விடிவை நோக்கி…

Tamil Literary Association
தழலி
Published in
9 min readSep 23, 2020

அடர்ந்த இருள் ஒன்றின் பின் இப்பூமி விடிவை நோக்கி காத்திருக்கின்றது. மனித அறிவுத்திறனை இருளில் ஒளிரும் மின்குமிழோடு ஒப்பிட முடியும். இயற்கையை மின்சாரத்துடன் ஒப்பிட முடியும். சீரான மின்சாரம் இன்றிய மின்குமிழோ, இயற்கையை மீறிய மனித அறிவோ ஒருபோதும் ஒளியை தரவியலாது. இன்றைய நிலைமையும் ஒருவகை மின்சார துண்டிப்பு தான். மனித அறிவையும் தாண்டி ஏதோ ஒன்று… சீனாவின் வுகான் நகரில் உருவாகி, பின் பெரும் அளவில் பரவி வந்த போது, இலங்கையிலும் அந்த வைரஸ் அச்சுறுத்தல் ஆரம்பமாகிய சில தினங்கள் இருக்கும்.

வீட்டு வெளிக்கதவு தட்டும் சத்தம் கேட்டு, அப்போது தான் நித்திரை விட்டெழுந்து, கடைசி தங்கை அவசர அவசரமாக ஓடிவருகின்றாள். அண்ணன் கதவருகில் நிற்கின்றான்.

“என்ன, நித்திரையா…? இப்பவா எழும்பினீங்க…?”

“ஓம்..”

“சேச்சி..எத்தனை மணிக்கு எழும்பிறாய்…? எவ்வளவு நேரம் சேச்சி.. கதவ தட்டினான்.. காக்காமுட்டை……. புடி இதுகள..”

“சேச்சி…கொரோனா கொழும்பில பரவுதாம். சிலவேளை திடீர் எண்டு ஊரடங்க போட்டுட்டா, கடை வழிய சாமான் இருக்காது. அதான் பத்து கிலோ அரிசிமா திரிச்சுகொண்டு வந்தன். வாளி ஒன்டில வைச்சு கவனமா பாவியுங்க. பருப்பு ஆறு கிலோ இருக்கு….அங்கர் பெட்டி, சீனி மூன்டு கிலோ, வெங்காயம், மரக்கறி எல்லாம் இந்தா இதுக்க இருக்கு… மரக்கறிய வெளிய எடுத்து வையுங்க. பச்சை அரிசி பத்து கிலோ இருக்கு…. இந்த அரிசியில…. சோறு காய்ச்சலாம் தானே?”

“ம்ம்…. ஒம்”

அக்கா படுக்கையை விட்டு எழும்பி வருகிறாள்.அண்ணா அவளிடமும் சில விடயங்களை கூறுகின்றான். கதையை தொடர்ந்தவன்,

“சேச்சி இப்ப தான் கொழும்பில இருந்து வந்திருக்கிறாள்… கொஞ்சம் கவனமா இருக்கோணும். கொரோனாவ.. கூட்டிக்கொண்டு வந்திருப்பாள். எதுக்கும் சேச்சியிட்ட இருந்து தள்ளியே இரு…”

சேச்சி, செல்லமாக முறைத்துவிட்டு சென்றுவிடுகின்றாள். அக்கா சிரித்துவிட்டு கேட்க்கின்றாள்,

“டீ போடவா அண்ணா?”

“வேணாம் எனக்கு….. என்னத்தேடி யாராச்சும் பெடியங்க வந்தா…வாரேர் எண்டு சொல்லு.” அவசரமாக குளியலறைக்கு சென்று, முகங்கழுவி விட்டு அக்கா தோய்த்து வைத்த நீட்காற்சட்டையை இழுத்து அணிந்து கொண்டு,

“சேச்சி… சேட்ட அயன்பண்ணித்தாவன்.”

“ம்ம்..”

ஐந்து நிமிடம் சென்றிருக்கும். சேட்டை வாங்கி அணிந்து கொண்டு, நண்பன் ஒருவன் வந்த வாகனச்சத்தம் கேட்க, அண்ணா வந்தவனுடன் சென்றுவிடுகின்றான்.

அண்ணா சொல்லியது போல…சிலநாட்களில் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. ஓர் இரு வாரங்களில் நாடு பழைய நிலைக்கு திரும்பி விடும் என்றே எதிர்பார்த்தோம். ஆனால் நடந்தது வேறு…..

