பார்வை

Tamil Literary Association
தழலி
Published in
8 min readSep 23, 2020

திடுதிருப்புனு எல்லாத்தையும் மூடிட்டு வீட்டை இரு என்றால் இதென்ன சொந்த வீடா? இங்க எல்லாம் மனுஷன் இரவிலை வந்து படுக்கவே யோசனையா இருக்கு. ஒரு ஆறு அடிக்கு பத்தடி அறை. அதிலை கொழும்புல இருக்கிற என்றால் தனியா தான் இருக்கணும் என்று வீட்டிலை இருந்து அன்பு கட்டளை. அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. இப்ப புலம்புறதெல்லாம் அவங்களுக்கு சொல்லி இருக்கிறமா இல்லை தானே. கஷ்டம் என்று வீட்டுக்காரருக்கு சொன்னா தானே புரியும். எல்லாத்தையும் அவங்க பார்வையிலேயே முடிவெடுக்க விட்டுட்டு புலம்பி என்ன பிரயோசனம். ஊரோடையே ஒரு வேலையை பார்த்திருந்தா சாப்பாடு, சாதி சனம், கோயில் திருவிழாக்கள், கல்யாண வீடு சாமத்திய வீடுகள் என்று வாழ்க்கை தரமா போயிருக்கும். காசுக்கு ஆசைப்பட்டு இங்க வந்து ஒழுங்கான சாப்பாடு இல்லை, வீடு என்ற திருப்தி இல்லை, ஏன் நாயே என்று கேட்க ஒருத்தரும் இல்லை, முக்கியமா நிம்மதி இல்லை. போதாக்குறைக்கு இந்த கொரானாவும் வந்து சேர்ந்திருக்கு. எதுவா இருந்தாலும் முதல் ஊருக்கு போவோம். வேலைக்கு வேட்டு வைக்கிற என்றால் வைக்கட்டும். இந்த நிம்மதி இல்லாத வேலையில் இருந்து தப்பிக்க இது தான் சரியான சந்தர்ப்பம். இதென்னடா வாசலில் ஒரு வெள்ளை வான் வந்து நிற்குது. தேர்தலும் வர போகுது எண்டவங்க. நாம இந்த சமூக வலைத்தளங்களில் கூட இருக்கிற இடம் தெரியாம இருக்கிற ஆள் ஆச்சே. என்னால உண்மையான சமூகத்தில என்ன சிக்கல் வந்திட போகுது. என்னடா ஒருத்தன் கையை தட்டி கூப்பிடுறான்???

இவன் நடுங்கியதை கண்டு தொலைபேசி கூட ஒரு நொடி நடுங்கியது என யோசித்தவனுக்கு அந்த இலக்கத்தை பார்த்து தான் எல்லாம் புரிந்தது. தன்னை சொந்த ஊருக்கு கொண்டு பொய் சேர்க்க ரதம் வந்திருக்கிறது என்று புரிந்து கொண்டான். தோள்பை இரண்டில் ஒன்றில் மடிக்கணணியும் மற்றையதில் பாதிக்கு பாதி துவைக்காத உடுப்புகளும், சென்ற புத்தககண்காட்சியில் வாங்கிய திறக்காத புதிய புத்தகங்களுமே இருந்தன.

“தம்பி இவ்வளவு நேரம் அழைப்பு எடுத்திட்டே இருக்கேன். தொலைபேசியை எங்க வச்சிட்டு இருந்தீர். அங்கால காவல் நிலையம் வேறை. வாகனத்துக்கு வேறை இனி போய் களவா தான் எரிபொருள் நிரப்பணும்”

