கிருமியின் பாடம்

Tamil Literary Association
தழலி
Published in
12 min readSep 23, 2020

குளிர்காலம் மறைந்து இலைகளெல்லாம் துளிர்விடத் தொடங்கிய காலம் இது.

‘விடியலின் குளிர்காற்று இடையிடையே வீசினாலும் வெப்பத்தின் தன்மையை காற்று தன்னுடன் அரவணைத்தே வைத்திருந்தது. உடலில் வழிந்தோடிய வியர்வையை குளிர்மை சுகப்படுத்திக் கொண்டிருந்ததனால் காலைப் பொழுதிற்கேயுரிய மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இன்னும் சில நாட்களில் அண்ணனின் திருமணத்திற்காக கொழும்பிற்குச் சென்று குடும்பத்தார்களுடன் சந்தோஷசமாகயிருந்து எல்லா இடங்களுக்கும் சுற்றலாம்’ என்று மனதில் பலவாறு எண்ணியப்படி தூக்கத்திலிருந்து எழுந்து காலை வேலை எல்லாம் முடித்துவிட்டு, ஆவி பறக்க பறக்க அம்மா போட்டுத்தந்த டீ கப்புடன் என் அறை ஜன்னல் வழியாக இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.

‘சிவபூசையில் கரடி புகுந்த மாதிரி’ இந்த ரசனைக்குள் போன் பற்றிய நினைப்பு வந்து விட்டது. ஏனென்றால், காலையில் எழுந்தவுடனே போனில் முழிக்கின்ற காலத்தில் தானே நாம் சிக்குப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்!!! நான் மட்டும் என்ன உதாரணமா??? அதிலிருந்து தப்பிக்க என்னாலும் முடியவில்லை…

‘சரி! இன்றைக்கு காலையிலேயே என்ன செய்திகள் வந்து இருக்கின்றது என்று பார்க்க கையில் போனை எடுத்து நெட்டை ஒன் பண்ணினேன். அதில் வந்து இருக்கின்ற செய்தியை பார்த்து இப்போது நம் முகம் எப்படி மாறப்போகின்றதோ தெரியவில்லை!’ என்று ஒரு பதற்றத்துடனே கைவிரல்களை அசைத்தேன்…

‘இப்போது எவற்றையும் ரசிக்கக்கூடிய நிலையில் என்மனம் இல்லை.. அது மரத்துவிட்ட போது உணர்வுகள் எங்கிருந்து வரும்? இதயம் இரும்பாகக் கனக்க உள்ளம் எரிமலையாகக் குமுற நெஞ்சம் கொதித்து வெதும்பி அணைகடந்த வெள்ளமாகக் கண்ணீர் கரை புரண்டோடியது. கண்களிருந்து வழிந்த கண்ணீர் கன்னங்களைக் கடந்து சென்றது. வழிந்ததை துடைத்துக் கொள்ளக்கூட சக்தியற்றவளாக விரக்தியிலிருந்தேன்’

ஏனென்றால்,

‘முக்கிய அறிவித்தல்! கொழும்பு நகரில் தற்போது ‘கொவிட்-19’ எனும் ஒருவித வைரஸ் பரவுவதனால் இயன்ற அளவிற்கு கொழும்பு நகரம் செல்வதனை தவிர்க்கவும்… அப்படி செல்வோர் முகமூடி அணிந்தும் சமூக இடைவெளி பேணியும் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்!!!’ என்று ஒரு பதற்றமான செய்தி இருந்ததால் தான்.

‘காலில் சுடுதண்ணீர் கொட்டியவளாக உடனே எழுந்து அம்மாவிடம் ஓடிச் சென்று, அம்மா! அம்மா! கொழும்பில் ஏதோவொரு வைரஸ் பரவுகின்றதாம். அதனால் எவரையும் அங்கே போக வேண்டாம் என்று செய்தி வந்திருக்கின்றது அம்மா. அப்போ அங்கே இருக்கின்றவர்களேல்லாம் மனுஷர்கள் கிடையாதா? அதனால அவர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லையா? இப்ப என்ன பண்ணுறது? நாம கல்யாணத்திற்கு போவது அவ்வளவுதானா?’ என்று அடுத்தடுத்தாக கேள்விகளை எறிந்து கொண்டே இருந்தேன்.

‘மகள்! ஏன் இப்போ இப்படி பதற்றம் ஆகுகின்றாய்? இது பற்றிய உண்மை செய்திகளை கேட்டுக் கொள்ளுவோம். அது வரை கொஞ்சம் பொறுமையாக இரு!’ என்று அம்மா கூறியது, ஷகட்டுக்கடங்காத வெள்ளத்திற்கு அணை போட்டது போல’ இருந்தது.

மனதில் பல குழப்பங்களுடன் சில நாட்கள் கழிந்தன…

அந்த நோய் பற்றிய விபரம் கொஞ்சம் தெரிந்த அறிவிலும் அது ஆரம்பக்கட்ட நிலையாக இருந்ததால் பெரிய பாதிப்பு இல்லை என்றதாலும் கல்யாணத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்கிவிட்டு கல்யாணத்திற்கும் போய் குடும்ப நபர்களுடன் சந்தோஷமாக இருந்தோம். எல்லோருடைய ஆசீர்வாதத்துடன் நல்லபடியாக எங்கள் அண்ணன் கல்யாணம் முடிந்தது.

‘சரி! இப்போது கல்யாணப்பகுதி முடிந்து விட்டது. அடுத்தது நம்ம ஆட்டம்தான். ஊர் போய் சேருவதற்குள்ளே நல்லா கொழும்;பை ஒரு சுத்து சுத்;தி நல்லா சாப்பிட்டு ஜொலியா இருக்க வேண்டும்!’ என்று மனதில் பெரிய கோட்டை கட்டி வைத்து இருந்தேன்.

அப்போது திடீரென மனதில் ஒரு குத்தல்.

‘இங்கே வைரஸ் பரவுகின்றது என்று கூறுகின்றார்களே! இப்போது வெளியே போகலாமா? போனால் வைரஸ் வந்து விடுமா? எனக்கு வெளியே போய் ஆக வேண்டுமே! இப்போது என்ன பண்ணுறது?’ என்ற குழப்பமான கேள்வி மறுபடியும் வந்து விட்டது.

