மருவக்காதல் கொண்டேன்

Tamil Literary Association
தழலி
Published in
4 min readSep 22, 2020

“சனநாயகத்தை பாதுகாப்பதற்காக எங்களுக்கு அங்கீகாரம் தாருங்கள்” என்று ஒரு தளதளத்த குரல் டிவியிலிருந்து வந்தது
விரக்தியின் உச்சத்தில் இருந்த இராகுல் அறையில் இருந்தவாறே கத்தினான்.” இப்ப அந்த டிவிய நீங்கள் நிப்பாட்டுறியளோ?….. இல்லாட்டி நான் புத்தகத்தை மூடி வைக்கவோ ?”
“கொஞ்சம் நேரம் பொறேன்.எலேக்ஷன் வர போகுது போல .எல்லாரும் பேச தொடங்கிட்டினம்.எலேக்ஷன் வந்தா கர்பியூ போடமாட்டினம் .காம்பசும் திறந்துடுவினம் “ என்று பதிலுக்கு சொன்னாள் கல்யாணி
“போற போக்க பாத்தா இந்த வருஷமே காம்பஸ் திறக்காயினம் போல இருக்கு.அத சொல்லி தொலைச்சா தன்னும் நானும் புத்தகத்தை மூடி வைப்பன்.இவனுகள் அதுவும் இல்லாம இதுவும் இல்லாம இரண்டுங்கெட்டான் நிலையில இல்லா வச்சிருக்கானுகள் மடையங்கள்”
“இன்னிக்கு வெள்ளி தானே. கொஞ்ச நேரம் போய் படி .இரவுக்குள்ள என்ன மாதிரி எண்டு சொல்லிடுவினம் ..இன்னும் ஒரு எக்ஸாம் தானே இருக்கு .பேந்தென்ன??”
‘அந்த ஒரு எக்ஸாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என்று புலம்ப வாய் எடுத்த இராகுல் மெதுவாக மூடிக்கொண்டான் .சொல்லி எப்படியும் புரிய போவதில்லை .பேசாமல் தலையை ஆட்டி விட்டு செல்வதே மேல் என்று நினைத்து “ம்ம்ம்…” என்று ஒலியை மட்டும் எழுப்பினான்.
இராகுல் அறைக்குள் செல்ல கதவை திறக்கும் போது,
“இராகுல் சொல்ல மறந்துட்டேன். வீட்ட வெங்காயம் இல்ல …..!” என்றாள் கல்யாணி
“அதுக்கு?”
“அந்த கடைக்கு போன்ல ஆர்டர் பண்ணேன்!”
ஒரு நொடி இராகுலின் மண்டையில் எதோ குடைந்தெடுப்பது போல் இருந்தது .கோபத்தின் உச்சிக்கே அவன் போனான்.
“நேத்து ஆர்டர் பண்ணக்க சொல்ல தெரியாதா? இன்னிக்கு சொல்லி அவன் ஒரு சாமானுக்கு வருவானா?? . இதுதான் என்ன கேக்காம நீங்களே ஆர்டர் பண்ண சொல்லி சொன்னன் அப்பவே …..”
கல்யாணியின் முகம் உடனே சுருங்கியது.ஒற்றைப்பில்லையல்லவா! .வார்த்தைகள் அவளை தைத்தே சென்றன.
“அவனுக்கு போன் பண்ணா எதோ வாட்ஸாப் பண்ணட்டுமாம் .எனக்கு அத பத்தி என்ன தெரியும்?” என்று அப்பாவியாக பதில் சொன்னாள்.
“சரி! சரி !அடுத்தவாட்டி ஒரேடியா சொல்லுங்கோ!” என்று போனை பார்த்து கூறியவாறே அறைக்கதவை அடித்து சாத்தினான் இராகுல்.
உள்ளே வந்தவன் தன் அறையை ஏறெடுத்து பார்த்தான் .3 மாத காலம் அவன் வாசம் செய்த குடில் அல்லவா .காட்சியில் அதன் அழகு தெரிந்தது .சாப்பாடு கூட அறைக்கே வந்துவிடும் .அத்தனை செல்லம். ஜன்னல் கூட திரையிட்டு மூடியிருந்தது .சூரிய ஒளியை பார்த்து பலகாலம் என்பதை இராகுலின் வெளிறிய தோலும் இடுப்பில் புதிதாய் தோன்றியிருந்த அந்த ஊளைச்சதையும் உணர்த்தியது.
மேசையில் புத்தகங்களும் காகிதங்களும் பரவிக் கிடந்தன .ஓரிரண்டு மேசையின் அடியிலும் இருந்தது.இராகுல் அதை கணக்கெடுக்கவில்லை .அருகிலே ஒரு மடிக்கணினி .அதில் தன்பாட்டிற்கு எதோ ஓடிக்கொண்டிருந்தது .ஆங்கில படம் போலும்.. கீழே உபதலைப்புகள் பெரிய எழுத்துக்களில் தோன்றிக்கொண்டிருந்தன.
கட்டிலில் அவனின் ஹாஸ்டல் உடைகள் பரவி கிடந்தன .ஒரு ஓரத்தில் மட்டும் ஒன்றும் இல்லாமல் சுத்தமாக கிடந்தது .அதில் ஒரேடியாக சென்று பாய்ந்து விழுந்தான். இராகுல்.படுத்தவன் கூரையை பார்த்தவாறே போனை தூக்கினான் .நீல ஒளி அவன் முகத்தில் பாய்ந்தது .வழமையை போல் பேஸ்புக்,வாட்ஸாப் என்று சமூக ஊடகங்களில் வட்டமடித்தான் .திடீரென்று எதோ நினைத்தவனாட்டம் போனை தூக்கி கட்டிலிலே எறிந்தான் .அது உருண்டு சென்று தனக்கென ஒரு இடத்தை கண்டு கொண்டது.
அம்மாவை அவன் அவ்வாறு பேசி இருக்க தேவை இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது .ஒரு வெங்காயம் தானே என்று பேசாமல் இருந்திருக்கலாம் .அப்படி தான் இருந்திருப்பான் .அவன் தான் உண்மையான இராகுல் .ஆனால் அந்த இராகுலை அவன் தொலைத்து பல காலம் . அவன் மனம் இப்போதெல்லாம் ஒரு நிலையில் இருப்பது இல்லை .ஏதோ ஒரு கோபமும் கவலையும் பயமும் அவனை ஆக்கிரமித்து நின்றது.அதை யார் மீது காட்டுவது என்று தெரியவில்லை .இன்று கல்யாணியிடம் அதுவே வெளிப்பட்டது