அட! அண்ணை தமிழில் மட்டும் தான் கதைப்பார் போல. “தேவையான அளவு தெரிஞ்சு வச்சிருக்கிறோம்” என்ற வடிவேலுவின் வசீகரா வசனம் மனத்தில் ஓடவும் அதட்டி கேட்க சிரிப்பு வந்ததால் “கட்டபொம்மன்” என்றே அந்த ஓட்டுனருக்கு பேரை வைத்துவிட்டான் மது. சிரித்துகொண்டே சற்றே திரும்பியவன் அடுத்த முன் இருக்கையில் இருந்தவன் முறைத்துக்கொண்டே இருந்தான். “அட! நம்ம உக்கிரபுத்தன்”. பின் கதவை திறந்து உள்ளே ஏற போனால் ஏற்கனவே அங்கே 3 பேர் இருந்தார்கள். “இவங்களுக்கு வேறை பேர் வைக்கணுமா?. எவனுமே முகக்கவசம் போடல. நானும் பயந்திட்டு வந்தது போட்டிருப்பங்களோ என்று. போறது களவா. இதில முகக்கவசம் போடல என்டுறதுக்கு தனியா வேற பிடிக்க போறாங்களோ. இல்லை தானே.

நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் மது ஒரு மீம் கிரியேட்டரும் இல்லை என்ஜினியரும் இல்லை. ஆனால், அவன் இந்த இரண்டாகவும் இருந்திருக்க கூடியவன். எல்லாமே அவன் தலைக்குள்ளே தான் சுற்றி கொண்டிருக்கும். தனிமையில் இனிமையுடன் திருப்தியும் காணும் ஒரு சாதாரண நடுத்தர குடும்ப பையன். தெரியாதவர்கள் யாரை பார்த்தாலும் உடனே அவர்களின் குணாதிசயத்தை வடிவேலுவுடன் ஒப்பிட்டு பெயரிட்டு கொள்வான். வடிவேலுவை வெறுப்பவர்கள் யாரும் இருக்க முடியுமா? அதனாலேயே என்னவோ அவன் யாரையும் நிஜ வாழ்க்கையில் வெறுத்ததில்லை. அல்லது வடிவேலுவின் குணாதிசயங்களை தாண்டி அவர்களின் உண்மையான குணாதிசயம் தெரியும் அளவு அவன் யாருடனும் பழகியதில்லை. வீட்டுக்கு எப்படி ஒரே பிள்ளையோ நாட்டிலேயும் ஒரே பிள்ளை போன்ற வாழ்க்கை தான் அவனுடையது. அவனை பொறுத்தவரை அவன் உலகில் அவன் மட்டும் தான்.

இந்த மூன்று பேருக்கும் போக போக பெயரை வைப்போம் இல்லைனா அவ்வளவு தூரம் போக அலுப்படிக்கும். கட்டபொம்மன் வேற முதலே சொன்னது வழமையான பாதையால போகேலாது. குறுக்கு பாதை போலீஸ் எல்லாம் பார்த்து போகணும் எண்டது. அட சே! சாப்பாடுக்கு ஏதும் கொண்டு வர சொன்னதே. அறையில் கிடந்த விசுக்கோத்து பெட்டியை ஆச்சும் தூக்கி வந்திருக்கலாம். கொஞ்ச தூரம் தானே திரும்பி பொய் எடுப்பமோ. வேணாம். கடுப்பாயிடுவானுங்க. ஒரு நாள் தானே சமாளிப்போம். என்ன ஒன்று நமக்கு பகலிலே தூக்கம் வேற வராது. சரி இவனுங்க பேச்சு கொடுக்காத மாதிரி காதுக்கு ஹெட்செட்டை கொழுவிட்டு பாட்டை போடாமல் சும்மா இருப்போம். இவங்க கதைக்கிறத எல்லாம் கேட்டு எல்லாம் அலசி ஆராய்ஞ்சு பெயரை வைப்போம்.