கொழும்பில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் இன்னொரு அக்காவுடன் துணைக்கு நின்றுவிட்டு, தற்காலிகமாக வீடு வந்த கடைசி தங்கை ஊரடங்கால் போகவழியின்றி அடைபட்டுவிட்டாள். அம்மா மட்டுமே வைத்தியசாலையில் அவளுக்கு துணையாக உள்ளார். நாட்டின் அனைத்து இடங்களிலும் தூய்மைபடுத்தும் வேலைகள் துரிதமான நிலையில் , வைத்தியசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் போவதிலும் அம்மாவிற்கு பிரச்சினை இருந்தது. மாதம் மாதம் வழக்கிற்காக மன்னார் நகரிற்கு வரும் அப்பாவும் கடைசி இரு பிள்ளைகளை பார்த்துவிடுவதற்காக ஏதேனும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவதுண்டு. இப்போது, ஊரடங்கால் பல மாதங்களாக வழக்குகள் எதுவும் நடைபெறவுமில்லை…அப்பாவால் வரமுடியவுமில்லை.

ஊரடங்கு ஒரு சில மணிநேரம் தளர்த்தப்படும். அண்ணா கொரோனாவிற்கு முன்னும், இப்பொழுதும் கூட ஒரே போலத்தான்.வீட்டிற்கு வந்தவுடன் சென்று விடுவான். சில பொழுது மட்டுமே வீட்டில் தங்குவதுண்டு. அவன் வேலை செய்யும் இடத்தில் தனியறை ஒன்றில் தான் பலபொழுதுகளில் தங்கியிருப்பதுண்டு.

“ 2019 சித்திரை மாதம் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலுக்கு பிறகு இலங்கையில் முகத்தை மறைக்க கூடாதென்ற பல சட்டங்களை இயற்றிய அரசாங்கம் , 2020 தொடங்கி முகத்தை மறைக்க வேண்டி கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு இப்படி ஒரு மாற்றத்த எதிர்பாத்திருக்காது தானே….”

“ஆமா…யாருமே எதிர்பாக்கல தான். ஆனா.. ஒன்றுமட்டும் தெரியுது.. சட்டம், அதிகாரம் இவற்றையும், இயற்கை மாற்றி அமைத்துவிடும் வல்லமை கொண்டுள்ளது. ‘இது எப்படி?!..’ நிகழ்ச்சி முடிவுக்கு வருகின்றது. நேரம் சரியாக பிற்பகல் ஒரு மணி”

“ம்..நேரம் போனதே தெரியவில்லை. இந்த வாரத்தின் பதினைந்து பாடல்களில் முதலிடத்தில் உள்ள பாடல் ஒலிபரப்பாக இருக்கின்றது.”

“இது அறம் படத்திற்காக ஜிப்ரானின் இசையில் அஸ்வதி மற்றும் றியாஸ் பாடிய பாடல்”

விடை பெறும் நாங்கள்..

“சாரா”

“கலைக்கண்ணன் கவின்”

‘நன்றி நேயர்களே’

‘அணைக்கும் தொனியில் எரிக்கும் கரங்கள் உனது நேசங்களே…..’

“ஏய்…இவளே..வா இங்க..”

“அக்காவ மரியாத இல்லாம கூப்பிடுறாய்… பொறு வாரன்.”

“இந்தா தேத்தண்ணி , மரவள்ளி பொரியல் வாங்கி கொண்டு வரவா முன்கடயில…?”

“காசு இருக்கா சேச்சி..”

“ஒம்.. அப்பா ஏ/எல் முதல் போம் அனுப்ப, யாழ்ப்பாணம் போக தந்த காசு இருக்கு. இப்போதைக்கு போக மாட்டன் தானே.”

“ம்ம்..அண்ணா எப்ப வருவான் எண்டு தெரியாது. அப்பா வேற, அவனுக்கு கோள் எடுத்து வேணுமானத கேக்க சொல்லுறேர். அவனுக்கு எடுக்க பயமா இருக்குது.

அவனா தரும் போது வாங்கித்தரட்டும்… காலமயும் சாப்பிட இல்ல… சமைக்க ஏதாச்சும் வாங்கி கொண்டு வாரியா?.. பருப்பு மட்டும் தான் இருக்கு… முட்டை இரெண்டு வாங்கிக்கொண்டு வா..”

“ம்ம்…போய்ற்று வாரன்…தேத்தண்ணி ஆறப்போது,..”

“போ சேச்சி எப்ப பாரு நீ இப்பிடித்தான். தேத்தண்ணிய சுட வைக்க ஏலாதா!.. ஒரு விஷயம் சொன்னா நிண்டு ஒழுங்கா கேழு..அரைகுறையா கேட்டுட்டு வாங்காம வருவாய்”. கோபத்துடன் கூறிய வார்த்தைகள் தங்கை காதில் கணீர் என ஒலிக்க,

“ஏய்… நான் ஒழுங்கா தான் கேக்கிறது. சரி சொல்லு வேற என்ன வாங்கிறது?”

