ஒரு சிரிப்பை அவருக்கு உதிர்த்து விட்டு சமையலறையை நோக்கி ஓடினாள் அவள்.எல்லாம் தயாராக்கி அவள் குளிக்கச் சென்றிருந்த போதே சொந்தக்காரர்கள் வரத்துவங்கியிருந்தார்கள்.

“வாசுகி மாதிரியே இவளுக்கும் வாட்டமான கண்கள்!” தூரத்து உறவினர் யாரோ விமர்சித்துக் கொண்டிருந்தார்.

தான் கட்டியிருந்த அம்மாவின் புடவையை தொட்டுப் பார்த்துக் கொண்டே எதிரேயிருந்த புகைப்படத்தை நந்தினி பார்வைக்குள் உள்வாங்கிக் கொண்டு வர, இன்னும் ஒரு பெண்மணி “இந்த புடவையோடு பார்த்தால் வாசுகியே வந்த மாதிரி தானே இருக்கு?”என்று ஆச்சரியப்பட்டாள்.

அம்மா படத்தில் பதினைந்தாவது வருட மாலையோடு சிரித்திருந்தாள். அவளும் அப்பாவுமாக இருக்கும் படத்தை அந்த வீட்டில் மாட்ட வீட்டுப் பெரிய பெண்கள் இருவரும் சம்மதிக்கவே இல்லை என்பது இத்தனை வருடத்திலும் நந்தினிக்கு புதிய வலியாகவே வலிக்கிறது. அம்மா தலை கொள்ளா பூக்களோடு அதே கருஞ்சிவப்புப் புடவையில் அழகாகத்தானிருந்தாள்.

நந்தினியும் அப்படித் தான்! வாசுகியின் சற்றே பூசிய தேகமும் சுருண்ட கூந்தலும் அவள் கொண்ட தாயின் சாயல்கள்…

“அந்த அழகு தானே வாசுகிக்கு ஆபத்தா போச்சு! அதுல மயங்கி தானே அவன்…” அதற்கு மேல் சுந்தரியின் பேச்சை நந்தினி இரசிக்கவில்லை. அப்பாவைப் பற்றி அவர்கள் தூற்றும் போதெல்லாம் எங்காவது ஓடிவிடுவாள். எட்டு வயதில் அவள் இங்கு வந்த போது யாரையும் எதிர்த்துப் பேசும் மனநிலையோ தைரியமோ இருக்கவில்லை. இப்போது விருப்பமில்லை! அப்பாவும் அம்மாவுமாக அவளை எப்படி பார்த்துப் பார்த்து வளர்த்தார்கள் என்பதும் அவர்களுக்கிடையில் இழையோடிய நேசமும் அவளால் மறக்கக் கூடியவை தானா? சில நேரங்களில் இயற்கை தீர்மானிக்கும் குரூர விதிகளுக்கு மனிதர்கள் பழியை சுமக்கிறார்கள்…

விளக்கேற்றி அம்மாவை நினைத்துக் கொண்டு மூடிய இரு கண்களும் லேசாய் நனைந்தன.

“அவளைப் போலவே இவளும் இருந்து இன்னொரு அவமானத்தை தேடித் தராம இருந்தா சரி” இரகசியமாக மகளிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த சுந்தரியை சமாளித்த வத்சலாவின் அடுத்த பேச்சைத் தற்செயலாக கேட்க நேரிட்ட போது தான் நந்தினிக்கு தூக்கி வாரிப் போட்டது. போதாக்குறைக்கு அவள் மனத்தில் திடுமென முளைத்த அந்த முகமும் அது கொடுத்த உணர்வும் மொத்தமாய் அவளைக் கலைத்தது.

அவள் பிறக்கும் போதே சிக்கலோடு தான் பிறந்திருந்தாள் என்பது வளர வளரத் தானே தெரிந்தது! அதையெல்லாம் எண்ணித் தானே, தன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் எனத் தனக்குத் தானே ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழத் தன்னைத் தயார்ப்படுத்துகிறாள்… ஆனால் நிம்மதியாகவே அவள் வாழ இயலாதாமா?