“இந்த கால பிள்ளைகளுக்கு ஒழுக்கம் மரியாதை எதுவும் தெரியவில்லை. நாங்க எல்லாம் அந்த காலத்தில….” என்று சொல்லி ஒருவன் பிரசங்கம் தொடங்கவும் மதுவின் மனம் நாமகரண விழாவுக்கு தயாரானது. “இந்த அமெரிக்காகாரன் அவன் பொருளாதாரம் மோசமா போறத தடுக்க தானே இந்த கொரோனாவையே கொண்டு வந்தான்….” என திரு.பிரசங்கம் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு தலைப்புக்கு மாறி இருந்தது. “நாங்க ஒன்றும் சும்மா தொழில் பண்ண வரல… “ என வடிவேலு குதிரையில் போகும் போது பேசிய வசனம் மனதுக்கு வர பிரசங்கம் செய்பவர் தவம் திரைப்படத்தில் வந்த “கீரிப்புள்ள” ஆனார். முகத்தில் எந்த வித பாவத்தையும் காட்டாமல் இருப்பது மதுவின் சிறப்பியல்பு. இல்லாவிட்டால் இந்த பெயர்சூட்டும் போதே சிரித்திருப்பான். ஏன் இந்த பிரசங்கத்தை யாரும் கேட்டிருந்தால் நீண்ட நெடிய பெருமூச்சாவது விட்டிருப்பார்கள்.

கீரிப்பிள்ளையின் பிரசங்கம் நிற்கவில்லை தொடர்ந்து கொண்டே இருந்தது. “அண்ணை நீங்க வெளிநாட்டு தூதரகத்தில் தானே வேலை செய்யுறீங்க. நீங்களும் விட்டுட்டு வாறீங்க வெளிநாட்டில வேலை செய்யுற ஆக்கள்ட நிலைமை என்ன அண்ணை…” மறுமுனையில் பதில் பேச ஆரம்பித்தவர், இது கேள்வி இல்லை கீரிப்புள்ளையின் ஆதங்கம் என தெரிந்து கொண்டு நிறுத்தினார். கீரிப்புள்ள தொடர்ந்தார் “இங்க நீங்க தேர்தலை வச்சு அங்க இருக்கிற எல்லாரையும் கொல்ல போறீங்க. அரசியல்வாதிகளுக்கு சுயநலம் தானே முக்கியம். முழுப்பூசணிக்காயை சோத்துக்க மறைக்கிற ஆக்கள் ஆச்சே. அவங்களுக்கு என்னென்று தெரியாமல் ஜாலரா அடிக்க ஒரு கூட்டம்” என பிரசங்கம், மன்னிக்கவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். தனக்கு இருக்கும் உலக அறிவை வைத்து எல்லாரையும் குறை மட்டுமே கூறிக்கொண்டு இருந்தார். திடீரென மறுமுனையில் இருந்த அரச அதிகாரியும் அரசாங்கத்தை திட்டுவதற்க்காக களத்தில் குதித்தார். “இதுக்கு கோவிலில் மணி ஆட்டிட்டு இருந்தால் கூட புண்ணியமாச்சும் கிடைத்திருக்கும்” என்ற பாணியில் பேச பிச்சுமணி என்ற பெயர் முடிவானது. மனதுக்குள்ளேயே சிரித்து கொண்டு தனக்கு பின்னாலும் ஒரு ஜீவன் இருக்கிறது என்பதை கவனித்தான் மது. மதுவுக்கு நேராக திரும்பி பார்க்க முடியவில்லை. அரசியல்வாதி ஒருவருக்கு அடிக்க பட்டிருந்த பெரிய சுவரொட்டி ஒன்றை தொடர்ந்து பார்ப்பது போல திரும்பி அந்த ஜீவனை பார்த்தான். அதற்குள் பிச்சுமணி “எல்லாத்தையும் வீட்டை இருக்க சொல்லிட்டு யாருக்கு இவங்க இதை ஒட்டி வச்சிருக்காங்க”. முன்னிருந்து கட்டபொம்மன் “அதையும் அவையள் கோவில் சுவரில் ஒட்டி வச்சிருக்கினம். இப்படி ஒழிஞ்சு ஒழிஞ்சு போகாமல் போய் இருந்தால் கட்டாயம் இதை கிழிச்சு போட்டு தான் போய் இருப்பேன்”

