தினம் ஒரு பாசுரம்-20

எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*
வம்புலாம்சோலைமாமதிள்* தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*
நம்பிகாள். உய்யநான் கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.

- பெரியதிருமொழி

நம்மாழ்வாரின் பக்தி அவரது பாசுரம் ஒன்றில் பிரவாகமாக வெளிப்படுவதை நேற்று கண்டோம்..திருமங்கை மன்னனின் பக்திப் பேருவகையும், பெருமாள் மேல் கொண்ட பேரன்பும் வெளிப்படும் விதம் சற்றே வித்தியாசமானது, அலாதியானது. வீரம், கம்பீரம், கொஞ்சம் தடாலடி அதில் இருக்கும். மேற்கூறிய பாசுரம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு :-)

தஞ்சை மாமணிக்கோயில் எனும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியுள்ள நீலமேகப்பெருமாள் மேல் ஆழ்வார் அருளிய உன்னதமான பாசுரம் இது. இப்பெருமாள் மேல் ஆழ்வார் அருளிய 10 பாசுரங்களுமே அழகு, நாராயணனைப் பற்றினால் தான் உய்வு என்பதை பறைசாற்றுபவை. இங்குள்ள உத்சவ மூர்த்தியின் திருநாமம் நாராயணனே!

சில தகவல்கள்: திருமால் இங்கு நீலமேகப்பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் எழுந்தருளி இருக்கிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், தத்தம் பாசுரங்களில் மூன்று பெருமாள்களையும் சேர்த்தே பாடியிருப்பதால், இம்மூன்று கோயில்களும் சேர்ந்து ஒரே திவ்விய தேசமாகக் கருதப்படுகிறது. இந்த ஒரு தலத்தில் மட்டுமே 3 கோயில்கள் (நீலமேகபெருமாள், மணிக்குன்றப்பெருமாள், தஞ்சையாளி) சேர்ந்து ஒரு வைணவத் திருப்பதியாகக் கருதப்படுகிறது. இத்தலத்திற்கு வெண்ணாற்றங்கரை என்ற பழமையான பெயரும் உண்டு.

சரி, ஆழ்வார் வலியுறுத்துவது என்ன? பரமனின் 1000 நாமங்களையும் சொல்லக்கூடத் தேவையில்லை, “நாராயணா” என்ற ஒரு திருநாமத்தையாவது (ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம் (அ) அட்சாட்சர மந்திரம், ரகசிய மந்திரங்கள் என்று சொல்லப்படும் மூன்றில் முதன்மையானது, மற்றவை துவய மந்திரம், சரம சுலோகம்) தினம் ஓதி உய்யும் (வீடு பேறு அடையும்) வழியை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்று நமக்கு அருளியிருக்கிறார்.

திருமந்திரத்தை வதரியாசிரமத்தில் (பத்ரிநாத்) நாராயணன் நரனுக்கு அருளினான். அவனே நரன் (சீடன்), அவனே நாராயணன் (ஆச்சார்யன்)!
மந்திர ரத்தினம் என்று போற்றப்படும் துவயத்தை வைகுந்தத்தில் தான் மார்பில் தரித்த பிராட்டிக்கு (இலக்குமி தேவிக்கு)பரமன் உபதேசித்தார்.
ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!
சரம சுலோகத்தை பார்த்தசாரதியாக குருச்சேத்திரப் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்தார். பகவத் கீதையில் இது உள்ளது.
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

இந்த 3 மந்திரங்களையுமே நாராயணனே அருளியதால், அவன் குருபரம்பரையின் முதல் ஆச்சார்யன் ஆகிறான்! பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, முக்திக்கான வழிவகைகள், முக்தி என்ற இலக்கின் தன்மைகள், முக்திக்குத் தடையாக இருப்பவை ஆகிய 5 விஷயங்களை விளக்கும் சாரமாகவே இம்மூன்று ரகசிய மந்திரங்களும் (ரகஸ்யத்ரயம்) விளங்குவதாக மணவாள மாமுனிகள் அருளியிருக்கிறார்

விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் தான் அருளிய திருப்பல்லாண்டில்

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம் பொழி
வந்தொல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய நமோ
நாராயணாய
வென்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர், வந்து
பல்லாண்டு கூறுமினே!

திருமந்திரத்தின் மேன்மையை உணர்த்துகிறார்.

எம்பிரான் எந்தை - என்னுடைய பெருமானும், என்னுடைய தந்தையும்
என்னுடைச்சுற்றம்* எனக்கரசு - என் உறவினனும், என்னை ஆள்பவனும்,
என்னுடைவாணாள்* - எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிக்கும் என் உயிரானவனும்,
அம்பினால் அரக்கர் - அம்பால் அசுரர்களை
வெருக்கொள நெருக்கி* - அஞ்சி நடுங்கும்படியாக ஒடுக்கி
அவருயிர்செகுத்த - அவர்கள் உயிரை மாய்த்த
எம் அண்ணல்* - எனது (கிலேச நாசனான) இறைவனும்
வம்புலாம்சோலைமாமதிள்* - மணம் வீசும் சோலைகளும் உயர்ந்த மதில்களும் சூழ்ந்த
தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*- தஞ்சையின் மாமணிக்கோயிலில் எழுந்தருளியுள்ளவனும் ஆன அப்பெருமானைத் தொழுது
நம்பிகாள் - (சதா சர்வ காலமும் அவ்வண்ணலையே சிந்தையில் நிறுத்தியிருக்கும்) கற்றறிந்த அடியார்களே!
உய்ய நான் - உய்வு பெறும் வழியை யான்
கண்டு கொண்டேன் - (அவன் அருளால்) கண்டு கொண்டேன் !
நாராயணா என்னும் நாமம் - “நாராயணா” எனும் நாமத்தை ஓதுவதன் வாயிலாக!

- எ.அ.பாலா

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.