கிராமத்து கறுவல்துரையனும்‌ கொரோனா ஊரடங்கின்‌ ஒற்றை நாளும்‌…..

Tamil Literary Association
தழலி
Published in
6 min readSep 23, 2020

“ஏங்க..ஒரு கிழமையா வீட்டுக்கையே குப்பை கொட்டுறோமே!… போட்ட உடுப்பெல்லாம்‌ நாறுது. சாமானும்‌ வேண்டணும்‌ மத்தியானம்‌ சோத்துக்கு கறி வைக்க தூளும்‌ இல்ல.. புளியும்‌ இல்ல… றின்சோவும்‌ வேண்டணும்‌…இந்த பொன்னம்மா வீட்டு கிழுவம்‌ வேலி பொட்டால போய்‌ பின்பக்கத்தால சாமானை வேண்டியாங்களேன்‌….” என்ற நச்சரிப்புடன்‌ முத்தத்தை கூட்டிக் கொண்டிருக்கிறாள்‌ கறுவல்‌ துரையன்ட மனிசி வெள்ளையம்பாள்‌.

கேட்டும்‌ கேக்காத மாதிரியே திண்ணையில படுத்திருந்த கறுவல்‌ துரையன்‌ நச்சரிப்பு கூடவே “அடியே இப்ப நாலு நாளாய்‌ சுருட்டு பத்தாம இருக்கவும்‌ முடியாம போய்‌ வேண்டப்போனால்‌ பொலிஸ்‌ பிடிப்பானோ! என்ட பயத்தில நானே வீட்டுக்க படுத்திருக்கேன்‌… உனக்கு வேளாவேலைக்கு இந்த நேரத்தில சோறு போடுறதே பெரிய விஷயம்‌… அதில உனக்கு உடுப்பு நாறுது எண்டு றின்சோ கேக்கிதோ… இப்ப தோச்சு போட்டு என்னத்த காணப்போறாய்‌… எங்கடி போப்போறாய்‌… வீட்டுக்க தானே படுக்க போறாய்‌… விடியக்காலத்தால கத்தாம போய்‌ வேலையப்பாரு” என்ற அதிகார தொனியில்‌ அதற்றி திண்ணையின்‌ மறுபுறம்‌ தலையை சாய்த்துக்கொண்டான்‌.

கோபம்‌ எழவே வெள்ளையம்பாள்‌ “நீ பெரிய பயந்தான்‌ எண்டு எனக்கு தெரியும்‌… போன மாசம்‌ ஆலமரத்தடி கடையில இருக்கேக்க ஆமி ஏதோ விசாரிக்க வர நாரி
கொதிக்கிது எண்டுட்டு வீட்ட வந்தனி எண்டு நாலு பேர்‌ அடுத்த நாள்‌ சொல்லி சிரிச்சது எனக்கு தெரியாது எண்டு நினைக்கிறியோ…. செத்த பாம்பை கூட தூக்கி போட தைரியம்‌ கெட்டனி எண்டும்‌ தெரியும்‌.. நீ என்னை அதட்டுறியோ ! இப்ப கிட்ட வந்தேனெண்டா தெரியும்‌… நான்‌ யார்‌ எண்டு” என்று கத்திய படி காலுக்க கிடந்த செம்பை
கோபத்துடன்‌ அடித்தாள்‌.

செம்பு சத்தத்தில் திரும்பின கறுவல்‌ துரையன்‌, “கண்ட நாயல்‌ பாம்ப திண்டதுக்கு இங்க என்ட நிம்மதி தலை கீழ போகுது..போட்டானே போட்டான்‌ ஊரடங்கு ஊரில இருந்த மொத்த மனிசன்‌ மார்ட நிம்மதியும்‌ போச்சு! வேலைக்கு போக விட்டாங்கள்‌ ஆச்சும்‌ இவளவேன்ட கரைச்சல்‌ இல்லாம நிம்மதியா பகலை ஆவது கடத்தலாம்‌” எண்டு தன்ர புராணத்தை பாடத்தொடங்கினான்‌….