இதை எல்லாம் தான் தான் இங்க இப்படி எல்லாம் பேச வேண்டும் என நினைத்தாரோ தெரியவில்லை கீரிப்புள்ள, கட்டபொம்மனை பார்த்து “இப்படி ஒழிச்சு ஒழிச்சே கடைசி வரை போகலாமா ? எதால போக போறோம்” என்று கேட்க “அண்ணை, வழமையா போற பாதை சரி வராது. காட்டுக்குள்ள சில குறுக்கு பாதை இருக்கு அதில வழமையானா பாதைக்கு சமாந்தரமா போனால் மாட்டாமல் தப்பிக்கலாம். இதெல்லாம் முதலே சொன்னது தானே அண்ணை”. “ஏதும் மாற்றம் வருமோ என்று கேட்டேன். வழமையா எல்லா வான்காரரும் இப்படி தானே சொல்றது ஒன்று செய்யுறது ஒன்று. சரி சரி பார்த்து போ அப்பா.” கட்டபொம்மனுக்கு கோபம் வந்ததை rear mirror இல் பார்க்க கூடியதாக இருந்தது. குற்றப்பத்திரிக்கை வாக்குவாதமாக மாறும் என நினைத்தாரோ அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். ஆனால், கீரிப்புள்ளையின் முகத்தில் கட்டபொம்மனை வாயடைக்க வைத்த பெருமிதம். இந்த அல்லோலகல்லோலத்தில் வாயற்ற ஜீவனை சரியாக கவனிக்கவில்லையே என நினைத்து அதே பழையபாணியை பின்பற்றி திரும்பி பார்க்க முயன்றேன். மடிக்கணனி குறைந்த விலைக்கு என போட்டிருந்தது. மதுவின் அதே மடிக்கணனி அவன் ஒரு வருடத்துக்கு முதல் வேலைக்கு சேரும் போது எடுத்த அதே விலை. இதிலென்ன குறைந்த விலை. “சந்தைப்படுத்தலும் முட்டாள் மனிதர்களும்” என நினைத்து கொண்டே கடைக்கண்ணால் பார்த்தான். சந்திரமுகி படத்தில் வியர்வை சொட்ட வடிவேலு சிலையாக நிற்கும் காட்சி தான் கண்ணுக்குள் வந்தது. “முருகேசா” என நினைத்து வழமை போல மனதுக்குள் சிரித்துகொண்டான். “ஏன் இந்த விவசாய துறை ஆராய்ச்சியாளர் தம்பி வாயே திறக்குதில்லை” என நக்கலாக ஒரு போடு போட்டார் கீரிப்புள்ள. முருகேசனுக்கு தூக்கிவாரி போட்டதோ இல்லையோ மதுவுக்கு தூக்கிவாரி போட்டது. நான் அவனை திரும்பி பார்ப்பதை கவனித்துவிட்டார்களோ ஒரு வேளை வெளியில் தெரியும்படி சிரித்து