உப்புத்தின்ற கடன்

Tamil Literary Association
தழலி
Published in
4 min readSep 22, 2020

“ஏய் தம்பி இங்க கொஞ்சம் வந்துட்டுப் போ…” என்ற அசரீரி கடைக்குள்ளிருந்து ஒலிக்கும் போதே, அதன் முதலாளிகளுக்கே உரிய “வறட்டு” தொனியிலிருந்து அது முதலாளி அண்ணனாகதான் இருக்கும் என்று தெரிந்துக்கொண்டான். அப்படியொருவேளை முதலாளி கூப்பிட்டாலோ ஏதும் கேட்டாலோ ‘நாலு கேள்வி நாக்க புடுங்குற மாதிரி’ கேட்க வேண்டும் என்றிருந்தவனுக்கு காலம் கைக்கூடியது.

நடுத்தர வயதை மெல்ல தாண்டிவிட்ட ராமையாவுக்கு மார்கழி முடிந்தால் ஐம்பது. லெச்சிமி அவனைகாட்டிலும் நான்காண்டுகள் இளையவள். இருவருக்கும் தொண்ணூத்தி ஏழில் கலியாணம் முடித்து ரெண்டாயிரத்து பத்தொன்பதுக்குள் பிள்ளைகள் ஏழாகிப்போனது கொஞ்சம் அதிகமாகதான் ஊரில் பேசப்பட்டது.

“ஏழு புள்ளைய பெத்தாலும் யாரையும் கொழும்புக்காட்டுக்கு அனுப்பி அதுங்க ஒழப்புல திங்கல. என் உடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் படிக்க வப்பேன்…” என தன்னம்பிக்கை தளராமல் பேசிக்கொண்டே இருக்கும் ராமையா ஒருகாலத்தில் “ராசாகணக்கா” வாழ்ந்தவன். அப்போதைய லயத்து குடிலில் வாழ்ந்துப் பழக்கப்பட்ட மக்கள் பலரும் தங்கள் வீடுகளை தாங்களே திருத்தி கொள்ள தலைப்பட்ட நேரம், அவனுடைய தோட்டத்திலேயே முதலில் ‘வீட்டை முன்னுக்கு இழுத்து’ கட்டியவன் அவனொருவன் தான்.

“இவ்லோ காலமா எல்லா வேலயும் செஞ்சுருக்கேன். கல்லு நோன்றது, புல்லு தூக்குறது, மாடு வளக்குறது, தோட்டம் செய்றது….” என தன் அனுபவங்களை பற்றி பேசத்தொடங்கினால் கள்ளிக்காட்டு இதிகாசக்கதை போல கேட்டு கொண்டிருக்கும் பிள்ளைகள் எல்லாம் இன்று விடலைகள்.

லெச்சுமியை பற்றி ஒற்றைவரியில் சொன்னால் அவளொரு “பதிவிரதை”. கணவன், பிள்ளைகளே உலகமென வாழும் அவளுக்கு பாவம் பக்குவம்தான் கொஞ்சமும் இல்லை “களீரென” எதையும் பேசிவிடுவாள். “என் ஆய் அப்பன பாக்ககூடதான் விதியெத்து கெடக்குறேன்… மாசம் பூறா மாடு மாறி செத்தாலும் சம்பளம் போட்டு ஒரு ‘கறிபுளி’ ஆக்கி திங்க வழியில்ல…” என தொனதொனவென்று ஏதாவது புழம்பிக்கொண்டே தன் வேலைகளை முடித்துவிடும் திறமை அவளுக்கு. என்னதான் ஏழு பிள்ளைகளை பெற்று விட்டாலும் கூட தன்னம்பிக்கை உடல் பலத்தில் என்றும் அவளுக்கு பதினாறுதான்.

பிள்ளைகள் அதிகம் என்பதால்தான் வீட்டில் கஸ்டம் என அறிந்தும், “இவ்லோ கஸ்டத்துக்கும் ஏழு புள்ளைய பெத்துகிட்டதுதான் காரணம்…” என பிள்ளைகள் கூறும் எதையும் காதில் கூட போட்டுக்கொள்ளாமல் “ஏழு புள்ள பெத்துகிட்டு எதுல கொறஞ்சிட்டோம்… ம்ம்ம்… கொஞ்ச காலத்துக்குதான், அப்றம் பாருங்க ‘கால் மேல கால் போட்டு’ சாப்டலாம்…” என நம்பிக்கை குறையாமல் பேசுவதே ராமையா லெச்சிமியின் இயல்பு.