“இப்ப நீ கடைக்கு போப்போறியோ இல்லையோ அத சொல்லு தேவை இல்லாத கதையள கதைக்காத…”என்ற வெள்ளையம்பாளின்‌ நச்சரிப்பில “சரி போறேன்‌ நீ சிணுங்காத…” என்றபடி பையத்தூக்கின துரையன்‌ “அந்த மாஸ்க்க எடுத்து தாடி… பொலிஸ்‌ வந்தாலும்‌ கதைச்சு வரலாம்‌” எண்டு கடைக்கு நடையத்‌ தொடங்கினவன்‌ திரும்பி “உனக்கு தானேடி மூன்று பெடியன்களை சுளையாய்‌ தந்தேன்‌… இதுவள அவங்கள கொண்டு வேண்டலாம்‌ தானே!” என்றான்‌ துரையன்‌.

“உன்ன மாதியோ உன்ர பெடியல்!‌ மூன்றும்‌ சிங்கக்குட்டியள்‌ என்ர வளர்ப்பு அப்பிடி உண்ன மாதிரி பயந்து வீட்டிக்க இருக்கிறாங்களோ ! அவங்க பொலிஸ்‌ வந்தாலும்‌ தண்ணிய காட்டிட்டு வந்திடுவாங்கள்‌….. நீ பத்திரமாய்‌ போட்டு வா கடைக்கு… அங்க இங்க பிராக்கு, பாக்காம சொன்ன சாமான வேண்டியா… சரி கிளம்பு” என்றபடி கூட்டின முத்தத்திற்கு சாணியை கரைச்சு ஊத்த தொடங்கினாள்‌ வெள்ளையம்பாள்‌.

“தனிய வந்தாங்கள்‌ எண்டால்‌ சரி கூடவே கொரோனாவையும்‌ ஒருநாள்‌ கூட்டிவர போறாங்கள்‌ அப்ப தெரியும்‌ உனக்கு- உன்ர வாய்‌ வீரத்தை பற்றி…சரி அந்த கதைய விடு பொன்னம்மா வீட்டு நாய்‌ கடிக்கிறதாடி… நாய்‌ கட்டித்தானே நிக்கும்‌…” என்ற கேள்விகளுடன்‌ புறப்பட்டான்‌-கடைக்கு துரையன்‌

“என்ன துரையண்ண கண்டு கனகாலம்‌ வீட்ட விட்டு வெளில வாரேலையோ! கொரோனா ஊரடங்கு போட்டதுக்கு இன்டைக்கு தான்‌ வெளில வாராய்‌ போல… அவ்வளவு பயமோ…’ என்ற கடைகாரன்ட நக்கல்‌ கேள்விகளுக்கு “உனக்கு பதில்‌ சொல்ல எனக்கு நேரமில்லை… சாமான தா!… நான்‌ போகனும்‌… மனிசிட்ட உடன வாறேன்‌ எண்டுட்டு வந்தனான்‌… சாமான சீக்கிரம்‌ தா… ஒரு கட்டு சுருட்டும்‌ வை அதோட” என்றதும்‌ கடைகாரன்‌ “அண்ணே சுருட்டு கட்டு 30 ரூபா வைக்கவோ சொல்லுங்கோ”.

“என்னடாப்பா இந்தளா நாளும்‌ 80ரூபா தானே வித்தனி இப்ப ஏன்‌ இந்த விலை… என்ன கொள்ளை அடிக்கிறியோ…”

“இல்லை அண்ண சாமான்‌ வரத்தில்ல… இப்ப இப்படி தான்‌ விக்க கூடியதாய்‌ இருக்கு… நாங்க என்ன செய்யிறது சொல்லுங்கோ அண்ண…”

“சரி கதைய விடு சரி தா…” என்ற பதில்களுடன்‌ சாமான எடுத்திக்கிட்டு வேகமாக புறப்பட்டான்‌ வீட்ட துரையன்..

