Update: #Demonitization Effect பிறகு இந்த கட்டுரைக்கு பல விளக்கங்கள் கிட்டின.

வினவு புகழ் தோழர் மருதையன் நான்கு பாகங்களாக பல கேள்விகளுக்கு பதில்கள் அளித்துள்ளார்.

தோழர் மருதையன் உரையின் நான்கு பாகங்களுக்கான இணைப்பு:

பாகம் ஒன்று https://youtu.be/C72dlY0wM3s
பாகம் இரண்டு https://youtu.be/6mKS4Yo1NlU
பாகம் மூன்று https://youtu.be/FGzNSRm_Mmw
பாகம் நான்கு https://youtu.be/hDyVEosnkKY

காசே இருக்கக்கூடாது…

லூசுத்தனமான தலைப்புதான் ஒத்துக்குறேன்.

காசு, பணம், துட்டு, மணி மணி…

டிஸ்கி 1: இந்த பதிவ எந்த மேற்கோளும் காட்டாம சொந்தமா எனக்கு என்னென்ன கேள்விகள் இருக்கோ, என் மனசுல என்ன தோணுதோ, அத அப்படியே உளறி கொட்டுறேன்.

டிஸ்கி 2: நான் அரசியல் பொருளாதாரம் படிக்கவும் இல்லை, அந்த துறைகளில் மேதையும் இல்லை, சில இடங்களில் அடிப்படைப் புரிதலும் இல்லை. எனவே இந்த புலம்பல் கட்டுரை மூலமாக நீங்கள் பெரிதாக எதையும் அறிந்துகொள்ளலாம் என எதிர்பார்த்து படிக்க ஆரம்பிக்க வேண்டாம். இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஒரு Draft Quality பதிப்பு மட்டுமே. தகவல்களை விடவும் கேள்விகளே அதிகம் இருக்கும். இதில் பல கேள்விகள் நீங்கள் இதற்கு முன் யோசித்திருக்கலாம், அந்த யோசனை உங்களுக்கு தோன்றாமலும் இருக்கலாம், அப்படி ஒரு பொருள்/நிகழ்வு/கூறு இருப்பதே இந்த பதிவைப் படித்த பின்புதான் நீங்கள் கேள்விப்படுவதாகக் கூட இருக்கலாம். இந்த பதிவின் தரமோ, தரவுகளோ மிகப்பெரிய தேடுதல் அல்லது ஆராய்ச்சியின் வாயிலாகக் கிடைக்கப்பெற்ற அடிப்படையில் எழுத்தப்பட்டதல்ல. மாறாக பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பக்கூடியதாகவும், யாரும் இணைய வெளியில் பரவலாக எழுதியிருக்காததாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம். இது யாராலும் படிக்கப்படாமலும் போகலாம், இந்த கருத்தாக்கங்கள் முற்றும் நடைமுறை சாத்தியமற்ற பினாத்தல்கலாகப் போகவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஒரு சாதாரணனின் அனுபவங்கள்/யோசனைகள்/கனவுகள்/கற்பனைகளின் தொகுப்பு என்றெண்ணி படிக்கவும்.

காசே இருக்கக்கூடாது

ஏன் இப்படி சொல்றேன்: வறுமையைப் போக்கணும்.

சரி, வறுமைன்னா என்ன?

காசு இல்லாத நிலைன்னு வச்சுக்கலாம்.

காசுன்னா என்ன?

அத கொடுத்தா பொருட்கள வாங்கலாம், சேவைகளைப் பெறலாம், தேவைகளைப் பூர்த்தி செய்துக்கலாம்.

காசு எப்ப இருந்து இருக்கு?

காசு இப்ப எப்படி இருக்கு?

சில்லறையா இருக்கு.. கரன்சியா இருக்கு.. காசோலையா இருக்கு.. வங்கில நம்பரா இருக்கு.. பார்டிசிபேட்டரி நோட்டா இருக்கு (Participatory Notes).

இதுக்கு முன்னாடி எப்படி இருந்தது?

சில்லறை காயினா இருந்துருக்கலாம், பண நோட்டா இருந்துருக்கலாம். பிரிட்டிஷ் காயின் படத்துல பார்த்துருக்கோம். நோட்டு பார்த்ததா எனக்கு நினைவில்ல. சரி அதுக்கு முன்னாடி இஸ்லாமிய ஆட்சியில எப்படி இருந்தது பணம்? அதற்கு முந்தைய இந்து ஆட்சியில.. அதுக்கும் முன்னாடி, பண்டமாற்று? கற்காலத்துல? உலகின் முதல் தொழில்?? வரலாறு சமூக அறிவியல் பாடங்கள்ல படிச்சது எதுவும் இப்ப மண்டைல இல்ல.

சரி, அது எப்படி வேணா இருந்துட்டு போகட்டும், இருந்திருக்கட்டும்.. அதுக்கு இப்ப ஏன்னா கேடு?

முறைப்படுத்தப்படாத பணம். கணக்கில் வராத பணம். கறுப்புப் பணம். அதான் பிரச்சனைன்னு எனக்கு தோணுது. அது பதுக்கப்படுவதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். தேவையற்ற வரிச்சுமை உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் மீது திணிக்கப்படுகிறது.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள கருப்புப்பணம் நூல். Daily Hunt Appஇல் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இந்த கட்டுரை எழுதி முடித்த பிறகு ஒரு புரிதலுக்காக வாங்கியது. ரூ.24/-

காசு எல்லா நாட்டுலையும் ஒரே மாதிரி இருக்கா? நம்ம ரூபாய் மதிப்பு என்ன? அதுக்கு நிகரான அமெரிக்க டாலர்னா என்ன? கத்தார் ரியால்னா என்ன? யுனைட்டட் அராப் திராம்னா என்ன? சிங்கப்பூர் டாலர் னா என்ன? ஜி டி பின்னா (GDP) என்ன? GSDP? வாங்கும் திறன் ன்னா என்ன? பிபிபி (PPP)ன்னா என்ன?

இன்ன தேதிக்கு (March 2016) ஒரு டாலர், அறுபத்து அஞ்சு ரூபாய்; ஒரு கத்தார் / சௌதி ரியால் சுமார் பதினெட்டு ரூபாய். எதுக்கு அர்த்தம் என்ன? எப்படி? கத்தார்ல நூறு கத்தாரி திராம்ஸ் சேர்ந்தா ஒரு கத்தாரி ரியால் கணக்கு. நம்மூருல நூறு பைசா சேர்ந்தா ஒரு ரூபாய் மாதிரி வச்சுக்கோங்க.

சோ, கத்தார் திராமும், துபாய் திராமும் ஒன்னு இல்ல. கத்தார் பொருளாதாரம், துபாய் பொருளாதாரத்த விட நூறு மடங்கு பெரியதா? வலிமையானதா? இல்ல. அது வெறும் சொல் தான். இடத்தைப் பொறுத்து திராம் என்ற சொல்லுக்கு மதிப்பும் பொருளும் மாறுபடும்.

இதே போல ரியாலுக்கும் எடுத்துக்காட்டு கூறலாம் கத்தாரி ரியாலுக்கும் ஓமானி ரியாலுக்கும் சவூதி ரியாலுக்கும் மதிப்பு வேறுபடும்.

ஒரு நாட்டின் பணத்தின் மதிப்பு எப்படி கணக்கு பண்ணப்படுது? நம்மள விட அமெரிக்க 65 மடங்கு பணக்கார நாடா? அங்க யாரும் பிச்சை எடுக்குறாங்களா? ஒரு டாலர் அறுபத்தைந்து ரூபாய்னா அதுக்கு அதுதான் அர்த்தமா? இது மாதிரி கேள்விகள் உங்களுக்கு எப்போதாவது எழுந்துள்ளனவா?

எது நம்ம ரூபாய் மதிப்ப தீர்மானிக்குது?

நான் கத்தார் வந்த புதுசுல 2014 ஜூன் மாசம் ஒரு கத்தார் ரியால் சுமார் பதினாறு ரூபாய் இருந்தது. ஐயாயிரம் காத்தாரி ரியால் சம்பளம். மாசாமாசம் நாலாயிரம் சேமிச்சு வீட்டுக்கு அனுப்பும்போது எக்ச்செஞ்சு ரேட்டு பாப்போம். ஒரு நாள் 16.03 இருக்கும்; ஒரு நாள் 16.95 இருக்கும்.

இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? நம்ம ரூபாய் மதிப்பு எத்தன அடிப்படையில் மாறுது?

