தினம் ஒரு பாசுரம்-14

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற, அச்
செம்பொனே திகழும் திருமூர்த்தியை,
உம்பர் வானவர் ஆதியஞ்சோதியை,
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ.
- திருவாய்மொழி

நாங்குநேரிக்கு அருகில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், உள்ள திருக்குறுங்குடி எனும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் சிவந்த திருமேனியுடனான “வடிவழகிய நம்பி” (வண்ணமழகிய நம்பி) யை நம்மாழ்வார் உள்ளம் உருகிப் போற்றி அருளிய ஓர் அற்புதமான பாசுரம் இது. இப்புண்ணியத்தலம் 1500 வருடம் தொன்மையானது. வராக மற்றும் பிரம்மாண்ட புராணங்களில் இத்தலக்குறிப்புகள் காணப்படுகின்றன. 108 வைணவத் திருப்பதிகளில் மிக முக்கியமானதும் கூட. தாயாரின் திருநாமம் குறுங்குடி வல்லி நாச்சியார். இதை வாசிக்கும் அனைவரும் அவசியம் சென்று தரிசிக்கவும் :-)

குறுங்குடி என்பது காரணப்பெயராம். பிரம்மாண்ட வராக அவதாரம் எடுத்த பெருமாள் தனது உருவத்தை இங்கு குறுக்கி எழுந்தருளியிருப்பதால் இத்தலம் திருக்குறுங்குடி ஆயிற்று.”குறியவன்” வந்து தங்கிய திருத்தலம் என்பதால் வாமன சேத்திரம் என்றும் கூறுவர். இத்தலத்தில் கைசிக ஏகாதசி விமரிசையாக கொண்டாடப்படுகிறது, அதன் பின்னணியில் ஒரு பழங்கதை உண்டு. அது பிறிதொரு சமயத்தில்! சிலபல தகவல்கள் எனது இந்த பழம்பெரும் இடுகையில் உள்ளன ;-)

http://balaji_ammu.blogspot.in/2007/01/289.html

நம்மாழ்வார் பூவுலகில் அவதரிக்கவே காரணமாக இருந்தவர் அழகிய நம்பி என்பதாலோ என்னவோ, ஆழ்வார் இப்பெருமாள் மேல் பாடிய பாசுரங்கள் தேன் சொட்டச் சொட்ட இனிக்கும்! அதாவது, நம்மாழ்வாரின் பெற்றோர்களான காரியும், உடைய நங்கையும் திருக்குறுங்குடியில் புத்திர பாக்கியம் வேண்டிப் பிரார்த்தித்ததால், திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தாராம். என் ஃபேவரட் ஆழ்வாரான திருக்கலியன் எனும் திருமங்கை மன்னனுக்கு பரமன் மோட்ச சித்தி அருளியது திருக்குறுங்குடியில் தான்!

உடையவர் இராமானுசரை தன் ஆச்சார்யானாக மனமுவந்து ஏற்றுக் கொண்டவர் இத்தலப் பெருமாள். அதனால், அவருக்கு உண்டான அழகான திருநாமம் “ஸ்ரீ வைஷ்ணவ நம்பி”. இத்தலத்தில் வடிவழகிய நம்பி (நின்ற திருக்கோலம்) தவிர இன்னும் 4 நம்பிகளாக பெருமாள் அருள் பாலிக்கிறார், (வீற்று)இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி மற்றும் மலை மேல் நம்பி

இனி பாசுரத்திற்கு வருவோம்:

ஆழ்வார் பெருமாளை ”செம்பொனே திகழும் திருமூர்த்தியை என்று போற்றுவதை கவனிப்போம். வெறும் பொன் (தங்கம்) அத்தனை ஒளிர்வதில்லை. பரமன் தங்கமாக இருந்தாலும், நம்மால் உணர முடிவதில்லை! பொன்னானது, செந்நிறத் தாமிரம் சேர்க்கப்பட்டு, அழகிய அணிகலனாக உருவெடுக்கையில், அது எப்படி ஒளிர்கிறதோ, அது போலவே ஸ்ரீயை (திருமகளை) மார்பில் தரித்து புருஷ உத்தமனாக, ஸ்ரீமன் நாராயணனாக அடியவரை அவன் அரவணைத்துக் கொள்வதைத் தான் ஆழ்வார் குறிப்பில் நமக்கு உணர்த்தியிருப்பதாகச் சொல்வதும் பொருத்தமானது தானே! பரமபதம் கிட்ட, பிராட்டியின் (மகாலஷ்மி) ரெகமண்டேஷன் (இதற்கு புருஷகாரம் என்று பெயர்) அவசியம் என்பதும் ஒரு வைணவக் கோட்பாடு தான்.

பெருமாளுக்கு, ”நம்பி” என்பதும் அர்த்தமுடைய ஓர் அழகான பெயரே! அதாவது, பக்தர்களுக்கு, இம்மையிலும் மறுமையிலும், நம்பிக்கை அளிப்பவன்; தன்னை “நம்பி” வந்த அடியவரை ஒரு போதும் பரமன் கைவிடுவதில்லை!

”ஆதியஞ்சோதி” எனும்போது, பரந்தாமனே அனைத்துக்கும் ஒளி வடிவான காரணகர்த்தன் என்றாகிறது. ஆதி வடிவம், நீதி வடிவம், சோதி வடிவம், அருள் வடிவம், சரணாகதிக்கான வடிவம் என போற்றத்தக்க அத்தனை நற்குணங்களுக்கும் (கல்யாண குணங்கள் என்பர்) தலைவனாகவும் அவன் இருக்கிறான்.
ஆழ்வார் வேறொரு பாசுரத்தில், “வேரும் வித்துமின்றித் தானே தன்னிலையறியாத் தொன் மிகு பெரு மர” என்று வியக்கிறார்! இங்கு திருமாலை மரமாக உருவகிக்கிறார். அதற்கு வேருமில்லை, விதையுமில்லை! தொன் மரம் என்பதை — கால வரையறைக்கு உட்படாதது (timeless) என்றும், மிகு மரம் என்பதை வெளியின் வரையறைக்கு உட்படாதது (beyond space limitation) என்றும் பெரு மரம் என்பதை உருவ அளவுகளைக் கடந்தது (immeasurable) என்றும் கொள்ள வேண்டும் ! அதாவது பரம்பொருள் என்பது கால, வெளி, உருவ அளவுகளைக் கடந்த ஒன்று என்பதை அனாயாசமாக ஒரு வரியில் சொல்கிறார்!!!

பாசுரப் பொழிப்புரை:

நம்பியைத் - நற்குணங்களுக்கு அதிபதியான

தென் குறுங்குடி நின்ற- திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற

அச்செம்பொனே திகழும் - சிவந்த பொன் போல் மிளிரும்

திருமூர்த்தியை - திருவடிவங்கொண்ட பெருமாளை

உம்பர் வானவர் - வானுலகக் கடவுளர்க்கும், இமையோர்க்கும்

ஆதியஞ்சோதியை - காரணகர்த்தனான ஒளி வடிவானவனை

எம்பிரானை - என் பரம தலைவனை

என் சொல்லி மறப்பனோ - எங்ஙனம் யான் மறக்க இயலும்! (என்னானாலும் மறக்கவே இயலாது)

— எ.அ.பாலா

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.