அமைதி அடைந்தவளாக, “பருப்பும் சோறும் ஒரே சமைச்சு, சாப்பிட்டு உனக்கு நல்லாவா இருக்கு! காலமயும் சமைக்க இல்ல, ஏதும் வாங்குவோம். அண்ணா பிறகு வருவான் தானே.. காசு தருவான்.”

“ம்ம்.. என்ன வாங்கிறது?. சொல்லன்… சொல்லன்..”

“அந்த கடயில என்ன இருக்கும்..?”

“கொரோனா…”

“ஆஆ…”

“இல்ல…. கொரோனா எண்டு இரெண்டு மணிக்கு கடைய பூட்டிருவாங்க”

“இரெண்டு மகிநூடில்ஸ் வாங்கிக்கொண்டு வாரியா?”

“.. காணுமா மூண்டு வாங்கவா?”

“.ம்ம் சேச்சி,கிழங்கும் வாங்கிக்கொண்டு வா, பொரிச்சு போட்டு சாப்பிடலாம்.”

“ம்ம்”

அக்கா தங்கச்சி உறவு. கொரோனா சர்வதேசம் பரவ தொடங்க முதலே, குடும்ப சூழ்நிலைகளால் இருவரும் வீட்டில் அடைபட்டுள்ளனர். அப்பா, அம்மா இருவரும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள்.

மூத்தவர் அண்ணன். மன்னார் நகரில் இருந்து இருபது மைல் தொலைவில், ஒரு கிராமம் ஒன்றில் அரசாங்க வேலை செய்கின்றார். கிட்டத்தட்ட ஐந்து வருட காலமாக வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்ற கனவை சுமந்து, அதற்கான வழிகளையும் ஆராய்பவர்.

இரெண்டாவது பிள்ளை , கொழும்பில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவி. குடும்ப பிரச்சினைகள், பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிப்பயன்பாடு போன்றவற்றால் படிக்க கஸ்டப்பட்டாலும் தொழில்நுட்பத்துறையில் முன்னேறி விட வேண்டும் என்று முழுமூச்சாக இருப்பவர். அவருக்கு துணையாக இருந்து வழி நடத்துபவர்.

அப்பா, ஓய்வு பெற்ற போதும் ஓய்வின்றி கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கும் பேருந்தில் சென்று, தனியார் மேலதிக வகுப்புக்களை எடுத்து வருகின்றார். குடி போதை இல்லாதவர்.தனது மனம் எனும் குருவிக்கூட்டில்… தனது ஐந்து பொற்க்குஞ்சுகளையும் தவிர வேறு உலகம் அறியாதவர். பாடசாலை சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர். அதன் காரணமாக, ஓய்வூதிய பணம் இன்னும் அவர் கைவந்து சேரவில்லை. வழக்கால் உருவான பிரச்சினைகளாலே நிம்மதி தேடி, கையில் சிறிய தொகையுடன் கொழும்பிற்கு சென்றவர்.

அப்பா, தாங்கள் இருவருக்கும் உணவு கடைகளிலே தான் எடுத்து வந்தார். அறை வாடகை வேறு சமாளிக்க வேண்டும். ஆகையால், பல்கலைக்கழக ஓய்வு நேரங்களில் மூத்த அக்காவும் பௌதிக, கணித வகுப்புகள் எடுக்கச்செல்வதுண்டு.

இருவரும் கொழும்பு நகரின் ஒரு புறம் இருக்க, மூன்றாவது மகள் கொழும்பின் இன்னொரு தொலைவுப்பகுதியில் கிட்டத்தட்ட எட்டு மாத காலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவளும் கொழும்பில் பல்கலைக்கழகம் ஒன்றில் சுற்றச்சூழல் தொடர்பான கற்கைநெறியில் ஒரு வருடகாலம் வரை படித்தவள். சாதாரணமாக சுகதேகியாகவே இருந்த அவளை, வயிற்று புற்றுநோய் என வைத்தியசாலை சேர்த்துவிட்டனர். படிப்பில், சபை சிலிர்க்கும் பேச்சில், தலை நிமிர்ந்து நடக்கும் தைரியத்தில், அவள் கண்ணின் இமைவழி வெளிப்படும் அழகில், இனிமையான குணத்தால் நட்பு வட்டாரங்களுள் அதிகமாக பேசப்பட்டவள். மூன்றாம் முறையாகவும் முயற்சியுடன் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியடைந்து , கிடைத்த துறையை விருப்புடன் ஏற்று சாதனை படைத்திட நினைத்தவள். கட்டிலில் தன் பொற்காலங்களை பதுக்கிட என்ன பாவம் தான் செய்தனோ என்று ஏங்கும் அவள் இரு கண்களுக்கு விடைகொடுக்க முடியாமல் எப்படியும் தனது பிள்ளையை குணப்படுத்தி விடுவேன் என்ற நம்பிக்கையில் அவள் தாயும் ஒருபுறம்.