எக்ச்செஞ்சு ரேட்டு கூடினா,, அதாவது ஒரு ரியாலுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பதினாறுன்னு இருந்த நல்லதா பதினெட்டுன்னு இருந்தா நல்லதா? ரொம்ப அடிப்படையா யோசிச்ச, போன மாசம் 4000 x 16.03=ரூ.64120 வீட்டுக்கு அனுப்பலாம். இந்த மாசம் 4000 x 16.95=ரூ.67800 வீட்டுக்கு அனுப்பலாம். அப்ப ரூபாய் வீழ்ச்சின்னு ஏன் சொல்றோம்?

பணத்தின் மதிப்பு குறைய குறைய கம்மாடிட்டி விலை உள்ளூர்ல கூடுதே. பெட்ரோல், கரி, எண்ணெய், அரிசி, பருப்பு, மளிகை சாமான், பஸ், கரண்டு, ரயிலு எல்லாம் விலை ஏறுதே என்?

வெள்ளிக்கிழமை நியூஸ்ல பணவீக்கம்ன்னு ஏதோ சொல்றாங்களே என்ன? இலுமினாட்டின்னா யாரு? அவங்கல்லாம் நிஜமா இருக்காங்களா? இன்ன தேதிக்கு நம்ம எத முக்கியமா தெரிஞ்சு வச்சுக்கணும்? இந்த உலக மொத்தத்தையும் சில நூறு பணக்கார குடும்பங்கள்தான் கட்டுப்படுத்துதுங்குராங்ளே அது உண்மையா?

அமெரிக்க கட்சிகள் டெமோக்ராட்ஸ், ரிபப்ளிகன்ஸ் என்ன வித்தியாசம்? இஸ்ரேல் பத்தி அவங்க ரெண்டு கட்சிக்கும் என்ன நிலைப்பாடு?

நம்மூர்ல காங்கிரஸ் பாலஸ்தீனத்துக்கும் பாஜக இஸ்ரேலுக்கும் சப்போர்ட் பண்ணுதா ஐநால? தமிழர் செத்தா ஏன் எவனும் குரல் குடுக்க மாற்றான்?

ஐநா போர்குற்ற விசாரணையை இலங்கையே நடத்தலாம் / வேறொரு நாடு நடத்தலாம் என்ற விவாதத்தில் பாகிஸ்தான், சீனா, சவூதி இலங்கைக்கு ஆதரவாகவும். அமேரிக்கா, இங்கிலாந்து வெளிநாட்டு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வாக்களித்தது. நடுவில் இருப்பது நாங்க எந்த பக்கமும் வரமாட்டோம்னு கைதூக்காம கமுக்கமா இருந்துக்கிட்ட நாடுகள். இந்தியாவும் இந்த கூட்டத்துலதான் இருக்கு.

தமிழ் மீனவர்கள் இலங்கை கடல் பாதுகாப்பு படையினரால் கைதுன்னு அப்பப்ப செய்தி வருதே. திடீர்னு ஒருநாள் தமிழக சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்கள் விடுவிப்புன்னு செய்தி வந்தது. அன்னக்கி தான் நாமளும் அவங்க ஆளுங்கள கைது பன்னுவோமான்னே எனக்கு தோணிச்சு. இந்திய இலங்கை பிரச்சனை முழுக்க முழுக்க ஒரு Geopolitical Conflict என்று சொல்றாங்களே அதைப் பத்தி நமக்கு தெரிஞ்சுக்கணும்னு அக்கறை இருக்கா? சிரியானா (Syriana) படம் பார்த்து இருக்கீங்களா? பாடி ஆப் லைஸ் (Body of Lies)? பிரான்ஸ், சார்லி ஹெப்டோ, இதுக்கெல்லாம் டிபி மாத்துற ஆப்ஷன் முகநூல்ல ஏன் வருது. இலங்கைல தமிழர் செத்தப்ப ஏன் வரல? அந்த செய்திகள் டிவில அதிகம் விவாதிக்கப்படலையே. சேனல் 4 காரன் சொல்லாட்டி பல விஷயம் நமக்கு தெரியாம போயிருக்கும்ல? சிரியா ல என்ன நடக்குது? மேற்கு வங்கத்துல? மணிப்பூர்ல, நாகாலாந்துல? இதெல்லாம் டைம்ஸ் நவ்ல காட்டுறது கம்மியா இருக்கே ஏன்? மாவோயிஸ்ட் னா யாரு? அவன் ஏன் நம்ம போலீச மிலிட்டரிய தாக்குறான்? ட்ராக் மாறுதா?

அமெரிக்காவைப் பொறுத்த வரை பணம்னா என்ன? அங்க இருக்குற பெடரல் ரிசர்வ் வங்கின்னா என்ன? பணம் அங்க எப்படி அச்சடிக்கப்படுது?

பணம் பொதுவா எவ்வளவு அச்சடிக்கலாம்? ரிசசன்னா என்ன? ஜெனெரேஷன் வொய் (Generation Y) ன்னா யாரு? பொருளாதார மந்த நிலை ஏன் வருது? நம்ம வேலைவாய்ப்ப அது ஏன் பாதிக்குது. நம்ம ஏன் வேலை பாக்குறோம்? கிரீஸ் நாட்டுக்கு என்ன ஆச்சு? அது ஏன் திவால் ஆச்சு?

சுவிஸ் வங்கின்னா என்ன? அது ஒரு கம்பெனியா? அல்லது பல வங்கிகள் கூட்டமைப்பா? அல்லது சிவிசர்லந்து ல இருக்குற எல்லா வங்கியும் சுவிஸ் வங்கியா? அதுல நாமெல்லாம் கணக்கு தொடங்க முடியுமா? அங்க பணத்தை சேமிக்கிறது இந்தி சட்டப்படி விரோதமா? நம்ம ஊரு பணக்காரங்க அரசியல் வாதிகள் எத்தன பேரு அங்க கணக்கு வச்சுருக்காங்க? அந்த லிஸ்ட்டுல ஒரு எச்.டி.எப்.சி வங்கி ஊழியர் கசிய விட்ட பட்டியல் இப்ப எங்க? ராம் ஜெத் மலானி, மோடி, ஆப் கி பார், ஜன் லோக் பால் இதெல்லாம் என்ன ஆச்சு? அந்த பட்டியல ஏன் இந்திய அரசு உடனே வெளியிடல? காங்கிரஸ் ஆட்சியில இருந்தப்ப உடனே வெளியிடாததுக்கு கண்டித்த பாஜக இப்ப அவங்க ஆட்சிக்கு வந்ததும் இந்த பொறுப்பில் பொறுப்பிலாமல் நடந்துக்கிட்டது ஏன்?

கொஞ்சம் மூச்சு விட்டுக்குவோம்.

ம்ம்ம்.. கண்டினியூ..

சூப்பர் ஸ்டார் நடிச்ச சிவாஜி படம் பார்த்திங்களா? கருப்பு பணம்னா என்ன? அது கருப்பா இருக்குமான்னு டிரைவர் முத்துக்காளை அப்பாவியா கேப்பாரே அது மாதிரி நம்ம மக்கள் பெரும்பாலும் இருக்காங்களே, அதுக்கு என்ன பண்றது? சீரியல் பாக்குறது நம்ம மடத்தனமா? இல்ல நம்ம சீரியல் பாக்க வைப்பது கூட ஒரு சதி அரசியலா?

கருப்பு பணம் எப்படி உருவாகுது? நம்ம பண்ற வேலைக்கோ, தரும் சேவைக்கோ வெகுமானமா சம்பளம் வாங்குறோம். அதுக்கு ஏன் வரி கட்டுறோம். மூணு ஸ்லாப் வரி இருக்கு. யாரெல்லாம் பத்து சதவீதம் வரி கட்டுறோம். யாரெல்லாம் முப்பது சதவீதம் வரி கட்டுறோம்? அமெரிக்க மாகாணம் ஒவ்வொன்னுக்கும் வெவ்வேறு சதவீதத்துல வரி இருக்கே தெரியுமா?

Personal (Individual) Income Tax Percentage Rate by different states in USA

தனிநபர் வருமான வரியையே நீக்கிடனும்; அது நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் சுமை; அதுக்கு பதிலா பெரு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வரி விதிச்சாலே நமது திட்டங்கள் தன்னிறைவு அடையும்னு சுப்பிரமணியன் சுவாமி தேர்தலுக்கு முன்னாடியும், மோடி பிரதமரா பாஜக தலைமையில் ஆட்சி அமைத்த கொஞ்ச காலம் சொல்லிட்டு இருந்தாரே அந்த மேட்டர் இப்ப என்ன ஆச்சு?

இப்ப இந்த வருட பட்ஜெட்ல் மக்கள் மீது கூட வரியும், கார்ப்பரேட் மேல கம்மி வரியும் மாறிடுச்சே எப்படி?

கடந்த ஐந்தாண்டுகள்ள ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் Rs.16,00,00,00,00,000 கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி செயப்பப்பட்டிருக்கு தெரியுமா?

