ஊடக அறிக்கை:
21.02.2017

Garikaalan
Feb 23, 2017 · 7 min read
TNA Parliamentarian who took part in the meeting briefed government ministers on the issue of Disappeared Persons who ended their fast unto death after assurances.

பெறுநர்:
ஆசிரியர்கள்,
(பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்கள்)
மற்றும் சமுகவலைத்தள பதிவர்கள்

திரு.சுமந்திரன்: அரச அதிகார மையத்தின் கோடரிக்காம்பு

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் பிரதிநிதிகள், அரச தரப்பினருடன் 09.02.2017 வியாழக்கிழமை அன்று அலரிமாளிகையில் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில், இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன், அங்கு நடந்த உண்மைச்சம்பவம் எதுவோ? பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாகி குழப்பத்தில் முடிவடைந்தமைக்கான காரணம் என்னவோ? அவற்றை மறைத்து, புனைக்கதைகளையும் திரிபுபடுத்திய கருத்துகளையும் ஊடகங்களுக்கு கூறிவருகின்றார்.

திரு.சுமந்திரனின் இத்தகைய புனைக்கதைகளையே, மயக்கமாகவும் பூடகமாகவும் ஊடகங்களும் வெளியிட்டு வருவதால், ‘மெய்நிலைவரத்தை தமிழ்மொழி பேசும் மக்களுக்கு வெளிப்படுத்தும் விளக்கச்செய்தியாகவும், சுமந்திரனுக்கு எமது எதிர்வினையாகவும்’ இந்த ஊடக அறிக்கையை வெளியிடுகின்றோம். ‘சுமந்திரனால் குற்றம் சாட்டப்பட்ட தரப்பும், சிறீலங்கா அரசால் அநீதி இழைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களும்’ ஆகிய எமது நீதிக்குரலுக்கு, சுமந்திரனின் புனைக்கதைகளுக்கு வாய்ப்பளித்த ஊடகங்கள் அதே சமவாய்ப்பை (தணிக்கைசெய்யாது) அளித்து, ‘ஊடக அறம்தக நடக்கக்கடவது’ என்றும் வேண்டுகின்றோம்.

அரச பிரதிநிதிகளாக சமுகமளித்திருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு:
உண்ணாவிரதப் போராட்டத்தின் நான்காம் நாள் 26.01.2017 வியாழக்கிழமை அன்று அமைச்சர் ருவான் விஜேவர்தன, வவுனியாவுக்கு நேரில் வருகைதந்து, எம்மோடு நடத்திய கலந்துரையாடலின் போது 16 பெயர் கொண்ட குழுவோடு அரச தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார். ஆயினும், எமது குழுவின் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார், யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.வி.பி.மங்களராஜா அடிகளார், சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், சங்கத்தின் 8 மாவட்டத்தலைவிகள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுகள் உட்பட 30 பேர் கலந்துகொள்வார்கள் என்று, அமைச்சர் ருவானுக்கு 01.02.2017 புதன்கிழமை அன்றே அறிவித்திருந்தோம்.

இதன்பிரகாரம் 09.02.2017 வியாழக்கிழமை அன்று, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி, உடல்பரிசோதனைகளை முடித்துக்கொண்டு காலை 11.00 மணிக்கு அலரிமாளிகைக்குள் பிரவேசிக்கின்றோம். அங்கு ஏலவே இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சாள்ஸ் நிமலநாதன், ரெலோ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சமுகமளித்திருந்தனர். இவர்கள் எமது குழுவைக்கண்டதும், ஏதோ பயங்கரவாத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்களை பார்ப்பது போலவும், தீண்டத்தகாத சமுகம் ஒன்றைக்காண்பது போலவும் நடந்துகொண்டனர். ஒப்புக்குத்தானும், ‘வணக்கம், உள்ளே வாங்கோ’ என்று கூறவில்லை. சிறு புன்னகையைக்கூட காட்டவில்லை. மாறாக முகத்தை திருப்பிக்கொண்டனர்.

சில நிமிடங்களுக்கு பின்னர், பாதுகாப்புத்துறை பிரதி அமைச்சர் ருவான் விஜேவர்தன, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸே, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் உள்ளே பிரவேசித்தனர். அப்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரும், எழுந்து கைலாகு கொடுத்து சிரித்தவாறு அமைச்சர்களை வரவேற்றனர்.