இருந்தாலும் நாம மனதில ஒன்று நினைத்தால் அதை செய்து முடிக்கின்ற ஆள்ளாச்சே! இப்போது வெளியே போனால் எந்த பிரச்சினையும் வராது. நீ தைரியமா போ…’ என்று என்னுடைய மனசாட்சி கொஞ்சம் என்னை ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தது.

இந்த திட்டத்திற்கு நான் என் அண்ணனை தெரிவு செய்து கொண்டேன்.

அண்ணா! நாம எங்கேயாவது வெளியே போவோம். ஏதாவதொரு நல்ல இடம் செல்லுங்க அண்ணா!’ என்று அவருக்கு உத்தரவு போட்டேன்.

‘என்ன சொன்னாய்? வெளியே போகவா? என்ன விளையாடுறீயா? அதெல்லாம் முடியாது. பிரச்சினை தெரியும் தானே! சும்மா இரு!’ என்று அதட்டவும் நம்ம வாய் சம்மா இருக்குமா?, ‘தங்கச்சி மேல பாசம் இருந்தால் நீங்க வருவீங்க! அதுதானே பாசமே இல்லை… நான் இப்போது ஊருக்கு போனால் இனி இந்த பக்கமே வர மாட்டேன்! பார்ப்போம்’ என்று பாசமான மிரட்டல்களை அள்ளி வீசினேன்.

உடனே அண்ணன் என்னுடைய பிடிவாதக் குணத்தை புரிந்து கொண்டு, ‘சரி! நான் கூட்டிப் போகின்றேன். ஆனால், கவனமாக இருக்க வேண்டும். ரொம்ப நேரம் சுற்றக்கூடாது’ என்று கட்டளை போட்டார்.

அந்தக் கட்டளையை காதில் ஏற்றிக் கொண்டு இருக்கும் போதே… ‘இங்கே புதிதாக கடற்கரைக்கு பக்கத்தில் மோல் ஒன்று திறந்து இருக்கின்றதாமே! அந்த இடம் ரொம்ப நன்;றாக இருக்கும். நாம எல்லோரும் அங்கே போவோம்’ என்று சொல்லிக் கொண்டே சடசடவென்று எல்லோரும் தயார் ஆகிவிட்டு சரியாக ஐந்து மணிக்கேல்லாம் அங்கே சென்று விட்டோம்.

தலையை தூக்கிப் பார்த்தால் பின் வரைக்கும் போய் விட்டது. அவ்வளவு உயரம்!!! அங்கே வாசலில் சோதனை நடந்த கொண்டு இருந்தது. சோதனை பகுதிக்குள் சென்றதும் ஏனோ தெரியவில்லை நெஞ்சு கொஞ்சம் படபடத்தது. அதற்கான சரியான காரணம் தெரியாமல் பயத்தோடு உள்ளே காலடி எடுத்து வைத்து விட்டு, ‘சரி! சரி! புது இடம் என்றதால் அப்படி இருக்கும் போல… தைரியமாக இரு!’ என்று மனதிலுள் எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.

புது இடம் என்றதால் எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படங்கள் எல்லாம் எடுத்துவிட்டு ஒரு கடைக்குள் உணவு உண்ணச் சென்றோம்.

ஒன்று சொல்லவா? அங்கே கிடைக்கின்ற உணவு நான் இதுவரை உண்டதேயில்லை… அன்றைக்குத்தான் முதல் தடவையாக உண்ண நினைத்தேன். அங்கே இருக்கின்ற சேல்ஸ் கேர்ல் விதவிதமாக கேள்வி கேட்ட நாங்களும் சரி சரி என்று கூறினோம். அதனுடைய விலை மூவாயிரம் ரூபாய் என்று விலை போட்டு கையில் தந்தாள். இப்போது அது என்ன உணவு என்று கண்டு பிடித்தீர்களா? ம்ம்ம்… அதுதான் ‘பீட்ஷh’.

ஆசையாக ஓடர் செய்து விட்டு பீட்ஷhவுக்காக காத்திருக்கின்ற நேரம் நான் என் அண்ணனின் முகத்தைப் பார்த்தேன் அவ்வளவு நல்லம் இல்லை… ‘என்ன அண்ணா எதுவும் பிரச்சினையா? ஏன் ஒரு மாதிரி இருக்கின்றாய்?’ என்று கேட்டேன்.

உடனே அந்நியனாக மாறிய அண்ணா, ‘பாரு! கை கழுவ கூட தண்ணீர் இல்லை, ஒரே கூட்டமாக இருக்கு, இந்த நேரத்தில் வந்து வெளியே சாப்பிட எனக்கு பிடிக்கவில்லை வீட்டுக்குப் போய் சாப்பிட்டு இருந்திருக்கலாம்…’ என்று குண்டைத்தூக்கிப் போட்டான்.

‘என்ன அண்ணா! இப்படி சொல்லுறீங்க? ஒரு ஆசையில்தானே சாப்பிட்ட போகலாம் என்று வந்தோம். ஒன்றும் பிரச்சினை வராது பயப்பட வேண்டாம்!’ என்று பரிதாபமாக பேசி அவரை சாந்தப்படுத்தும் வேளை இரண்டு சைனீஸ் ஜோடிகள் எங்கள் அருகிலுள்ள சீட்டில் வந்து உட்கார்ந்து விட்டார்கள்.

‘இதற்கு பிறகு என்ன சொல்ல வேண்டும்?’

