பகிடிவதையும் பாலியல் கல்வியின் அத்தியாவசியமும்

பாலியல் கல்வியினை தெளிவுபடுத்துவதன் மூலம் பாலியற் துஸ்பிரயோகங்களை குறைப்போம்

--

இன்றய சூழலில் பகிடிவதைகளில் பாலியல் தொல்லைகள் அதிகரித்திருப்பதற்க்கு பலரும் பல காரணங்களை கூறுகின்றனர். என்னை பொறுத்த மட்டில் சிறு வயதினிலே பாலியல் கல்வியின் விளக்கம் போதுமானதாக இருக்கும் இடத்து இந்த பாலியல் தொல்லைகள் குறைய வாய்ப்பிருக்கின்றது. இன்றய சூழலில் பாலியல் கல்வி என்றதும் அனைவரும் தவறாகவே எண்ணுகின்றோம். ஆனால் நம் பழந்தமிழர் வாழ்வியலில் பாலியல் கல்வி அவசியம் என்பதை பல்வேறு சான்றுகளினூடு நோக்கலாம். பல நாடுகளில் பாலியல் கல்வியை ஒரு பாடமாக போதிக்கின்றனர். பாலியல் பற்றி சிறுவயதிலே அறிந்துகொள்வது மாணவர்கள் பாலியல் தவறுகளில் இருந்து தவிர்ப்பதற்கு உதவும். நமது முன்னோர்கள் பாலியல் கல்வியை ஒத்துக்கொண்டதால் தான் திருக்குறளில் மூன்றாம் பாலான காமத்து பாலும் கம்பராமாயணத்திலே உண்டாட்டு படலமும் கலிங்கத்துப் பரணியிலே திருக்கடை திறப்பும் சிலப்பதிகாரத்திலே இந்திரவிழாவும் சீவக சிந்தாமணியின் பல இலம்பகங்களும் உதித்தன. இதனை எழுதிய முன்னோர்கள் எந்த இடத்திலேனும் இதனை சிறுவர்களுக்கு போதித்துவிடாதீர்கள் என்று குறிப்பிடவில்லை. வள்ளுவனும் சரி கம்பனும் சரி இளங்கோவடிகளும் சரி மாணவர்கள் முதல் பெரியோர் சுவைக்கவே பாலியல் சம்பந்தப்பட்ட விடயங்களை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர் .

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடி விடும் -திருவள்ளுவர்

மேற்குறிப்பிட்ட குறளை மாணவர் கற்பதற்கு ஏற்ற வகையில் வள்ளுவன் வேறுவிதமாக எழுதியிருக்கலாம் ஆனால் அவன் நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும் என்று ஊடலை அல்லவா ஊடி விடும் என்பதன் மூலம் கூறுகின்றான்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

என்று காமத்தை வைத குறள் காமம் பற்றிய அறிவை எங்குமே வையவில்லை. காமம் பற்றிய அறிவு அவசியம் அதனை மாணவர்களுக்கு போதிப்பதில் தவறேதும் இல்லை என்பதில் பொய்யாமொழி புலவன் உடன்பட்டு தான் இருக்கின்றான். தொல்காப்பியம் அகத்திணையிலே கற்பு களவு என்று காமத்தைப் பிரித்து இலக்கணம் செய்யவில்லையா?

கோவலனும் கண்ணகியும் முதல் இரவிலே எப்படி இருந்தார்கள் என்பதை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பின்வரும் பாடலிலே குறிப்பிட்டுள்ளார்.

தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவி எனக் கைக்கலந்து-நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர் போல் நின்று. -இளங்கோவடிகள்

இரண்டு கோபம் கொண்ட சர்ப்பங்கள் பின்னி பிணைந்து எவ்வாறு எல்லாம் தாக்குமோ அதே போல் நாளை இந்த உலகம் அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இன்றே முழு இன்பத்தையும் அடைந்து விடவேண்டும் என்ற நினைப்பில் இருப்பவர்களக உறவு கொண்டனர் என்று இப்பாடலின் பொருள்படும். காமத்தையே வெறுத்தெறிந்த சமண துறவியாகிய இளங்கோவடிகளால் இப்பாடலை எழுத்தமுடிகின்றது என்றால் அக்கால தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றிலே பாலியல் கல்வியின் அறிவு இருந்துள்ளது என்று தானே அர்த்தம். அந்த துறவியே இதனை மாணவர்களுக்கு கற்பி என்று தானே எழுதினான். இதே கருத்தை வைத்தே கவிப்பேரரசு வைரமுத்துவும் நாளை உலகம் இல்லை என்றானால் என்ற பாடலில் மெல்லிய காமத்தை இழையோடி இருக்கின்றார்.

