anbudan BALA|எஅ.பாலா
2 min readJun 22, 2015

தினம் ஒரு பாசுரம் -35

நிலையிடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர், வளநாடு மூட இமையோர்,

தலையிட மற்று எமக்கோர் சரணில்லை என்ன, அரண் ஆவன் என்னும் அருளால்,

அலைகடல் நீர்க்குழம்ப அகடு ஆட ஒடி, அகல்வான் உரிஞ்ச, முதுகில்

மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை, மறவாது இறைஞ்சு என் மனனே.

— — பெரிய திருமொழி

இன்று திருமங்கை மன்னன் அருளிய, பெருமாளின் மச்சாவதாரம் குறித்த பாசுரம். பாசுரத்தின் சிறப்பே அதன் சொல்லாட்சி, பிரம்மாண்டமானதொரு சித்தரிப்பை சிறிய எளிமையான சொற்களை வைத்து ஆழ்வார் கோத்த விதம், ஆகியவையே.

இப்பாசுரம், அண்டத்தையே ஒரு பிரளய வெள்ளம் ஆக்ரமித்த காலத்தில் (Flooding of the primordial waters of the universe) உலகங்களைக் காக்க வேண்டி, பரமபுருடனான அந்தப் பரந்தாமன் தனது முதல் அவதாரமான மச்சாவதாரம் (மீன்) எடுத்துப் புரிந்த லீலையைப் பற்றிப் பேசுகிறது. ஏற்கனவே ஒரு பாசுர விளக்கத்தில் கூறியபடி, பரமனின் முதல் நான்கு அவதாரங்களும் பிரம்மாண்ட உருவ வெளிப்பாடுகள், அதாவது மச்ச(மீன்), கூர்ம(ஆமை), வராக(பன்றி), திரிவிக்கிரம(வாமன) அவதாரங்கள். பரம்பொருளின் ஆதாரத்தன்மையான எங்கும் வியாபித்து நிலைத்திருக்கவல்லத் தன்மையை பறைசாற்றுபவை.

இதுவரையில் ஆன 9 முக்கிய அவதாரங்களை நோக்கினால், இமையவர் எனப்படும் தேவர்கள் எவ்வளவு நற்பேறு பெற்றவர்கள் என்பது புரியும் :-) முதல் 5 அவதாரங்களில், வராகம் தவிர்த்து, மச்ச, கூர்ம, வாமன, நரசிம்ம அவதாரங்களின் நேரடிப்பலன் பெற்றவர்கள் தேவர்களே!

மச்சத்தில், உம்பர் உலகு (தேவலோகம்) நீர் அழிவிலிருந்து காக்கப்பட்டது, கூர்மத்தில் இமையவர்க்கு அமுதம் கிடைத்தது, வாமனத்திலும், நரசிம்மத்திலும், தேவர்களை அஞ்சி நடுங்க வைத்த, வலிமை மிக்க இரு அசுர மன்னர்களின் காலம் முடிவுக்கு வந்தது!

நாலே வரிகளில் பிரம்மாண்டச் சித்தரிப்பு என்பது ஆழ்வார்களுக்கு கை வந்த கலை! திருமங்கையாழ்வார் இங்கே, பேரண்டப் பிரளயத்தை விவரிக்கிறார். அந்த நெடு வெள்ளமானது, ஏழுலகங்களையும் ஆக்ரமித்தது, இமையவர் உலகமும் முழுதும் நீரில் மூழ்கியது, வழக்கம் போல, தேவர்கள் திருமாலிடம் ஓடி வந்து, தங்கள் வாழ்விடத்தை மீட்டுத்தந்து தங்களை ரட்சிக்குமாறு வேண்டி நின்றனர்.

மிகமிகப்பெரிய மீனாக திருமால் வடிவெடுத்து, வெள்ள நீரை கலக்கி இறைத்து, மலைகளை இடம் பெயர்த்து, தேவலோகத்திலிருந்து வெள்ளநீர் வடிந்து போகுமாறு அருளினார். அதே காலத்தில், நற்குணங்கள் கொண்ட சத்தியவிரதன் என்ற மன்னனையும், சப்தரிஷிகளையும், பூவுலகப் பிரளயத்தில் அழியப்போகிற, அசையும்/அசையா உயிர்களின் கருக்களையும், விதைகளையும், பரமனானவன் ஓர் ஓடத்தில் ஏற்றி, பிரளயம் முடியும் வரை, ஓடத்தைச் செலுத்திக் காப்பாற்றி கரை சேர்த்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

மேலே சொன்னது மச்சவாதரம் பகுதி-1. (உங்களுக்கு 2012 என்ற ஆங்கிலப்படம் நினைவுக்கு வர நிறைய வாய்ப்புள்ளது!) மச்சாவதாரத்தின் இரண்டாம் பகுதியில் தான் சோமகாசுரன் கைப்பற்றி கடலின் ஆழத்தில் ஒளித்து வைத்த நான்மறைகளை, அவனைப் போரில் வென்று திருமால் மீட்டு எடுத்து வந்ததாகவும் விஷ்ணு புராணம் கூறுகிறது.

நிலையிடம் எங்கும் இன்றி — இருப்பதற்கு ஒரு இடமும் இல்லாத வகையில்
நெடுவெள்ளம் — (பிரளய கால) பெரு வெள்ளமானது
உம்பர் வளநாடு மூட — இமையவரின் செழிப்பான உலகம் முழுவதையும் நிறைத்து விட
இமையோர் தலையிட — இமையவர் (பரம்பொருளான திருமாலின்) திருவடி பற்றி
மற்று எமக்கோர் — (உன்னை விடுத்து) எங்களுக்கு வேறொருவர்
சரணில்லை என்ன, — கதி / புகல் இல்லை என்று (வேண்டி நிற்க)
அரண் ஆவன் — (பரமனானவன் தேவர்களிடம், “நான் உங்களை) பாதுகாத்து அபயம் அளிக்கிறேன்
என்னும் அருளால், — என்று அருளி (பெருமீனாக உருவெடுத்து)

அலைகடல் நீர்க்குழம்ப — பேரலைகள் கொண்ட கடல் நீரானது, கலங்கிச் சுழலுமாறு செய்து
அகடு ஆட ஒடி, — தன் வயிற்றை அசைத்து, அலைகள் நாற்புறமும் சிதறும் வண்ணம் நீந்தி
அகல்வான் உரிஞ்ச, — அதனால், அகண்ட ஆகாயத்தில் (கடல்நீரை) உராய வைத்து
முதுகில் மலைகளை மீது கொண்டு — (தனது பிரம்மாண்ட) முதுகில் (இடம் பெயர்க்கவேண்டி) பெருமலைகளை ச் சுமந்து
வருமீனை மாலை — வருகின்ற மீன் அவதாரம் எடுத்த திருமாலை
மறவாது இறைஞ்சு என் மனனே — (ஒருபோதும்) மறக்காமல் திருவடி பணிந்து வணங்குவாயாக! என் நெஞ்சமே!

எ.அ.பாலா

anbudan BALA|எஅ.பாலா

I am a GCTian, thamiz Blogger since 2004. Interests: Cricket, Chess, Sujatha, J.Archer, DivyaPrabandham and of course political discourse :)