தினம் ஒரு பாசுரம்-17

இன்று என் ஃபேவரட் ஆழ்வார் திருக்கலியன், என் பேட்டைப் பெருமாள் பார்த்தசாரதி மேல் பாடிய பாசுரம் ஒன்று. அதற்கு முன் திருக்கலியன் எனும் திருமங்கை மன்னன் (ஆழ்வார்) பற்றி ஒரு சிறு குறிப்பு. ஆழ்வாரின் பாசுரத்தை அனுபவிக்கும் அதே நேரத்தில், அவரது வாழ்க்கையில் பொதிந்திருக்கும் நற்செய்திகளை நாம் உள்வாங்கிக் கொள்வதும் அவசியமாகிறது. அவை நம்மை செம்மைப்படுத்த வல்லவை.

திருவாலித் திருநகரிக்கு அருகில், திருக்குறையலூரில், கள்ளர் குடியில் (மறவர் குலம்) பிறந்த திருமங்கை (இடப்பெயர்) மன்னன், நம்மாழ்வார் போல ஒரு ஞானக்குழந்தையாக எல்லாம் பிறக்கவில்லை! சோழப்பேரரசின் கீழ் ஒரு சிற்றரசராக, குதூகலமாக, சிற்றின்ப வாழ்வை முழுதும் அனுபவித்து வாழ்ந்து வந்தார். இவை எல்லாம் குமுதவல்லி எனும் வைணவப் பெண்ணை பார்க்கும் வரை!

அவள் மேல் மையல் கொண்டு, தன்னை மணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, குமுதவல்லி அதற்கு விதித்த 2 நிபந்தனைகள் (இவை தவிரவும் இருக்கின்றன), திருக்கலியனின் வாழ்வை புரட்டிப் போட்டன.. முதல் நிபந்தனை, ஒரு வைணவனாக மாறி, பரமனடியைப் பற்ற வேண்டும், மற்றது, ஓராண்டு காலத்திற்கு 1000 வைணவருக்கு தினம் உணவளிக்க வேண்டும்… முடிந்தால் தான் திருமணத்திற்குத் தயார்!

அக்காலத்திலேயே, குமுதவல்லி, சாதியைக் காரணம் காட்டி, திருக்கலியனை நிராகரிக்கவில்லை என்பது ஒரு செய்தி! அதோடு, ஒரு பெண்ணை முன் வைத்து, திருக்கலியனை தடுத்தாட்கொள்ள வேண்டும் என்பது பெருமாளின் டிசைன்… கடைசியாக (12வது) வந்த ஆழ்வாரின் வாயிலாக, ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் (பெரும்பாலான சமயங்களில்) ஒரு பெண் இருக்கிறாள் என்பதை, அப்பரமனே நமக்கொரு செய்தியாக உணர்த்தியிருக்கிறார் என்று கொள்வதும் மிகச்சரியானதே!

குமுதவல்லியைக் கட்டாயப்படுத்தி மணம் புரிந்து கொள்ளும் (சிற்றரசர்) நிலையில் திருக்கலியன் இருந்தும், அதைச் செய்ய விரும்பாத அவரது மேன்மையையும் இங்கு குறிப்பிட வேண்டும். அச்சமயம், அவர் கலியன் என்ற மன்னன் தான், பெரிய ஆழ்வாரெல்லாம் இல்லை!

அதன் பின், தினம் பலருக்கு உணவளித்து தன் சொத்தையெல்லாம் இழந்து, கப்பம் கட்டத் தவறி, சோழனால் சிறை பிடிக்கப்பட்டு, பின் தப்பித்து, ஒரு ராபின்வுட் டைப் திருடனாக கொள்ளையடித்து, “தினம் 1000 வைணவர்க்கு உணவு” நிபந்தனையை திருக்கலியன் தடாலடியாக நிறைவேற்றி வந்தபோதும், பெருமாள் தன் பக்தனைக் கண்டு கொள்ளவில்லை.