விட்டேனோ என தன்னையே தான் சந்தேகப்பட்டு கொண்டான். சட்டென்று தனது முகத்தை மேலும் இறுக்கமாக மாற்றி கொண்டு நேராக எதையோ பார்ப்பது போல் பாசாங்கு செய்தான். தலையங்கம் எடுத்தாச்சு அடுத்து தெரியாத ஒரு விஷயம் சொல்லணும் அப்புறம் குற்றம் சொல்லணும் இது தானே கீரிபுள்ளயின் சூத்திரம். விவசாயத்துக்கு என்ன குறை சொல்ல இயலும் என நினைப்பதற்குள் “அமெரிக்காவில் மொத்த வேலைப்படையின் 1.3 சதவிகிதம் தான் விவசாயிகள். அவன் உங்களுக்கெல்லாம் கோதுமை மா தந்திட்டு இருக்கான். இங்க அரசாங்கம் விவசாயிகளுக்க்கு மானியம் குடுத்து ஆராய்ச்சிக்கு எல்லாம் மில்லியன் கணக்கில செலவு செய்யுறது மட்டும் தான் மிச்சம்” என சொல்ல “இப்ப கொஞ்சம் முதல் தானே அரசாங்கத்தை திட்டினாய் இப்ப என்ன அரசாங்கத்தை தூக்கி பேசுறாய்” என பிச்சுமணி நினைத்தது தெளிவாக தெரிந்தது. இதெல்லாம் பேசி கொண்டிருக்கும் போதே “அண்ணை ஒழுங்கைக்க விடு ஒழுங்கைக்க விடு” என்று சொல்லி கொண்டே கட்டபொம்மனின் கை steering வரை நீண்டு விட்டது. ஒழுங்கைக்குள் புகுந்து விளக்கெல்லாம் அணைக்கவும். சென்று கொண்டிருந்த வீதியிலே போலீஸ் வாகனம் ஒன்று கடந்து செல்லவும் சரியாக இருந்தது. ஒரு நிமிடம் மயான அமைதி. அப்புறம் புயல் மையம் கொண்டது. உக்கிரபுத்தன் வசனம் பேச ஆரம்பித்தான். “அண்ணை நாங்க ஒன்றும் சுற்றுலா போகல. கொஞ்சம் அங்கால இங்கால பார்த்திட்டு வாங்க யாரும் பார்க்கிறாங்களா போலீஸ் நிற்க்குதா என்று. நல்ல வெள்ளை கலர்ல வான் வேறை..” என பொரிந்து தள்ளினான். சொன்ன விஷயம் கருத்திலே எடுக்க வேண்டிய விடயம் தான். ஆனால், உக்கிரபுத்தன் என்று பெயர் வைத்ததாலோ என்னமோ எனக்கு சிரிப்பு தான் வந்தது. அதற்கு பிறகு ஒரே நிசப்தம் தான். அலுப்படிக்க தொடங்க வரைபடத்தில் எங்கே போய் கொண்டு இருக்கிறோம் என ஒரு பெரும் ஆராய்ச்சியை மேற்கொள்ள தொடங்கி விட்டேன்.