வீட்ட போனவனை இனியாவது மனிசி விடுவாள்‌ எண்டு பாத்தா “யாரோ கோயிலடில நிவாரணம்‌ கொடுக்கினமாம்‌… போய்‌ வேண்டியாவேன்‌ சும்மா தானே இருக்கப்போறாய்‌ முடிஞ்சிடப்போகுது” எண்டு தொடங்கினாள்‌ வெள்ளையம்பாள்‌.

“உனக்கு யாரடி இதச்‌ சொன்னது… பிச்சைசாமானுக்கு நான்‌ லைன்ல நிண்டு வேண்டவோ!… என்ர கெளரவம்‌ என்னவாகிறது… வேணும்‌ என்டா நீயே
போய்‌ வேண்டு”

“உன்ர மூத்த பெடியன்‌ தான்‌ வந்து சொன்னது அவன்‌ வயசு பெடியன்‌ கூச்சப்படுவான்‌..உனக்கு இந்த வயசில என்ன கூச்சம்‌ வேண்டிக்கிடக்கு..இந்த’ கொரோனா எப்ப முடியும்‌ எண்டு தெரியுமோ… ஊரடங்கு தான்‌ எப்ப முடியும்‌ எண்டு. தெரியுமோ… வேலையும்‌ இல்ல… வார கிழமைக்கு எல்லாரும்‌ பிச்சைதான்‌ எடுக்கனும்‌ போய்‌ மரியாதையா வேண்டிட்டு வா…” என்று அனுப்பி வைத்தாள்‌ வெள்ளாம்பிகை.

“இவளவேண்ட கதைய கேட்டா நித்திரையும்‌ வராது…தூக்கிலதான்‌ தொங்கணும்‌…நேரமும்‌ பதினொன்று ஆகுது… இந்த வெயிலிக்க போக வைச்சிட்டாளே!….” எண்டு அரை மனத்துடன்‌ கேட்டதை நினைத்த படியே கோயில்‌ நோக்கி புறப்பட்டான்‌ துரையன்‌. கோயிலுக்கு போனவனுக்கு தூக்கி வாரி போட்ட மாதிரி ஊரில பாதி சனம்‌ அங்க தான்‌ நிக்கிறத பாத்ததும்‌ சாமான்‌ கிடைச்ச மாதிரி தான்‌ என்ற நினைப்புடன்‌ லைன்ல நிண்டான்‌…

ஒரு மாதிரி அடிச்சுப்பிடிச்சு சாமானை வேண்டிக்கொண்டு ஒரு மாதிரி திரும்பி வந்தவன்‌ மணிக்கூட்ட பாத்தா நேரம்‌ ஒன்டை தாண்டி போய்க்கிட்டு இருக்கு….வந்த களைப்பில திண்ணையிலேயே இருந்தான்‌…

“இந்தாடி வந்து சாமானை கொண்டுபோய்‌ உள்ள வையடி… அங்க என்னத்த பிராக்கு பாக்கிறாய்‌… எந்த நேரமும்‌ ரீவியும்‌ கையுமாய்‌ இருக்கிறாய்‌… தண்ணிய கொண்டு வா குடிக்க… சமையல்‌ முடிச்சிட்டியோ… நேரம்‌ ஒன்டை தாண்டிட்டிது… பசிக்குது” என்ற கேள்விகளை அடுக்கிக்கிட்டே சென்றான்‌ துரையன்‌,

“கொஞ்சம்‌ பொறு வந்ததும்‌ வராததுமாய்‌ கத்திராய்‌… இந்தா தண்ணிய குடி முதல்‌… பருப்பு அடுப்பில வேகுது… கொஞ்சம்‌ பொறு … ஒரு நாளைக்கு பிந்தி திண்டா சாக மாட்டாய்‌… கொஞ்ச நேரம்‌ வந்த களைப்புக்கு படு சமையல்‌ முடிஞ்சதும்‌ ஒழுப்பிறேன்‌…”என்ற படி தண்ணியை கொடுத்து விட்டு சமையல்‌ அறை நோக்கி புறப்பட்டாள்‌ வெள்ளாம்பிகை “இங்க எனக்கெங்க மரியாதை அதைதான்‌ செய்யனும்‌ “என்ற படி திண்ணையில்‌ துண்ட போட்டு படுத்தான்‌ துரையன்‌…

