மனிதம் அவனில் வாழ்கிறது

Tamil Literary Association
தழலி
Published in
2 min readSep 23, 2020

பிரதான வீதியிலிருந்து உள்நோக்கி அமைந்திருந்தது அப் பாடசாலை. ஆள் நடமாட்டம் பெரிதாக தென்படவில்லை. பாடசாலையின் பிரதான வாயிலிலிருந்து பார்க்கும் போது இரண்டு சிறிய கட்டங்களுடன் காட்சியளித்தது. எழுதுகருவி கொண்டு கரும்பலகையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் பத்தாம் வகுப்பு ஆசிரியர். ஏனோ தெரியவில்லை மாணவர்களும் தமது கொப்பிகளில் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆசிரியரில் அவ்வளவு நம்பிக்கையுடன், அவர் கரும்பலகையில் எழுதிமுடிக்கும் முன்னே தாங்கள் எழுதிமுடித்து விடுவது என்று உற்சாகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஆசிரியருக்கு சலாம் போடத்தோன்றினாலும் ஆச்சரியமில்லை.

வகுப்பில் கீதா என்ற சிறுமி சுவாசிக்க முடியாமல் தத்தளித்தாள். தனது நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்து காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறதா என்று பார்த்தாள். பெரிதாக உடலில் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லையாயினும் தலை சுற்றியது. அவள் தனது கால்கள் நன்றாக வியர்த்துப் போய் இருப்பதை உணர்ந்தாள். சற்று நேரத்தில் அச்சிறுமியின் உடல் தரையில் சாய்ந்தது.

பக்கத்தில் இருந்த மாணவிகள் நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். ஆசிரியர் வேடிக்கை பார்த்தவாறு அதிபரிடம் சென்றார்.

சிறிது நேரத்தில், “ஒருத்தரும் கிட்டப் போக வேணாம். அம்பியூலன்ஸ் வரட்டும். இது அதிபரின் வேண்டுகோளாகும்” என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

அச்சிறுமியின் உடல் உயிரோட்டத்துடன் காணப்பட்டது. மூச்சு மாத்திரம் ஏறி இறங்கி வருவது உடலசைவிலிருந்து கண்டுகொள்ள முடிந்தது.

“இந்தப் பிள்ளைக்கு கொரோனாவோ தெரியல, இல்லாட்டிக்கு தூக்கி கொண்டு முதலுதவி அறைக்கு கொண்டுபோகலாம்”. என்று வகுப்பாசிரியர் பிதற்றினார்.

“நீர் என்ன சொல்லுரீர்! அதெப்படி தூக்குறது. தூக்கினால் உமக்கு மட்டுமில்லை, உம்மாலை எல்லாருக்கும் வைரஸ் பரவி விடும்”. என்று ஆசிரியை ஒருத்தி தன் கருத்தை வெளியிட்டார். நடப்பவையெல்லாவற்றையும் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் மூன்றாம் நபருக்கும் கோபமும் எரிச்சலுமே வரும். ஏனெனில் அப்பிள்ளை கல்வி கற்க பாடசாலை வந்திருக்கிறது. அப்பிள்ளைக்கு என்ன நடந்தாலும் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் பாடசாலைச் சமூகமே. இந்நிலையில் அவர்களே பத்தடி தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் போது, ஒருவேளை அவ்விடத்தில் மனிதர்கள் யாரும் இருந்தால் நிச்சயம் தூக்கியிருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. அப்போ, அங்கு நின்ற அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எல்லாம்…!!

கீதா மூச்சுவிடத் திணறும் போது பாமர மக்களுக்கே கண்ணில் உதிரம் கொட்டும். ஆனால் ஏன் கல்வியை அளிக்கும் அவர்களுக்கு விளங்கவில்லை.

நம்முடைய தாய் தந்தைக்கோ, மனைவி பிள்ளைக்கோ இப்படி யாருக்காவது வைரஸ் தொற்றியிருந்தால், விலகிச் செல்வோமா?

இன்னொரு மனிதனுக்கு எனும் போது நம்மில் அனேகர் மௌனிகளாகி விடுவோம்.

மனிதர்கள் ஏன் இன்னொரு மனிதனை சக மனிதனாக ஏற்றுக்கொள்கிறார்களில்லை. இவ்வுலகில் அன்பும், மனிதமும் ஏன் தொடர்ந்து வெறுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் எதைநோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
வகுப்பு யன்னலின் வழியே மாணவர்கள் சிலர் எட்டி நின்று பார்த்தார்கள். சிலர் கண்ணீருடனும் சிலர் வேடிக்கையாகவும்.
பாடசாலையின் பிரதான வாயின் ஊடாக அம்பியூலன்ஸ் ஒன்று ஒலி எழுப்பியவாறு வந்தடைகிறது. எல்லோரும் ஒதுங்கி நிற்கிறார்கள்.

சாரதி கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான். அவன் கண்கள் பழுப்படைந்து வீங்கியிருந்தது. வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்ட சோகம் கண்ணில் தென்பட்டது. முகம் விகாரமடைந்து பிறர் விரும்பாத அளவுக்கு கோணலாயிருந்தது.

எல்லோரும் விலகி நிற்பதைப் பார்த்து அவன் வருந்தவில்லை. ஏனெனில் மனிதர்களைப் பற்றி நன்றாகப் படித்தவன் அவன். தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமாக வாழ்பவர்களையே அதிகமாக பார்த்திருக்கிறான். அதனால்தான் என்னவோ அவனுக்கு மனிதர்களைப் பிடிப்பதில்லை போலும். பின்பு நிலைமை புரிந்தவன் போல் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

அச்சிறுமியின் பிஞ்சு உடலை மெல்லத் தூக்கி வாகனத்தில் ஏற்றினான். சிறிது நேரத்தில் அம்பியூலன்ஸ் பாடசாலையின் வாயிலைக் கடந்து சென்றது வைத்தியசாலையை நோக்கி.

இச்சிறுகதை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பிரம்மம் போட்டித்தொடரில் ஒன்றான எழுத்தோவியம் — 2020 சிறுகதை போட்டியில் பங்கு பெற்றி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

--

--

Tamil Literary Association
தழலி

This medium account is to ensure the online presence of Tamil Literary Association,University of Moratuwa, Srilanka.