பிராட்டியின் (திருமகள்) பரிந்துரையின் (இது தான் புருஷகாரம்!) பேரில் தான் அப்பரந்தாமன், தம்பதி சமேதராய் மாறுவேடத்தில் வந்து, திருக்கலியனுக்கு அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்து அவரை தடுத்தாட்கொண்டார்! கலியன் திருமங்கையாழ்வாராக உருவெடுத்தார். இந்த நல்லதும் திருமகள் என்ற பெண்ணால் தான் நடந்தேறியது என்பதை மனதில் கொள்ளவும் :-)

அதன் பின், பல திருமால் ஆலயங்களுக்கு, “ஆடல்மா” என்ற தனது குதிரையிலேயே பயணித்து, அத்தலப் பெருமாள்களைப் பாடி, அவற்றை திவ்விய தேசங்கள் ஆக்கினார்! அவரால் பாடல் பெற்றவை 86 திருத்தலங்கள், அவர் மட்டுமே பாடியவை 50.. கடை ஆழ்வாராக அவதரித்து, அவர் செய்த வைணவத்தொண்டு மகத்தானது.

மணவாளமாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் ‘’மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற அவதரித்த’’ என்று அருளியவண்ணம் திருமங்கையாழ்வார் வேதத்திற்கு ஆறு அங்கங்கள் என்று சொல்லும்படியாக ஆறு திவ்வியப் பிரபந்தங்களை அருளியுள்ளார்:
பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருவெழுக் கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

இனி, இன்றைய பாசுரத்திற்கு வருவோம்.

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*

நான்கடிகள் கொண்ட பாசுரத்தில் திருமங்கையார் 48 வகைத் தகவல்களைத் தருகிறார், பாருங்களேன் :-)

விற்பெரு விழவும் — வில் விளையாட்டின் போது, தன்னை அழிக்க கம்சன் நடத்திய யாகத்தையும்

கஞ்சனும் மல்லும் — கம்சனையும், மலையை ஒத்த பலம் வாய்ந்த அவனது மல்யுத்த வீரர்களையும்

வேழமும் பாகனும் வீழ — (கம்சனினின் அரண்மனையின் வாயிலில், கண்ணனை மிதித்தழிக்கக் காத்திருந்த) குவலயாபீடம் என்ற பெருயானையையும் அதன் பாகனையும் வீழ்த்தி

செற்றவன் தன்னை — அழித்தவனான கண்ணபிரானை

புரமெரி செய்த — திரிபுர அசுரர்களை தனது புன்னகையால் வீழ்த்திய

சிவனுறு துயர் — (சிவபெருமான், ஒரு சமயம், கோபத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதால், திருமகளை அவ்வோட்டில் பிச்சை அளிக்க வைத்து) சிவன் அடைந்த துயரங்களிலிருந்து

களை தேவை — விமோசனம் அளித்த இறைவனான (திருக்கரம்பனூர்) உத்தமனை

பற்றலர் வீயக் — பகைவர் மாய்ந்து போகும்படியாக
கோல் கையில் கொண்டு — (மகாபாரத பெரும்போரில் பாண்டவர் தரப்பு நின்று) தன் திருக்கையில் சாட்டை ஏந்தி

பார்த்தன் தன் தேர்முன் நின்றானை — அருச்சுனனுக்குத் தேரோட்டியாக களத்தில் நின்ற (தன் மார்பிலும் முகத்திலும் பகைவரின் அம்புகளை ஏற்று அவனைக் காத்த) கண்ணபிரானை

சிற்றவை பணியால் — சிற்றன்னை கைகேயி இட்ட கட்டளைக்குப் பணிந்து,

முடி துறந்தானைத் — (அயோத்தி அரசை ஆள்வதற்கான) மணிமுடியை விருப்பத்துடன் துறந்த ராமபிரானை

திருவல்லிக்கேணிக் கண்டேனே* — (இத்தகைய ஒப்பில்லா எம்பெருமானை) திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

- எ.அ.பாலா

anbudan BALA|எஅ.பாலா

I am a GCTian, thamiz Blogger since 2004. Interests: Cricket, Chess, Sujatha, J.Archer, DivyaPrabandham and of course political discourse :)