யாருமற்ற பூஜையறையில் கிடைத்த சௌகரியத்தில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க இப்போதும் அவனது முகம் ஏன் மனதில் வருகிறது?
இந்த வாழ்க்கை அவளுக்கு மட்டும் சீராகவே இருக்காதா? குழப்பிப் போட்ட சீட்டுக் கட்டையைப் போல தான் எப்போதுமே இருக்கப் போகிறதா?

அவளுக்கென்று மட்டும் ஏன் இப்படி ஒரு விதி? கிடைக்காத அன்பையெல்லாம் கிடைக்கச் செய்வதாய் போக்கு காட்டி அதன் இயலாமையை பூதாகரமாக்குவது தான் அவளுக்குக் கிட்டிய விதியா? யாரைக் குறை சொல்வது? யாரிடம் ஆறுதல் தேடுவது? மனம் கேள்வி கேட்கையில் மீண்டும் மீண்டும் வரும் அவன் முகம் எதற்காம்?

தன் நிலைமையால் ஒருவனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இன்பத்தையும் தட்டிப் பறிப்பது சரியாகுமா?

சிவந்த கண்களுடன் நிமிர்ந்து தாயை ஏறிட்டுப் பார்ர்தாள் நந்தினி. அம்மாவின் சிரிப்பு இன்னும் நீள்வதாய்த் தோன்றும் இந்தக் கணம் என்ன உரைக்கிறது அவளுக்கு?

“இனிய நேசத்தையும் அவமானமாகப் பழிக்கும் இந்த சமூகத்தில் அவளுக்கும் அதே பட்டம் தானே வரும்?” என்று தாயோடு பேச முயன்றாள்.
ஆனால் நிச்சலனமாகவே இருக்கும் வாசுகியிடமிருந்து என்ன பதிலை எதிர்பார்க்கிறாள்? வாசுகி எதையாவது புரிய வைக்க முனைகிறாளா என்று கூர்ந்து நோக்கும் போது பேச்சு சத்தம் திரும்பவும் கேட்டது.

“குழந்தை பெத்துக் கொள்ள ஏலாது எண்டு தான் இத்தனை நாளும் சிக்கல். அதுக்குக் கொஞ்சம் காசு கொடுக்கிறதா சொன்னதும் சரி வந்திட்டுது.” என்று மனம் இளகாமல் பேசிக் கொண்டிருந்த பெரியம்மாவின் குரல் மனதைக் கீறீ ரணப்படுத்தினாலும் அதை மீறிக் கொண்டு வெளிப்படும் சிந்தனை அப்படியே வாசுகியின் தலைகோதலை நினைவூட்ட மொத்தமாய் அவள் தளர்ந்தாள்.

தெளிவாக ஒரு தீர்மானம் அவள் மனதெங்கும் வியாபிக்கத் துவங்க நினைவோ அவள் பொக்கிஷமாய் சேமிக்கும் அந்தச் சொற்களில் சென்று சரணடைந்தது.

“அன்பின் குரல்களில் இருந்து தப்பிக்கிறதென்பது எப்போதும் சாத்தியப்படாது! அது போல சாய்ந்து கொள்ளவும் சாய்த்துக் கொள்ளவும் கை நீட்டுற அன்பை மறுக்கிறதும் நம்மை நாமே தண்டிச்சுக் கொள்றது போல தான்…” சிறுபிள்ளையாய் இருக்கும் போது நந்தினியை மடியில் வைத்திருக்கும் வாசுகியை நெஞ்சில் சாய்த்தவாறு அவள் தந்தை தட்டிக் கொடுத்து சொல்வது எவ்வளவு நிதர்சனமாக உறைக்கிறது… அதன் அர்த்தம் புரிபட ஆரம்பிக்க நந்தினிக்கும் மனமெல்லாம் பரவசமாகியது. கூடவே ஒரு நெருடலும் இருக்கவே செய்ய இரவு தூங்க வெகு நேரமெடுத்தது நந்தினிக்கு.