கம்பராமாயணத்திலே கம்பன் காமத்தை பற்றி பல பாடல்களை பாடியுள்ளான். இங்கே எனது அறிவுக்கு எட்டிய சில பாடல்களை உதாரணமாக தரலாம் எண்டு எண்ணுகின்றேன்.

இற்று. இவண் இன்னது ஆக. -
மதியொடும் எல்லி நீங்கப்
பெற்று. உயிர் பின்னும் காணும்
ஆசையால். சிறிது பெற்ற.
சிற்றிடை. பெரிய கொங்கை.
சேயரிக்கரிய வாள் — கண்.
பொன்-தொடி.- மடந்தைக்கு அப்பால்
உற்றது புகலலுற்றாம். — கம்பர்

ஜனகனது அரச சபையில் இராமன் வில்லை உடைக்க சந்திரனோடு இரவு கழிந்து அந்தக் குமரனை
மறுபடியும் காணவேண்டுமென்ற ஆர்வத்தால் உயிரைச் சிறிது பெற்றுள்ள சிறுத்த இடையையும் பெருத்த
தனங்களையும் செவ்வழி படர்ந்த கரியவாய ஒளிமிக்க கண்களையும் பொன்னாலாகிய
வளைக்கைகளையும் அணிந்த சீதைக்கு அவளது பெண்ணுறுப்பிலே ஏற்பட்ட மாற்றங்களை இனி நோக்கலாம் என்பது தான் இதன் பொருள் கம்பன் எந்த இடத்திலும் இதை வெளியிலே கூறாதீர்கள் என்று கூறவில்லை .

கம்பராமாயண உண்டாட்டு படலத்தில் கம்பன் ஒரு பெண் அவளது காதலனை இறுக அணைத்து தழுவுகையில் தனது மார்பகங்கள் எங்கே காதலனின் முதுகை துளைத்து வந்துவிடடதோ என்று முதுகை பார்த்ததாக பின்வரும் பாடலில் கூறியுள்ளார்.

கொலை உரு அமைந்து எனக் கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள் கணவன் புல்குவாள்
சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்
முலை உருவின என முதுகை நோக்கினாள். — கம்பர்

மேற்குறிப்பிட்ட பாடலின் கருத்தை கவிப்பேரரசு வைரமுத்து “ஒம்முதுக தொழச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே” என்ற பாடல் வரிகளின் மூலம் அழகாக குறிப்பிட்டுள்ளார்.

நம் முன்னோர்கள் நாகரிக வளர்ச்சியின் உச்ச நிலையை அன்றே அடைந்திருந்தார். நம் முன்னோர்களின் தொலைநோக்கு பார்வையும் முற்போக்கு சிந்தனையும் தான் நாம் பாலியல் கல்வியை கற்கவேண்டும் என்று இலக்கியங்களில் எழுத தூண்டியிருக்க வேண்டும்.நம் இலக்கியங்கள் பாலியல் விடயங்களை எடுத்தது கூறினாலும் கடும் ஒழுக்க நெறிகளையும் கூற தவறவில்லை. ஒழுக்க நெறிகளை கூறும் எந்த இலக்கியங்களும் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பாலியல் விடயங்களை தவறாக கூறவில்லை. பாலியல் கல்வியை மாணவ பருவத்திலே மாணவர்களுக்கு விதைப்பதன் மூலம் மாணவர்களிடையே பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பகிடிவதைகளில் மட்டுமல்லாது ஏனைய நடவடிக்கைகளிலும் பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறுவதை குறைக்கலாம்.

--

--