லேபிள்கள்

Vahesan Vijayaratnam
தழலி
Published in
2 min readMar 20, 2020

இந்த விந்தை உலகமானது தோன்றிய காலத்திலிருந்தே வகைப்படுத்தல், வரையறைக்குட்படுத்தல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றே வருகின்றன. ஒவ்வொரு பொருளையும் பெயரிட்டு (labelling), அவற்றை வரையறைக்குட்படுத்தி இது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற தீர்மானத்தை யாரோ எச்சந்தர்ப்பத்திலோ எடுத்துவிடுவர். அவ்வாறு பெயரிட்டு வரையறுக்கப்பட்டவையே லேபிள்கள் (labels). கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு லேபிள்கள் ஒட்டப்படுதல் வழக்கமானதோர் நடவடிக்கையாகும். ஆனால், பாடசாலைகளில் மாணவர்களுக்கு லேபிள்கள் ஒட்டுதல் என்பதும் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.

அது ஒரு ஆரம்பப் பாடசாலை. பாடசாலையைச் சுற்றிப்பார்த்து பழைய நினைவுகளை மீட்க வந்திருக்கும் பழைய மாணவர்கள் அவர்கள். அவர்களை சுற்றிக் காட்டும் முகமாக ஒரு மூத்த ஆசிரியர். சுற்றுப்புறத்தை சுற்றிப்பார்த்த பின்னர் ஒவ்வொரு வகுப்பாக விஜயம் செய்கிறார்கள். “இவர் தான் அந்த டொக்டர்ட மகன்”, “இவா தான் பாங்கர் ……. இன்ர மகள்”, “இது அந்த எஞ்சினியரின்ர பிள்ளை”, “இவரின்ட அப்பா தான் அந்த பெரிய கடையின்ர ஓணர்”, ஒவ்வொரு வகுப்பிலும் லேபிள் ஒட்டப்பட்ட பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த அந்த லேபிள்களை உணர்ச்சி பொங்க வாசித்தபடி அந்த ஆசிரியர் வருகிறார். அவர் லேபிள்களை வாசிக்கையில் அந்தந்த மாணவரின் முகத்திலும் எதையோ சாதித்துவிட்ட பேருவகை தெரிகிறது. ஆனால், அந்த லேபிள்கள் ஒட்டப்படாத மாணவர்களின் உணர்வு என்ன??? நிச்சயம் அவர்கள் மனதில் சிறிதளவு தாழ்வு மனப்பான்மையாவது உருவாகி இருக்காதா??? இதைவிட அந்த லேபிள் ஒட்டப்பட்ட பிள்ளைகளுக்கு வேறு பல சலுகைகளும் கிட்டும். அதற்கேற்றாற்போல் கைவேலை, சித்திரம், சங்கீதம், பேச்சு போன்ற பாடங்கள் பயன்படுத்தப்படும். போட்டிகள், நிகழ்ச்சிகள் போன்றன லேபிள்களால் அலங்கரிக்கப்படும். இவ்வாறு லேபிள்கள் ஒட்டப்பட்ட உற்பத்திகள் சிறப்பாக விளம்பரப்படுத்தப்படும். லேபிள் ஒட்டப்படாதன மெல்ல மெல்ல வழக்கொழிந்து போகும்.

இவை ஒருபுறம் இருக்க, இவ்வகை லேபிள்கள் ஒட்டப்பட்டவர்கள் மீதான அழுத்தங்களையும் இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். “லேபிள் இல்லாத அவனே அவ்வளவு புள்ளிகளை எடுக்கும்போது லேபிளிடப்பட்ட நீ அதைவிட அதிகமாக எடுக்க வேண்டாமா?” என்ற கேள்வி முதல் “அந்த டொக்டர்ட மகனுக்கு மெடிசின் கிடைக்கேல்லையாம்” என்ற வகையிலான கேலிப் பேச்சுக்கள், அதையும் தாண்டிய விமர்சனங்களோடு நிரந்தரமான அழுத்தங்களைத் தாண்டி தனக்கென புதிதான லேபிளை உருவாக்கி அதனைப் பழைய லேபிளின் மீது ஒட்டும் வரைக்கும் அந்த அழுத்தத்தினாலேயே வாழ்வின் வசந்தங்களைக் காணாமல் அமிழ்ந்து போவோர் பலர் உளர்.