‘அந்த ஏசி குளிர்காற்றிலும் வியர்த்துக் கொட்டியது! கைகால் எல்லாம் படபடத்தது! பேச வார்த்தைகளே வரவில்லை… அப்போது இதயத்துடிப்பு உச்சத்திற்கு போய் போய் வந்தது. ஒன்றும் வேண்டாம், எல்லாவற்றையும் கேன்சல் பண்ணுவோம், காசு திரும்பி தராவிட்டாலும் பரவாயில்லை… இல்லையென்றால் எல்லாவற்றையும் கட்டி எடுத்து கொண்டு வீட்டிற்கு போய் விடுவோமா? என்று மனதில் பலவாறான பயங்கள் மேலெழுந்தன…

பாவம்! தங்கச்சி என்னால் ரொம்பவும் பயந்து போய் விட்டாள். அவளை கஷ;டப்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் அண்ணன் எனக்காக கொஞ்சம் சமாளித்துப் போனார். ஓடர் செய்த பீட்ஷhவும் மேசைக்கு வந்து சேர்ந்தது. அதை சிறு நடுக்கத்துடனே உண்டு முடித்தேன். மேலும் சில இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

வழக்கமான கோடை… தலைக்குமேல் அனலாய் பொழியும் வெயில், அசைவை மறந்து விட்டது போல் திகைத்து நிற்கும் மரங்கள். இந்த வெப்பத்தில் நடக்கத் துணிவில்லாமல் வீட்டினுள் முடங்கிய மக்கள். வெறிச்சோடிய வீதிகள். காரணம் ‘கொரோனா வைரஸ்’ ம்ம்ம்… இப்போது இந்த லோக்டவுன் நேரங்களிலும் அந்த நிகழ்வுகள் எல்லாம் ஞாபகத்தில் வந்து போகும்.

ஏனென்றால், அந்த நிகழ்வுதான் எனக்கு கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது பயங்கரமானது என்ற அச்சத்தை காட்டி விட்டுச் சென்றது. இப்போதும் கூட என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் இதையும் நான் சேர்த்துக் கொள்ளப்போகின்றேன். (சிறு புன்னகையுடன்)

‘சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். வெயில் அனல் போலிருந்தது. முற்றத்தில் வைத்த கால் நெருப்பை மிதித்தது போல வேகும் அளவிற்கு வெயில் கொடூரமானதாக இருந்தது’, அதே நிலையில்தான் என் அப்பாவின் உள்ளமும் உடலும் வெந்து கொண்டிருந்தது. அவர் மனம் ஒரு நிலையில் இல்லை. எதையும் ஜீரணித்துக் கொள்ளவும் முடியவில்லை… இத்தோடு ஐந்து முறை சந்தைக்கு போய் வந்துவிட்டார். இன்னும் பொருட்கள் இல்லை என்றால் திரும்பவும் போகதான் வேண்டும்!.

அவரது கேள்வி, ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலைமை? இப்போது பெரிதாக வேலையும் இல்லை! கைளில் கொஞ்சம் தான் காசு இருக்கின்றது. ஆபத்தாக ஏதேனும் பிரச்சினை வந்துவிட்டால் குடும்பத்தை எப்படி பார்ப்பேன்? பொருட்களின் விலையும் கூடிப்போகின்றது. இப்போது வரிசையில் நின்று பொருட்கள் வாங்குவதற்குள்ளே உயிர் போய் வந்து விடுகின்றது… இவை எல்லாவற்றிற்கும் எப்போதுதான் ஒரு முடிவு கிடைக்கும்?’ என்று அந்த கொழுத்தும் வெயிலில் பொருட்கள் வாங்கி வந்த அப்பா அம்மாவிடம் இப்படி கேள்வி கேட்டு அசர்ந்து பேசிக் கொண்டிருந்தது இலேசாக என் காதில் விழுந்தது.

அப்போது அந்த கேள்வி என் இதயத்தை அறுத்த பெருங்கேள்வியாக இருந்தது. அது கேள்வியாக மட்டுமில்லாமல் இதயத்தை அழுத்தும் பெருஞ்சுமையாகவும் இருந்தது… என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் என் மனம் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக்கட்டி விட்டது போலிருந்தது. அத்தோடு அக்கேள்விக்கு தக்கதொரு பதிலையும் என்னால் கூற முடியவில்லை…

ஏனென்றால்,

‘பிள்ளை ஒரு மாதிரியாக நல்ல நிலைக்கு வந்துவிட்டது இனி எனக்கென்ன? எல்லாப் பொறுப்புக்களையும் அவளிடம் ஒப்படைத்து விட்டுக் கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என்று எல்லோருடைய பெற்றோர்களும் நினைப்பார்கள். ஆனால் அவர்களின் சுமையை பாதி குறைக்கும் நிலையில் கூட நான் இல்லை, என்னால் ஒரு பண உதவி கூட செய்யமுடியவில்லை… இருந்தாலும்!, இப்போதும் வரை நான் வீட்டில் சின்ன இளவரசிதான். அவர்கள் என்னை எதுவும் கூறியதுமில்லை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ போல, என்ன கஷ;டம் வந்தாலும், என்ன நடந்தாலும் விட்டுக் கொடுப்பதில்லை… பிள்ளைகள் என்றால் அவர்களுக்க தங்கம்தானே!!!

சிணுங்… சிணுங்… என்று கையடக்கத் தொலைபேசியின் சிணுங்கல் என் ஆழ்ந்த சிந்தனையைக் குறுக்கறுக்கின்றது.

தலையைத் திருப்பி கை எட்டும் தூரத்திலிருக்கும் தொலைபேசியை எடுத்து, ‘ஹலோ’ என்றேன்.

அது எங்கள் பெரியம்மா… அவரின் அழைப்பிற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியும்! நேற்று இரவு தான், எங்கள் ஊரில் ‘ஒரு ஆணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கின்றது’ என அறிவித்துச் சென்றனர். அதனால் அவர் வீட்டை சுற்றியுள்ள ஐந்நூறு மீட்டர் பகுதியை மூடிவிட்டனர். அதனால் இங்கு என்ன நிலைமை, எல்லோரும் நலமாக இருக்கின்றீர்களா?’ என்று அறியத்தான் அழைப்பு விடுத்துள்ளார். அந்நேரம் அவர் மன அமைதிக்கான பேச்சுகளை பேசிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டேன்.

திடீரென ஒரு சத்தம்… ‘அது அடிமைப் பெண்கள் விரக்தியில் கதறுவது’ போல இருந்தது. என்னடா இந்த சத்தம் வித்தியாசமாக இருக்கின்றதே என்று சமையலறை பக்கம் சென்று பார்த்தேன்.

