தினம் ஒரு பாசுரம் — 34

ஆலமா மரத்தின் இலை மேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்*
நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.
அமலனாதிபிரான்

இன்று திருப்பாணாழ்வார் அருளிய (10 பாசுரங்களே ஆன) அமலனாதிபிரான் என்ற அற்புதத்திலிருந்து ஒரு பாசுரத்தைக் காண்போம். முதல் முறையாக மிக அருகிலிருந்து அந்த அரங்கத்து அண்ணலை தரிசித்த திவ்விய அனுபவம் தந்த பேருவகையில், ஆழ்வார் திருவாய் மலர்ந்தருளிய அமலனாதி பிரான்பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது!

திருப்பாணாழ்வார், பிறவாது பிறந்த தெய்வக் குழந்தையாய், உறையூரில் (திருக்கோழியில்) கார்த்திகை மாதத்தில், ரோகினி நட்சத்திரத்தில் ஸ்ரீவத்ஸ அம்சத்தில் (திருமாலின் திருமார்பில் உள்ள மச்சக்குறி) 8-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். இவ்வாழ்வாருக்கு முனிவாகனர், யோகிவாகனர், கவீஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு.

குழந்தைப் பேறு இல்லாத பாணர் குலத்தவர் ஒருவரால் அன்போடு பேணி வளர்க்கப்பட்டவர். அவர் புகுந்த குலத்தில் பிரசத்தி பெற்ற யாழ் இசையில் சிறு வயதிலேயே மிகுந்த தேர்ச்சி பெற்றதனால், ‘பாணர்’ என்றே அழைக்கப்பட்டார். அவர் யாழைத் தொட்டபோதெல்லாம், அதிலிருந்து கேட்டவர் மனதை உருக்கும் இசை வெளிப்பட்டது !

ஒரு பத்து பாசுரங்களில் அரங்கனை, திருப்பாதத்தில் தொடங்கி திருமுகம் வரை, மிக மிக அழகாக பக்திப் பெருக்கோடு ஆழ்வார் வர்ணித்திருக்கிறார். “திருக்கமல பாதம் வந்து என் கண்ணிலுண்ணன ஒக்கின்றதே“ என முதல் பாசுரத்தில் தொடங்கி “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று கடைப்பாசுரத்தை நிறைவு செய்த திருப்பாணாழ்வார், அரங்கனின் திருவடி பற்றி அக்கணமே திருவரங்கப் பெருமானுடன் ஒன்றறக் கலந்தார் ! அதாவது, ஆழ்வார்களில் திருப்பாணாழ்வாருக்கு மட்டுமே, ஒரே ஒரு அரங்க தரிசனமே முக்திக்கு வழி வகுத்தது.
பாணர் குலத்தவரான ஆழ்வாருக்கு மோட்சப் பேறு அருளும் முன், அரங்கனின் திருவிளையாடலை நோக்குவோம். லோகசாரங்கமுனி என்ற அந்தணரின் தோள் மேல் அமர்ந்தபடி (இதனால் முனிவாகனர் ஆழ்வாரின் காரணப்பெயர் ஆகிறது), தாழ்த்தப்பட்டவர் என்று உலகம் சொன்ன திருப்பாணரை தன் கோயிலுக்கு வரவழைத்து, சுந்தர தரிசனம் அளித்து அவரை மனமுவக்கும்படி செய்து, திருப்பாணர் வாயிலாகவே அருமையாக பாடல் பெற்றுக் கொண்டு, ஆழ்வாரின் திருவடிப் பற்றலை துரிதமாக ஏற்று, திருப்பாணருக்கு உடனடியாக உய்வளித்தான் அந்த நம்பெருமாள்!
அரங்கனது டிசைன் புரிகிறதல்லவா! “என் அடியவரில் உயர்ந்தவர்/ தாழ்ந்தவர் என்ற வேறுபாடு கிடையாது” என்ற பரம்பொருளின் ஆதாரச்செய்தியை புரிந்து கொள்ளாமல், அவனைச் சரணடைவதும், துதிப்பதும் ஒருபோதும் பயன் தராது. இதுவும் ஒரு வைணவக் கோட்பாடு தான்! திருவரங்கத்தில் இரண்டு பேருக்குத்தான் நம்பெருமாளுடன் கூடும் பெரும்பேறு கிடைத்தது. ஒருவர் பெண் (ஆண்டாள்), இன்னொருவர் தலித் (திருப்பாணாழ்வார்). இதுவே வைணவ நீதி. இனி பாசுரத்தை சற்று ஆராய்வோம்!