ஆனால் கல்யாணி இதையெல்லாம் மறந்துவிடுவாள் .இல்லையென்றால் மறந்தது போல் இருந்திடுவாள்.இவனால் அவ்வாறு இருக்க முடியவில்லை .குற்றஉணர்ச்சி மேலோங்கி நின்றது .செய்தது பிழை என்று புரிந்தது .அம்மாவிடம் ஒருவார்த்தை சொன்னால் போதும் .எல்லாம் சரியாகிவிடும் .ஆனால் அதுவும் அவனால் முடியவில்லை.
மீண்டும் படிக்கலாம் என்று நினைத்திருப்பான் போலும் .மேசைக்கு சென்று ஒரு புத்தகத்தை தூக்கினான் .சில நிமிடங்கள் போயிருக்கும் .மூடிவைத்துவிட்டான்.எத்தனை தரம் தான் படித்ததையே மீண்டும் மீண்டும் படிப்பது என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான். இன்னும் இருப்பது ஒரு பரீட்சை .முடிந்தால் அவன் பட்டதாரி.ஆனால் அதையும் முந்தி கொண்டு கொரோனா வந்து விட்டது .பட்டதாரி கனவும் தொடுவானமானது .அந்த ஒரு கனவில் மட்டுமா கொரோனா விளையாடியது ?
தூக்கி போட்ட அந்த போனை ஒருவாறு கைக்குள் கொண்டு வந்தான் இராகுல் .சுஜியின் புகைப்படம் எட்டி பார்த்தது .சுஜி அவன் கூடவே படித்தவள் .அவள் கூடவே இருந்துவிடக்கூடாதா என்று ஏக்கத்தில் பெருமூச்சு விட்டான் .ஏங்கி என்ன பலன் .வெறும் ஏக்கம் மட்டும் போதுமா .சொல்லிவிடாத வார்த்தைகளில் என்ன பலன் கிட்டும்? .3 வருடமாய் பார்த்து பேசி பழகியும் அவனுக்கு காதலை சொல்ல தைரியமில்லை என்ன செய்வது? அவன் தைரியம் எல்லாம் அம்மாவிடம் பேசும் போது மட்டும் தானே வெளிப்படுகிறது
எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ..அதாவது அவனின் காதலின் முதற்புள்ளியாய் இறுதிப்பரீட்சை முடிய அவளிடமே நேரில் சொல்லிவிடுவதென்று முடிவெடுத்தான்.அவனுக்கு தைரியம் வந்த வேளை .கொரோனா அதுபாட்டிற்கு தன் வேலையை காட்டி விட்டது .அவன் பேசும் முன்னரே ஊருக்கு கிளம்பிவிட்டாள் சுஜிதா
இராகுலிற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை .வழமையாக இதம் தரும் கவிதையும் இசையும் கூட இப்போதெல்லாம் அவன் வேதனையை கூட்டியே சென்றது .சொல்லி விடா காதலில் சுகம் அதிகம் என்று எங்கோ வாசித்ததை எண்ணிய போது கோபம் தான் வந்தது .சொல்லி விட்டால் அவள் முடிவு என்னவாய் இருக்கும் என்று இராகுலுக்கு பயமிருந்தது .ஆனால் இப்படியே சொல்ல முடியாமல் போய்விட்டால் ? .
ஒவ்வொரு வாரமும் காம்பஸ் திறந்து விட்டால் பரீட்சை முடிந்து விடும் என்பதை விட சுஜியை பார்த்து விடலாம் .தன்னுடைய காதலை சொல்லிவிடலாம் என்ற ஆசையே அவனுக்கு மேலோங்கி இருந்தது .இதற்கிடையில் அவனுக்கு வேறு பயமும் தொற்றிக்கொண்டது. அவனுடைய தோழிகள் பலருக்கு இப்போதே வீட்டில் திருமணம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் .அதுபோல சுஜிதாவின் வீட்டிலும் ஏதும் பேச தொடங்கியிருந்தால் ? இவனால் என்னதான் செய்ய முடியும்? அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டான்
வெளியில் சத்தம் கேட்டது.எட்டி பார்த்தான் இராகுல் .கல்யாணி எதையோ தேடி கொண்டிருந்தாள்
“என்ன அம்மா? என்ன விஷயம் என்று அமைதியாக கேட்டான் .சற்று முன் அம்மாவிடம் கோபப்பட்டு கத்தியதை அவனும் மறக்க முயற்சித்தபடி இருந்தான் .கல்யாணியோ அதை நினைவில் கொண்டதாக தெரியவில்லை
“வெளில பால்காரன் வந்திருக்கான்.”
“ஓ…. காசா ? இதோ இங்க மேசை மேல இருக்கே !”
“அது இல்ல …………….அந்த மாஸ்க்!…….. .நேத்துதான் தோச்சு எடுத்து வச்சன்ன் .எங்க போச்சுதோ …ஆ…………இங்க இருக்கே !!!!!”என்று கண்டெடுத்த அந்த முக கவசத்தை அவசர அவசரமாக மாட்டி கொண்டு வெளியே போனாள் கல்யாணி .
இராகுலுக்கு சிரிப்பாக இருந்தது .3 மாதங்களுக்கு முன் எல்லாம் இப்படி ஒரு நிலை வரும் என்று கனவில் கண்டிருந்தால் கூட இருப்பாக இருந்திருக்கும்.ஆனால் இப்போது .??.சுஜிதாவும் இப்போது முகத்தை மறைத்து தானே வெளியில் செல்வாள் என்று ஒரு வினாடி நினைத்து பார்த்தான் இராகுல் .உடனே பாரதியார் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது .
“தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! — பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
……………………………………………….
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை — முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ?”