இவை ஒருவகை லேபிள்கள் என்றால் இன்னொரு வகை லேபிள்கள் இருக்கின்றன. படிப்பு, போட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் சிறப்பாக செயற்படுவோருக்கு ஒட்டப்படும் லேபிள்கள் அவை. ஓரிரு தடவைகள் ஒரு குறிப்பிட்ட துறையில் சாதித்துவிட்டால் அந்தத் துறைசார்ந்த லேபிள்கள் அவரவர்க்கு ஒட்டப்பட்டுவிடும். பின்னர் வரும் அனைத்து விடயங்களிலும் அந்தந்த துறைக்கு அந்தந்த லேபிள் ஒட்டப்பட்டவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். லேபிள் ஒட்டப்படாதோர் இவ்வாறு துறை இருக்கின்றதென்று தெரியாமலேயே பாடசாலைக் காலத்தை வாழ்ந்து முடித்து விடுவார்கள். அவரவர்க்கு அந்தந்த துறைகளில் எதுவித அனுபவமோ அறிவோ இல்லாமல் போய்விடும். அவர்கள் சில துறைகளில் திறமை காட்டக்கூடிய தகைமைகள் கொண்டிருந்தாலும் அவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்படாமலே போய்விடும். உதாரணமாக, பேச்சுப் போட்டிகளை எடுத்துக்கொள்வாம். சிறப்பாகப் பேசக்கூடியதொரு மாணவனுக்கு மென்மேலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவன் மேலும் திறமையானவனாக வளர்க்கப்படுகிறான். அதேவேளை பேசுவதற்குப் பயந்து ஒதுங்கும் மாணவர்களுக்கு எதுவித பயிற்சிகளும் வழங்கப்படுவதில்லை. அந்த ஒரு மாணவனுக்கு வழங்கும் சிறப்புப் பயிற்சி போல மற்றையவர்களுக்கும் சில பயிற்சிகளை வழங்கி ஊக்குவித்தால் அவர்களையும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வழிசெய்யலாம்.

“படிப்பாளி” என்ற லேபிளை சுமக்காதவர்கள் ஏதாவது ஒரு பரீட்சையில் கூடிய புள்ளியை எட்டும்போது அவனுக்குக் கிட்டும் பாராட்டுக்களை விட “நீ எப்பிடி இவளவு மார்க்ஸ் எடுத்தனி?” என்ற கேள்விகளே மேலோங்கி நிற்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கொடுக்கப்படும் ஊக்கமும் (லேபிள்களின்றிய) பராட்டும் அவனை மென்மேலும் முன்னேற வழிவகுக்குமென்று என்றாவது சிந்தித்திருக்கின்றோமா?

இந்த இருவகை லேபிள்களைப் போன்று மேலும் சிலவகை லேபிள்களும் உண்டு. சிறுவயதில் ஒருதடவை அறியாமல் செய்த தவறுகளே அவர்களின் லேபிளாக ஆக்கப்பட்டு அதனாலே தடம் மாறியவர்களும் இந்த சமுதாயத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். இவ்வாறான லேபிள் ஒட்டும் நடவடிக்கைகள் நிச்சயமாக ஒட்டப்பட்டவர்களையும் ஒட்டப்படாதவர்களையும் சேர்த்தே பாதிக்கின்றது. இவ்வாறு லேபிள் ஒட்டும் நடவடிக்கைகள் அனைத்து இடங்களிலும் இடம்பெறாவிட்டாலும் அனேக இடங்களில் இடம்பெற்றவண்ணமே உள்ளது. என்று இந்த லேபிள் ஒட்டும் நடவடிக்கை முற்றாக ஓய்கிறதோ அன்று இன்றைவிட மிகவும் ஆரோக்கியமானதோர் மாணவர் சமுதாயம் கட்டியெழுப்பப்படும் என்பது என் நம்பிக்கை.

--

--