‘சும்மாவாகவே வாரத்தில் ஏழு நாட்களும் வேலை இருந்து கொண்டே இருக்கும். இருந்தும் கொஞ்சமாவது ஓய்வு எடுப்பேன். ஆனால், இப்போது ஒரு நிமிடம் இருக்க கூட முடியவில்லை. அடுத்தடுத்தாக வேலை இருந்து கொண்டே இருக்கின்றது. வழமையாக சமைக்கின்ற போலதான் இந்த நேரமும் சமைக்கின்றேன். ஓஹோ!!! இப்போது சமைக்கின்ற போது எல்லாவற்றையும் பக்குவமாக பார்த்து பார்த்து சமைக்க வேண்டி இருப்பதால் தான் போல! போதாவற்றுக்கு பாத்திரமும் நான் தான் கழுவ வேண்டும், வீட்டுவேலை எல்லாம் செய்ய வேண்டும், உடுப்பெல்லாம் கழுவ வேண்டும்’ அது இதுவென்று என்னுடைய அம்மா அடுக்கிக் கொண்டே போனாங்க.

அப்போது, ‘என்னடா நாம அப்பப்போ கொஞ்சம் வேலை செய்து கொடுக்கின்றோம் தானே! அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை போல! அவங்க பாட்டுக்கு என்னவெல்லாம் சொல்லுகின்றாரே!’ என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போது முகப்புத்தகத்தில் பார்த்த ஒரு கேலிக்கை பதிவு ஞாபகம் வந்தது.

கொரோனா!

உன்னால் ஊருக்கு ‘ஊரடங்கு’ போட்டது போல

ஊரடங்கு முடிந்த பிறகு ஒரு வாரத்திற்கு

சமையலறைக்கு ‘சமயலடங்கு’ என்று போட வேண்டும்.

எனக்கு அதை நினைத்ததும் வாய் ஓரமாக சிரிப்பு வந்து விட்டது. கோபத்திலிருந்த அம்மா அதை பார்த்தவுடன், ‘என்ன! நான் பேசுவதைப்பார்த்து சிரிக்கின்றாயா? உங்களுக்கேல்லாம் விளையாட்டாகப் போய் விட்டது தானே! என்னோட இந்த புலம்பலுக்கு காரணம் நேற்று இரவு நம்ம ஊருக்கு அறிவித்த செய்திதான்!!! பொம்பளை பிள்ளைகள் உங்க இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு என்ன பண்னுவது? நாளைக்கு பிரச்சினை பெரிதாக வந்தால் நாம எங்கே போவது? அந்த யோசணையில் தான் புலம்பிக் கொண்டு இருக்கின்றேன்’ என்று என் மேல் பரிதாபமான பார்வையுடன் திசையை திருப்பினார்.

‘அம்மா! அதுவெல்லாம் ஒன்றுமில்iலை. நான் வேறொன்றை நினைத்து சிரித்தேன். நீங்க உங்களுக்கேன்று நினைக்க வேண்டாம். சரி! இப்போது என்ன? நான் மீதி இருக்கின்ற வேலையெல்லாம் செய்து தருகின்றேன். நீங்க கொஞ்சம் நேரம் அமைதியாக இருங்க! யோசிக்க வேண்டாம்’ என்று அம்மாவை சமாதானப்படத்தி விட்டு வேலைகளை செய்யத் தொடங்கினேன்.

ஊரடங்கு இன்று மாலை ஆறு மணியுடன் தொடங்குகின்றது.

வெளிவேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு எல்லோரும் வீட்டில் புகுந்து விட்டனர். அறைகளிலிருந்து சுற்றியுள்ள நான்கு சுவர்களை பார்க்கும் வேளை தொடங்கிவிட்டது. இதனால் கனமாகிய மனது, ‘இந்நிலையிலிருந்து தப்பிக்கும் நாள் எப்போது வரும்?’ என்று மனசாட்சி கேள்வி கேட்க, ‘சரியான பதில் கூறத் தெரியாத கடைசி வரிசை மாணவி’ போல அமர்ந்திருந்தேன்.

சரி! இவற்றை பற்றி யோசித்தால் குழம்பி போய் விடுவோம். மனசை கொஞ்சம் இலேசாக மாற்ற என்ன செய்யலாம்? ம்ம்… வானொலியில் இனிமையான பாடல் போடுவார்கள் அதை கேட்டுப் பார்ப்போம்! என்று வானொலி சுவிட்சைத் தட்டினால், ‘கொரோனாவிற்கு பல விதமான மெட்டுக்களில் பாடலும் விளம்பரங்களும் மட்டுமன்றி அறிப்பாளர்கள் மக்களை சமூக இடைவெளி பேணுங்கள், வெளியே அநாவசியமாக செல்ல வேண்டாம், தனித்திருங்கள்! விழித்திருங்கள்! கொரோனாவை அழிப்போம்’ என்று கொந்தளித்துக் கொண்டு இருந்தவையே ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது.

அடக் கடவுளே! ‘இவை மனதை இலேசாக மாற்றும் என்று பார்த்தால் மேலும் கனமாக்கிவிடும் போலிருக்கின்றதே! கொஞ்சம் நேரம் அவைபற்றிய செய்தி கேட்டால் போதும். அதுமட்டுமில்லாமல் எந்த நேரமும் அதையே கேட்பது நம் உடலிற்கும் உள்ளத்திற்கும் ஆபத்தை விளைவித்துவிடும்’ என்று என்னை சுதாகரித்தக் கொண்டு வானொலியை அணைத்துவிட்டு எட்டுமணி செய்தி பார்க்க தொலைகாட்சி முன் போய் இருந்து விட்டேன்.