‪#‎ItMatters‬
INR 1.6 Lakh Cr. of ‘Corporate Debt’ has been written off in the past few years by the government! Here’s what India could have achieved with this much of money!

இதே மாதிரி பெரிய நம்பர எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? வேற எங்க நம்ம இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஏலம் அ. ராசா நடத்தின 2G ஊழல் கிட்டத்தட்ட இதே அளவு நம்பர் தான்.

Subject to debate/refute…

நல்லா கவனிங்க . அது வேற ஊழல்(Subject to debate/refute)…. முந்தைய பாராவின் தொடக்கத்தில் நான் சொன்னது பெரிய நிறுவனங்களுக்கு அரசு செய்த கடன் தள்ளுபடி. இது புது மேட்டர். யாராவது இத சத்தமா பேசினாங்களா? பத்திரிகை தலைப்பு செய்தியா வந்ததா இது போல? ஏன் வரல? ஊடகங்களை கார்ப்பரேட் கண்ட்ரோல் பண்ணுதா? தனது எஜமானர்களுக்கு எதிரா அவர்கள் குரல் கொடுப்பார்களா? பத்திரிகையில் டிவியில் காட்டப்படுவது அனைத்தும் உண்மைதானா? அல்லது காட்டப்படுவது மட்டுமே உண்மையா? ஒருபகுதி உண்மை மட்டுமே காட்டப்படுகிறதா? ஒரு ஊடகம் கூட பெரிசா இந்த புது கடன் தள்ளுபடி மேட்டர்ல விவாதம் வைச்சதா தெரியலையே?

Main Stream Media தவிர்க்க முடியாததா? வினவு தளத்துல வரதெல்லாம் நம்பலாமா? மிகைப்படுத்தப்பட்டதா? சவுக்கு, C.T.செல்வம்? மார்கண்டேய கட்ஜூ? யார் நல்லவன்? யார் கேட்டவன்? இதுக்கு நடுவுல எவ்வளவோ விஷயம் நம்மள எப்பவும் பிசியாவே வச்சிருக்குல்ல?

ஜல்லிக்காடு, நியூட்ரினோ, மீத்தேன், மாட்டிறைச்சி, மதமாற்றம், சமஸ்கிருதம், லலித் மோடி, பங்கஜா முண்டே, அர்னாப் கோஸ்வாமி, கிரிக்கெட்டு, சல்மான்கான், சன்னி லியோன், அஜித் விஜய், வாழும் கலை, தேசபக்தி, ஜே என் யூ , ரோகித் வேமுலா, பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்டம், தமிழச்சி, சீமான், நில அபகரிப்பு, விவசாயி தற்கொலை, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், புதுப்புது அர்த்தங்கள், ரங்கராஜ் பாண்டே, எஸ் வி எஸ் சித்த யோகா மருத்துவ கல்லூரி மாணவிகள் மரணம், ஸ்ரீ சாய்ராம் கல்லூரி மாணவர் தற்கொலை, சென்னை வெள்ளம், சித்தார்த் ஆர்.ஜே.பாலாஜி வீ ட்ரஸ்ட் நன்கொடை, தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க, புலிடா, வேதாளம்டா, சென்னை சூப்பர் கிங்க்ஸ்டா, விராட் கோலிடா, தோனிடா, அடுத்த மோடோரோலா போன் என்ன ஸ்பெசிபிகேஷன்,அம்மா திட்டங்கள், நூத்தி பத்து விதி, ஸ்டிக்கர்,#JayaFails, #DMKFails, நமக்கு நாமே, மக்கள் நலக்கூட்டணி, செம்மரக்கடத்தல், இருபது தமிழர் சுட்டுக்கொலை, நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழர்கள், மீனவர் பிரச்சனை, கூடங்குளம், உதயகுமார், வைகோ, சிகிரெட் கம்பெனி,புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, லிங்கா, கத்தி, காத்துல டூஜி ஊழல், நிலக்கரி ஊழல், சொத்துக்குவிப்பு, அழுகை பதவியேற்பு, யார் தமிழர் மரபுப் பரிசோதனை மீம்கள், தங்க மீன்கள், விஜய் அவார்டுஸ், தனி ஒருவன் ஜெயம் ரவி, சுபா திரைக்கதை, நீயா நானா, ஜோடி, சரவணன் மீனாட்சி, கல்யாணம் டூ காதல், கனெக்ஷன், அது இது எது, தெய்வ மகள், கேம் ஆப் த்ரோன்ஸ், அல்பிவரங்கா,டுவிட்டர், பேஸ்புக், ஓட்டுக்கு ஐநூறு ரூபான்னா ஒரு நாளுக்கு இருபத்தி ஏழு பைசா பிச்சைக்கு சமம் லாஜிக்குகள், இணையப் போராளிகள், இணைய அண்ணன்கள், fake ஐடிக்கள், நான் கருப்பா இருக்கனே எனக்கு லைக் கிடைக்குமான்னு ஒரு பொண்ணு போட்டாவ முகநூல் க்ரூப் ல போடுறது, நான் ஐ லவ் யூ சொன்னா என்ன பண்ணு வீங்கன்னு போடுறது, எனக்கு எத்தன லைக் பிரண்ட்ச் னு போட்டு அந்த பொண்ண கேவலமா திட்டி அசிங்கப்படுத்துற கமெண்ட் பண்ணும் கண்ணியவான்கள், அதப்பாத்து சந்தோசம் அடையுற க்ரூப் அட்மின் உத்தம புத்திரன்கள், இந்த வீடியோ வாட்சப்ல வேணும் னா உங்க நம்பர கமெண்ட்ல டைப் பண்ணுங்க மொக்கை பதிவுகள்,பீப் பாடலுக்கு ஆதரவு, எதிர்ப்பு, டிஜிட்டல் இந்தியா, பேஸ்புக் ப்ரீ பேசிக்ஸ்..

ஷப்பா..

இத்தன இன்பர்மேஷன் ஓவர்லோடு இருக்கப்ப எப்பயோ சொன்ன வாக்குறுதி, ஒவ்வொரு நபர் கணக்குலயும் பதினஞ்சு லட்சம் , தனி நபர் வருமான வரி ஒழிப்பு போன்ற ஸ்பீச்சுக்களைஎல்லாம் நம்பி ஒருத்தன் ஓட்டு போடமுடியுமா? அத நிறைவேத்துவாங்கன்னு நம்பத்தான் முடியுமா?

(சதுரங்க வேட்டை லாஜிக்: ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும்; வாங்கின கடனுக்கு கந்து வட்டி, வங்கி EMI கட்டுற நடுத்தர மக்களுக்கு இந்த சலுகைகளெல்லாம் பதஞ்சலி ஹனி காதுல ஊத்துன மாதிரி இருந்துருக்கும்ல.. )

(எவ்வளவு இளிச்ச வாயன்ல நாம? ஒருஜினல் லெதர் பெல்ட்டு சார்,. நூறு ரூபாய்தான் சார்னு சொல்லி, சிகிரட் லைட்டரால அந்த பெல்ட்ட பத்த வைக்க ட்ரை பண்ணி, பெல்ட்ட முறுக்கி, வளைச்சு நம்மள வாங்க வைப்பானே ரயில்வே ஸ்டேசன் ல பெல்ட் கடை போட்டுருப்பவன்.. அது மாதிரி ஈசியா ஏமாந்துட்டோம்ல?)

பதினஞ்சு லட்சம் ஒவ்வொருத்தனுக்கும் வந்திருந்தா என்னவாயிருக்கும், எல்லாரும் லேண்டு வாங்க ஆசைப்படுவான், கார் வாங்க, கடனை அடைக்க, நிலம் வச்சுருக்கவன் வீடு கட்ட ஆசைப்படுவான். சிமெண்டு, விலைவாசி, அசையா சொத்துக்கள் விலை பல மடங்கு உயர்ந்திருக்கும். பொருளாதார சமநிலை சீற்குலைஞ்சிருக்கும், சப்ளை டிமாண்டு தியரி. சிம்பிள். நாமதான் கொஞ்சம் கூட யோசிக்கிறதே இல்லையே..

2022 குள்ள இந்தியாவில் அனைவருக்கும் சொந்த வீடுன்னு புதுசா ஒரு அறிவிப்பு கொண்டுவந்து இருக்காங்களே. இதுவாவது சாத்தியமா. அல்லது இதுவும் ஏமாற்று வேலையா? அப்படியே சாத்தியப்படுத்த துவங்கினாலும் எத்தனை பேருக்கு சாத்தியப்படும்? அதை எந்த கம்பெனி டெண்டர் எடுக்கும்? அதுல எவ்வளவு நிதி ஒதுக்கும்? அதுல எவ்வளவு கமிஷன் அடிக்கும்? இந்த திட்டத்தை அரசே, வேலையில்லாத பொறியியல் பட்டதாரிகளை வைத்து ஒரு நிறுவனம் துவங்கி பெரிய அளவில் செய்ய முடியாதா? தனியாருக்கு தான் எல்லா புராஜக்டையும் கொடுக்கனுமா? அரசு செஞ்சா தரமாவே இருக்காதுன்னு நம்மள யோசிக்க வச்சது யாரு? இதையும் யோசனை பண்ணுங்க.