மெல்ல மெல்ல நாங்கள் நகர்புறத்தில் இருந்து ஒதுங்கி காட்டுபாதைக்குள் செல்ல ஆரம்பித்துவிட்டோம். இரவும் முழுமையாக படிய தொடங்கி விட்டது. உக்கிரபுத்தன் வாகனத்தின் விளக்குகளை அணைக்க சொன்னான். அப்போது தான் முருகேசன் “காட்டுக்குள் யானைகள் போய் திரியுறது. விளக்கை நிப்பாட்டினா பக்கத்தில வந்தாலும் சிக்கல்” என சொல்லி கொண்டே தோல்பையில் இருந்த மின்சூழ் ஒன்றை முன் ஆசனத்தில் இருந்த உக்கிரபுத்தனுக்கு வழங்கினான். எல்லோரும் அதிசயமாக முருகேசனை திரும்பி பார்த்தோம். முன் எப்படி இருந்தானோ அப்படியே தான் இருந்தான்.அதே முருகேசன் நினைவுக்கு வந்தான். மனதை தாண்டி சிரிப்பு தொண்டை வரை ஏறி விட்டது. மிண்டு விழுங்கிக்கொண்டேன்.

நிலவிய மயான அமைதியை குலைத்ததாலோ அல்லது காட்டுக்குள் புகுந்து விட்டோம் என்பதாலோ கீரிப்புள்ள தனது அட்டகாசத்தை தொடங்கி விட்டது. இந்த காட்டுக்குள்ளால முதலும் வாகனத்தில் திரிஞ்சிருக்காங்க போல இருக்கு. மரம் களவெடுக்கவோ அல்லது யானையை கொன்று தந்தம் எடுக்கவோ தெரியாது. பரவாயில்லை போக கூடிய பாதை தான் சிக்கல் வராது என்று சொல்லி வாய் மூடுவதற்குள் யாரோ சுடுவது போல சத்தம் கேட்டது. எல்லோரும் தலையை குனிந்து கொண்டோம் கட்டபொம்மனை தவிர. “அண்ணை டயர் வெடிச்சிட்டு போல..” என்று கடுப்பில் பேசி கொண்டே கீழே இறங்கினான். வெடிச்சத்தம் கேட்டாலே துவக்கு என்று மட்டும் தான் எங்களுக்கு தெரியும். ஓட்டுனர் ஒருத்தருக்கு தானே டயரும் வெடிக்கும் வெடிச்சா எப்படி கேட்கும் என்றும் தெரிஞ்சிருக்கும். அனைவரும் கீழே இறங்கி வெடித்திருந்த டயரின் பக்கத்திலே சென்று விட்டோம். நம் மேல் தான் எல்லோரும் கடுப்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்த கீரிப்புள்ள தொலைபேசிக்கு சமிக்சை கூட கிடைக்காத அந்த இடத்தில் தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பெடுக்கும் பாவனையில் வெடித்த டயருக்கு எதிர்பக்கம் சாய்ந்து நின்றுகொண்டார். “அண்ணை அந்த dashboard ல spanner இருக்கும் எடுத்து தாங்க” என்று சொல்லவும். தொலைபேசியை அவசர அவசரமாக lock உம் செய்யாமல் மேல் சட்டைப்பையில் போட்டு விட்டு dashboard ஐ திறந்தார். பார்ப்பதற்கு சிறுவயதில் அப்பா என்ன வேலை சொன்னாலும் மற்றதெல்லாம் அப்படியே போட்டுவிட்டு பயத்தில் அவர் கேட்டதை செய்து கொடுக்கும் ஞாபகம் தான் எனக்கு வந்தது. இவ்வளவு பயந்த ஆளா இவர் என் யோசித்து கொண்டிருக்கும் போதே spanner க்கு பதில் பல blade கொண்ட மடக்கு கத்தி ஒன்றை நீட்டினார். எல்லோருக்கும் சிரிப்பும் ஆச்சரியமும் சேர்ந்து வந்துவிட்டது. உங்களுக்கு spanner என்றால் கூட என்னனு தெரியாதா என்று நிலைமையை தன்னை இந்த கூட்டத்தின் பெரியாளாக காட்ட சாதகமாக்கி spanner ஐ தூக்கி கொடுத்தார் உக்கிர புத்தன். கீரிப்புள்ள என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரின் அருகிலே வந்து நெளிந்த படியே நின்றார்.

அப்படி அவர் நெளிந்தது பிச்சுமணிக்கு தைரியத்தை வர வைத்ததோ என்னமோ வாயை திறந்தாலே அடுத்தவருக்கு ஆமாம் மட்டும் போட்டு கொண்டிருந்தவர் தானாக பேச ஆரம்பித்தார். சாபம் சார். எத்தனையோ பேர் நாட்டுக்கு வர ஏலாம சிக்குப்பட்டு போய் நிக்குறாங்க. நான் மட்டும் போயிடுவானா. என்னத்த தான் படிச்சும். எது சரி என்று தெரிஞ்சும். யாரோ ஒரு படிக்காதவன் அவன் அவன் சுயலாபத்துக்கு பிழையான விஷயத்தை தானே சொல்லுவான். அதையும் வாயை மூடிட்டு தானே செய்யணும் என புலம்ப தொடங்கினான். “கொஞ்சம் பொறுங்க இப்ப என்ன நடந்திட்டு என்று புலம்புறீங்க. எல்லாம் வெல்லலாம்” என கூறி கொண்டே தோளில் தட்டி கொடுத்தார் உக்கிரபுத்தன்.

