முடுக்கத்தின் மடியில் ஒரு நாள்

Tamil Literary Association
தழலி
Published in
3 min readSep 22, 2020

“விபத்து சேவைப் பிரிவுக்கு வரும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கொரோனா தொற்று காலத்தில் அதிகரித்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் தெரிவிப்பு.” தினக்குரலில் ஒரு செய்தி. இன்னும் இதற்குள் எண்ணிக்கை எவ்வளவு தான்அதிகரிக்க போகிறதோ! ஒரு சலிப்பான புன்னகையுடன் சமையல் வேலைகளை தொடங்க அடுக்களை நுழைந்தாள் சரிதா.

சற்றுமுன் வாசித்த அந்த செய்தியையே மனதில் போட்டு குழப்பிக்கொண்டவளாக சப்பாத்தி மாவை பிசைந்து கொண்டிருந்தாள். சத்தமின்றி சமையலறை வந்த அவள் கணவன் பின்னால் இருந்து அவளை அணைப்பதாக உணர்ந்து அவன் ஸ்பரிசத்தை முழுமையாக அனுபவிக்கும் நோக்கில் தன் கண்களை மூடி புன்னகை சிந்தினாள். அவள் சுகம் திடீரென வலியாக மாறுவது ஏன் என புரியாமல் கண்களைத்திறந்து வலியின் காரணத்தை தேடினாள். “ஏன் இப்படி செய்தீர்கள்?” அவள் குரலில் சற்றும் அதிகாரம் இல்லை. கண்களில் நீர் சிந்த பரிதாபகரமாக அவன் கண்களை விழித்தாள். அவள் கணவன் ராகேஷ் மிகவும் மென்மையாக இரத்தம் கொட்டிக் கொண்டிருந்த அவளது வலது கையை தன் உள்ளங்கையில் வைத்து தடவியவாறே கூறினான். “ஐ அம் வெயிட்டிங் ஃபார் யுவர் பெட் காபி சின்ஸ் லாங் டைம் வாட் ஆர் யூ டூயிங் ஹேர்?” கூறியதுதான் தாமதம் அவள் கையை உதறிவிட்டு பதம் பார்த்த அந்தக் கத்தியை சமையலறை கழிவு தொட்டியில் போட்டுவிட்டு கோபமாகக் தன் அறை நோக்கி விரைந்தான். விறைத்த கண்களுடன் அவன் செய்கைகளை பார்த்து கொண்டிருந்தவள் குனிந்து இரத்தம் படிந்த தன் கைகளை அவதானித்தாள். அது இரண்டு வருடங்கள் முன் இதே ரத்த சிவப்பான ரோஜா செண்டுடன் தன்னை பெண் பார்க்க வந்த வேளையில் தன்முன் சம்மதம் கோரி நின்றிருந்த ராகேஷை நினைவூட்டியது. பிரபல தொலைபேசி நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக வேலை செய்கிறார் என்பதையும் தாய் தந்தையருக்கு பிடித்த ஒருவர் என்பதையும் தவிர வேறு எதுவும் அவளுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. அந்த இரண்டு காரணங்களும் அவள் சம்மதம் தெரிவிப்பதற்கு போதுமானதாகவும் இருந்திருந்தது. பழைய நினைவுகளை அதோடு நிறுத்தி விட்டு என்றும் போல மௌனமாக காயத்துக்கு மருந்து பூசினாள்.
இந்த கொடுமைக்கு பின்னும் கணவன் கேட்டிருந்த அந்த கோப்பியை அவன் கைகளில் திணித்துவிட்டு மற்ற சகல பணிகளையும் நிறைவேற்றுவதற்காக தயார் செய்த கோப்பியுடன் அவன் அறைக்கு புறப்பட்டாள்; காரணம் சரிதா பல்கலைக்கழக பட்டதாரி ஆனாலும் ஐதீகம் சொல்லும் சைவத்தமிழ் மனைவியாகவே இருந்தாள். சூரியன் எழ முதல் அதிகாலையில் எழுந்து, கணவனை கடவுளாய் மதித்து, அறுசுவை உணவு சமைத்து அவள் திருமண வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இருந்தும் கொரோனா தொற்று காலத்திற்கு முதல் கணவரின் தொல்லைகளில் இருந்து தன்னை தற்காலிகமாக பாதுகாத்துக்கொள்ளும் அபய நிலையமாக அவள் பணிபுரியும் பாடசாலை இருந்திருந்தது. அத்துடன் அடிக்கடி ராகேஷின் பணி நிமித்த வெளியூர் பயணங்களும் உதவி செய்தது. இன்று அனைத்து உதவிகளையும் இழந்தவளாய் நான்கு சுவற்றினுள் தன் கணவருடன் தனித்திருக்கிறாள். ராகேஷுக்கு அவளுடன் சேர்த்து ஆறுதலாக அவன் ஏற்கனவே தற்காப்புக்காக மேலதிகமாக வாங்கி வைத்திருந்த மது போத்தல்களும் இருந்தன.
அதிசயமாக அவற்றை அருந்துகையில் மட்டும் அவன் மனச்சாட்சி இடைக்கிடை அவன் மனைவிக்காக பரிதாபப்பட்டு கொள்ளும், இருந்தும் 24 மணி நேரமும் வேலையின்றி இருக்கும் அவனும் பாவம் தானே என சமாதானமும் செய்து கொள்ளும்.
இன்று அவன் குடித்தது காரணம் இன்றி சற்றே அதிகமானதால் அந்தக்குடி அவனை வாந்தி எடுக்க வைத்தது. சுத்தத்தை அதிகம் விரும்பும் ராகேஷ் அவற்றை கழுவுமாறு சரிதாவின் கழுத்தை பிடித்து வாந்தி எடுத்த மீதங்களை நோக்கி அழுத்தும்போது, அவள் தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்து அவன் கையை உதறிவிட்டு கன்னத்தில் பளாரென்று ஒன்று போட்டு “ “ஐ வில் ட்ரீட் யு ஆஸ் மை பிரின்சஸ்” என்று பொண்ணு பாக்க வந்தபோ சொன்னியே “இஸ் திஸ் த வே யு ட்ரீட் யுவ பிரின்சஸ்”” அவன் முகத்தில் உமிழ்ந்து துப்ப எண்ணிய அவள் கண்களின் முன் 70 வயதில் கண்களை இழந்து பற்களையும் இழந்து தள்ளாடிய படி நடமாடும் அவளது பெற்றோரின் உருவம் நிழலாடியது. இத்தனை துன்பங்களுக்கும் மேல் தானும் ஒரு துன்பமாய் அவர்கள் முன் நிற்க அவளுக்கு துணிவிருக்கவில்லை. “ஆறு மாதங்கள் கடந்து ஆயிற்று இன்னும் சில காலங்கள் தானே இந்த கொரோனா” மனதை ஆசுவாசப் படுத்தினாள். அனைத்தும் இடங்களையும் சுத்தம் செய்தானது.