முக்கிய செய்தி!, ‘உலகளாவிய ரீதியில் ‘கொவிட்-19’ எனப்படும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் மரண வீதம் கூடிக் கொண்டே செல்கின்றது. அதனால் எம்மால் முடிந்தவரை வெளியில் செல்வதனை தவிர்ப்பதனாலும், சமூக இடைவெளியை பேணுவதனாலும், சுகாதார பழக்கவழக்கத்துடனும் இருப்பதனாலும் ஒருவருக்கொருவர் நோய் தேற்றுவதை தவிர்ததுக் கொள்ளலாம்!!!’ என்று அலட்சியமான செய்திகளை அறிவித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நான், ‘என்ன அப்பா இது? இப்படி அலட்சியமாக செய்தி சொல்லுகின்றனர். எத்தனையே விதமான துறைகளில் எவ்வளவோ பிரம்மிக்கும் அளவிற்கு சாதனை எல்லாம் புரிந்த நாடுகளினால் கூட இதற்கு மருந்து கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லுகின்றனர். இவற்றிலும் மிகப் பெரிய கொடூமை அந்த மாதிரி நாடுகள் தான் வைரஸ் தாக்கத்தில் முன்னிலையில் இருக்கின்றது! இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்லுவது!!! இப்போது கூட ‘வீட்டிலேயே இருங்கள் என்று கூறியும் எல்லோரும் கள்ளத்தனமாக பந்தா காட்டுவதற்கு வெளியே ஆட்கள் செல்லுகின்றனர், மாஸ்க் போட அலுப்படைகின்றனர், பொது இடங்களில் ஒட்டி ஒட்டியே பழகுகின்றார்கள். ஒரு பயமே இல்லை!, இவற்றையெல்லாம் தடுப்பதற்கும் கவனித்து செயற்படுத்துவதற்கும் யார் இருக்கின்றார்கள்?’ என்று என்பாட்டிற்கு கேள்வி கேட்க என் பக்கம் முகத்தை திருப்பினார் அப்பா.

‘சின்னப் பிள்ளை விபரம் தெரியாமல் பேசுகின்றது போல’ என்ற கருத்தை கொண்டிருந்தது அவர் பார்வை.

ம்ம்… அம்மா, இன்னும் கொஞ்சம் நாளையில் உலகம் அழியப்போகின்றது என்று சொன்னார்கள். ஆனால் முழுசாக அழிந்து போய் விடவில்லை. வருஷத்தில் சில சில இயற்கையான செயற்கையான அனர்த்தங்கள் தான் வந்து வந்து போயின. உதாரணமா ‘சுனாமி, வெள்ளம், வாகன விபத்து, வெடிச் சம்பவம்’ என்று நிறைய கூறலாம். இவையெல்லாம் நம் எதிர் பார்க்காத தருணத்தில் தான் நடந்து முடிந்தது. இவற்றினால் எவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டது என்று உனக்கும் தெரியும் தானே! அந்த நேரத்தில் ஓடி வந்து உதவிக்கு நிற்பவர்கள் யாரு? இராணுவம், பொலீஸ், கடற்படை என்று அதனுடன் சம்மந்தப்பட்டவர்கள் தானே! அந்த நேரத்தில் மற்ற உயிர்களை காப்பாற்ற தன் உயிரையே கொடுத்து போராடுறவர்கள் அவர்கள் தானே!’ இப்போதும் கூட ஊரடங்கு நேரத்தில் வெயில், மழை, இராப்பகல் என்று பார்க்காமல் கால் வலிக்க வலிக்க நின்று ஊரை பாதுகாக்கின்றனர்!!!

நீ சொன்னீயேம்மா தேலையில்லாமல் வெளியே சுற்றுகின்ற ஆட்களை கவனிக்க ஆட்கள் இல்லை என்று. அப்படிபட்ட ஆட்களையும் வாகனங்களையும் கைது பண்ணி அவர்களுக்கு உரிய தண்டணை கொடுத்து, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கும் பாதுகாப்பாக நின்று அவர்கள் தங்கள் கடமைகளை செய்து கொண்டு இருக்கின்றார்….’

‘தன் ஊரை விட்டு தன் குடும்பத்தை விட்டு இப்போது வெளியே நிற்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள செய்து அவர்கள் கடமைக்கு நன்றி சொல்ல வேண்டும்! அந்த ஒரு வார்த்தை அவர்களுக்கு எவ்வளவு பெரிய மன அமைதியை கொடுக்கும் தெரியுமா?’ என்று எனது திடீர் கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளித்த அப்பா அதனூடாக எனக்கு நல்ல பழக்கவழக்கங்களையும் சொல்லித்தந்தார்.

வெகு நேரம் பேசிக் கொண்டிருந்ததால் நேரம் போய்விட்டது. இச் செய்திகளால் துயரிலிருந்து மீளாத மனதோடு படுக்கையறைக்குச் சென்று விட்டேன்.

அப்போது, குளிர்காற்று வேகமாக வீசியது. கரிய முகில்கள் வானத்தில் ஓட்டம் பிடித்தன. பிரகாசித்தக் கொண்டிருந்த நிலவும் மறைக்கப்பட்டுவிட்டது. வானத்தில் அமைதி… ‘மழை பெய்யப் போகின்றது போல’ மனத்தில் ஒரு சின்னப்பயம் ‘இன்னும் கொஞ்ச நாள் தான் இந்தப் பிரச்சினை! இப்போது வீதியில் பொலீஸ்காரர்கள் நிற்பார்கள். எல்லோரும் அவங்க அவங்க வீட்டிட்குள்ளே நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் இப்போது மழை பெய்தால் அவர்கள் எங்கே ஒதுங்குவார்கள்? நம்முடைய வீட்டுவாசல் பெரிதாக இருந்தால் அவர்களுக்கு இருக்க இடம் கொடுக்கலாம்! ஆனால் நமக்கு மனசு பெரிதாக இருக்கிறது போல வீடு பெரியதாக இல்லையே!!!’ , ‘அன்றைய இரவிற்கும் இன்றைய இரவிற்கும் எவ்வளவு வித்தியாசம்? அமைதியான ஆழ்ந்த தூக்கம் எவரிற்கும் இல்லையே!’ என்று நினைத்து புலம்பியவாறே சிறிது நேரம் கழித்து உறங்கிவிட்டேன்.

இருளரக்கனை விரட்டியடிப்பதற்கான கதிரவனின் இறுதிக் கட்டத் தாக்குதல் அரங்கேரிக் கொண்டிருக்கும் அதிகாலை நேரம்… விடிந்தும் விடியாத வைகறைப் பொழுதின் குளுமையை அமைதியை அழகை ஒரே நொடியில் ‘சூரிய உதயம்’ என்று சொல்லிவிடலாம்.