சிறிது நேரம்‌ படுத்து எழும்பியவன்‌ “சோத்த போடு எண்டபடி பெடியல்‌ வந்திட்டாங்களோ… நேரத்திக்கு வந்திடுவாங்களே… கொட்டிக்க… என்றதும்‌ ஒன்டு வந்திட்டு. மிச்சம்‌ இரண்டையும்‌ காணல எண்டாள்‌. அங்கா வாசல்ல ஒன்டு வருது., பார்‌ என்டாள்‌. டேய்‌ எங்கயடா போயிட்டு வாராய்‌.. வெளியில இருக்கிற பிரச்சனை தெரியாம கண்டபடி சுத்திரியள்‌ எதாவது வந்தால்‌ என்ன செய்யப்‌ போறியள்‌ ., சொல்ல கேட்டு வீட்டுக்க இருக்கலாம்‌ தானேடா… எதாவது சொல்லேன்டா.. என்ற துரையனின்‌ கேள்விகளுக்கு மெளனம்‌ காத்தான்‌ துரையனின்‌ இளைய மகன்‌ உடனே வெள்ளாம்பிகை “வந்தவன சாப்பிட விடு உன்ர பஞ்சாயத்தை பேந்து வைச்சுக்கொ..இரண்டு பேரும்‌ சாப்பிட வாங்கோ… என்றபடி வீட்டுக்குள்‌ சென்றாள்‌.

“டேய்‌ இந்த மாஸை யாவது தோய்ச்சு போடலாம்‌ தானே… ஒரு கிழமையா அப்பிடியே போடுறாய்‌. அதின்ட கலர்.. இதிலையோ மூக்கையும்‌ சீறி துடைக்கிறனி.. இதாலை என்ன வருத்தம்‌ வருமோ… “ என்ற எதார்த்த நக்கல்‌ கேள்விகளுடன்‌ மெளனமாய்‌ இருந்த மகனை இயல்பாக்கிய துரையன்‌ கூடவே சாப்பிட கூட்டிச்‌ சென்றான்‌ விறாந்தைக்குள்‌…

இருவரும்‌ சாப்பிட தொடங்கிய போது, துரையனின்‌ மனைவி றேடியோவை ஒலிக்க விட்டாள்‌, றேடியோவில்‌ கொரோனா குறையுமா!… எலெக்சன்‌ நடக்குமா!…என்ற வாதப்பிரதிவாதம்‌. சூடுபிடித்துக்கொண்டிருப்பதை கேட்டபடி சாப்பிட்டு முடித்தவர்கள்‌ திண்ணையில்‌ அமர்ந்து காத்து வாங்க தொடங்கினர்‌.” படலையில்‌ யாரோ கூப்பிடுறார்கள்‌…சத்தம்‌ கேக்கிது ஒருக்கா படலைய பார்‌”என்ற வெள்ளாம்பிகையின்‌ குரலில்‌ படலை பக்கம்‌ திரும்பிய துரையன்‌ “அடியே றேடியோவை நிப்பாட்டு யாரோ வந்து நிக்கினம்‌… போய்‌ பாக்கிறேன்‌” எண்டபடி படலையை நோக்கி போனான்‌ துரையன்…

“வாங்க மூர்த்தியண்ணை… என்ன இந்த பக்கம்‌… சும்மா வரமாட்டியளே ?.. என்ன விஷயம்‌ இந்த பக்கம்‌ வந்திருக்கீங்க” என்ற படி படலையை திறந்து உள்ளே வர வைத்தான்‌ துரையன்‌. உள்ள வந்த மூர்த்தி “அடேய்‌ உன்ர இரண்டாவது பெடியனை வெளில திரிஞ்சது எண்டு பொலிஸ்‌ பிடிச்சு வைச்சிருக்குது.. கொண்டு போகப்போறாங்கள்‌., போய்‌ கதைச்சு எப்படியாவது கூட்டியா…கொண்டு போனாங்கள்‌ எண்டால்‌ அடிச்சு போடுவாங்கள்‌…வேளைக்கு வெளிக்கிட்டு வா…” என்றதும்‌ “இந்த சனியன்களை வீட்டுக்க இருங்கோ எண்டால்‌ கேட்டாங்களோ… இப்ப எங்க வந்து நிக்கிது எண்டு பாரடி” என்று மனிசியை பாத்து கத்த தொடங்கினான்‌ துரையன்‌…