டயரை கழட்டி விட்டு spare wheel ஐ எடுக்க சென்றால் அது ஏற்கனவே puncture ஆகி நின்றது. அனைவரும் கொதிப்படைந்து விட்டார்கள். உக்கிரபுத்தன் திட்ட தொடங்கினான். அண்ணை பார்த்து எடுக்கிறேலையா? நீங்க பண்ணுற வேலைகள் சரி இல்லை அண்ணை. இப்ப என்னத்த பண்ணுறது. நாளைக்கு மனுஷிக்கு பிரசவம் என்று சொல்லும் போதே கண் கலங்கி குரல் உடைந்து விட்டது.

என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. எல்லோரும் பார்ப்பதற்கு வேறு விதமாக இருந்தார்கள்.

உக்கிரபுத்தன் — உக்கிரமானவன் அல்ல, அவன் இவ்வளவு tension ஆக பேசியதெல்லாம் அவன் மனைவியை நினைத்து தான்.

கட்டபொம்மன் — அப்பாவி இல்லை. தனக்கு தெரியாத விடயங்களை அடுத்தவன் சொல்லி கேட்க்கிறான். ஆனால், அவன் தொழிலில் அவன் கில்லி தான்

கீரிப்புள்ள — ஏதோ ஒரு காரணத்துக்காக தன்னை பெரிதாக காட்டவேண்டும் என்பதற்காக மற்றவருக்கு தெரியாத விடயங்களையே பேசுகிறான். அதற்காக அவன் எல்லாம் அறிந்தவன் இல்லை.

பிச்சுமணி — அரசாங்கத்தில் சும்மா இருந்து சாப்பிடுகிறவன் இல்லை. எதுவும் செய்யாமல் வயிற்றுப்பிழைப்புக்காக வாய்மூடி வாழுபவன்

முருகேசன் — அவனுக்கு என்ன பிரச்சனையோ தெரியாது. எது தேவையோ அதை அந்த தருணத்தில் செய்பவன்.

இந்த பெயர்களுக்கும் அவர்கள் குணாதிசயத்துக்கும் சம்பந்தம் இருக்க போவதில்லை. முக்கியமாக யாரும் இங்கே நகைப்புக்குரியவர்கள் இல்லை. அவர்களுக்கு பின்னால் ஆயிரம் வலியும் வேதனையும் அவர்கள் தத்தம் பாதையை தெரிவு செய்ததற்கான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றது.

இந்த நிலையில் பத்திரமாக வெளியில் செல்ல என்னால் முடியும். சிந்திக்க வேண்டும், அடுத்து செயல்பட வேண்டும் என்ற கொள்கை உடைய நான், இன்று சிந்திக்காமல் ஒரு யோசனையை முன்வைத்தேன். “இந்த வீதிக்கு செங்குத்தா நடந்து போனால் ஒரு 3 மணித்தியாலத்தில் நடந்து போயிடலாம். என்ன காடு தான் கவனமா போகணும். ஏறி இறங்கி கஷ்ட்டப்பட்டு போகவேண்டி வரும்”.

வாகனத்தை என்ன தம்பி செய்யுறது

எப்படியோ இதை இங்க வச்சு சரி கட்டேலாது. ஊருக்க போய் ஓராள கூட்டிட்டு வருவம்

இதுக்கு முதல் இதுக்கால போய் இருக்கியா தம்பி?