விடிந்துவிட்டது.

வீதியில் சுறுசுறுப்பு இல்லை. பாதசாரிகளின் நடமாட்டம், வாகனங்களின் ஓட்டம் இல்லை. காலைப்பொழுதிற்குரிய மகிழ்ச்சியோ உற்சாகமோ அற்று வேதனை நிரம்பி வழியும் முகத்துடன் வீட்டில் முடங்கிக் கிடந்தோம்… இனி ஊரடங்கை தளர்த்தும் வரைக்கும் இந்த நிலை தான் போல!!!.

‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்று சினிமாவில் தளபதி கூறியது இப்போது உண்மையாகி விட்டது. ஏன் என்று யோசிக்கின்றீர்களா? ஒரு நாள் செய்கின்ற வேலையைதான் மறுபடியும் மறுபடியும் மீதி நாட்களிலும் செய்து கொண்டு இருந்தோம். அது நான் மட்டுமில்லை எல்லோரும்தான்… இந்த பகுதியை படிக்கும் போது அந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு ஞாபகம் வரும் பாருங்கள்!!!

இந்தப் பாணியிலேயே இரண்டு மாதம் போய்விட்டது. அன்று ஊரடங்கு தளர்த்தும் நாள்.

‘அதற்கு முன் இரண்டு நாட்கள் எனக்கு தடுமல் காய்ச்சல் என்று திடீரென வந்துவிட்டது. மனதினுள் ஒரு பதட்டம் கொரேனா வந்து இருக்குமோ என்று… ச்சீ! ச்சீ! நாமதான் வெளியே எங்கேயும் போகவில்லை, அப்போது எப்படி வைரஸ் வரும்? அப்படி ஒன்றும் இருக்காது!’ என்று என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டு அம்மாவுடன் வைத்தியசாலைக்குச் சென்றேன்.

காற்றில் பறக்கும் மெல்லிய தேகத்தை தோற்றமாகக் கொண்டவர் டொக்டர் அபிரா. இளம் வைத்தியர். அந்த ஒளிர்மஞ்சல் நிறமும் பளீரிடும் விழிகளும் கழுத்து வரை வெட்டப்பட்ட நீள் முடியும் அவர் இப் பிரதேசத்திற்குரியவர் அல்ல என்பதை இலகுவாகக் காட்டிக் கொண்டிருந்தது.

என்னை நன்றாக பரிசோதனை செய்து விட்டு முடித்த பின் முகத்தில் இருந்த மாஸ்கை விலக்கி விட்டு, கனிவோடு சில வார்த்தைகளை உதிர்த்தார்.

‘புஞ்சி நோனா! பயவெண்ட எபா! மே புஞ்சி கெஸ்ஸ’(சின்ன மகள் பயப்பட வேண்டாம். இது சின்ன தடிமன் தான்) இது சூடுகாலம் தானே. அதனாலும் இப்படி வரும், ‘மே கொரோனா நே! ஹரி’(இது கொரோனா இல்ல சரியா) என்று இரண்டு பாiஷயினாலே மாறி மாறி அவர் பேசினார்.

அந்த கதையை கேட்பதற்காகவே முன்பிருந்தே அவரிடம்டம் வைத்தியம் பார்க்கச் செல்வேன். ‘அழகை யார் தான் ரசிக்க மாட்டார்கள்? ம்ம்…’ என்று மனதில் எண்ணிக் கொண்டு எனக்கு வழங்கிய மருந்து சீட்டுடன் வெளியே சென்று வரிசையில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து கொண்டேன்.

அந்த நேரம் அவசரமாக எதையோ கூற எந்த வண்ணம் ஓடி வந்த நர்ஸ் டொக்டரின் அறைக்குள் நுழைந்தாள்;. சில நேரம் கழித்து இருவரும் எதிரே உள்ள அறைக்குள் வேகமாக நுழைந்து கொண்டனர்.

என் மனதில், ‘ஏன் அவர்கள் பதற்றமாக செல்கின்றனர்? போய் என்வென்று பார்! பார்!’ என்று மனது அடித்துக் கொண்டு இருந்ததால் அந்த அறை வாசல் அருகே ஓடிப்போய் நின்றேன்.

அங்கே…

கட்டில் முழுவதையும் நிறைத்த உயரமும், சுருண்ட தலை முடியும், வறுமையில் வாடும் உடலோடும் தோற்றமளித்த அவருக்கு என்ன சுகயீனமாக இருக்கலாமென எனது மூளை அதிதீவிரமாக முயற்சி செய்தும் விடை காண முடியவில்லை.

‘துயரங்கள் எல்லாம் பறவையின் சிறகு நனைந்த பிறகு அதற்கே சுமையாக இருப்பது போல தான்’, இப்போது நானும் அதைப்போல என் குடும்பத்திற்கு சுமையாக இருக்கப் போகின்றேன். கடன் பட்டு, ஒரு நாள் வேலை செய்து வரும் கொஞ்சம் பணத்தில் குடும்பத்தை சீவிக்கின்ற எங்களைப் போல இருக்கின்ற ஆட்களைத்தான் கொரோனாவிற்கும் பிடிக்கும் போல! காசு இருக்குறவன் விதவிதமாக சாப்பாடு, மருந்து என உண்டு தன்னைப் பாதகாத்துக் கொள்ளுவான்… எங்களைப் போன்ற ஏழைகளுக்கு பருப்பும் செமன்டின்னும் தான் உணவு. அதுவும் புழுவும் பூச்சியுமாக இருந்தது. சரி! நிவாரணப் பொருள் தந்தால் அதையும் அவர்கள் பெருமைக்காக படம் எடுத்துப் போட்டார்கள்.

இந்த நேரம் நோய்யை கட்டுப்படுத்த ஊரடங்கு போட்ட அரசாங்கம் எங்களைப் போல தினக்கூலி வேலை செய்து பிழைக்குறவங்களுக்கு உதவி செய்து தனியாக கவனித்தார்களா? ம்ம்… ஐயாயிரம் ரூபாய் சமூர்த்தி கொடுப்பனவு என்று சொன்னார்கள். அது முழுதாக கையில் வந்து சேர்ந்த பாடும் இல்லை. இல்லாதவர்களுடைய காசை அடிக்கின்றதில் அந்த அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அவ்வளவு ஆசை போல!!!.