“கொரோனா” பரவிய அக்காலம் ராமையா வீட்டுக்கு கொஞ்சம் நஞ்சமல்ல கஸ்டங்கள். வெளியில் படித்த மூத்தவன், தோட்ட பாடசாலையில் படித்த இளையவர்கள் என எல்லோரும் மூன்று மாதங்களாய் வீட்டில் தான்.
ஒருவருடத்திற்கு முன்னால்,
“சல்லியெல்லாம் பெறகு தாங்க இப்ப இந்த தோட்டத்த செயிங்க…”
என எவ்வித பலனும் எதிர்பாராமல் அப்போது வறுமையிலிருந்த ராமையாவின் தங்கச்சிக்கு அவனது தோட்டத்தில் ஒரு பகுதியை செய்ய கொடுத்திருந்தனர். அதிலிருந்து என்னதான் லட்சங்கள் சம்பாதித்தாலும்
லெச்சிமிக்கு, தன் ஏழாவது குழந்தை கருவுற்றிருந்த போது, ஒருவேளை சாப்பாட்டுக்கே கஸ்டப்பட்ட ராமையாவுக்கும் அவன் குடும்பத்திற்கும் அவனது தங்கை கொடுத்தது என ஒன்றும் கிடையாது.

“நல்லா தான் தோட்டம் செய்ரீங்க, மரக்கறி கலட்றீங்க. இவ்லோ கஸ்டப்பட்றோம் ஏதாச்சும் ஒதவி பண்ணலாம் இல்ல…”
என கேட்டதற்காக ஒரு வருடமாய் போட்டதை போட்டபடி தோட்டத்தை செய்யாமல் விட்டுவிட்டனர். மூன்றுமாத ‘கோரோனா காலத்தில்’ வீட்டிலிருந்த எல்லோருக்கும் அந்த “கைவிடப்பட்ட காட்டை” திருத்தி மறு மரக்கறி போடவே நேரம் சரியாக இருந்தது. ஆனாலும் தோட்டத்திற்கென்று பிரத்யேகமாக செலவளிக்க முடியாமை; சாப்பாட்டு செலவுக்கே மாத வருமானம் போதாமை என பல கஸ்டங்கள் ராமையா குடும்பத்திற்கு நிறையவே கற்றுக்கொடுத்திருந்தது.

“இனி இந்த லயத்து கடையில சாமான் வாங்குறத நிப்பாட்டுனாதான் கொஞ்சம் சரி முன்னேறலாம். எல்லா சாமனுக்கு அஞ்சி, பத்துனு கமிசன் வேற…” என புலம்பி தள்ளுவது அந்த “கொரோனா கஸ்டக்காலத்தில்” எல்லா வீடுகளிலும் வாடிக்கையாகிப்போனது. ஆனால் ராமையாவோ

“இவ்லோ நாலா பட்டினியா கெடந்தப்போ எவன் கடன் கொடுத்தான்? இப்ப போய் டவுன்ல சாமான் வாங்குனா அது சரியில்ல…”
என முன்செய்த உதவியை எண்ணி பேசுவான். ஆனாலும் அவனது பிள்ளைகள்,

“கடைக்காரன் என்ன கதைப்பது…?” ‘தனக்குரிய பொருட்களை எங்கே வாங்க வேண்டுமென வாடிக்கையாளன் தான் தீர்மானிக்க வேண்டும்’ என்பதில் உறுதியாய் நின்று மூன்று மாதங்களாய் டவுனில் சாமான் வாங்கிக்காட்டினர். உண்மையாவே அப்போது லயங்களில் வாங்குவதை விட டவுனில் சாமான் வாங்குவது லாபமாக அதேநேரம் தரமாகவே காணப்பட்டது.

எப்படி கொரோனாவை காரணம் காட்டி பூண்டு, மஞ்சள், பெருங்காயம் அதிக விலைக்கு விற்கப்பட்டதோ அப்படிதான் பிஸ்கட் பக்கற், சீனி, அரிசி,எண்ணை என சகல பொருளிலுமே அஞ்சி, பத்து, இருபது என அநியாய விலை வைத்து தோட்ட மக்களை ஏமாற்றி பிடிங்கியது முதலாளிக்கூட்டம். அன்று தொடங்கியதுதான் இந்த “நான்கு கேள்வி கேட்க வேண்டுமென்ற” மூத்தவனின் கோபம்.

என்ன செய்தாலும் எவ்வளவு கொள்ளையடித்தாலும் ‘இதுகலுக்கு’ விளங்கவா போகுது? என்ற முதலாளிகளின் அசட்டு நம்பிக்கை மெல்ல மெல்ல உடைந்து தொழிலாளர்கள் பலரும் டவுனில் சாமான் எடுக்க தொடங்கியதும் லயத்து கடைகளில் வியாபாரம் படுத்து விட்டது. இது அத்தனையும் அந்த மூன்று மாத கொரோனவினால் எற்பட்ட மாற்றங்கள்.

அப்போது, கடைக்குள்ளிருந்து வந்த ஒலியைக்கேட்டு கடைக்குள் செல்லும் போதே என்னவெல்லாம் கேட்க வேண்டுமோ எல்லாவற்றையும் மனதுக்குள்ளே அசைப்போட்டுக் கொண்டான்.

“என்னப்பே… மூனு மாசமா பில் வரல. சாமானும் வாங்கல் எப்டி சாப்டுறீங்க?” என முதலாளி கேட்டது கொஞ்சம் அக்கறை தொனிபோல் இருந்தாலும் அது விஷயத்தை கறக்கவென அறிந்தவனாக, “டவுன்லதான் அண்ணே…” என்றான்.