சரி போனது போகட்டும்.. இப்ப கருப்பு பணத்த ஒழிக்க என்ன வழி?

கட்டுரையின் மெயின் மேட்டர் அதான்..

நான் என்ன யோசனை வச்சிருக்கேன்னா.. சில்லற, பண நோட்டுக்களே இருக்கக் கூடாது? எல்லாம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, செக், மணி ஆர்டர், போஸ்ட் ஆபீஸ் செல்லான், பிக்சட் டெபாசிட், ரேகரிங் டெபாசிட் மாதிரி எல்லா பணத்துக்கும் கணக்கு இருக்கணும்.

நல்லா கவனிங்க..

கருப்பு பணம் உருவாவதையும், பரவுவதையும் சிஸ்டமேடிக்கா தடுக்கணும். டிசைன்லையே ஓட்டை இலாத ஒரு சிஸ்டம் கொண்டு வரணும்.

எடுத்த எடுப்புலயே கிளுக்குன்னு நமட்டு சிரிப்பு சிரிக்காதீங்கப்பா..

நான் சொல்ற டெக்னாலஜி கொஞ்சம் கூட கொறைய இருக்கலாம்.. இப்ப இருக்குற தொழில்நுட்பத்துல சாத்தியமில்லாம இருக்கலாம். செக்யூரிட்டி லூப் ஹோல்ஸ் இருக்கலாம். அதெயெல்லாம் சரி பண்ணனும். காத்துல மின் காந்த அலைகளை பரவ விட்டு செல்போன்ல உலகத்துல எங்கேயோ ஒரு மூலைல இருக்க ஆளுகூட பேச முடியும்னு நூறு வருஷத்துக்கு முன்னாடி யோசிச்சு பார்த்துருப்போமா? மாட்டோம்ல. அதுமாதிரி தான் இதுவும். தேவையின் அடிப்படையில்தான் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. வானிலிருந்து எந்த புது தொழில்நுட்பமும் அருளப்படுவதில்லை..

ஆனால் இது சின்ன மட்டத்தில் நடக்கும் லஞ்சம் போன்ற முறைகேடுகளை மட்டுமே கட்டுப்படுத்தும். பெரிய மட்டங்களில் நடைபெறும் அந்நிய செலாவணி, வெளிநாட்டு முதலீடு, FEMA FERA போன்ற குற்றங்களை தடுக்க, தடுக்க மனமுள்ள அரசு, வியாபாரிகளோடு, முதலாளிகளோடு அல்லாது மக்களோடு கூட்டு வைத்துள்ள அரசு, பெரு முதலாளிகளிடமிருந்து வரியை முறையாக வாங்க வேண்டும் என்கிற எண்ணமுள்ள அரசு ஆட்சியில் இருக்கும் பொது இருக்கும் சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப் படுத்தினாலே திரைமறைவு வணிக தவறுகள் களையப்படும்.

50000 ரூபாய்க்கு மேலுள்ள பணமாற்றுக்கு கண்டிப்பா PAN CARD கேட்கப்படுதே, பின்ன ஏன் இந்த சின்ன சின்ன பரிவர்த்தனைகளையும் இவ்வளவு சிக்கல் ஆக்கணும்? பெரிய அளவுலதானே. ஊழல்லாம் நடக்குதுன்னு கேட்டா, அதற்கான காரணம். பணத்தை ஈசியா ஒன்னு சேர்க்கவும் பரவலாக்கவும் முடியும். தேர்தல் சமயங்கள்ல தலைக்கு 1000 ரூபா. ஓட்டுக்கு பணம் குடுக்கம்போது எவ்வளவு ஈசியா இருக்கு? பெரிய பணத்த சின்ன சின்ன தேனாமிநேஷன் ல மாத்த முடியுதுல்ல. ஆனா எந்த ஒரு சின்ன பைசாவுக்கும் அது எங்கெல்லாம் போயிட்டு வந்திருக்குன்னு ட்ராக் பண்ண முடிஞ்சா சின்ன தவறு முதல் பெரிய தவறு வரை தடுக்கலாம்ல.

இது எனக்குப் புரிந்ததில் இருந்து எழுதுகிறேன்.

மேலும் இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் பொது, அரைவேக்காட்டு தனத்தை சட்டு குறைக்கவேண்டி சில நூல்களை வாங்கினேன். கிழக்கு பதிப்பகத்தில் வெளியாகியுள்ள கறுப்புப் பணம்(கட்டுரையின் துவக்கத்தில் கூறியது), விகடன் புக்ஸ் இல் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய ஒரு நூலும் வாங்கினேன். இது தவிர கரண்ட் டெபிசிட், பிசகல் டெபிசிட், பட்ஜெட், காலாண்டு, நிதி ஒதுக்கீடு, மத்திய மாநில அரசுகளின். பொறுப்பு பங்கீடு என்னென்ன, கண்கரன்ட் லிஸ்ட் என்றால் என்ன, என்னென்ன வரி ஒரு குடிமகன் மீது விதிக்கப்படுகிறது, என்னென்ன வரி ஒரு நிறுவனத்தின் மீது வைக்கப்படுகிரியது, Special Economic Zone என்றால் என்ன்ன, அதற்கான சலுகைகள் என்ன போன்றவை பற்றி தேடிப் படிக்க முடிவு செய்திருக்கிறேன்.

படிப்போம்.

நிறைய படிப்போம்.

அறிந்து கொள்வோம்.

குழப்பத்தில் இருந்தே தெளிவு பிறக்கட்டும்.

Back to main story!

கான்செப்ட் இதுதான். எல்லா பணத்துக்கும் டிஜிட்டல் கணக்கு இருக்கணும். எல்லா போலீஸ் ரெக்கார்டு, முதல் தகவல் அறிக்கை, அரசு ஆவணங்கள் எல்லாமே டிஜிட்டல் மயமா இருக்கணும்..

பாரின்ல இருக்க உன் நண்பன் அண்ணா யூனிவர்சிட்டில படுச்சிருக்கானா? அவன் டிகிரி சர்டிபிகேட்ட வாங்கி பாரு.

நம்ம டிகிரி சான்றிதள இந்தியன் எம்பசி கத்தார் எம்பசி பண்ணி வச்சுருக்குரத பாக்கணுமே.. நாசம் பண்ணி வச்சுருகானுங்க. ஐரோப்பா, அமெரிக்க நாடுகள்ல இருந்து வர்ற ஆளுங்களுக்கெல்லாம் இந்த கொடுமை நடக்குறது இல்ல. வீடு சுவத்துல பெருமையா ஃபிரேம் போட்டு அழகா கசங்காம வைக்க வேண்டிய ஒரு ஆவணம். இல்ல அப்பப்ப எடுத்து பயன்படுத்திட்டு பத்திரமா எடுத்து கொப்பகத்துக்குள்ள வைக்க வேண்டிய ஆவணம். இத இப்படி கசக்கி, மடக்கி, நூத்தியெட்டு ஸ்டாம்ப் குத்தி இப்படி நாசம் பண்ணனுமா? இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் போன்ற மூன்றாம் உலக நாடுகள் ல இருந்து வர பல மக்கள் போலி சான்றிதல்கள் குடுத்து வேலை வாங்க முயற்சி எடுத்து பிடிபட்டு அப்செட் ஆனா இந்த அரபு நாடுகள் ஒருஜினல் சர்டிபிகேட்லையே அட்டேஸ்டேஷன் பண்ணினாதான் ஏத்துக்கிட்டு ரெசிடென்ட் பெர்மிட் குடுக்குறாங்க.

Degree Certificate mutilated with Embassy Seals

இதுக்கு என்ன வழி? அதான் டிஜிட்டல் இந்தியா. நமக்குன்னு ஒரு ஜிபி கோப்புகளை சேமித்து வைத்துக்கொள்ள டிஜிட்டல் லாக்கர் உள்ளது தெரியுமா? அதில் நமது ஆவணங்கள், கல்வி சான்றிதல்கள், வேலை சான்றிதல்கள், சாதி சான்றிதல்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை சேமித்துக் கொள்ளலாம். இவற்றில் எது தொலைந்தாலும், மாற்று ஆவணம் குறிப்பிட்ட தொகை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனும் வசதி இருந்தால் இன்னும் அருமை. அப்படி இருக்கானு தெரியல. உங்கள் ஆதார் எண்ணுடன் இந்த அனைத்து தரவுகளும் பினைக்கப்பட்டிருப்பின், நிர்வாகம் மிக எளிது.