இயற்கையோ! செயற்கையோ! என்ன அனர்த்தம் வந்தாலும் கடைசியில பாதிக்கப்படுகின்றது என்னவோ ஏழைகளான நாங்கள் தான்! காசு இருக்கின்றவன் பணத்தைக் கொட்டி உயிரை காப்பாற்றிக் கொள்வான். பணக்காரன் உயிருடன் மீண்டு வந்தால் தலைப்புச் செய்தியாக பத்திரிக்கையில் வரும். அதுவே ஏழை செத்துப்போனால் யார் கண்டுகொள்ளப் போகின்றார்கள்? ‘எனக்கும் என் உள்ளூணர்வுகளுக்கும் மதிப்பில்லாத உலகத்தில் உயிரோடு வாழ்ந்து என்ன பிரயோஜனம்? ஆனால் நான் செத்துப்போனால் யார் என் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளவார்கள்? கடவுளே! ஒன்றுக்கும் வழி இல்லாத நான் போய் சேர்ந்து விட்டால் என் பிள்ளைகளையும் என்னுடனே அனுப்பி வைத்துவிடு! அங்கேயாவது நாங்கள் இந்த தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருப்போம்’ என்று பல உண்மைகளையும் இயலாமையையும் அன்பையும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தால் அவள்.

‘இயற்கை படைத்த மரம், செடி, கொடிகளுக்குள்ளும் உயிர் உணர்வு இருக்கின்றது என்பதை யாரும் உணர்ந்ததமில்லை… அதை மனிதர்களுக்கு உணர்த்த அவை முயன்றதுமில்லை…’ இவர்களும் அப்படித்தான்! பணக்காரர்களுக்கு வெறுமென்று வேலை செய்ய அடிமைகளாக பிறந்த இவர்களுக்கு என்றும் வாழ்க்கை பாலைவனம் தான்’; என்ற உண்மையை அவ்விடத்தில் நான் அறிந்து கொண்டிருந்த வேளை ஒரு கனிவான குரல் எழுந்தது.

அம்மே! கல்பனா கரண எபா (அம்மா யோசிக்க வேண்;டாம்) உங்களுக்கு சரியான முறையில் சிகிச்சை செய்தால் உங்களை குணமாக்கலாம். அதற்கு முதலில் நீங்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். எல்லா விடயங்களிலும் உங்களை ஒதுக்குகின்றார்கள் என்று நனைக்க வேண்டாம். ‘கசல கொட திபுனத் மெனிக்க வட்டி கவதாவத்’ (குப்பையிலிருந்தாலும் மாணிக்கத்தின் மதிப்பு குறையாது) என்ன கஷ;டம் வந்தாலும் உங்கள் பிள்ளைகள் உங்களை விட்டு எங்கேயும் போகவில்லையே! அவர்களுக்காக பாடுபடுகின்ற நீங்கள்தான் மாணிக்கம். பிள்ளைகளுக்காக பொறுத்திருந்து பாருங்கள்! செத்து சுகம் இல்லாவிட்டாலும் அவர்களின் அன்பு சொர்க்கத்தையே உங்களுக்கு தரும்.

நான் ஒன்று சொல்லவா? இங்கே வேலை முடித்துவிட்டு விட்டிற்கு செல்லும் எனக்காக அம்மா காத்துக் கொண்டு இருப்பாங்க. நான் வீட்டு சந்திக்கு போகும் வரைக்கும் வெளியே நின்று பேசிக் கொண்டு இருப்பர்கள் எல்லாம் வீட்டிற்குள்ளே ஓடிப்போய் விடுவார்கள். அப்படி இரண்டு மூன்று நாள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. அப்போது அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை…

என் வீட்டுப்பக்கம் இருக்கின்ற பாட்டி என்கூட அவங்க பிள்ளை போல பழகுவாங்க. ஒரு நாள் என் அம்மாவிடம், ‘உங்க பிள்ளைதான் இப்போது கொரோனா சம்பந்தப்பட்ட வேலை செய்கின்றாளே!, அவளை அங்கே தங்குவதற்கு விடலாமே ஏன் வீணாக வீடு வரைக்கும் வந்து கஷ;டப்படுகின்றாள்’ என்று கூறியுள்ளாராம். அதை என்னுடைய அம்மா ஏதோ பிள்ளை மேலுள்ள அக்கறையில் கூறியுள்ளார் என்று நினைத்து இருக்கின்றார். ஆனால் அப்போது அவர் ஒன்று சொல்லி இருக்கின்றார் பாருங்கள்;!, ‘ஆஹா! அவள் அங்கே வருத்தக்காரர்களுடன் ஒன்றாக இருந்து விட்டு வீட்டிற்கு வரும் போது கொரோனாவையும் சேர்த்து கூட்டி வந்து எங்கள் எல்லோருக்கும் பரப்பி விட்டுவிடுவாளோ என்று பயமாக இருக்கு. அவள் ஒருத்தியால் மொத்த ஆட்களுக்கும் வைரஸ் பரவப் போகின்றது’ என்று மனசாட்சி இல்லாமல் பேசியுள்ளார். ‘திலிசென சியல்ல ரத்தரங் நொவே’ (மின்னுவதெல்லாம் பொன்னல்ல) நாம பாசம் வைத்த அளவிற்கு அவர் நம்மமேல பாசம் வைக்கவில்லையே அம்மா!

‘நன்மை செய்யப்பிறந்த நீ நன்மை செய்யாவிட்டால் தீமையாவது செய்யா திரு!’ இந்த அருள் வாக்கிற்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து அதன் வழி நடக்க ஏன் இந்த ஆறறிவு படைத்த மனித ஜீவன்கள் மறுக்கின்றார்கள்? ஏனைய ஜீவராசிகளை விட ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை ஆண்டவன் மனிதனுக்கு கொடுத்ததில் எவ்வித பயனும் நன்மையும் இருப்பதாக தெரியவில்லையே! அதனால் தான் இன்றைய உலகில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் அதிகளவு வேறுபாடேதுமில்லையே!!!

