தினம் ஒரு பாசுரம் -2

மறப்பும் ஞானமும் நானொன்றும் உணர்ந்திலன்,
மறக்குமென்று செந்தாமரைக் கண்ணொடு,
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை,
மறப்பனோ இனி யான் என் மணியையே?
- திருவாய்மொழி

இப்பாசுரம், ”பரந்தாமனால் தன்னைக் கைவிடவே இயலாது” என்ற ஆழ்வாரின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு சான்று. அப்பேர்ப்பட்ட அடியாரன்றோ ஆதிகுருவாய் அவனியில் அவதரித்த நம்மாழ்வார். பக்தி என்கிற அங்குசத்தால் அந்த பரந்தாமனை தன் கட்டுக்குள் வைத்திருந்ததால், இவ்வாழ்வாருக்கு ‘பராங்குசன்’ என்ற காரணப்பெயரும் உண்டு.

“நான் (கண்ணனை) மறத்தலையும் அறியேன், ஞானத்தையும் அறியேன். ((இங்கு ஆழ்வார், ஞானத்திற்கு எதிர்மறையாக மறத்தலைக் கூறுவதை கவனிக்க வேண்டும். நாராயணனை நினைத்தாலே ஞானம் உண்டாகும், அஞ்ஞானம் என்பது அவனை மறப்பது!)) ஆனால்,அவனோ நான் அவனை ஒரு வேளை மறந்து விடுவேனோ என்ற அச்சத்தில், சிவந்த தாமரை மலரை போன்ற அழகிய திருக்கண்களால் என்னைக் குளிர்ச்சியாக நோக்கியபடி வந்து, நான் அவனை என்றும் மறக்கவே முடியாதபடிக்கு, என் நெஞ்சில் நிலைபெற்று விட்டான் !!

(ஆழ்வார், பெருமாளின் திருவடி, திருக்கரங்கள், இதழ்கள், கண்கள் என்று எல்லாவற்றுக்கும் தாமரை மலரை உவமையாகச் சொல்வதை பல பாசுரங்களில் காணலாம். உவமைக்குக் காரணம், அதன் சிவப்பு நிறம், மென்மை, மலர்ச்சிதாமரையும், துளசியும் பெருமாளுக்கு மிக மிக உகந்தவை)
(”மன்னி” என்ற சொல்லும் நாலாயிரத்தில் பல பாசுரங்களில் காணக் கிடைக்கிறது. இது ஆழ்வார்களின் ஃபேவரட் பயன்பாடு :-) “மன்னி என்பதற்கு நீக்கமற நிறைந்து, அகல இயலாதபடிக்கு, நெருக்கமாக நிலைபெற்றுத் தங்கி விடுவது. பெருமாளின் ”அண்மைக்கு” மட்டுமே இது பொருந்தும் :-))

இனி, நீலமணிக்கு ஒப்பான அப்பெருமானை எங்ஙனம் யான் மறக்க இயலும்? (இயலவே இயலாது!)

(பெரியாழ்வார், யசோதை பேசுவதாய் வரும் பாசுரங்களில், கண்ணனை அப்படிக் கொஞ்சுவார், கெஞ்சுவார், அது போலவே, இப்பாசுரத்தில், “மணி” என்று குருகைப்பிரான் விளிப்பதும், குழந்தையாக பாவித்துக் கொஞ்சுவதாய் கொள்வது சரியே!)

பி.கு: எனக்குத் தெரிந்த/புரிந்த வகையில் எழுதியிருக்கிறேன். தவறு இருப்பின் பொறுத்தறுள்க!

— -எ.அ..பாலா

Like what you read? Give anbudan BALA|எஅ.பாலா a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.