தினம் தினம் என்னதான் கஷ்டப்பட்டாலும் தன் மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் உடைக்கும் அளவு எதுவும் வீரியம் கொண்டிருக்கவில்லை என்று மனதுக்குள் திருப்திப்பட்டுக் கொண்டு காலாறிய அவளுக்கு அன்றும் தினமும் வரும் சாதாரண இரவு தான் வந்தது. ஆனால் மின்சாரக் குமிழ்கள் அணைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஒளினால் அறை வெளிச்சப்படுத்தப்பட்டு, சுவர்கள் எங்கும் இதய வடிவ பலூன்கள் தொங்க, கட்டில் முழுவதையும் ரோஜாப்பூக்கள் அலங்கரித்திருக்க, வாசனை திரவியங்களை முகர்ந்தபடியே அவள் சம்மதம் வினவி அவளைத் தொட்ட அந்தக் கணவன் இந்த இரவில் இல்லை. அவள் குரல் கேட்கவும் தோனவில்லை அவனுக்கு இன்று.

“திருமண கற்பழிப்பு”

அந்த முடக்குதல் காலத்தில் தினமும் இரவுகள் நெருங்கும்போது அவள் மனதில் ஏதோ ஒரு கோர உணர்வு.
கண் புருவங்கள் சுருங்க மேல் இமை புருவம் தொட “இன்றாவது வேண்டாம்” குரல்வளை வரை வந்த கதறல்கள் பாதை மாறி விழி வழியே கண்ணீராக வெளிப்பட்டது.
ஒரு குரங்கின் கையில் கிடைத்த அழகிய பொம்மையாக உணர்ந்தவள் வலியுடன் கண்ணயர்ந்தார். அவளுள் புதைந்திருந்த பூலான்தேவியும் இந்திரா காந்தியும் கனவுகளில் அவளை முத்தமிட்டனர். கண்ணீருடன் அவளுக்கான இன்னொரு நாள் முடக்க காலத்தில் காத்திருக்கிறது.

இச்சிறுகதை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பிரம்மம் போட்டித்தொடரில் ஒன்றான எழுத்தோவியம் — 2020 சிறுகதை போட்டியில் பங்கு பெற்றி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

--

--

Tamil Literary Association
தழலி

This medium account is to ensure the online presence of Tamil Literary Association,University of Moratuwa, Srilanka.