உறங்க வேண்டும் எனும் போதெல்லாம் தடவிக் கொடுக்க யாராவது இருக்க வேண்டும், இல்லாத பட்சத்தில் அவள் அழுது தொலைக்க வேண்டும். ஆனால் இன்று தடவிக் கொடுக்கிறேன் என்றவனின் கைகளைப் பற்றி அழ வேண்டும் போலிருந்த ஏக்கம் பெருகியிருந்தது.

XXX

காலை எட்டு மணிக்கெல்லாம் மித்ரன் வாசலில் ஆவலாகக் காத்திருந்தான்.
அவன் முன்னே, அப்போது தான் பல் துலக்கியதற்கு அடையாளமாக நனைந்த மேல் சட்டையுடன் சேட்டை செய்தபடியிருந்த தெய்வீகனையும் கடைக் கண்களால் கவனித்துக் கொண்டுதானிருந்தான் அவன்.

ஐந்தே வயது தான் ஆகக் கூடிய தெய்வீகன் அந்த இல்லத்தின் செல்லக் குழந்தை! அவனோடு சேர்த்து அந்த இல்லத்தில் மொத்தமாக இருபத்தைந்து குழந்தைகள் அங்கு பாசமாக வளர்க்கப்படுகிறார்கள்…
வளர்க்கப்படுகிறார்கள் என்று சொல்வதை விட வளர்கிறார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்!

போர்க் காலத்தின் எஞ்சிய துயரங்கள் எனத்துவங்கி தற்கால இழப்பின் விதைகள் வரை இந்த இல்லத்தின் நிழலில் விருட்சமாகிறார்கள். அது ஒரு சிறிய அமைப்பாக இருந்தாலும் அதன் அன்பின் அலைகள் பெரிது!

மித்ரனுக்கும் இந்த அமைப்புக்கும் உறவுண்டாகி ஏறத்தாழ ஐந்து வருடங்கள் ஆகலாம். ஆதரவற்ற ஒரு வாழ்க்கையை அவனும் வாழ்ந்திருக்கிறான். அது கொடுக்கும் வெறுமையின் அனுபவத்தையும் அவன் பழகியிருக்கிறான் அல்லவா… ஆதலால் நிதி ரீதியாகவும் அந்தஸ்து ரீதியாகவும் நன்னிலையை சம்பாதித்துக் கொண்டதும் அவனைப் படிக்க வைத்து ஆளாக்கிய பாதருக்குப் பிறகு அவருடைய பிள்ளைகளை அவன் பொறுப்பெடுத்துக்கொண்டான். அதற்கு பிறகு அவனுக்கெல்லாமே அந்த இல்லம் தான். அந்தக் குழந்தைகளுக்கும் அவன் தான். அப்பா என்று தான் குழந்தைகளுக்கு அவனைத் தெரியும்.

அப்படி இனிமையாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் இன்னும் அர்த்தம் சேர்க்க வந்தவள் தான் நந்தினி! மித்ரன் அப்படித் தான் நம்பினான். அவள் வேலை பார்க்கும் அலுவலகத்தின் ஒரு ப்ராஜெக்ட்டிற்காக இல்லத்திற்கு சேவை புரிய வந்தவளிடம் அவனுக்கான ஜீவன் இருப்பதாக உணர்ந்தவன் அவளை விருப்பதுடன் கவனிக்கத் தொடங்கினான்.

அவள் அங்கு சேவை மட்டும் செய்யவில்லை. அந்த குழந்தைகளை தாயாக நேசித்ததைக் கண்கூடாக கண்டவனுக்கு வேறு என்ன தேடலிருக்கும்? அவளைப் பற்றி விசாரித்ததும் அவளுக்கும் அவனுக்கும் ஏன் அந்த இல்லத்துக் குழந்தைகளுக்குமான தேடல் மிகச்சரியாய் பொருந்திப் போனதே….