“ஒஹோ. ஏன் என்ன பிரச்சின, இங்க கடன் எவ்லோ இருக்கு தெரியுமா? மூணு லட்சத்துக்கு வந்திருச்சி…” என முதலாளி கூற, “கடன மொல்ல மொல்ல முடிச்சுர்றோம்…ஆனா இங்க சாமான் வாங்கி ‘கட்ட மாட்டேங்குது’ , திரும்ப திரும்ப கடன் கூடிகிட்டுதான் இருக்கு அதான்…” என்றான்.

“ஆ… அப்போ இவ்லோ நாளா கடன் கேட்டு சாப்டபோ இங்க வாங்குறது பத்துனுச்சி இப்பதான் பத்தலயோ…” எனக்கூறியபடி கணக்கு புஸ்தகத்தை எடுத்து ராமையா என்ற பெயரின் கீழ் செப்டம்பர் மாசம் தொடங்கி ஒக்டோபர் வரைக்குமான கணக்கு என ரூபா எழாயிரத்தை கணக்கு காட்ட

“கடன் வாங்குனது உண்ம, நாங்க இல்லனு சொல்லல. ஆனா எதுக்கும் நாயம்னு ஒண்ணு இருக்கு. இப்ப, இங்க பத்தாயிரத்துக்கு வங்குற சாமான டவுன்ல ஐயாயிரத்துக்கு வாங்குறோம் எதுக்கும் ஒரு விலை இருக்கு, நீங்க வைக்கிற வெலைக்கு எங்க வருமானம் பத்தாது…” எனக்கூறினான்.

“ஏன் கடன் வாங்கி திங்கிறப்ப ஒங்களுக்கு வெல கூடனு தெரியலயா…”

“நீங்க இந்த மூனு மாசமாதானே அதிசயமா வெல வச்சி விக்கிறிங்க…” என முதலாளியின் கேள்விக்கு பதிலளித்தான்.

“எல்லாரும் இப்டி இங்க கடனுக்கு வந்து வந்து வாங்கிட்டு இப்ப கடனையும் ஏத்திட்டு போயிட்டா நாங்க என்ன பன்றது…” என ஒரு அதிகார, அதட்டும் தொனியில் கேட்டான். இவனோ பயப்படாமல்,

“கடன வாங்கிட்டு நாங்க ஊர விட்டு ஓடல, இல்லனா எங்கப்பா கடன வாங்கி எங்கயும் சைட்ல குடுக்கல… எங்க வீட்ல புள்ளைங்க கூட சாப்ட வாங்குனோம் எப்டியும் கட்டிருவோம்…” என்றான்.

முதலாளி கேட்ட எல்லாக்கேள்விக்கும் மறு கேள்வியும் கேட்டு தக்க பதிலும் தந்தமை முதலாளிக்கு முகத்தை சுளிக்க செய்தது.

“ஒங்க கடன மாசம் மாசம் எப்டியோ கட்டிருவோம். ஆனா இனி டவுன்லதான் வாங்குவோம். எல்லாம் படிக்கிறோம் அதுனாலதான் இவ்லோ கடன். இப்டியேவா இருந்துற போறோம்…” எனக்கூறி வெடுக்கென கடையைவிட்டு வெளியேறினான்.

உண்மையிலேயே, அவன் அப்படி பேசுவதற்கான தேவை அன்று கொஞ்சம் தான் என்றாலும், ஒருநாள் அவனது தம்பி கையிலுருந்த பத்து ரூபாயை நீட்டி கடனாக சவர்காரம் கேட்ட போது அதற்கு முதலாளி “ஊத்த பேச்சியில எத்தாச்சும் சொல்லிற போறேன் போயிடு… “ என கொஞ்சமும் நா கூசாமல் பேசியமை, கடைக்கு செல்பவர்களிடம் அநியாய விலைக்கு நியாயம் கூறுவது போன்ற பலதையும் கேட்டுதான் அவன் முதலாளியிடம் அப்படி பேசினாலொழிய இதை கடந்துவிட்டுப்போக முடியாது என்பதை உணர்ந்தான்.

அதுவரையும் தன் மனதிற்குள் வைத்திருந்த பேசப்படா ஆதங்கத்தினை பேசிவிட்டேன் என்ற பெருமிதம் ஒரு புறமிருக்க, முதலாளி சொன்னது போல் நாம் மட்டுமல்ல தோட்ட மக்கள் பலரும் விலைவாசி அதிகம் என்பதை உணர்ந்து முதலாளியை மறைமுகமாக எதிர்த்திருந்தமையும் டவுனுக்கு சென்று சாமான் வாங்க தைரியம் கொண்டமையையும் எண்ணி மனதிற்குள் “மாற்றம் பிறந்து விட்டதென…” அசைப்போட்டுச் சென்றான்.

இச்சிறுகதை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பிரம்மம் போட்டித்தொடரில் ஒன்றான எழுத்தோவியம் — 2020 சிறுகதை போட்டியில் பங்கு பெற்றி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

--

--

Tamil Literary Association
தழலி

This medium account is to ensure the online presence of Tamil Literary Association,University of Moratuwa, Srilanka.