கடைசி இரு பிள்ளைகளும் மன்னார் நகரிலுள்ள தங்கள் சொந்த வீட்டில் உள்ளனர். இம்முறையும் உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்து விட்டு, படித்துவிட வேண்டும் என்ற கனவை சுமப்பவர்கள். இருவருள் மூத்தவள், மருத்துவதுறை கிடைக்க வேண்டி மூன்றாம் முறையாக மன்னார் பாடசாலையிலும் இளையவள் முதல் முறை சிறந்த பெறு பேறு பெற்ற போதும் பொறியியல் கிடைக்க வேண்டி இரண்டாம் முறையாக யாழ்ப்பாணத்திலும் விண்ணப்பித்துள்ளனர்.

உந்துருளி ஒலி காதையடைய… வீட்டுக்குள் இருந்து வெளியே தங்கை ஓடிவந்து, காலை வரை திறக்காது தாழ்ப்பாள் இட்டிருந்த வாயிற்கதவை திறந்து பார்க்க…

“இந்தாங்க தங்கச்சி அண்ணா குடுத்துவிட்டவர்…”

“ஐந்நூறு ரூபா காசும் குடுக்கச்சொல்லி தந்தவர்…இந்தாங்க..”

“சரி அண்ணா..”

“எண்ணிப்பாருங்க தங்கச்சி..”

“ம்ம்.. சரியண்ணா…”

அண்ணாவின் நண்பர்கள்..

அவனுடன் வேலை செய்பவர்கள். வேலை விட்டு மன்னார் நகரிற்கு வரும் போது இவ்வாறு சில பொருட்களை குடுத்துவிட்டு விடுவான். அண்ணா வேலை செய்யும் இடத்தில்​ அனைவருடனும் நட்புறவுடனும், அக்கிராம மக்களுடன் நல்லிணக்கத்துடனும் இருப்பதால் அங்கே விளையும் மரக்கறி வகைகளை குறைந்த விலையில் வாங்கி அனுப்புவதுண்டு. முழு நாடும் ஊரடங்கால் அடைபட்டிருந்த போதும், அவனும் சமுர்த்தி வேலையான படியால் அவ்வப்போது வரமுடிந்தது.

“என்ன சேச்சி…அண்ணாவா?.”

“இல்ல , அவன்ர ப்ரெண்ட் ஒருத்தர்..அண்ணா குடுத்துவிட்டவராம்.

ஐந்நூறு வாக்காசும் தந்தேர்…”

“என்ன குடுத்து விட்டிருக்கான் பாரன்..சேச்சி”

இருவரும் பார்க்கின்றனர்.ஒரு பையில் தக்காளி, கத்தரி,பெரிய வெங்காயம், போஞ்சி, பயத்தங்காய். இன்னொரு பையில் கோவா,கறி மிளகாய், குடை மிளகாய். இன்னுமொரு பையில் நாரக்கங்காய், கொய்யாக்காய், விளாம்பழம்.

“அப்ப சேச்சி.. நாம ஒரு.. கத்தரிக்கா குழம்பும் தக்காளிச்சம்பலும் போட்டு சாப்பிடுவோம். சோற மட்டும் நீ காய்ச்சு.. சரியா.. மிச்சத்த நான் செய்வன்.”

“முதல் போய், தேத்தண்ணிய சுடவை. நான் ஓடிப்போய் மரவள்ளி பொரியல் வாங்கிக்கொண்டு வாரன். இன்று வீதியடைப்பை தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளனர். கொரோனா தொடர் வீதியடைப்பால் காலாவதி திகதி முடிவடைந்தும் விற்க்கப்படாமல் பல பொருட்கள் கடையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும். நாம் தான் விழிப்புடன் கொள்வனவுகளை மேற்கொள்ள வேண்டும். தங்கை கடைக்கு சென்று வந்ததும் இருவரும் சமைத்து சாப்பிட்டனர்.

மாலை பொழுது இணைய தளத்தில் ,அக்கா சில செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சேச்சி.. இத ஒருக்கா பாரன்.”

நகைச்சுவை காணொலி ஒன்று.

