தினம் ஒரு பாசுரம் - 10

நின்ற வண்கீர்த்தியும் நீள்புனலும் நிறை வேங்கடப்பொற்

குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்

உன் தனக்கு எத்தனை இன்பந்தரும் உன் இணைமலர்த்தாள்

என் தனக்கும் அது, இராமா னுச! இவை ஈந்தருளே.

— இராமானுச நூற்றாந்தாதி

இன்று சித்திரையில் திருவாதிரை! வைணவமும், உலகமும் தழைக்க வந்த அண்ணலார் இராமனுசன் என்னும் இளையாழ்வாரின் திரு நட்சத்திர தினமாம். அதனால், இன்று நம்மாழ்வாருக்கு ஓய்வு கொடுத்து, திருவரங்கத்து அமுதனார் (இவர் இராமானுசரின் சீடரான கூரத்தாழ்வானின் சீடர்) இராமானுசரைப் போற்றி அருளிய இராமானுச நூற்றாந்தாதியில் இருந்து ஒரு அழகான பாசுரம்.

மணிப்பிரவாள நடை சார்ந்த கிரந்தங்கள் பலவும் இயற்றப்பட்ட ஒரு காலகட்டத்தில், இராமானுச நூற்றாந்தாதியில் காணக்கிடைக்கும், அற்புதமான பொருளுடனான செழுந்தமிழ் நடையும், சுவையும் வியக்க வைப்பதாய் உள்ளது என்று தமிழ்ச் சான்றோர்கள் உரைப்பர். திராவிட மறையாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில், மதுரகவியாழ்வார் தன் ஆச்சாரியன் நம்மாழ்வாரை போற்றி அருளிய “கண்ணிநுண் சிறுத்தாம்பு”ம், இராமானுச நூற்றாந்தாதியும் மட்டுமே, திருமாலை முன்னிறுத்தி அருளப்படாதவையாம். வைணவத்தில், திருக்குருகைப்பிரானுக்கும், இராமனுசருக்கும் எத்தகைய உயரிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை இதிலிருந்து நாம் உணர்கிறோம் அல்லவா!

இராமனுசரை இளையாழ்வார் (இலக்குமணன்) என்பதற்குக் காரணம் உள்ளது. இலக்குமணன் போலவே, அண்ணலும் ஐந்தலைய பைந்நாகமாம் ஆதிசேஷனின் அவதாரமாகக் கொள்ளப்படுகிறார். சமயம் கிடைக்கும்போது, நான் எழுதிய இவ்விடுகையையும் வாசிக்கவும்

நின்ற வண் கீர்த்தியும் - நிலைத்த பெரும்புகழும்
நீள் புனலும் நிறை - நீர் மிக நிறைந்த சுனைகளும் கொண்ட
வேங்கட பொன் குன்றமும் - திருவேங்கடம் எனும் பொன் போல் ஒளிரும் திருமலையும்
வைகுந்தம் நாடும் - பரமபதம் எனும் திருநாடும்
குலவிய பாற்கடலும் - போற்றத்தக்க, ஆனந்தம் தரும் திருப்பாற்கடலும்
உன் தனக்கு - உம் திரு உள்ளத்துக்கு
எத்தனை இன்பம் தரும் - எவ்வளவு/எத்தகைய மகிழ்ச்சி தருமோ
உன் இணை மலர்த் தாள் - மலரொத்த உமது திருவடிகளானது
என் தனக்கும் அது - அடியேனுக்கு அத்தகைய பேருவகையை அளிக்க வல்லது
இராமானுச! இவை ஈந்தருளே - அண்ணல் இராமனுசரே! இத்திருவடிகளால் அடியேனை காத்தருள வேணும்

(ஞானமிக்க குருவின் திருவடியானது அத்தனை மேன்மையானது என்பதே பாசுரத்தின் முக்கியச்செய்தி. அதோடு, வைணவ மரபில், ஒரு குருவின் கைப்பற்றுதலும், அவரது உபதேசமும் இன்றி, நிறைந்த பக்தியோடு கூடிய பூரண சரணாகதி மட்டும் மோட்சத்தைப் பெற்றுத் தர வல்லதில்லை)

சொல்லாடல் சுவை:

பாசுரத்தில் “குலவிய பாற்கடல்” என்பதை நோக்குவோம். சாதாரணமாக ‘குலவிய” என்பதற்கு மிக நெருக்கமாகப் புழங்குதல் என்று நாம் பொருள் கொள்வோமில்லையா? இராமானுசர் ஐந்தலை அரவின் அவதாரம் என்று அறிவோம். பாற்கடலில் பெருமாள் அரவுப்படுக்கையில் (பாம்பணை) யோக நித்திரையிலிருப்பதை குலவுவதாகக் கொள்வதும் ஒரு சுவை தானே :-)

பாசுரத்தில் வரும் மற்ற இரு இடங்களில், திருவேங்கடத்தில் நின்ற திருக்கோலத்திலும், (இங்கு ஆதிசேஷனே மலையாக இருப்பதாகச் சொல்வது மரபென்றாலும், குலவுதல் அத்தனை பொருத்தமில்லை!) வைகுந்தத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் (இங்கு ஆதிசேஷன் பெருமாள், மகாலட்சுமிக்கு குடையாகப் பரவியிருப்பதால், இங்கும் குலவுதல் பொருந்தாது) பெருமாள் அருள் பாலிக்கிறார்.

— எ.அ.பாலா