தினம் ஒரு பாசுரம்-23

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன

பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்

வாழியரோ இவர் வண்ணமென்னில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய

ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா

பெரிய திருமொழி

ஒரு சக ட்வீட்டர் சுட்டி, அதனால் விளைந்த ஊக்குவிப்பால் இந்த திருமங்கையாழ்வார் பாசுரத்தை இன்று கையில் எடுத்தேன் :-) எத்தனை அற்புதமான பாசுரம்! (திருச்சிக்கு அருகில் உள்ள) திருக்கோழி எனும் திரு உறையூர்ப் பெருமாளின் வடிவழகில் மயங்கிப் போய், அந்த அழகிய மணவாளனை தன் அழகுத் தமிழால் வர்ணித்து, ஈற்றடியில் அப்பரந்தாமனை ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல “அச்சோ ஒருவர் அழகியவா” என்று திருமங்கை மன்னன் பரவசமாகக் கொஞ்சுகிறார்!

நாச்சியார் கோயில் (கமலவல்லி என்ற திருநாமத்துடன் இருக்கும் பிராட்டிக்கு உத்சவம், பூஜை ஆகியவற்றில் பெருமாளை விட முக்கியத்துவம் உண்டென்பதால்) என்றும் இத்திருத்தலத்துக்கு பெயருண்டு. திருமகள் நிரந்தரமாக உறையும் ஊர் என்பதால் உறையூர் என்ற பெயர் ஏற்பட்டது, என்ற வழக்குண்டு. அரங்கனின் திருவடி முதல் முடி வரைப் போற்றும், அமலனாதிப்பிரான் எனும் அற்புதத்தை அருளிய திருப்பாணாழ்வாரின் அவதாரத்தலமும் இதுவே. ஆக, 2 பெருமைகள். தாயாருக்கு முன்னுரிமை, ஆழ்வார் உதித்த புண்ணிய பூமி…..ஆழ்வாருக்குத் தனிச்சன்னதி உண்டு.

உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட நந்த சோழனின் மகளாக இலக்குமியே அவதரித்து, பின்னாளில் திருவரங்கத்து நம்பெருமாளுடன் கலந்து விட்டதாகவும், அதனாலேயே சோழன் இங்கு ஒரு கோயிலை எழுப்பியதாகவும் ஒரு பழங்கதை பிரசித்தம். 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான திருக்கோயில். அதாவது நம்பெருமாளே இங்கு மணவாளன் (மாப்பிள்ளை) ஆகி விட்டார்! கருவறையில் மூலவர் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர். பெருமாளுக்கு உத்சவ மூர்த்தி கிடையாது.

வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளுக்காக சொர்க்கவாசல் திறப்பதில்லை. கமலவல்லி நாச்சியார், மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில், சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்வு இங்கு மட்டுமே நடைபெறும் ஒரு வைபவம் ஆகும்.

பங்குனி மாதத்தில் ஒருநாள், திருவரங்கத்து உத்சவரான நம்பெருமாள்இத்தலத்திற்கு எழுந்தருளி, கமலவல்லி நாச்சியாருடன் தம்பதி சமேதராய் காட்சி தருகிறார். அதாவது, பங்குனி ஆயில்யத்தில், உறையூரில் கமலவல்லி நாச்சியாருடனும், பங்குனி உத்திரத்தில், மீண்டும் திருவரங்கம் சென்று ரங்கநாயகித் தாயாருடனும் நம்பெருமாள் மணக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

மறவர் குலத்தில் பிறந்த, வீரபராக்கிரம திருமங்கை ஆழ்வாரே பெருமாளின் வடிவழகை, நாயகி பாவத்தில் வர்ணித்து ரசிக்கிறார் என்றால், பெருமாள் ஓர் ஆணழகன் என்பதில் என்ன ஐயமிருக்க முடியும் :-) அந்த ஆணழகனை ஒரு வைணவப் பெருந்தகையாக, பல்லாண்டு வாழுமாறு வாழ்த்தவும் செய்கிறார், ஒரு தாய் போல ,“என் அழகா” என்று செல்லமாகக் கொஞ்சவும் செய்கிறார். அப்பரமனின் உள்ளத்தைக் குளிர்வித்து அவன் திருவடி பற்ற, உண்மையான பக்தியோடு, (கண்ணனாக அவன் நிகழ்த்தியது போல) கொஞ்சம் மாய்மாலமும் தேவையோ!

கோழியும் கூடலும் - உறையூரும் மதுரையும்

கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் - தனது அரசாகக் கொண்டபேரரசனுக்கு நிகரானவர்

குன்றமன்ன பாழியும் தோளும்- மலைக்கு ஒப்பான வலிமையும் அழகும் மிக்க தோள்கள்

ஓர் நான்குடையர் - நான்கு உடையவர் (இவர்)

பண்டு இவர் தம்மையும் - இதற்கு முன்னம் இவரை கண்டறியோம் - பார்த்ததே இல்லை!

வாழியரோ இவர் - இவர் பல்லாண்டு வாழட்டும் வண்ணமென்னில் - இவர் மேனி நிறத்தை நோக்குகையில்

மாகடல் போன்று உளர் - கரிய பெருங்கடல் போன்று இருக்கிறார்

கையில் வெய்ய - தனது ஒரு திருக்கரத்தில் கூர்மையான, ஒளிர்கின்ற

ஆழி ஒன்று ஏந்தி - திருச்சக்கரம் ஒன்று ஏந்தி

ஓர் சங்கு பற்றி - மற்றொரு திருக்கரத்தில் ஓர் வெண்சங்கை ஏந்திய

அச்சோ ஒருவர் அழகியவா - (அச்சோ) இவர் ஒருவரைப் போல பேரழகன் உண்டோ? (பார்த்ததுண்டோ? கேள்விப்பட்டதுண்டோ?)

(இதை முடிக்கும்போது எனக்கு, பம்மல் கே.சம்பந்தம் திரைப்படத்தில் வரும் “ஏண்டி சூடாமணி காதல் வலியை பார்த்ததுண்டோடி….” பாடல் நினைவில் நிழலாடியது… அழகிய மணவாளப் பாசுரத்தின் effect ;-))

— எ.அ.பாலா

Like what you read? Give anbudan BALA|எஅ.பாலா a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.