‘பேச்சுவார்த்தையில் இந்த மூவரும் கலந்துகொள்வர்’ எனும் தகவல், எங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறியத்தரப்பட்டிருக்கவில்லை. குறித்த மூவரையும் நமது கண்களால் அங்கு நேரில் கண்ட பின்னரே, நம்மால் அதை ஊகித்துக்கொள்ளவும் முடிந்தது. பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தர வருகை தந்ததும், அமைச்சர் ருவான் தனது தொடக்க உரையில் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி வரவேற்று உரையாற்றினார்.

பதிலுக்கு எமது குழுவின் சார்பாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் அவர்களும், (ஆங்கில மொழியில்) எல்லோருக்கும் வணக்கம் சொல்லி வரவேற்று உரையாற்றிவிட்டு, ‘குறித்த பேச்சுவார்த்தை அரசுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நேரடி பேச்சுவார்த்தை என்பதால், இங்கு சமுகமளித்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களை வெளியேறிச்செல்லுமாறு அவர்களிடம் மிகவும் பணிவாக கேட்டுக்கொள்வதாக’ தெரிவித்தார். எமது குழுவினால் மிகவும் மரியாதை நிமித்தமாக (ப்ளீஸ் பண்ணி) விடுக்கப்பட்ட இந்தக்கோரிக்கை தொடர்பில், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மூவரும் எவ்வித சலனமும் அற்று இருந்தனர். கண்டுகொள்ளாத அமைச்சர் ருவானும், பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதிலேயே முனைப்புக்காட்டினார்.

ருவானை இடைமறித்த நாம், ‘பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்னர், இங்கு அழையாமல் மூன்றாம் தரப்பாக புகுந்துள்ள சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிமலநாதன் எம்.பிக்கள் மூவரையும் வெளியேற்றவும்.’ என்று வலியுறுத்தினோம்.

அதற்கு ருவான், ‘இல்லை இல்லை… அவர்களுக்கு நாங்கள் தான் அழைப்பு விடுத்து வரவழைத்தோம்.’ என்றார். (அப்போதுதான் குறித்த அமைச்சர்களோடு அரச தரப்பு பிரதிநிதிகளாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்களும் கலந்துகொண்டுள்ளமையை எம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது.)

‘எங்கள் தரப்பிலிருந்து நோக்கும்போது இவர்கள் அழையாமல் புகுந்தவர்கள். உங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால், இந்த பேச்சுவார்த்தையில் நீங்கள் வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ளவில்லை என்று நாங்கள் எடுத்துக்கொள்வோம். அப்படியென்றால், இவர்களின் வருகை தொடர்பில் எங்களுக்கு ஏன் நீங்கள் ஏலவே தகவல் தெரியப்படுத்தவில்லை.’ என்று ருவானிடம் மறுகேள்வி எழுப்பினோம். (தாங்கள் வவுனியாவில் ஒப்பமிட்டு தந்துள்ள கடிதத்தில் இப்படி ஒரு விடையம் குறிப்பிடப்படவில்லையே என்று கூறி அந்த கடிதத்தையும் காட்டினோம்.)

‘ஆமாம், உங்கள் வாதம் நியாயம்தான். திடீரென்று எடுத்த அவசர முடிவு என்பதால் தகவல் தர முடியாமல் போய்விட்டது. அது தவறுதான். இந்தப்பிரச்சினைக்கு (காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை) இவர்களையும் வைத்துக்கொண்டு தான் பேசி தீர்வு காண முடியும்.’ என்றார் ருவான்.