துரையனின்‌ கத்தலில்‌ அழத்தொடங்கியவள்‌ “போய்‌ பெடியனை கூட்டியாங்கோ…. எனக்கு பயமாய்‌ கிடக்கு. இனி போகாம நான்‌ பாக்கிறேன்‌…இந்த ஒரு தரம்‌ கூட்டிட்டு வாங்கோ… என அழுத படி மன்றாடினாள்‌. மன்றாடலில்‌ மனசு இளகிய துரையன்‌ சரி போறேன்‌ அழாத… போக. எனக்கு அடிக்கிறாங்களோ… தெரியல… என்ன நடக்குமோ… என்றபடி “வேற யாரயேனும்‌. பிடிச்சு வைச்சிருக்காங்களோ அண்ணை” என்று மூர்த்தியிடம்‌ வினாவினான்‌ துரையன்‌…

“ஓம்‌ துரை… கூட கந்தையா மாமான்ட பேத்தி பெட்டையையும்‌ பிடிச்சு வைச்சிருக்காங்கள்‌..இரண்டு பேரும்‌ ஒன்டாத்தான்‌ நிண்டவையாம்‌.. எண்டாங்கள்‌” என்றதும்‌ துரையன்‌ இனி நான்‌ போமாட்டேன்‌ “சனியனுக்கு இந்த வயசில பொம்பிளை சோக்கு கேக்கிதோ.. இவன்‌ கடுவினாவல்‌ பத்தை மேட்டில அடிக்கடி காணேக்கேயே நான்‌ யோசிச்சிருக்கனும்‌… இப்படிக்கு பின்னுக்கு ஒருநாள்‌ கொண்டு வந்து விடப்போறான்‌. எண்டு..சனியனை பெத்ததுக்கு நாலு தென்னை மரம்‌ வைச்சிருந்தாலும்‌ காய்ச்சு தந்திருக்கும்‌…நான்‌ போக மாட்டேன்‌ நாலு நாள்‌ உள்ள இருந்திட்டு வரட்டும்‌… அப்பவாவது புத்தி வருதாண்டு பாப்போம்‌…” என்று பேச தொடங்கினான்‌ மறுபடியும்‌… அழுகையை கூட்டிக்கொண்ட வெள்ளாம்பிகை “முதல்ல அவனை கூட்டிவா.. பிறகு மிச்சத்தை பேசிக்கலாம்‌..” என்று அழுகையுடன்‌ மறுபடியும்‌ கெஞ்ச தொடங்கினாள்‌…

“சரி அழாத… போய்‌ தொலையுறேன்‌…” என்றபடி மூர்த்தியண்ணை நில்லுங்கோ… உள்ளுக்க போய்‌ சேர்ட்ட போட்டு வாறேன்‌….என்றபடி வீட்டுக்குள்‌ சென்றவன்‌ திரும்பி வந்து வாங்க போலாம்‌…” என்று மூர்த்தியையும்‌ கூடவே அழைத்து சென்றான்‌…

“என்ன அண்ண இங்க தானே வைச்சிருக்காங்கள்‌…எண்டு சொன்னியல்‌ ஒருதரையும்‌ காணும்‌…” பொறுடா பாப்போம்‌… எதுக்கும்‌ முன்வீட்ட கேப்போம்‌ “ என்றபடி மூர்த்தி முன்‌ வீட்டு காரரின்‌ கதவை தட்டி இங்க நிண்ட பொலிஸ்‌ காரர்‌ எங்க… பிடிச்சி வைச்சிருந்தவங்க எங்க…என்றதும்‌ பொம்பிளை பிள்ளைய விட்டுட்டு பெடியனை ரேசன்‌ கொண்டு போட்டாங்கள்‌..இப்பதான்‌ போறாங்கள்‌…” என்றதும்‌ இருவரும்‌ அவசர அவசரமாய்‌ சைக்கிள்‌ ஸ்ராண்ட கூட தட்டாம வேகமாக சைக்கிள எடுத்து கொண்டு பொலிஸ்‌ ரேசன்‌ நோக்கி சென்றனர்‌.