அவர் அப்படி எனக்கு பேசியதற்காக மட்டும் இதை நான் சொல்லவில்லை. அந்த காலத்திலிருந்து இந்தகாலம் வரை செய்கின்ற தொழில்களை மட்டம் தட்டி பேசுகின்றவர்கள் இன்று இந்த வைரஸ் கிருமியோடு போராடி வேலை செய்கின்றவர்களையும் சந்தேக கண்ணுடன் தான் பார்க்கின்றது. எங்களுக்கு எல்லா உயிர்களும் ஒன்றுதான். அந்த உயிரை காப்பாற்ற எங்கள் உயிரைக் கூட பெரிதாகக் பொருட்படுத்தாமல் போராடுவது இவர்களைப் போன்ற ஆட்களுக்கு விளங்கவில்லை. இப்படிபட்டவர்கள் என்னைப்போல உள்ள சேவையாளர்களை வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து அவமதிக்காமல் மட்டும் இருந்தால் போதும்’ என்று அந்த டொக்டர் கண்ணில் கண்ணீர் தழும்ப தழும்ப பேசினார்.

அத்தோடு,

நல்ல எண்ணங்கள் நிறைந்த சமூகத்திற்கு மேலே எழும்பி வர முடியாத நிலையில் எம் மக்கள் இருக்கின்றனர். ‘உயிர் போனால் வெறும் சதை குப்பை போன்றது’ என்று தெரியாது போல! சாதி மதம் அந்தஸ்து இவையெல்லாம் இயற்கை முன் வெறும் தூசி!!! அஞ்ஞானத்திற்குள் முடங்கி கிடக்கின்ற மக்களை இப்படி ஏதாவது ஒன்று வந்து செருப்பால் அடிப்பது போல செய்தால் தான் எல்லோருக்கும் நல்ல புத்தி வரும் போல!.

‘அம்மா உங்களுக்கு நோய் வந்துவிட்டது என்று புலம்பி சாகப் போகின்றேன் என்று சொல்லாதீர்கள். ‘தற்கொலை செய்வதிலும் சாலச் சிறந்தது வாழ்க்கையோடு போராடி சாவது’ என்று பெரியார்கள் சொல் கேட்டதுண்டா? உயிர் உடம்பில் இருக்கின்ற வரைக்கும் போராட வேண்டும். அதுவும் பெண்களுக்கு போராட்டம் தான் வாழ்க்கையே!!! இந்த உலகத்தில் எல்லோருக்கும் எல்லாச் சலுகைகளும் நூறு சதவீதம் கிடைப்பதில்லை… நமக்கு மட்டும் விடிவு காலம் இல்லை என்று சொல்லாமல் எப்பவும் மன தைரியத்துடன் வாழப் பழகுங்கள். எல்லாம் உங்கள் காலடியில் கிடக்கும்’ என்று அறையிலுள்ள நோயாளிகள் எல்லோருக்கும் பொதுவாக ஊக்கமளிக்கும் கருத்துக்களையும் வாழ்க்கையின் உண்மைத் தன்மைகளையும் அழகாக விளக்கிக் கொண்டிருந்தார் டொக்டர் அபிரா.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த என் முதுகின் மீது ஒரு கை பதிந்தது. திரும்பிப் பார்த்தேன் என்னுடைய அம்மா.

‘என்னம்மா இங்கே நிற்கின்றாய்? வந்து மருந்து எடு வீட்டிற்கு போகலாம்’ என்று என்னை அழைத்துச் சென்றார்.

அன்று இரவு பௌர்ணமி நிலவு பால் போலக் காய்ந்து கொண்டிருந்தது. நிலா வெளிச்சத்தில் எங்கள் வீட்டு முற்றத்தில் ஆழ்ந்த யோசனையிலிருந்த எனக்கு பல எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தன.

அந்த வைத்தியசாலையில் டொக்டர் அபிரா ஓர் தேவதை!!! நோயாளிகளின் உடல் நோயை முக்கியமாக மன நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு பேசுகின்றார். அத்தொடு அதற்கேற்ப வைத்தியமும் பார்க்கின்றார். அவரைப் போன்ற சேவையாளர்கள் எல்லாத்துறையிலும் இருந்தால் எந்தப் பிரச்சினையும் வர நேராது…

அது மட்டுமில்லாமல், ‘விதி என்பதொரு அணையாத விளக்கு. அதில் விழுந்து மடியப் வேண்டிய விட்டில் பூச்சிகள் நாம்’ என்ற கருத்திலேயே மனம் நன்றாக லயித்து எதுக்கெடுத்தாலும் ‘விதி! விதி!’ என்று சொல்லிக் கொண்டு எதையும் தாங்கிக் கொள்கின்ற பெண்மையின் இலக்கணமாகிய பொறுமையை நன்கு கடைபிடித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும்; நம் தேவைக்காக பிறர் நலனை காயப்படுத்துவது தவறு என்றும்;; வாழ்க்கையில் எந்த பிரச்சினையிலும் சூழ்நிலைக்கேற்ப சமாளித்து போக வேண்டும் என்பதையும்; நமக்கு உதவி செய்தவர்களை ஒரு நாளும் மறக்க கூடாது என்பதையும்; மொத்தமாக இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை வாழும் வரை நிம்மதியாக தைரியமாக இருப்பதனால் விரைவில் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்’ என்ற கருத்துக்களை இந்த கிருமி தாக்கத்திலும் ஊரடங்கு நேரத்திலும் விளங்கிக் கொண்டேன் என்ற நம்பிக்கையோடு வானை பார்க்கும் போது ஒரு நட்சத்திரம் தோன்றி என்னை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது…

இச்சிறுகதை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பிரம்மம் போட்டித்தொடரில் ஒன்றான எழுத்தோவியம் — 2020 சிறுகதை போட்டியில் பங்கு பெற்றி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

--

--

Tamil Literary Association
தழலி

This medium account is to ensure the online presence of Tamil Literary Association,University of Moratuwa, Srilanka.