கொரோனா பீதியில் உலகமே உறைந்து போயிருந்த தருணம் அது. நெடுஞ்சாலையின் நடுவில் மூன்று பெண் பிள்ளைகள் அழகாக உடையணிந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மிகவும் மகிழ்ச்சியுடனும் எந்த வித பய உணர்வும் இல்லாமலும் ஒருவர் கன்னத்தில் மற்றயவர் எதையோ தடவி விளையாடுகின்றனர். வீதியில் உந்துருளி ஒன்றில் வந்த காவல் அதிகாரி வாகனத்தை நிறுத்தி , ‘வீட்டில் உள்ளவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொரோனாவையா கொண்டு போகப்போறீங்க…?!’ என வினவி அறிவுரை கூறி அனுப்பிவிடுகின்றார். இவற்றை படம் பிடித்துக்கொண்டிந்தவனை பிள்ளைகள் கண்டவுடன், படமெ டுக்க வேண்டாம் என சொல்கின்றனர். அவனோ, ‘ நீங்க செய்த வேலைக்கு எடுக்காம… என்ன செய்றது!!’ என்று கேட்கவும் இருவரும் சிரித்து விடுகின்றனர். சிரித்து முடிந்து ஐந்து நிமிடம் இருக்கும்.

“ உனக்கு … ரோல் மொடல் யாரு சேச்சி?”

“ஏன் கேக்கிறா..! “

“உலகத்தில ஒரு பெரிய பணக்காரனோ , இல்ல ஒரு புகழ் பெற்ற நடிகரோ..யாரா இருந்தாலும் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்காது.

ஆனா…எனக்கு ரோல் மொடல், கீரோ எல்லாம் கொரோனா தான். பாத்தியா அது ஒரு சின்ன உயிர்..பரவிப்பரவி உலகம் பூரா யார கேட்டாலும் தெரியிற அளவுக்கு பிரபல்யம் அடைஞ்சிருக்கு.”

“உண்மைதான். கொஞ்ச நாளுல இவ்வளவு வேகமா யாரும் முன்னுக்கு வந்ததில்ல தான்….”

தங்கை சிறிது நேரம் யோசித்து விட்டு, தொலைக்காட்சியை இயக்குகின்றாள். அங்கே…சன் தொலைக்காட்சியில்… துள்ளி ஓடும் மானின் அழகைக்காண்கின்றாள். அக்கா வருகின்றாள்.

“என்ன சேச்சி..? ரிவி போட்டனியா!”

“செய்தி தான் போட்டன்.. இங்க வா…வந்து பாரன்…மான்”

“ஏய்.!. செம்மயா இருக்குது.” இருவரும் அமைதியாக இரசிக்கின்றார்கள்.

‘மக்கள் நடமாட்டம் இல்லாத படியால் கடலில் கடலலைகளுடன் விளையாடும் மான்’ என பல்சுவைச் செய்தியில் சொல்லப்படுகின்றது. தங்கை தொடர்கின்றாள்..

“அதுகளும் அப்பிடியே மனுசங்க அலைகளில .. விளையாடுற போல விளையாடுதிங்க.. என!”

“ம்ம். அதுகளுக்கு நல்ல சந்தோஷம்.”

மேலும் வாகன நெரிசல்களுக்கு உள்ளாகும் வீதிகளில் இப்போது, பிற விலங்குகள் உல்லாசமாக திரியும் காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்தன. செய்தி நிறைவுறும் தருணம் அக்கா படிக்கச் செல்கின்றாள். திரையில் இடைக்கால பாடல் ஒன்று ஒலிபரப்பாகின்றது.

“மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ,

எண்ணம் கண்ணிற் பாவையின்றி….”

தங்கையின் மனதிற்கோ அந்த பல்சுவைச் செய்தியில் இருந்து வெளிவர முடியவில்லை. ஆழ்ந்த சிந்தனையில் அவள்.

‘உலகத்தில வாகன எரிபொருள், தொழிற்சாலை எரிபொருள் ஆகியவற்றின் கேள்வி அதிகரிக்க விலையையும் அதிகரிக்க போவதா அறிவிச்சவங்க..இப்ப, கோவிட் பத்தொன்பதுக்கு பிறகு அந்த பிரச்சினையே இருக்கிற போல தெரிய இல்ல. இப்பிடி பல பிரச்சினை இருந்தது. இப்ப இல்ல. ஏழை தொடங்கி பணக்காரன் வரைக்கும் எல்லோர் வாழ்கையிலும் கொள்ளை நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.’

ஆமாம்,

வல்லரசு நாடுகளும் வல்லமை இழந்த காலம். . இக்காலம் தான், வீட்டுக்கூரையை வேலையில்லாமல் பார்க்க வைத்தது. வானம் எல்லை இல்லை என் வீட்டு வாசல் வரை தான் என் எல்லை என்று முடக்கிப்போட்ட ஊரடங்கு தினங்கள் அறிவிக்கப்பட்ட காலம். ஐந்தறிவு விலங்கும் புழுவும் பூச்சியும் நடமாட, கூண்டுக்குள் ஆறறிவு அறிவாளிகள் அடைபட்ட காலம்.