‘கடந்த ஏழு வருடங்களாக இந்த விடையங்கள் தொடர்பாக பேசி முடிவு காணுமாறு அரசியல் அதிகாரத்தை நாங்கள் (தமிழ் மக்கள்) தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தோம். இந்த ஏழு வருடத்தில் நீங்கள் (இருதரப்பும்) சாதித்தது தான் என்ன? உருப்படியாக என்ன காரியங்கள் தான் நடந்திருக்கு? உங்களுடைய அரசியல் அணுகுமுறையால் நாங்கள் நொந்து வெறுப்பும் சலிப்பும் வேதனையும் அடைந்து வீதிக்கு வந்துவிட்டோம். உயிரை பணயம் வைத்துப்போராடி செத்துப்பிழைத்து இன்று இந்த பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறோம். ஏழு வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களாகிய எங்களுக்கு (சிவில் சமுகத்தினருக்கு) கிடைத்துள்ள அரிய வாய்ப்பை சரிவர பயன்படுத்த விரும்புகின்றோம். தயவுசெய்து இவர்களை வெளியேற்றுங்கள்.’ என்று ருவானின் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்தோம்.

கூட்டமைப்புக்காக இரந்து பரிந்து பேசிய அரச அமைச்சர்கள்:

‘இல்லை, இந்த விடையங்கள் தொடர்பாக இவர்கள் (த.தே.கூட்டமைப்பு) பல தடவைகள் எங்களை (அரச தரப்பை) நேரில் சந்தித்தும், தொலைபேசியிலும் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தற்போதும் இவர்கள் அக்கறையோடு தொடர்ந்தும் செயல்பட்டு வருகின்றார்கள். உங்களுக்காக (தமிழ் மக்களுக்காக) பல தடவைகள் இவர்கள் பாராளுமன்றத்துக்குள் குரல் கொடுத்திருக்கிறார்கள். பிரேரணைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்னர் கூட சபையை ஒத்திவைத்தார்கள். நீங்கள் மட்டுமல்ல, வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள மக்கள் இவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே இவர்கள் உங்களின் பிரதிநிதிகள். அவர்களை இப்படி நீங்கள் நிராகரிப்பதும், அவமானப்படுத்துவதும், ஒதுக்கி வைப்பதும் சரியல்ல. இந்தப்பேச்சுவார்த்தையில் இவர்களும் பங்கேற்பது தான் பொருத்தமானதாக இருக்கும். இவர்களையும் வைத்துக்கொண்டுதான் தீர்வைக்காண முடியும். இப்படியிருக்கும் போது இவர்களை வெளியேற்றுமாறு நீங்கள் கூறுவது ஏன்?’ என்று அமைச்சர் சாகல ரட்நாயக்க கேட்டார்.

‘நீங்கள் சொல்கிறீர்கள் இவர்கள் (த.தே.கூட்டமைப்பு) உங்களின் பிரதிநிதிகள் என்று. அதுதானே நாங்களும் தெளிவாக சொல்லிவிட்டோம், இவர்களில் நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம் என்று. காணாமல் ஆக்கப்பட்டோர் — அரசியல் கைதிகள் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாகவும், சிவில் சமுக வெளியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் நாங்களும், இவர்களும் (த.தே.கூட்டமைப்பு) முன்வைக்கின்ற கோரிக்கைகள் பரிந்துரைகளுக்கு இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் உண்டு. நாங்கள் சமஸ்டி என்றால் இவர்கள் ஒன்றுபட்ட இலங்கை என்கிறார்கள். நாங்கள் சர்வதேச விசாரணை என்றால் இவர்கள் உள்ளக விசாரணை என்கிறார்கள். நாங்கள் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு என்றால் இவர்கள் புனர்வாழ்வு என்கிறார்கள். நாங்கள் தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து இராணுவ வெளியேற்றம் என்றால் இவர்கள் படைக்குறைப்பு என்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட அடிப்படை முரண்பாடுகளை கொண்டிருக்கும் இவர்களையும் வைத்துக்கொண்டு எப்படி பேசுவது? தயவுசெய்து வெளியேற்றுங்கள்.’ என்று வலியுறுத்தினோம்.

அதற்கு சாகல ரட்நாயக்க, ‘நீங்கள் எடுத்ததும் முதலாவதாக இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்து, எங்களை பெரிய சங்கடத்துக்குள் தள்ளிவிட்டீர்கள். உங்களிடம் ப்ளீஸ் பண்ணி கேட்கிறோம். இந்த கோரிக்கையை வாபஸ் பெறுங்கள்.’ என்று கெஞ்சல் ஸ்தாயியில் கேட்டார்.