சமீபத்தில ஆதரவா நடித்த கணிதன் படம் பார்த்தேன்.

<<<ஸ்பாயிலர் அலெர்ட்>>>

SPOILER STARTS

படம் கொஞ்சம் மொக்கை தான். ஒரு நல்ல ஒன்லைன, சொதப்பலான திரைக்கதை, மிகைப்படுத்தப்பட்ட வில்லனின் கொடூரக் கொலைகள், சர்வசாதாரணமாக புழங்கும் துப்பாக்கி வன்முறை போன்று யதார்த்தத்தில் பார்த்திராத செயல்கள் கெடுத்துவிட்டன. துப்பாக்கிலாம் டீல் பண்ற அளவுக்கு போலி சர்டிபிகேட் அடிக்கிறது அவ்வளவு லாபம் தருதா என்ன?

படத்தோட ஒன்லைன் இதான். ஒரு நபர் பேர்ல அவங்க பேர், யூனிவர்சிட்டி, காலேஜ் தகவல்களை வைத்து வேலைவாய்ப்புக்கான கன்சல்டன்சி நடத்தும் நிறுவனம் ஒன்று போலி சர்டிபிகேட்டுகளை அச்சு அசலாக உண்மையான சர்பிடிகேட் மாதிரியே அடித்து தரும். அந்த சர்டிபிகேட்ட வச்சு, அரசுப்பணி, அதிகாரம், கல்விக்கடன், தொழில் கடன் போன்ற பல மோசடிகளில் படத்தின் வில்லன் க்ரூப் ஈடுபடுகிறது. ஹீரோ அவர்களை டேக்கன், துப்பாக்கி ஸ்டைல்ல தன் புத்திக்கூர்மை, இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம் திறமைகளை வைத்து பூண்டோடு அழிப்பதே கதை.

SPOILER ENDS

இந்த நிலையில் நமது டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் எப்படி சிறப்பாக செயல்பட வாயிப்புகள் உள்ளன என பார்க்கலாம். சமீபத்தில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள ஆதார் போன்ற தேசிய அடையாள அட்டையுடன் ஒவ்வொரு நபரின் பொது தகவல்களை சேர்க்கவேண்டும். பிறந்த தேதி, பிறப்பிடம், பெற்றோர் தகவல்கள், வீட்டு முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி வரை தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

இதனோடு இனிவரும் காலங்களில், ஒருவர் மாணவனாக பள்ளியில் படித்து தேறி, வெளிவரும்போது அவரது எட்டாவது, பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி சான்றிதல்கள், மதிப்பெண் பட்டியலும் பிணைக்கப்பட வேண்டும். அதே போன்று பட்டய, அல்லது பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு, முனைவர் பட்டம் இன்னும் என்னவெல்லாம் அவரது கல்வித் தகுதி உள்ளனவோ, வேலைவாய்ப்புத் தகுதிகள் உள்ளனவோ, அவர் எந்தந்த இடத்தில் வாழ்ந்துள்ளார், என்னென்ன நிறுவனங்களில் பணிபுர்ந்துள்ளார் போன்ற அனைத்து விவரங்களும் இணைக்கப்படலாம்.

இதே மாதிரி Paperless Governance சாத்தியம் என்றால், பேப்பர்லஸ் காயின்லஸ், கரென்சி லெஸ் எகானமியும் சாத்தியம் தானே? சாத்தியம் இல்லை என்பது சாக்கு மட்டுமே. இதனால் ஏற்படும் நன்மைகளையும், ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகளையும் தராசில் வைத்து ஆய்ந்தால், கண்டிப்பாக பெரும்பான்மையான மக்கள், இதை ஏற்றுக்கொள்வர் என்பது எனது எண்ணம்.

மீண்டும் ஐ ரிபீட். தேவையே கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றது. Necessity is the mother of Invention!

சரி பணத்தையெல்லாம் டிஜிட்டல் ஆக்கிட்டா என்ன ஆகும்?

வேறு குறுக்கு வழிகள் கண்டு பிடிக்காத வரை.. புதுசா ஓட்டையுள்ள ஒரு சட்டம் இயற்றாதவரை ஒரு தீர்வு காண முடியும்.

சின்ன லெவல்ல ஆரமிப்போம். கீழ் காணப்போவது எல்லாம் எனக்கு தோணின யூஸ் கேசஸ் தான். உங்க கற்பனை வளத்தையும் கமெண்ட்ஸ்சில் தெரியப்படுத்துங்க.

  1. கடையில பொருள் எல்லாம் காசு கொடுத்து வாங்க முடியாது. Debit/Credit கார்டு கொடுத்து தான் வாங்க முடியும். இல்ல கைரேகை சென்சார் ல வச்சு Apple Pay, Google Waller மாதிரி / NFC Technology.
  2. எல்லா பணமுமே கணக்கில் வரும். மொத்தம் எவ்வளவு பணம் உள்ளது என்பது தெரிய வரும். அதிகம் வைத்திருப்பவரிடம் தக்க வரி வசூலிக்கப்படும்.
  3. நேர்மையற்ற எந்த ஒரு பரிவர்த்தனையும் நடைபெறாது. உதாரணம், லஞ்சம், ஊழல். இந்த முறை இருந்தால் இப்போது அரசு வேலை வாய்ப்புகள்ள பணி நியமனத்தில் நடைபெறும் ஊழல் இல்லாம இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிங்க. TNPSC, TET, SCC, Group I, II எத்தனை தேர்வுகளை நம்ம முயற்சியே எடுக்காம கைவிட்டிருப்போம். என்ன படிச்சு என்ன தேர்வு எழுதி என்னப்பா, லஞ்சம் வாங்கிட்டு, இல்ல MLA, MP சிபாரிசு ல போறவங்களுக்கு தான் போஸ்டிங் குடுப்பாங்கன்னு நம்ம முயற்சி எடுக்காம பல அரசு பணி தேர்வுகளை ஏமாற்றத்தோட விட்டிருப்போம்.திறமை இருந்தும், வாய்ப்பு இருந்தும் எவ்வளவு இழந்திருப்போம். (சிவில் இன்ஜினியரின் நாலாம் ஆண்டு படித்தப்ப எங்க கிளாஸ்ல க்ரூப் டிபேட் வச்சப்ப , அரசுப்பணி, லஞ்சம் குடுத்தாதான் கிடைக்கும், அப்ப நீங்க லஞ்சம் குடுத்து போக தயாரா, இல்ல நேர்மையா இருப்பீங்களான்னு கேட்டதுக்கு , அறுபது பேர் இருந்த வகுப்புல, பாதிக்கும் கம்மியானவங்க தான் நேர்மையா இருப்போம், லஞ்சம் குடுக்க மாட்டோம்னு கை தூக்கினாங்க; பேச்சுக்கு யோக்கியனா இல்லாம யதார்த்தத்துல என்ன இருக்கோ அத அப்படியே ஒத்துக்கிட்ட மீதி கை தூக்காதவங்க நேர்மையும் எனக்கு பிடிச்சது ! அவங்கள சொல்லியும் குத்தமில்ல, எப்படியும் காசு குடுத்தாதான் வேலை கிடைக்கும்னா, நான் புத்திசாலியா, பொழைக்க தெரிஞ்சவனா அந்த வேலைய வாங்கிட்டு போறேன் என்பதே கை தூக்காதவங்க லாஜிக்கா இருந்தது! இத வெளிப்படையா அவங்களே ஒத்துகிட்டாங்க!)
  4. விபசாரம், போதைப்பொருள், கடத்தல், உரிமம் அற்ற ஆயுதங்கள் விற்பனை தடுக்கப்படும். இதனால் பெரும் குற்றங்கள் குறையும். (விபசாரம் ஒழுக்கம் சார்ந்த ஒரு பிரச்சனையாக இல்லையென்றால், அதுவும் கணக்கில் வரும் ஒரு பரிவர்த்தனையே. Monthly Statement லிஸ்ட் இல் அது ஒரு Item ஆக வருவதை விரும்பாதவர்கள்,என்னைப் பொருத்தமட்டில் அந்த செயலை செய்யாமல் இருப்பதே நலம். இந்த இடத்தில் தனியுரிமை அதாவது Privacy என்பது ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடும். எனது உழைப்பில் சம்பாதிக்கும் பணத்தை நான் எந்த வழியிலும் செலவிட உரிமை எனக்கு உள்ளது. நான் விபசாரம் செய்வேன், போதைப்பொருள் வாங்கி பயன்படுத்துவேன், என்ன எழவோ செய்வேன். மை மணி, மை அன்ட்ராயர். அதை அரசோ, மற்ற நிதி நிறுவனமோ நோட்டம் விடுவதில் எனக்கு உடன்பாடில்லை என மக்களில் ஒரு பகுதியினர் மாற்றுக்கருத்து இடக்கூடும். இது ஒரு பிரிவுதானே தவிர இந்த ஒற்றை Controversial காரணத்திற்காக இந்த திட்டத்தை கைவிட வேண்டாம் என்பது எனது கருத்து. எப்படி செய்தால் டெமாக்ரசியில் பெரும்பான்மை சமூகம் ஏற்றுக்கொள்ளுமோ அப்படி செய்து இதை நிறைவேற்றலாம்.)
  5. ஹெல்மட் போடாமல் செல்லும் நபரிடம் போக்குவரத்துக் காவலர் கைநீட்ட மாட்டார். கார்டு மிஷின் நீட்டி, ஸ்வைப் பண்ணிட்டு போங்க தம்பி என்பார். சோ தண்டம் நூறு ரூபாயோ, ஐநூறு ரூபாயோ, ஈராயிரமோ, அதை மொத்தமாக அரசுக்கு கட்ட வேண்டுமே தவிர, இடையில் யாரும் பங்கு போட முடியாது)
  6. கரன்சியாக வைத்திருந்தால் பணம் தொலைவது, தவற விடுவது, திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, இயற்கை சீற்றங்களில் கட்டுக்கட்டாக வீட்டிற்குள் வைத்து அலமாரியில் பாதுகாத்த பணம், வெள்ளம், நிலநடுக்கம் ஆகிய காரணங்களால் ஒன்றுமில்லாமல் போவது போன்ற சிக்கல்கள் உள்ளன. டிஜிட்டல் பணத்தில் இந்த சிக்கல்கள் இல்லை. கிரெடிட் கார்ட திருட மாட்டாங்களான்னு அறிவுத்தனமா கேட்டா? இப்பயும் எல்லாரும் ATM Card, Debit Card, Credit Card வச்சுருக்காங்களே, அதையெல்லாம் எப்படி பத்திரமாக வச்சிருக்காங்களோ அதே போல டிஜிட்டல் பணம் நடைமுறையில் இருக்கும் காலத்திலும் வைத்துக்கொள்ள வேண்டும். தவிர எனக்கு தெரிந்து எல்லா Debit, Credit Cardகளிலும் இப்போது 2 Step Verificaiton (Verified by Visa, MasterCard 3D Secure Code, SMS One Time Passcode) கண்டிப்பாக உள்ளது.