ஒரே ஒரு வார்த்தை ,எம்மொழி மக்களுக்கும் இலகுவில் உணர்ந்து கொள்வதாய் இருந்ததென்றால், அது கொரோனா. உயிருக்கு நிகரானது எதுவாக இருக்க முடியும்? பணத்தை கொட்டிய போதும் தனதுயிரை காக்க முடியாது என தெரிந்த போது பூட்டிய கனவுகளுடன் இறப்பிற்கு காத்திருந்த காலம் கொடியது தானே. மனித வாழ்வில் ஏற்பட்ட சிறியதோர் மாற்றம் இலட்சக்கணக்கான மனித உயிர்களை அழிவுப்பாதை வரை கொண்டு நிறுத்திய மறக்க முடியாத காலமாக இருந்த போதும்…., ஐந்தறிவுக்குள் உள்ளவற்றை அடக்கி, தனது உலகே இது என மனதில் நஞ்சு கொண்ட மனிதன், பிற உயிர்களினதும் நெஞ்சம் அறிந்த காலமும் இதுவன்றோ.!

இந்த கொரோனா மனித குலத்திற்கு சவாலாக அமைந்ததன் நோக்கம் என்ன? ‘இயற்கையை நேசித்து வாழ்.. இல்லை வீழ்ந்து விடு’ என்கின்றதோ!!

மூன்று வாரங்களிற்கு பிறகு……. இலங்கையில் மீண்டும் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு தொடர்கின்றது. ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திற்கு போக முடியாத சூழல்.

உயர்தர பரீட்சை பெறுபேற்று அடிப்படையில் பல்கலைக்கழக முதல் விண்ணப்படிவம் அனுப்புவதற்கு முடிவுத்திகதி நெருங்குகின்றது. இந்த சூழ்நிலையில் அரசு முடிவுத்திகதியை பிற்போட்ட செய்தியும் சூரியன் மதியவேளை செய்தியில் ஒலிபரப்பாகின்றது.

“நல்ல வேளை… யாழ்ப்பாணம் போறத பற்றி யோசிச்சிட்டு இருந்தன்…இனி வார மாதம் ஒன்பதாம் தேதி தானாம் முடிவுத்தேதி.”

“ஆஆ… அப்பாட்ட எடுத்து சொல்லு.. யாழ்ப்பாணம் போறத பற்றி கேட்டவர் தானே… அண்ணாட்டயும் எடுத்து சொல்லு. உன்ன கூட்டிக்கொண்டு போறதுக்கு, டீச்சர் ,தெரிஞ்ச பிள்ளைகள எப்ப எண்டு கேட்டு சொல்லச்சொன்னவன்.”

“ஓம்.. போனில காசு இருக்கா?”

“. டைலொக் காரன் போட்ட டைலொக்-டைலொக் ப்ரீ மினிட்ஸ் இருக்கு..”

“ம்ம்…. சக்தியில விடு ஒருக்கா.”

அக்கா மாற்றுகின்றாள்.

‘மீண்டும் நாடு முழுதும் ஊரடங்கு’

‘இலங்கையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு’

‘கொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் ஆடி மாதம் பிற்போடப்படுகின்றது.’

இத்துடன் மதிய வேளை செய்திகள் நிறைவடைந்தது. மீண்டும் மணித்தியாலச் செய்திகளை மதியம் ஒரு மணிக்கும் விரிவான செய்திகளை இரவு எட்டு மணிக்கும் கேட்க்கலாம்.

“இந்தா அப்பா போன் எடுக்கிறேர்.. கத..”

தங்கை தொலைபேசியை காதருகில் கொண்டு செல்கின்றாள்.

“அம்மாச்சி…”

“ஓஓ..ம்”

“என்னம்மாச்சி எடுத்திருந்தீங்க..”

“நீங்க எடுத்திருந்தீங்க..”

“ஓம் அம்மா.. என்ன சாப்பிட்டனீங்க எண்டு கேக்க எடுத்தனான். அண்ணா வந்தவனாம்மா ?”

“ஓம் வந்தவன்…. மரக்கறி கொண்டு வந்தவன்.”

“ஆத்தே… நான் அவன் வருவான் எண்டு நினைக்க இல்லம்மா. என்னண்டு வந்தான் ஆச்சி ?”

“சமுர்த்தி ஆக்கள விடுவாங்க அப்பா..”