பொலிஸ்‌ ரேசன்‌ சென்றவர்கள்‌ உள்ளே தயங்கிய படி செல்ல அங்கி இருந்தவர்‌ ஏன்‌ வந்தீங்க… என்ன விஷயம்‌… என்றதும்‌ பெடியனை கூட்டியந்தனிங்களாம்‌ அதுதான்‌ கதைக்க வந்தேன்‌ என்றபடி கண்கள்‌ பெடியனை தேடத்தொடங்கியது.பெடியன்‌ ஓர்‌ மூலையில்‌ வாங்கில்‌ இருப்பதை கண்டதும்‌ மனம்‌ ஓரளவு சாந்தம்‌ அடைந்தது துரையனுக்கு.

உடனே “ஐயா!…அங்கா இருக்குது என்ர பிள்ளை. கூட்டிட்டு போலாம்‌ எண்டு வந்திருக்கேன்‌… என்ன செய்தவன்‌ அவன்‌… என்றதும்‌ அங்கு இருந்தவர்‌ “ என்ன பள்ளிகூடத்தில பிள்ளைய விட்டுட்டு கூட்டிட்டு போக வந்த மாதிரி கதைக்கிறாய்‌… ஊரடங்கு நேரத்தில வெளில வாரதே தப்பு… முகத்தில மாஸ்‌ வேற இல்ல… என்ன கொரோனாவை பரப்பி திரியிறியளோ… கூப்பிட கூப்பிட நிக்காம ஓடினவன்‌… அந்த பிள்ளையை பிடிச்ச உடன வந்து திமிர்‌ கதை வேற. . கோர்ட்க்கு விடுறோம்‌ அங்க போய்‌ ஞாயத்தை கதையுங்கோ.. . இப்ப வீட்ட போங்கோ…” என்றதும்‌ காலில்‌ விழாத குறையாய்‌ கண்‌ கலங்கியதை கூட காட்டாமல்‌ "இந்த ஒரு தடவை மன்னிச்சு விடுங்கோ… இனி இப்படி நடக்காம பாத்திக்கிறேன்‌…" என்று கெஞ்ச தொடங்கினான்‌ துரையன்‌.

கெஞ்சலில்‌ மனம்‌ இளகிய அந்த பொலிஸ்‌ “நான்‌ ஒண்டும்‌ செய்யலாது… பெரிய மாத்தையா வர ஆறு மணியாகும்‌… அது வரை இருங்கோ… அவர்‌ வந்ததும்‌ கதைச்சு பாக்கிறேன்‌… “அந்த கதிரையில போய்‌ இரண்டு பேரும்‌ இருங்கோ” என்று கூறிவிட்டு தன்‌ வேலையை கவனிக்க தொடங்கினார்‌. துரையன்‌ கெஞ்சியதை பார்த்த
பெடியன்‌” வாழ்க்கையில பொலிஸ்‌ ரேசன்‌ படியே மிதிக்கேல….” என ஆணவமாய்‌ சொல்லும்‌ தகப்பனின்‌ முன்‌ எவ்வாறு முகம்‌ பார்த்து பேசுவேன்‌ இனி என கூனிக்குறுகி நிண்டான்‌..

