தினம் ஒரு பாசுரம்-22

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
.

- திருவாய்மொழி

இப்பாசுரத்தில் நம்மாழ்வார், கடவுளர்களும், இறைசார் தத்துவங்களும் மதத்துக்கு மதம் வேறுபடுவது போலத் தோன்றினாலும், ஆன்மாவின் இலக்கு என்பது ஒன்றே என்ற ஆழ்ந்த கருத்தை பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே 4 அடிகளில் மிக எளிமையாக அருளியிருக்கிறார்.

ஆழ்வார் சகிப்புத்தன்மையை வலியுறுத்தியுள்ளார் என்றெல்லாம் நான் கூற மாட்டேன். சகிப்பது எனும்போதே, பிடிக்காத ஒன்றை பரவாயில்லை என்று ஒப்புக் கொள்வது போலாகிறது. ஆழ்வார் வலியுறுத்துவது மத நல்லிணக்கம். பன்னிரு ஆழ்வார்களும் வைணவ தத்துவம்/ கோட்பாடுகளையும், திருமாலையும் தான் செம்மையான சிந்தனையுடனும், பெரும்பக்தியுடனும், தீவிரமாக முன்னிறுத்தினார்கள் என்றாலும் மத/வர்ண பேதங்களுக்கு அப்பாற்பட்ட, போற்றுதலுக்குரிய மேன்மக்களாகவே அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதை அவர்கள் வாழ்க்கையையும்,அருளிய திருப்பாசுரங்களையும் வைத்து உறுதிபடக் கூறலாம்.

(இதனாலேயே, பன்னிரு ஆழ்வார்களுக்கும், அவ்வாழ்வர்களை திருமாலுக்கும் மேலாகக் கொண்டாடிய, குருபரம்பரையின் நடு நாயகமாகத் திகழும், பகவத் ராமானுசருக்கும் வைணவத்தில் மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது!)

அவ்வகையில், ஆழ்வார்கள் வைணவம் என்பதை ஒரு மதமாகக் கூட பார்க்காதவராகவே இருந்தனர் என்று கூறுவேன். எளிமையாகச் சொன்னால், “திருமால் என் தெய்வம், அவன் திருவடி நிழலான மோட்சமே என் குறிக்கோள், அதற்கான தத்துவக்கோட்பாடுகளுடனான வாழ்க்கை முறையே வைணவம்” என்பதே ஆழ்வார் பாசுரங்களின் தலையாய செய்தி!

அவ்வகையில், திருமால் மேல் பற்றும், பக்தியும் உள்ள எவரும் வைணவரே என்பதும் பல பிரபந்தப் பாசுரங்களில் காணக்கிடைக்கும் செய்தியே. இத்தகைய வர்ண பேதத்திற்கு எதிரான செய்தியையே எந்தை இராமனுச முனி திருக்கோட்டியூர் கோபுரத்தின் மேலேறி நின்று, தனது குருவின் ஆணைக்கும் எதிராக, உலகுக்கே உரக்க அறிவித்தார்!

சரி, பாசுரப்பொருளுக்கு வருவோம்.

அவரவர் தமதமது - அவரவர் தங்கள் தங்கள்
அறிவறி வகைவகை - அறிவுக்கு எட்டிய / புரிந்த வகைகளில்
அவரவர் இறையவர் - அவரவர் கடவுளர்
எனவடி அடைவர்கள் - என்று (பல வகைப்பட்ட தெய்வங்கள் முன்) அடி பணிந்து தொழுகின்றனர்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் - அவரவரின் தெய்வங்களும்(பலன்கள் அருளுவதில்) குறையில்லாத தெய்வங்களே
அவரவர் விதிவழி - (அவரவரின் உணர்தலால்/புரிதலால்)அவரவர்க்கு விதிக்கப்பட்ட தத்துவப்பாதையில்
அடைய நின்றனரே. - (அத்தெய்வங்களைச்) சென்றடைய அவர்கள் வணங்கி நிற்கின்றனர்

— எ.அ.பாலா