“ஆ.. என்ன சமைச்சனீங்க?”

“சோறும் கத்தரிக்கா குழம்பும் தக்காளிச் சம்பலும்.”

“ஆச்சி..கடையில ஒண்டும் வாங்காதேங்க.. மற்றது கொரோனா எல்லா இடமும் பரவுதம்மா, அதான் வெளிய ஒரு இடமும் போகாதேங்க. யார் கூப்பிட்டாலும் போக வேணாம்.

“ம்ம்…”

“மற்றது கொண்டுவார சாமான்கள கழுவி போட்டு உள்ள கொண்டு போங்க..எனம்மா.”

“ஓம் அப்பா..”

“கவனமா இருக்கோணும்… இங்க அப்பாட நிலை தெரியும் தானே. வகுப்பு ஒண்டும் நடக்கிறதில்ல… அந்த ஒண்டோ இரெண்டு வகுப்புக்கு தான் போனன். இப்ப அதுவும் இல்ல.. இப்ப கடையிலயும் சாப்பாடு எடுக்கிறதில்ல ..சாப்பாட்டுக்கு என்ன செய்யிறது… நான் அப்பப்ப கேவ்ப்யூ எடுத்தா உடன போய் தெரு கடையில இருக்கிறத பாத்து வாங்கிக்கொண்டு வந்திடுவன். எங்களுக்கே இப்பிடி எண்டா… நாள் கூலிக்கு வேலை செய்யிறவங்க என்ன செய்வாங்க.. போன கிழமை அங்கர் பெட்டி இரெண்டு தரமாட்டன் எண்டு சொல்லீற்றான் அம்மா.. பிறகு ஒண்ட தான் வாங்கி கொண்டு வந்தன். கிழங்கு கனக்க வாங்கி கொண்டு வந்திடுவன். அதத்தான் டீ போடுற கீற்றர்ல போட்டு அவிக்கலாம். வேறென்ன சோறு சமைக்கவா ஏலும். கிழங்கு தான் சாப்பாடு. அதக்கூடி நல்லா கழுவி தான் உள்ள கொண்டு போறது. உயிர கையில பிடிக்கனுமே. கடவுள் விட மாட்டான். ஏதோ ஒண்டென்றாலும் சாப்பிட தந்து கொண்டு தான் இருக்கிறான். உங்களுக்கு பிரச்சினை பெருசா இல்ல தானே. வெளியால போக வேண்டியதும் இல்ல தானே.வடிவா சமைச்சு சாப்பிடுங்க. இல்லாட்டி சமாளிக்கலாம். இருக்கும் போது நல்லா சாப்பிடனும். அதத்தான் சொல்லுறன். அக்கா நித்திரையால எழும்பிற்றா.. கம்பஸ், வகுப்பொண்டுக்கும் போறதில்ல தானே.. ரூம் கதவத்தாண்டி அவவுக்கு எல்லாம் மறந்திருக்கும். வைக்கிறன் ஆச்சி, அக்கா சாப்பிட இல்ல.. தேத்தண்ணி வைச்சு கிடக்கிற பிஸ்கேட்டயும் கிழங்கு அவிச்சு வச்சிருக்கன் அதையும் குடுக்கப்போறன்.”

“அப்பா ….”

“என்னம்மா சொல்லுங்க..”

“முதலாவது ஃபோம் முடிவுத்தேதி வார மாதம் ஒன்பதாம் திகதியாம் ..”

“ஆ.. யாரு சொன்னது?”

“ செய்தியில சொன்னவங்க.”

“வார மாதந்தானே?..”

“ஓம்”

“அப்ப நாள் கிடக்கு..இடைக்க இடைக்க பிள்ளைகளிட்ட எடுத்து அதிபரிட்ட சைன் வாங்கிறது எப்ப எண்டு கேளுங்க..”

“சரியப்பா”

மன்னார் மாவட்டம் தொடர் ஊரடங்கால் அடைக்கப்பட்டிருந்தாலும் இடையிடையே ஊடரங்கு நீக்கம் செய்யப்படும். ஆனால், கொழும்பு போன்ற சனநெரிசல் அதிகமான அபாயம் நிறைந்த பகுதிகளில் மாதக்கணக்கில் தொடர் ஊரடங்கால் அப்பகுதி மக்கள் பாதிப்பிற்குள்ளாகி தான் இருந்தார்கள். அதில் எம்மை விட்டு தூரம் இருந்து அல்லல்படும் அப்பாவும் அம்மாவும் இரு அக்காமாரும் விதிவிலக்கல்ல.