“ஆறு மணியை தாண்டிப்போய்கிட்டு இருக்கு… பெரிய மாத்தையாவ காணேல…. “என மணிக்கூட்டையும்‌ ரேசன்‌ வாசலையும்‌ மாறி மாறி பாத்திக்கிட்டிருந்தான்‌.
துரையன்‌. ஒரு வழியாக 6.20க்கு வந்த மாத்தையா உள்ளே வந்ததும்‌ இவர்களை கண்டவன்‌ “ஏன்‌ இருக்கினம்‌ என்டபடி ஐயா… நீங்களா… போன மாசம்‌ நான்‌ விழுத்தின
பேஸ்ஸை கூப்பிட்டு எடுத்து தந்தது நீங்கதானே….. ஞாபகம்‌ இருக்குது. .. என்ன பிரச்சனை… ஏன்‌ வந்தீங்க” என்றதும்‌ துரையன்‌ “பெடியனை றோட்டில நிண்டது எண்டு. கூட்டியந்திட்டினம்‌…. அதுதான்‌ கதைக்க வந்தேன்‌” என்றான்‌.உடனே மாத்தையா பெடியனை கூப்பிட்டு மிரட்டுற பாணியில்‌ கதைத்து விட்டு “இனி புடிபட்டா ஜெயில்‌ தான்‌. .. உன்ர கொப்பர்ட நல்ல மனசுக்காண்டி விடுறேன்‌… “என்றபடி கூறி வீட்டுக்கு அனுப்பி. வைத்தார்‌.தகப்பனுக்கு வெளியில இவளவு மதிப்பு இருப்பதை உணர்ந்த பெடியன்‌ மனதிற்குள்‌ பூரிப்படைந்தான்‌. வீடு வரும்‌ வரை எதுவுமே கதைக்காமல்‌ வந்த துரையன்‌. வீட்டு படலையை தாண்டியவுடன்‌ இருந்த கோபத்தை முழுவதையும்‌ கையாலும்‌ காலாலும்‌ காட்டினான்‌.

குறுக்கே ஓடிவந்த வெள்ளாம்பிகை “அடிக்கிறத நிப்பாட்டு… என்ன கொல்ல போறியோ அவன… இந்த வயசில இப்படி இருக்காமல்‌ எப்படி இருப்பான்‌… நீயும்‌ இந்த வயச தாண்டி தானே வந்தனி…” என்றதும்‌ அப்பிடியே விட்டுட்டு போய்‌ திண்ணையில்‌ அமர்ந்து கொண்டான்‌ துரையன்‌.

ஒரு மணி நேரமாய்‌ ஒருவருடனும்‌ கதைக்காமல்‌ இருந்தவன்‌ கோபம்‌ தணியவே “அவன்‌ சாப்பிடேல போல… சாப்பிட்டு நடந்தத பெரிசா நினைக்காம படுக்க சொல்லு…
“என்றபடி நேரம்‌ எட்டாகுது ரீவிய போடு செய்திய கேப்போம்‌” என்ற படி தன்‌ அடுத்த சோலிய பாக்க தொடங்கினான்‌ துரையன்.

செய்தியை பார்த்தவன்‌ “என்ன புட்டோ அவிச்சனி… இன்டைக்கும்‌.. கொண்டு வா சாப்பிட்டு படுப்போம்‌… உடம்பெல்லாம்‌ அசதியாய்‌ கிடக்கு…” என்றபடி கொடுத்த புட்டை சாப்பிட்டு படுக்க பாயை விரிச்சவன்‌ அன்டைக்கு நடந்ததை ஒன்று. விடாமல்‌ யோசித்த படியே, “நாளைக்கு என்ன கூத்தோ இனி” என மனதுக்குள்‌ நினைத்த படி படுத்தான்‌.

படுத்தவனை நிம்மதியா படுக்க விட்டிச்சோ கொசு…காதுக்க கொய்‌… கொய்னு… இரைய “அடியேய்‌! அந்த நுளம்பு திரிய கொளுத்தி என்ர தலைமாட்டில வைச்சு விடடி… கடைசில கொரோனாவில தப்பி கொசுக்கடியில டெங்கு வந்து சாகப்‌ போறேன்‌…" என்ற படி போர்வையை போர்த்திக்கொண்டான்‌.

இச்சிறுகதை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பிரம்மம் போட்டித்தொடரில் ஒன்றான எழுத்தோவியம் — 2020 சிறுகதை போட்டியில் பங்கு பெற்றி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

--

--

Tamil Literary Association
தழலி

This medium account is to ensure the online presence of Tamil Literary Association,University of Moratuwa, Srilanka.