‘நீங்கள் அவர்களோடு பேச வேண்டும் என்றால், பிறிதொரு சந்திப்பை ஏற்படுத்தி பேசிக்கொள்ளுங்கள். இது எங்களுக்கான வாய்ப்பும் காலமும். எனவே இதை நாங்கள் பயன்படுத்த விரும்புகின்றோம். சொன்னதையே மறுபடியும் மறுபடியும் சொல்கிறோம். தயவுசெய்து வெளியேற்றுங்கள். இவர்களை வெளியேற்றும் வரைக்கும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க விடப்போவதில்லை.’ என்று காரசாரமாக கூறிவிட்டோம்.

அணு குண்டு உற்பத்தியில் இலங்கை! கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம்:

இதன்போது குறுக்கிட்ட பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தர, ‘இப்படி நீங்கள் சொல்லக்கூடாது. நீங்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தபோது சம்பந்தன் ஐயா என்னை நேரில்கண்டு சந்தித்து, நீங்கள் இந்தப்பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவை எடுக்காவிட்டால் தானும் உண்ணாவிரதத்தில் இருக்கப்போவதாக கூறி விடாப்பிடியாக இருந்தார். நாங்கள் தான், இல்ல ஐயா… பேசி சுமுகமாக முடிவு காணலாம் என்று கூறி, அவரது முடிவை மாற்ற வைத்தோம். அவர் தனது முதுமை மற்றும் நோயைப்பாராமல் உங்களுக்காக இந்த கடினமான முடிவை எடுத்திருந்தார்.’ என்று தெரிவித்தார். (பொலிஸ்மா அதிபரின் பேச்சைக்கேட்டதும், உலக நாடுகளுக்கு தெரியாமல் இலங்கையும் மறைமுகமாக அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு அணு வல்லரசு ஆக முயற்சித்துக்கொண்டிருக்கும் இரகசியத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.)

பொலிஸ்மா அதிபரின் இந்தப்பேச்சுக்கு, ‘நாங்கள் புத்திர சோகத்தோடும் நெஞ்சமெல்லாம் வலியோடும் இங்கு வந்துள்ளோம். நீங்க வேற… சும்மா காமடி பண்ணாதீங்க சேர்.’ என்று எமது குழுவிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர் ஏளனச்சிரிப்போடு பதில் கூறினார்.

இதன்போது அமைச்சர் ருவான், (தனது முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு) ‘இதுதான் உங்கள் முடிவா?’ என்று கேட்டார்.

‘ஆமாம். நாங்கள் வவுனியாவில் சாகக்கிடக்கும் போது, உவங்கள் ஏது? என்னது? என்று எட்டிக்கூட பார்க்கவரவில்லை. எங்களை சாகவிட்டவங்கள். இப்ப என்னத்துக்காம் கோர்ட் சூட்டை மினுக்கிக்கொண்டு உதுக்குள்ள வந்திருக்கிறாங்கள்?’ என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு தாயார் கேட்டார். ‘உள்ளதுக்கே சிறைச்சாலைகள் எல்லாம் நிறைஞ்சு வழியுது. இதுவேற போதாதென்று கிளைமோர் எம்.பி, அலரிமாளிகைக்கு கிளைமோர் குண்டு வைக்க வந்தவர்கள் என்று சொல்லி எங்களை சிறையில பிடிச்சுப்போட்டாலும் போட்டுவிடுவார். தயவுசெய்து எங்கட பாதுகாப்புக்காக வெளியேற்றுங்கள்.’ என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இன்னுமொரு தாயார் ரொம்பவும் சலித்துக்கொண்டு கூறினார்.

‘ஒன்று அவர்களோடு பேசுங்கள். இல்லை எங்களோடு பேசுங்கள். அவர்களுடன் தான் பேசப்போகின்றீர்கள் என்றால் பேசுங்கள். நாங்கள் வெளியேறிச்செல்கின்றோம்.’ என்று கூறி, எமது முடிவில் நாங்கள் உறுதியாக இருந்துவிட்டோம்.

(மேலே குறித்த உரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, சுமந்திரன் எம்.பியை பார்த்து ‘வாங்கோ வெளியேறி போவோம்’ என்று கை சைகையால் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு சுமந்திரன் எம்.பி, ‘இல்லை இல்லை… பொறும் நான் பார்த்துக்கொள்ளுறன்’ என்றவாறான தோரணையில், செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை அமரும்படி கை சைகை காட்டிக்கொண்டிருந்தார். அமைச்சர் சுவாமிநாதன் குனிந்த தலையை நிமிர்த்தாமல் தனது கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தார். அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸே கொடுக்குக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்.)