‘அவளிற்காகவே பாரதி எழுதி இருப்பாரோ ?. ஆனால் முகத்திரையை விட முகக்கவசம் அவளிற்கு அழகாக இருக்கும் .அவளின் அழகின் ஆதாரமே அந்த கண்கள் தானே !..சீ .இன்னும் உறவே ஆகாதவளை பற்றி இப்படி எல்லாம் நினைப்பது சரியா ?இல்லை இல்லை .உறவாக வரப்போகிறவள் தானே !!.இத்தனை காலமும் அவளுக்கும் என் மேல் அபிப்பிராயம் இல்லாமலா இருந்திருக்கும்? இல்லாவிட்டால் என் மனதில் ஏதோ உள்ளது என்பதை புரிந்து கொள்ளாமலே இருந்திருப்பாள்?நிச்சயம் இல்லை!! நான் சொல்லும் வரை அவள் காத்திருக்கிறாள் .அப்படியாகத்தான் இருக்கும்.’
அவனின் மனத்திரையுடன் அவனே பேசிக்கொண்டான்
சுஜிதா இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள் என்று யோசித்தான் இராகுல்..இதில் என்ன சந்தேகம் நிச்சயம் படித்துக்கொண்டிருப்பாள் .’அவள் அப்பா கடை வைத்து நடத்தி கொண்டிருப்பதாக கூறினாள் .இந்த கொரோனாவினால் அவர் வியாபாரம் தடைப்பட்டிருக்காதா ?’…..பாவம் மாமா!’ என்று எண்ணிக்கொண்ட போது அவனை அறியாமலே அவன் சிரித்துக்கொண்டான் .’இன்னும் காதலையே சொல்லவில்லை. இதற்குள் மாமா,மாமி என்று சொந்தம் வேறு ‘ என்று நினைத்திருப்பான் போலும் .
“இராகுல் !இராகுல்!” என்று கல்யாணி கூப்பிடும் சத்தம் கேட்டது
“என்னம்மா?” என்று கேட்டான்
“பிரேக்கிங் நியூஸ் போகுது .வந்து பாரேன் !”
இராகுல் அவசரமாக வெளியே வந்தான்.
“நாடு பூராவும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது .பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் “
“ மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று….” என்று இராகுலின் உதடுகள் அவனறியாமலே முணுமுணுத்தன.

இச்சிறுகதை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பிரம்மம் போட்டித்தொடரில் ஒன்றான எழுத்தோவியம் — 2020 சிறுகதை போட்டியில் பங்கு பெற்றி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

--

--

Tamil Literary Association
தழலி

This medium account is to ensure the online presence of Tamil Literary Association,University of Moratuwa, Srilanka.