லஞ்சம், ஊழலை ஒழிக்க எக்ஸ்ட்ரீம் மெஷர்ஸ் ஒன்றும் எடுக்க வேண்டியதில்லை. தனியுடைமையே பேராசையை தூண்டுகிறது. எனவே அனைவரும் தனிச்சொத்து, குடும்ப சொத்து என வைத்துக்கொள்ளாமல் பொதுவுடைமை வழியைப் பின்பற்றலாம் போன்ற தீர்வுகள் வேண்டியதில்லை. இப்போது இருக்கும் சந்தைப் பொருளாதாரத்தையே ஊழலற்ற, முறைகேடற்ற வர்த்தகம் செய்வதன் மூலமாக அனைவரின் வாழ்வையும் எளிதாக்கலாம். எந்த தொழில் எடுத்தாலும் அதில் ஏதோ ஒரு கட்டத்தில் ஊழல் நடந்தே ஆக வேண்டும் என்னும் இழி நிலை களையப்பட வேண்டும் என்றால் இது போன்ற அமைப்பு ரீதியான மாற்றங்கள் நடைபெற்றாக வேண்டும்.

பாதகங்கள்/நடைமுறை சிக்கல்கள்:

  1. இன்றைய முதலாளித்துவ மறு காலனி ஆதிக்க பொருள் நுகர்வு சமுதாயத்தில் (வினவு தளத்தைப் பார்த்து இதன் பொருள்களை அறியவும்), பெரும் தொழில்கள் அனைத்திலும் கறுப்புப் பணம் அல்லது கணக்கில் வராத கள்ள சந்தை ஒன்று திரை மறைவில் நடக்கிறது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க சில Industry கள் உள்ளன. உதாரணத்திற்கு கட்டுமானத்துறை. இப்போதுள்ள சட்டங்கள் மிக எளிதாக கருப்பை வெளுப்பாக்கி தொழில்களில் ஈடுபடுத்த வழி புரிகிறது. கருப்புப்பணம் தடை செய்யப்பட்டால் அதை முதலீடாகக் கொண்டு தொழில் நடத்திவரும் பெரும் பணக்கார முதலாளிகள் நட்டமடைவர். எனவே அவர்கள் அனைவரும் ஒன்றாய் இணைந்து, அதிகாரத்தில் இருப்போருடன் நட்பாய்ப் பழகி, லாபி செய்து, அது போன்ற சட்டங்கள் வர விடாமல் முதலில் செய்துவிடுவார். எனவே இது போன்ற ஒரு Radical Idea முளையிலேயே கிள்ளி எறியப்படும்.
One Simple Idea!

இப்படி ஒரு முறை உள்ளது அது சாத்தியப்படுத்தக்கூடிய முறையாக உள்ளது. அது நடந்தால் அனைவருக்கும் நல்லதே நடக்கும் என்று பெருவாரியான மக்களுக்கு புரியவைத்து மக்கள் ஆதரவோடு இந்த சட்டத்தை அமுல்படுத்தினால் ஒழிய இது சாத்தியமில்லை. ஆனால் பொது மக்கள் என்று தனியாக ஒரு கூடம் இல்லை. மக்களில் மேல் தட்டு பிரிவினரான பெரும் தொழில் செய்பவர், அவர் உறவினர், நண்பர், தெரிந்தவர்களும் மக்கள் என்ற கூட்டத்தில் அடக்கம். அந்த Inner Circle மக்கள் என்ன செய்வர்? இந்த திட்டம் செல்லாது.. இதனால் பாதகங்கள் அதிகம் என்று இதனுடைய குறைகளை/இதனால் ஏற்படும் அசௌகரியங்களை மட்டுமே ஊதிப்பெருக்கிக்காட்டி, மக்களை manipulate செய்து, அவர்களை அந்த திட்டத்தையே வெறுக்கும்படி செய்து விடுவர். ஆதார் அட்டையை முதலில் எதிர்த்த பாஜக இப்போது ஆதரிப்பதை கவனித்தீரா? இப்போது ஐம்பதாயிரம் ரூபாய்க்குமேல் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் பாண் கார்டு வேண்டும் என்று சட்டம் போட்டால் நகைக் கடை உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு எதிராக போராடுவர். நடுத்தர மக்களுமே எவ்வளவு கருப்பு பணத்தை கையாளுகிறோம்? அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது, சீட்டுப்பணம் போடுவது போன்றவை மூலம் கிடைக்கும் வருமானம், அரசுக்கு எப்போதுமே தெரியப்படுத்தப்படுகிறதா?பல நடைமுறை சிக்கல்கள் கொண்டதே இது போன்ற டிஜிட்டல் எகானமி ஐடியாக்கள். எனவே அந்த திட்டத்தை கைவிட சொல்லி அதிகாரத்தில் உள்ளோருக்கு அழுத்தம் தருவர். ஒரு அரசின் வீரம் என்பது எதிரி என்று கற்பிக்கப்பட்ட அண்டை நாட்டை பகைப்பதையோ, உம் என்று சொன்னால் முப்பது நொடிகளில் அந்த எதிரி நாடே இல்லாமல் செய்து விடுவோம் என்று நம் நாட்டின் படைத் தளபதி சொல்வதிலோ இல்லை. நாட்டின் மக்களுக்கு, பெருவாரியான மக்களுக்கு, வறுமையற்ற நல்வாழ்வு தருவதிலேயே உள்ளது. ஒரு பிரதமரின் ஆளுமைப் பண்பு எதிரி நாட்டுத் தலைவருடன் சொர்போரில் வெல்வதில் இல்லை.