நாங்கள் எமது எதிர்ப்பை பலமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், அரச தரப்பே அவர்களுக்கு (த.தே.கூட்டமைப்புக்கு) அழைப்பு விடுத்திருந்தமையினால் தங்களது வாயாலேயே அவர்களை ‘வெளியேறிப்போங்கள்’ என்று எப்படிக்கூறுவது? என்று தெரியாமல், அமைச்சர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். அமைச்சர்கள் எவ்வளவோ இரந்து பரிந்து பேசியும், நாங்கள் எமது முடிவில் விடாப்பிடியாக இருந்துவிட்டோம்.

இந்தநிலையில் சுமந்திரன் எம்.பி, ‘இல்லை… நீங்கள் வெளியேறிச்செல்ல வேண்டியதில்லை. நாங்கள் போகின்றோம். நீங்கள் பேசுங்கள். ஆனால் போவதற்கு முன்னர் சிறுகுறிப்பு ஒன்றை நான் சொல்ல வேண்டும். இங்கு திரு.ரட்ணவேல் அவர்களும் இருப்பதால், நான் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும்.’ என்று கூறி தான் சொல்ல வந்த சேதியை ஆங்கிலத்திலும் பின்னர் அதை தமிழிலும் மொழிபெயர்த்து கூறினார்.

சுமந்திரன் எம்.பியின் குதர்க்கமும் — செல்வம் எம்.பியின் உள்குத்தல் பேச்சும்!

‘வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதோடு, ஒரு சிலர் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்தப்பிச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள மக்கள் எங்களுக்கு (த.தே.கூட்டமைப்புக்கு) வாக்களித்து, தமது பிரதிநிதிகளாக எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் வடக்கு மாகாணத்தை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்தி அதாவது, யாழ்.கிளி தேர்தல் தொகுதியிலிருந்து நானும், வன்னி தேர்தல் தொகுதியிலிருந்து செல்வம் அடைக்கலநாதனும், சாள்ஸ் நிமலநாதனும் இங்கு வந்துள்ளோம். ஆகவே ஒரு குறிப்பிட்ட 14 முதல் 15 பேர் கொண்ட குழு எங்களை வெளியேறிச்செல்லுமாறு கூறமுடியாது. (அமைச்சர் ருவானை பார்த்து சுமந்திரன் கூறுகின்றார்) இவர்கள் வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் பரந்துபட்ட சமுக பிரச்சினையை பற்றி இங்கு பேசமுடியாது. அந்த அதிகாரமும் மக்கள் ஆணையும் எங்களுக்குத்தான் உண்டு. இவர்கள் இந்த 14,15 பேரும் வேண்டுமானால், தங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையை பற்றி மட்டும் இங்கு பேசலாம்.

இந்த இடத்தில், இதே மேசையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் வைத்துக்கொண்டு, இவர்களுக்கும் அதிகமான அமைச்சர் குழுவோடு இருந்து 50க்கும் மேல்பட்ட தடைவைகள் காணாமல் ஆக்கப்பட்டோர் — அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பாக பேசியுள்ளோம். (எமது குழுவை பார்த்து கூறுகின்றார்) நீங்கள் உண்ணாவிரதமிருந்தபோது நான் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் இருவரும் பிரதமர் ரணில் அவர்களை நேரில் கண்டு கதைத்ததன் காரணமாகத்தான், அவர் அமைச்சர் ருவானை வவுனியாவுக்கு அனுப்பி உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்தோடு நான் சாள்ஸ் ஐ உண்ணாவிரத இடத்துக்கு சென்று நிலைமைகளை அவதானித்து சொல்லுமாறு அனுப்பி, சாள்ஸ் உம் அங்கு வந்திருந்தது. (சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தலையை ஆட்டுகின்றார்) ஆனால், நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ருவானை கேட்டால், உண்மை என்னவென்று உங்களுக்கு தெரியவரும். (அமைச்சர் ருவானும் சுமந்திரன் எம்.பியின் கருத்தை ஆமோதித்து தலையை ஆட்டுகின்றார்)