முதல்வரியில் “ஆலமா மரத்தின் இலை” வருகிறது. சின்னக்கண்ணன் ஏன் ஆலிலையில் படுத்தவண்ணம் காட்சியளிக்கிறான்? ஆலமர நிழல் என்பது ஞானத்தின் குறியீடு, அதன் கீழ் அமர்ந்த வண்ணமே ஞானத்துக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். அது மட்டுமல்லாமல், இறந்து போன முன்னோர்களுக்கு முக்தி கிடைக்கவேண்டி, ஆலமரத்தடியில் தான் பிண்டம் இடும் சடங்கு நடைபெறுகிறது. இது கர்மப்பலன். ஆக, கண்ணன் ஆனவன், ஞான, கர்ம பலன்களின் காரணகர்த்தன். ஆலிலை வாடினாலும் உடையாது, காய்ந்தாலும் மென்மையாகவே இருக்கும். ஒரு விதத்தில் ஆலிலை, பரம்பொருளின் மாறாத, நிலைத்த தன்மையைச் சொல்கிறது.

“ஒரு பாலகனாய்,* ஞாலம் ஏழும் உண்டான்” என்று ஆழ்வார் பாடும்போதும், ஒருவித பரவச வியப்புணர்வே விஞ்சி நிற்கிறது. அதாவது, ஒரு ஆலிலையின் மீது சிறுமாயனாகக் கிடக்கும் இவனே, பிரளய காலத்தில், ஏழுலகங்களையும் விழுங்கி, ஒரு தாய் போல, தன் பொன் வயிற்றில் வைத்துக் காத்தவன் என்ற பெரும் வியப்பு!

ஆழ்வார் அரங்கனின் புற எழிலைப் ( ஆலிலைக் கண்ணனின் அழகு வடிவம், நாகப்படுக்கையில் யோகத்துயில் அமைதி வடிவம்) போற்றிப் பரவசம் அடைவது போல அருளியிருப்பதிலும் ஒரு செய்தி உள்ளது. ஞான யோகத்தை கைக்கொள்ளும் அளவு அறிவுவலிமை இல்லாவிடினும், கர்மயோகத்தை கைக்கொள்ள உடல்வலிமை இல்லாவிடினும், உண்மையான, சிறிதளவான பக்தி யோகத்தால் விளைந்த பேரன்பு மட்டுமே போதுமானது, அதுவே அப்பரந்தாமனின் உள்ளத்தைக் குளிர்வித்து விடும்.

முடிவில்லது ஓரெழில்* என்று ரத்தின மாலையையும், முத்து மணி வடத்தையும் தன் நீல மார்பில் தரித்த அரங்கனின் இணையில்லாப் புறவெழிலைப் போற்றும் வகையில், அடியவர் பால், எல்லையில்லா/குறைவற்ற அருட்கருணை நிறை நெஞ்சத்தை (அகவெழிலை) ஆழ்வார் முன்னிறுத்துவதாகக் கொள்வதிலும் நயம் உள்ளதல்லவா!

பாசுரத்தின் “நீலமேனி ஐயோ” வை அமங்கலமாகக் கொள்ளவே முடியாது. முதல்முறை அந்த அரங்கனை அருகிலிருந்து தரிசித்த ஆழ்வாரது பக்திப் பேருவகையின் கலப்படமில்லாத (தாங்கவொண்ணா) வியப்பின் வெளிப்பாடு அது. அதுவே சுவையும் கூட! நாம் குழந்தையைப் பார்த்து “அச்சச்சோ” என்று சொல்வது போல.

நிறை கொண்டது என் நெஞ்சினையே” என்பதன் மூலம், ’தன் உள்ளமானது அரங்கனால் முழுதும் நிறைந்து விட்டது, இனி யாருக்கும், எந்த உணர்வுக்கும் இடமில்லை’ என்பதை ஆழ்வார் குறிப்பில் உணர்த்துகிறார். அரங்கனும் அதைப் புரிந்து கொண்டு, தாமதிக்காமல், அவனது திருவடி நிழலான பரமபதப் பேற்றை உடனடியாக ஆழ்வாருக்கு அருளி விட்டான் :-) இதல்லவோ பெரும் பெரும்பேறு….

ஆலமா மரத்தின் இலை மேல் — பெரிய ஆலமரத்தின் (சிறிய) இலையின் மீது
ஒரு பாலகனாய் - ஒரு சிறு குழந்தையாக (கிடப்பவன்)
ஞாலம் ஏழும் உண்டான் - ஏழு உலகங்களையும் (பிரளய காலத்தில்) விழுங்கியவன்
அரங்கத்து அரவின் அணையான் - அரங்கமெனும் கோயிலில் ஆதி நாகத்தின் மேல் பள்ளி கொண்டவன்
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும்- அழகிய, சிறந்த ரத்தினமணி மாலையும், வெண்முத்து வடமும்
முடிவில்லது ஓரெழில் - (மார்பில் தரித்த அவனது) எல்லையற்ற , ஒப்பற்ற பேரழகு வடிவான
நீல மேனி ஐயோ - நீலவண்ண மேனியானது, அச்சச்சோ!
நிறை கொண்டது என் நெஞ்சினையே - என் உள்ளத்தை முழுதும் ஆட்கொண்டு விட்டதே!

— - எ.அ.பாலா