2. நாட்டின் உண்மையான நலனுக்காக, சில தொழில் அதிபர்களை வருத்தப்பட செய்தாயினும் உறுதியாக நின்று மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ளது. ஆனால் இதெல்லாம் மக்களுக்கு புரியக்கூடாது என்பதற்காக நாளும் ஒரு பிரச்சனை “உருவாக்கப்படுகின்றது". அல்லது தனிநபர் வழிபாடு, சினிமா மோகம், மது, சூது, கிரிக்கெட் போன்ற விளையாட்டு மோகம் போன்று கேளிக்கைகள் மூலமாக மக்களை சிந்திக்க விடாமல் செய்வது. அல்லது நம் நாட்டுக்கே உரித்தான மத பிரச்சனை, சாதிப் பிரச்சனை, மொழிப்பிரச்சனை போன்ற உக்திகளைப் பயன்படுத்துவது. மக்களும் அந்த பிரச்சனைகளில் கவனம் சிதறி, உண்மையில் எதை செய்தால் நாட்டுக்கு நல்லதோ அது என்னவென்று கூட தெரியாமல், நாட்டுப்பண் பாடுவதும், தேசியக்கொடிக்கு சல்யூட் அடிப்பதையும், பாரத் மாதா கி ஜே என்றன போன்ற முழக்கங்கள் இடுதலையுமே தேசப்பற்றின் வெளிப்பாடு என்று “யோசிக்க வைக்கப்பட்டுள்ளனர்”. உண்மையில் நாம் ஏன் ஏழையாக இருக்கிறோம் என்ற உண்மையான காரணம் தெரிய வைக்க ஒரு ஆள் இருந்து, அதில் இருந்து மீள வழியும் சொன்னால் மக்கள் விழிப்பு பெறுவார்.

3. People will adapt and evolve. New ways to be corrupt will be found by the evil. The bad people of the society are well coordinated and focused. The daily problems, felt by a helpless common man are not at all their issues. They live in a different secure world.

தீமைதான் வெல்லும்!

பணத்த்தால் லஞ்சம் தவிர்க்கப்பட்டால், தங்கத்தால், வைரத்தால், பிளாட்டினத்தாள் ஊழல் நடக்கலாம். குறிப்பிட்ட வேலை வாங்க வேண்டும் என்றால் முன்பு பதினைந்து இலட்சம் தருவது நார்ம்ஸ் என்றால் அதை பவுனாக தந்து வேலை செய்து முடிக்கப்படலாம். ஆனால் அந்த பவுனையும் வாங்க உன் PAN CARD, அல்லது ஆதார் அட்டையும் வேண்டும் என்று சட்டம் இருந்தால், எதற்காக இவர் அதிக அளவு தங்கம் வாங்குகிறார் என்று ஒரு கேள்வி வரும். பணத்திற்கு இருக்கும் பல நன்மைகள் தங்கத்திற்கு இல்லைதான். ஒரு ரூபாய், இரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் போன்ற எளிய Denominations மற்ற பண்ட மாற்ற பொருட்கள் எதற்கும் இல்லை. எனவேதான் பணப் பரிவர்த்தனை இவ்வளவு எளிதானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கத்தை லஞ்சமாக கொடுப்பதென்றால் போக்குவரத்து காவலருக்கு எத்தனை மில்லிகிராம் சுரண்டிக் கொடுக்க முடியும்? அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் பதவிக்கு ஆறு கோடி லஞ்சம் தர வேண்டும் என்றால் எத்தனை கிலோ தங்கமாக தர முடியும்?

அல்லது எத்தனை பேரை வைத்து ஒரு பவுன் ஒரு பவுனாக வாங்க சொல்லி, திரட்டித் தர முடியும்? இப்போது நாம் பயன்படுத்தும் Money என்ற Commodity எவ்வளவு எளிதானதாக இருக்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

நீ விரும்பும் சினிமா நடிகர் படம் எத்தனை நாள் ஓடியது, நூறு கோடி வசூல் செய்ய எத்தனை நாள்தான் ஆனது, உனக்கு பிடித்த ஐபிஎல் கிரிக்கெட் அணி எவ்வளவு ரன்கள் குவித்தது, ICC கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா எத்தனாவது இடம் போன்ற விஷயங்களில் உன் கவனம் சிதறுமேயானால், உன் வாழ்க்கையில் துடிப்பான வருடங்கள் முக்கிய பிரச்சனைகளில் கவனம் அற்று, விருப்பம் அற்று போகுமானால்,

இளைஞனே! நீ ஒரு மோசமான காலத்தில், மோசமான மக்களிடையே, மோசமான தலைவர்களால் ஆளப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று புரிந்துகொள்!

Image 1
Image 2

If you care about the former more and the later less, you’re living in a bad society in a bad time under bad rulers!

வாயை மூடி வாழவும்!

உங்கள் பர்சை இலகுவாக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசதியான அனுபவமாக இந்த பணப் பரிவர்த்தனையை ஏற்படுத்தியுள்ளன இந்த வணிக அமைப்புகள். நினைத்த நேரத்தில் லட்சக்கணக்கில் பணத்தை ஒரு நாட்டின் வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு நாட்டிற்கு அனுப்ப முடிகிறது. ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் ஒட்டு போட்டும் உரிமையை தேர்தலில் தர இன்னமும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கு மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும்.

ஆன்லைன் ஒட்டு முறை அறிமுகப்படுத்த சொன்னால் ஆயிரம் நொட்டை நொள்ளை சொல்லத் தெரியும் நமது அரசியல் வாதிகளுக்கு. ஒவ்வொரு தேர்தலிலும் 70–75 விழுக்காடு வாக்குப்பதிவை மட்டுமே வைத்து ஆட்சிகள் அமைக்கப்படுகின்றன. வாக்கு அளிப்பது கூகிள் ப்ளேயில் ஒரு ஆப் வாங்குவது போல எளிதானதாக ஆக்க முடியாதா என்ன? உடனே ஹேக்கர்களை காரணம் சொல்வர்.

Hacking, in Tamil Cinema…

ஹேக்கர் நினைத்தால் செட்டிலை சேனல் வரைக்கும் கூட ஒரு லேப்டாப் வைத்துக்கொண்டு ஹேக் செய்து விட முடியும் என்று நம்மவர்களை நம்ப வைக்க முடியும் ஒரு சினிமாவாலோ, குறும்படத்தாலோ! Adobe Photoshop வைத்தே பல வரலாற்றுப் படங்கள் உருவாக்கப் படுகின்றன என்பது கூட அறியாத மக்கள் இரண்டடுக்கு, மூன்றடுக்கு Conspiracy Theoryகளையா பகுத்தறியப் போகிறார்கள்?

சிறு குழந்தை ஒன்றிற்கு ஏபி நெகடிவ் குருதி தேவை, கேன்சர் என்று கூறி, இதை பகிர்ந்தால் செல்பேசி நெட்வொர்க் கம்பெனி ஒவ்வொரு SMSக்கும் பத்து பைசா தரும் என்று , Nokia 1100 காலத்தில் இருந்தே இந்தியாவிற்கு வந்த காலத்தில் இருந்து பரவிக்கொண்டிருக்கும் வதந்திகளை உறுதிப்படுத்தாமல் இன்று வரை வாட்சப்பில் பகிர்ந்து கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்களைக் கொண்ட இளைய பாரதம் நாம். எந்த நம்பிக்கையில் Flipkartல் Debit Card/Debit Cardடை கொடுத்து பொருட்கள் வாங்குகிறோம்? எந்த நம்பிக்கையில் ATMல் பணம் எடுக்கிறோம். அடிப்படை தீவிரவாதிகள் நினைத்தால் விமானங்களைக் கூட, TVகூட கட்டுப்படுத்த முடியும் என்றால், ஒரு ஏடிஎம் மெசினை தொலைவில் இருந்து கட்டுப்படுத்த முடியாதா? ஆனால் நீ நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளாய். இணைய வழி நீ நடத்தும் பணப்பட்டுவாடா பாதுகாப்பானது என்று ஊக்கப்படுத்தப்படுகிறாய். வங்கதேசத்தில் 81மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஹெக்கர்களால் களவாடப்பட்டது (Bangladesh bank governor resigns after $81m hack)

Indian banking on alert after $81 million stolen from Bangladesh’s central bank

Read more at:
http://economictimes.indiatimes.com/articleshow/51623675.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

என்பது போன்ற செய்திகள் மருந்து போல அவ்வப்போது கேட்க நேரிடுகிறது. ஒரு வங்கியே இணையத்தால் கொள்ளை போகும் நிலை இருப்பினும், நீ இணையவழி பொருட்களை வாங்குவது குறித்து பயமுறுத்தப்படுவதில்லை. மாறாக ஊக்குவிக்கவே படுகிறாய். இது இவ்வாறு இருக்க, இணைய வழி ஒட்டு போடுதல் என்ற கருப்பொருள் விவாதம் வரும்போ மட்டும் ஹேக்கர் பயம் தொற்றிக்கொள்ளும் உன்னை. வாக்கு செலுத்தும் மின்னணு இயந்திரம் வந்தால் எந்த பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட கட்சிக்கே வாக்கு விழும்படி கரெப்ட் செய்ய முடிகிறது என்று நம்ப வைக்க முடிகிறது உன்னை.