வாழ்ந்து விட்டேன் உன் காலத்தில், உன்னுடன் அல்ல …

நீ ஊர் சுற்றித்திரிந்ததாய் அறிந்திருந்தேன், இன்றோ உலகம் சுற்ற முனைந்து விட்டாய்.

போகும் இடமெல்லாம் யார் யாருடனோ வாழ்ந்து கொண்டுதான் உள்ளாய்.

நிஜமாக சொல்கிறேன்…. அவர்கள் உன் துரோகத்தால் இறந்து கொண்டு தான் இருப்பார்கள்.

பேதை நீ, நான் தெரிந்து தெளிந்து உள்ளேன்.. உன் அன்பு என்னும் போதையில் அகப்பட்டவர், தம் அறியாமை துயரை நீந்தி கடக்க வேண்டி தினம் தினம் அல்லல்படுவார்.

உன் நிஜ உருவை காணமுடியாத கண்கள் கொண்டவர்க்கு உதட்டு வழி முத்தமிட்டு, உள்மூச்சுடன் நாசிவழியே உள்ளிறங்கி உயிரையா கேட்கின்றாய்.

உண்மையான நேசமும் இதுவல்ல .. நீயும் எங்கள் உறவல்ல…

குடியிருக்க இடம் தந்தார் என்றால்

குடியழித்து விட

நீயும் நல்குடியில் பிறந்திலையோ!!

மாலை ஆறு மணி பொன்வசந்தம் நிகழ்ச்சியில் நேயரொருவரால் கூறப்பட்ட கவிதை மனதிற்குள் எதையோ நினைவுபடுத்துகின்றது.

“சேச்சி.. வாவன்.. கணக்கு செய்ய..”

பௌதிகவியல் புத்தகத்தையும் பேப்பர் கட்டையும் இரெண்டு பேனாவையும் கையில் எடுத்தவாறே..தங்கையை நோக்கி வருகின்றாள், அவள் அக்கா.

“ம்ம்.. வாரன்..”

வெளியே வாங்கினில் இருவரும் போய் அமர்கின்றனர்.

நேரம் இரவு ஏழு ஐத் தொட்டிருக்கும். இருண்ட வானமதில் அவர்களும் வருவார்கள் எனக்காத்திருந்தது நிலா. முழு நிலவென்றால் கொள்ளை அழகு. அந்த அழகிற்கு அழகு சேர்த்தது தென்னை இளங்கீற்றுக்களும் தென்றலும் தான். வீட்டின் வெளியே மின்குமிழ் ஒளிர்ந்து கொண்டிருந்தது. எடுத்து இழுத்த மூச்சில் ஐம்பது கேள்விகளை செய்து முடித்தனர்.

சேச்சி சோறு கிடக்கு .. என்ன செய்வோம்…. அப்போத பசிக்காத மாதிரி இருந்தது. இப்ப பசிக்குது.அக்காக்கு என்ன செய்து தரப்போறா..?”

“பயத்தங்கா கறி வைக்கட்டுமா??”

“போ சேச்சி..இனி எப்ப வைச்சு எப்ப சாப்பிடுற..அம்மா எப்ப வருவா.. முதல் போல எனக்கு சமைக்கவே பிடிக்கல.. “

அக்கா அம்மாவிற்கு எடுத்து கதைக்கும் இடைவேளையில் தங்கை கறி வைத்து விடுகின்றாள்.

“ஏய்.. சாப்பிட வா..”

சாப்பிட்டுக்கொண்டு

“கறி நல்லா இருக்கு சேச்சி..அக்கா சமைக்க சொல்லி கஸ்டப்படுத்தீற்றனா?. “

“ம்..இல்ல”

“நாளைக்கு உப்புமா செய்து தாரன். ரவயும் கிழங்கும் வாங்கி தா..”

“ம்.. சரி”

தினசரி அவர்களது வாழ்கை பாலை நிலமாக காட்ச்சி தந்தாலும்

பயின்று கொண்டதும் முயன்று பார்த்ததும் என்று தாய் தந்தையரிடம் கூற நிறைய இருந்தன. உணவில் மட்டுமல்லாது வீட்டுச்சூழல், விவசாயம், சுயசுத்தம் ,சொல்லப்போனால் தனிமையிலும் வாழ பழகிக்கொண்டனர். கொரோனாக்காலம் இருவர் பார்வையிலும் ஒரு புரட்ச்சிக்காலமாகவே பார்க்கப்படுகின்றது.

இச்சிறுகதை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பிரம்மம் போட்டித்தொடரில் ஒன்றான எழுத்தோவியம் — 2020 சிறுகதை போட்டியில் பங்கு பெற்றி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

--

--

Tamil Literary Association
தழலி

This medium account is to ensure the online presence of Tamil Literary Association,University of Moratuwa, Srilanka.