இல்லை. ஆனால் இதை மாதிரி இடங்களை பற்றி தெரியும். எங்க தண்ணி இருக்கும். எதால போகணும். மிருகங்கள் வந்தா என்ன பண்ணனும் என்று தெரியும்

கொண்டு வந்த சாப்பாடெல்லாம் முடிஞ்சுது. உள்ளுக்கு போய் மாட்டுறத விட பேசாம road போய் போலீஸ் ட போவமே

போலீஸ் என்ன அடி அடிக்கிறான் என்று தெரியும் தானே. இது வேலை செய்யுற ஊரும் இல்லை. சொந்த ஊரும் இல்லை. நாள் கணக்கா வச்சிருப்பான்

இங்கயே coverage இல்லை. நடுகாட்டுக்க எப்படி கிடைக்கும். உள்ள போய் வழி தெரியாமல் போனால்

முதலில் எல்லா தொலைபேசிக்கும் charge இருக்கணும். திசை பற்றிய கவலை எல்லாம் வேணாம் என கூறி கைக்கடிகாரத்தில் இருந்த திசைகாட்டியை தூக்கி காட்டினேன்.

சிக்கல் என்று தெரிஞ்சு தான் யார் என்று தெரியாத ஆளோட யாரென்றே தெரியாத 5 பேரோட 400 கிலோ மீட்டர் வெளிக்கிட்டோம். இதிலை யாருக்கு கொரோனா இருக்கலாம் எண்டுறதை தவிர மிச்ச எல்லாத்தையும் வெளிப்படையாவே பேசிட்டோம். வியர்த்து கொட்டிட்டு இருந்தவனுக்கு தான் கொரோனா இருக்கணும் என்று இல்லை. எல்லாருக்கும் இருக்கலாம்.இப்ப எங்களுக்கு கொரோனா இருந்தால் கூட பிரச்சனை இல்லை. ஊருக்கு போய் சேருவது தான் சிக்கல். ஒரு வேளை இந்த இடத்தில நாங்க போலீஸிடம் சிக்குபட்டால் நாளைக்கு எங்கட பேப்பர் எல்லாம் கொரோனா இல்லை என்றாலும் “கொழும்பில் இருந்து தப்பி வந்தவர்களுக்கு கொரோனவா?? இடைவழியில் சிக்கியதால் தப்பிய திருகோணமலை” என பெருசா எழுதுவாங்க. அப்புறம் அது பொய் என்றால் கூட தலை காட்டேலாது. எல்லாம் ஒரு நம்பிக்கையில் தானே எல்லாரும் இப்படி ஒரே வாகனத்தில் ஏறி வந்தோம். அதே நம்பிக்கையில் இந்த காட்டுக்கு குறுக்கா ஒரு 10 கிலோமீட்டர் நடந்தா ஊர் போய் சேர்ந்திடலாம். உண்மையை விட நம்பிக்கை தான் பெருசு என சொல்லி முடிக்க எல்லோரும் பின்தொடர ஆயத்தமானார்கள். இவ்வளவு நாளும் மனதுக்குள்ளேயே பேசி கொண்டிருந்தவன் முதன்முதலில் வெளியிலே பேசினான்.

ஆரம்பித்து இரண்டடி வைப்பதற்குள் எங்கிருந்தோ மழை சோ என கொட்டியது. எல்லோரும் ஒரு தடவை தங்களுக்குள்ளே பார்த்து கொண்டார்கள். நான் எனக்குள்ளேயே பேச ஆரம்பித்தேன். “இது முடியுமா?” என் உட்குரலை தாண்டி, “மழையும் இன்னொரு சிக்கல் தான். ஆனால், எல்லா மிருகங்களும் மழைக்கு ஒதுங்கியிருக்கும். பயப்படாம வாங்க” என்ற மனதைரியத்துடன் முன் செல்ல ஆரம்பித்தேன்.

நிச்சயம் இது முடியும்.

இச்சிறுகதை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பிரம்மம் போட்டித்தொடரில் ஒன்றான எழுத்தோவியம் — 2020 சிறுகதை போட்டியில் பங்கு பெற்றி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

--

--

Tamil Literary Association
தழலி

This medium account is to ensure the online presence of Tamil Literary Association,University of Moratuwa, Srilanka.