கிராவிட்டி படம் எடுத்த செலவை விட குறைவான செலவில் செயற்கைக்கோள் அனுப்பும் ஒரு நாடால் ஒரு இரண்டடிக்கு இரண்டடி கருவியை ஒழுங்காக, பாதுகாப்பாக வடிவமைக்க இயலாதா?

இது நீயாக சிந்தித்ததல்ல. நீ எப்படி சிந்திக்க வேண்டும் என்றும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறாய். உனது எண்ணங்கள் நீ எண்ணியவை அல்ல. உன்னால் என்ன வைக்கப்பட்டவை.

நான் சொன்னதெல்லாம் யோசிங்க..

இப்ப இந்த சில்லறை நோட்டுக்களற்ற டிஜிட்டல் பணம் தொடர்பான சில யூஸ் கேசஸ் பத்தி கற்பனை பண்ணலாம்

சில்லறை, நோட்டுக்கள் இல்லாத நிலையில் கீழ்க்கண்ட பணப்பரிவர்தனைகள் எப்படி நடைபெறும்?

  1. காலைல உங்க வீட்டுல சைக்கிள்ல வந்து ஒருத்தர் பால் ஊத்துறாரா? மாசக்கணக்கா இல்லாம ஒவ்வொரு நாளும் சில்லறையா கையில குடுக்குறீங்களா? அப்ப எப்படி அவருக்கு காசு குடுப்பீங்க?
சில்லறை தினமும் வாங்காமல் இவர் கையில கார்டு ஸ்வைப் பண்ற மிஷின் வச்சிக்கணும்?

2. காலைல பெட்டிக்கடையில போய் டீத்தூளும், ஷாம்புவும் வாங்கும் பழக்கம் உண்டா உங்க வீட்ல யாருக்கும்? மொத்தமா அஞ்சு ரூபாய்க்கு நடக்குற அந்த பர்ச்செசுக்கு கார்டுல ஸ்வைப் பண்ணனுமா? யோசிக்கும்போதே வித்யாசமா இருக்குல்ல? கரண்ட் கூட இலாத குக்கிராமங்கள்ள, இன்டர்னட் சிக்னல் அவ்வளவா ஸ்ட்ராங்கா இல்லாத ஊருல கார்டு மெஷின் எப்படி ஒழுங்கா வேலை செய்யும்?

அக்கா ஒரு பட்டர் பிஸ்கட், ஒரு சிசர், ஒரு கொய்யாக்க மிட்டாய் தாங்க?.. கார்டுல ஸ்வைப் பண்ணுங்க தம்பி!

3. வேலைக்கு போறதுக்கு முன்னாடி கோவிலுக்கு போவிங்களா, உண்டியல்ல பணம் போடணுமா? சில்லற இல்ல, நோட்டும் இல்ல, செக்கும் போடறது கஷ்டம், அர்ச்சகர் தட்டுலயும் போட முடியாது. ஒரு கையில் பக்தாள் தலைவில் வைத்தேடுக்க கிரீடமும், மற்றோர் கையில் விபூதி, துளசித்தட்டும் இருக்கையில் தனியே கார்டு மெஷினும் வைத்துக்கொள்ள எங்கு இடம் இருக்கும்? இதற்கு ஒரு எளிய முறை, கார்டு மூலம் ஸ்வைப் பண்ணாமல், தனியாக அதற்கென்று உள்ள டிஜிட்டல் உண்டியல் (!) மூலமாக வரிசையில் நின்றோ, தனித்தனியாகவோ பணம் செலுத்தலாம்.

4. பேருந்தில் போயாக வேண்டும் என்றால் என்ன செய்ய? வெளி நாடுகளில் இருப்பது போன்று ஒரே கதவு கொண்ட பேருந்து. ஏறும் போதே ஸ்மார்ட் கார்டு போன்ற ஒரு டிக்கட்டை கதவின் அருகில் உள்ள மெஷினில் தீர்த்து விட்டு/தொட்டு விட்டு செல்ல வேண்டும். பேருந்து தவிர மற்ற போக்குவரத்து முறைகளுக்கு என்ன செய்ய. ரயிலுக்கும், ஆட்டோவுக்கும், டிராமுக்கும் ஒவ்வொரு கார்டு வைத்துக்கொள்வது சிரமம் என்றால், அணைத்து முறைகளுக்கும் பயன்படுத்தும்படி ஒரு டிராவல் கார்டு முறையைக் கொண்டு வரலாம். மாதத்தில் ஒருமுறை அதற்கென இருக்கும் சர்வீஸ் செண்டரிலோ (டெபிட், கிரெடிட் கார்டு வழியாகத்த்தான் ), ஆன்லைனிலோ ரீசார்ச் செய்து கொள்ளும்படி முறையை ஏற்படுத்தலாம்.

கத்தாரில் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டு. கண்டக்டர் பயனிகளுன் நடத்துனர் மட்டுமே அன்றி டிக்கட் வாங்கியாச்சா என தொண்டை கிழிய காத்த வேண்டியதில்லை.

4. அயர்ன் கடைக்காரன், தள்ளுவண்டி காய்கறி விற்பவர், குல்பி ஐஸ் விற்பவர், இலந்தப் பழம் விற்கும் அம்மா, கீரைக் கட்டு விற்கும் பாட்டி, தெருவில் சிறு தையல் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் நெசவாளர் மக்கள், சாக்கடையில் அடைப்பு எடுக்கவரும் ஆட்கள், தனியாருக்குத் துப்புரவுத் தொழில் செய்பவர்கள், சிறு சிறு வேலைகள் செய்யும் கூலிகள், அமைப்பு சாரா, மாத சம்பளமாக இல்லாமல் தினக்கூலி, அல்லது வேலைக்கு அற்ப அவ்வப்போது கூலி பெரும் முறைபடுத்தப்படாத பணிகள் செய்யும் மக்கள் இவர்கள் பணி அனைத்தும் முறைப்படுத்தப் பட வேண்டும் என்பதே என் அவா!

இதற்கு தீர்வு, இந்த நிலை மாற்றப் பட வேண்டும் என்பதே. அனைத்து கிராமங்களிலும், இணையம், மின்சாரம் கட்டாயம் இருக்க வேண்டும். எளிய முறையில் கைபேசி மூலமாக/அல்லது வேறொரு கருவி மூலமாக பணம் செலுத்துவது எளிதாக்கப்பட வேண்டும். இது கட்டாயம் நிறைய மேனக்கேடல்களை உள்ளடக்கியதே.

புதிதாக ஒரு தொழில்நுட்பம் வரும்போது எதிர்க்கப்படவே செய்யும். அனால் அதில் உள்ள நன்மைகள் புரியும்போது அனைவராலும் ஏற்கப்படும். உதாரணமாக விசிடி யில் இருந்து டிவிடி க்கு மக்கள் எப்படி மாறினார்கள் என்று பார்ப்போம். 700 MB டேட்டாவை கொள்ளும் திறன் உள்ள சிடியை விட 4.7 GB கொள்திறன் கொண்ட டிவிடியால் அதிக பலன் இருக்கு என புரிந்த பொது, “இல்லை இல்லை நான் விசிடி பிளேயர் பத்தாயிரம் கொடுத்து வாங்கி இருக்கிறேன் அதை மட்டுமே அது ஓட்டை உடைசல் ஆகும் வரை பயப்படுத்துவேன், டிவிடிக்கு மாறமாட்டேன்” என யாரும் சொல்ல வில்லையே! அதே போல இந்த டிஜிட்டல் பணத்தை முறையாக இம்ப்ளிமன்ட் சித்தாள் வரும் நன்மைகளை விளக்கி ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அது மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒரு தலைமை ஆட்சியில் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது மறுக்க இயலாத உண்மை!

கண்ணியமான வருமானம் இல்லாதவர்கள் நிலை மாற்றப்பட வேண்டும். மலம் அள்ளுபவர்கள்(மேலும் வாசிக்க)(இந்த முறை களையப்பட வேண்டும் என்பது என் தீராத வருத்தம்), குப்பை பொறுக்குபவர்கள், பிச்சைக்காரார்கள்(?!) இவர்கள் எப்படி தங்களுக்கான பணத்தைப் பெறுவார்கள்?ஆதரவற்றோர், இரயிலில் பிச்சை எடுப்போர், திருநங்கைகள், போதைப் பொருள் விற்பவர்கள், அனாதைகள், பிள்ளையை வைத்து பேருந்து நிலையத்தில் பிச்சை எடுப்போர் இல்லாத ஒரு தேசமாக இந்தியா உருமாற வேண்டும். அந்த நிலை வரும்போது பெருமையாக நெஞ்சை நிமிர்த்தி பாரத் மாதா கி ஜே என்று நாம் அனைவரும் சொல்லலாம்!

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.