மெதுவாக அவளிடம் பேசினான். தன் நேசத்தைக் கூற ஒரேயடியாய் அவள் மறுத்தாள். ஏன் என்று விளங்காமல் அவன் தவிக்க ஆரம்பித்தான். அதன் பிறகு பிள்ளைகள் அவளை அதிகம் நெருங்கினாலும் அவனை நெருங்க விடாமல் அவள் கறாராய் இருந்ததைக் கண்டு துவண்டு தான் போனான் மித்ரன்.

காரணம் தெரிவது வரை தான் அந்தக் குழப்பம் எல்லாமே அவனுக்கு! போன வாரம் அங்கு வந்திருந்தும் கவனமாக தன்னைத் தவிர்க்கப் பார்த்தவளை வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தியவன் ஒன்றை மட்டும் கூறி அவளை வழியனுப்பி வைத்தான்.

“ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு தேடல் இருக்கும். அதை, சரியா பொருந்த வேண்டியவங்ககிட்ட கொண்டுவந்து பொருத்துற விதியை ஆதரிச்சு ஏத்துக்காம விலகி போறதுல என்ன அர்த்தம் இருக்க போவுது? நீ யோசிக்கிற மாதிரி எனக்கெண்டு இனி தான் மனைவி, குழந்தைங்களை தேடினா நீ விலகுறதுக்கு காரணம் இருக்கலாம். ஆனா நான் உன்னை உனக்கே உனக்காக மட்டும் தான் தேடுறேன்! என் குழந்தைங்களுக்கு அம்மாவா நாங்க எல்லோரும் குடும்பமா அன்பை பகிர்ந்து கொள்ளத் தான் கேட்கிறேன்!”

அதற்குப் பிறகும் அவனுக்கு சரியான பதிலைச் சொல்லாமல் தன் குறையைக் காரணமாக்கி, வீட்டு நிலவரத்தையும் சாட்டி கிளம்பிப் போயிருந்தாள் இனி இங்கு வருவதும் சந்தேகம் தான் என்பது போல.

கலக்கமும் பயமுமாக இருந்தவனை அதிக நேரம் காக்க விடாமல் வாசலில் அவள் வரும் சத்தம் கேட்க எட்டிப் பார்த்தவனிடம் சின்ன புன்முறுவலைத் தந்தவளுக்கு, பதிலாக என்ன சொல்ல போகிறாய் என்பது போல பார்த்துக் கொண்டு இருந்தவனைத் தாண்டிக் கொண்டு போனாள் நந்தினி.

அவளைக் கண்டதும் குஷியாக பாய்ந்து வந்து கட்டிக் கொண்ட தெய்வீகன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவளுக்குக் கண்டிப்பாகத் தெரியும் மித்ரன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது.

“டேய் தெய்வா… வர மாட்டாங்க எண்டு நினைச்சமே பிறகு எதுக்கு வந்தாவாம் கேளேன்?” மெல்லத் தூண்டில் போட்டவனை ஒரு கணம் திரும்பி பார்த்துவிட்டு திரும்பத் தெய்வீகனிடம் குனிந்தவள், சொன்னாள்.

“தெய்வா இனி நந்தினியை அம்மாவெண்டே கூப்பிடலாம்!”

விரிந்த சிரிப்புடன் அதை ஓடிப் போய் மித்ரனிடம் ஒப்புவித்த குழந்தையை தன்னைப் பார்த்தபடியே இறுக முத்தமிட்டவனின் செயலும் அதைத் தொடர்ந்து அவன் காண்பித்த முகபாவனையும் அதன் நிறைவும் அத்தனை மோகனமாயிருந்தது நந்தினிக்கு…. அர்த்தமுள்ளாகவும்!

அன்பின் விதி பொருத்தும் தேடலின் சங்கமம் கடவுளின் அழகைப் பிரதிபலிப்பது இல்லையா!!!

முற்றும்

இச்சிறுகதை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பிரம்மம் போட்டித்தொடரில் ஒன்றான எழுத்தோவியம்-2020 சிறுகதை போட்டியில் பங்கு பெற்றி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

--

--

Tamil Literary Association
தழலி

This medium account is to ensure the online presence of Tamil Literary Association,University of Moratuwa, Srilanka.