இந்தக்குழு தனிப்பட்ட ஒரு அரசியல் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில், ஒரு சிலரது சுயலாபங்களை அடைவதற்காகவும், அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் வேலை செய்கின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. உங்களைப்போல, ஒருமுறை அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தபோது, அதற்கு ஒரு தீர்வைக்காண்பதற்கு சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன். திரு.ரட்ணவேலும் அங்கு வந்திருந்தார். அப்போது அவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்வது என்று முடிவெடுத்திருந்தோம். அதை திரு.ரட்ணவேல் அவர்கள் தடுத்தார். எங்கள் விடுதலைக்கு இதுதான் வழியென்றால், நாங்கள் அதன்படியே போகின்றோம். எங்களைத் தடுக்காதீர்கள் என்று அரசியல் கைதிகள் அவரிடம் கேட்டனர்.’

இதன்போது குறுகிட்டு சுமந்திரன் எம்.பியின் பேச்சுக்கு கடுமையான ஆட்சேபனையை தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் அவர்கள், ‘நீங்கள் செய்யாத ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டு புனர்வாழ்வுக்கு செல்லுமாறு அவர்களை வற்புறுத்தினீர்கள். நிந்தித்தீர்கள். இதுவே ஒரு அடிப்படை மனிதஉரிமை மீறல். அதைத்தான் நான் சுட்டிக்காட்டி கண்டித்தேனே தவிர, நீங்கள் கூறுவது போல இல்லை.’ என்று தெரிவித்தார். இதன்போது அருட்தந்தை செபமாலை அடிகளார் சுமந்திரன் எம்.பியை நோக்கி, ‘நீங்கள் பொதுப்பிரச்சினையை மட்டும் இங்கு பேசலாமே தவிர, தனிநபர்களை குறிப்பிட்டு பேச முடியாது.’ என்று கண்டனம் தெரிவித்தார். அதற்கு ‘இல்லை… நான் பேசுவேன். அப்படித்தான் பேசுவேன். நான் எதைப்பேச வேண்டும். எதைப்பேசக்கூடாது என்று மற்றவர்கள் கூறமுடியாது. கூறக்கூடாது’ என்று சுமந்திரன் எம்.பி மல்லுக்கட்டினார்.

‘இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்படல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள முப்பத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நீதியும் தீர்வும் கேட்டு, நாங்கள் இங்கு பேசவந்துள்ளோம். நீங்கள் சும்மா எழுந்தாமானமாக ஆயிரக்கணக்கானோர்… ஆயிரக்கணக்கானோர்… என்று கூறிக்கொண்டிருக்கிறீயள். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் இந்த ஏழு வருடத்தில் நீங்கள் எவ்வளவு கரிசனையோடும் கவனிப்போடும் இருந்திருக்கிறீயள் என்பதற்கு இதுவே சாட்சி.’ என்று நாங்கள் கூற, ‘நான் எங்கே அப்படிக்கூறினேன்?, ‘நான் எங்கே அப்படிக்கூறினேன்?’ என்று சுமந்திரன் எம்.பி வாதிட்டுக்கொண்டிருந்தார். அப்போது சாள்ஸ் நிமலநாதன் எம்.பி, ஆயிரக்கணக்கானோர்… என்று தனது குரலை குரலை தாழ்த்தி இழுக்க… ‘ஓ அது தப்பா? அது தப்பா? ஆயிரக்கணக்கானோர் என்று சொல்வது தப்பா?’ என்று மறுபடியும் சுமந்திரன் எம்.பி முரண்டுபிடித்துக்கொண்டிருந்தார்.

‘இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், ஒரு முழுமையான தகவல் திரட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் இருக்கா? இல்லையா? உண்டு அல்லது இல்லை. எங்களுக்கு ஒரே பதில் தான் வேண்டும். இழுத்து அலட்டக்கூடாது.’ என்று நாங்கள் மறுகேள்வி கேட்க, சுமந்திரன் எம்.பி பதில் கூறாது முகத்தை திருப்பிக்கொண்டார்.

TNA MPs also took part in the meeting along with relatives.
Garikaalan

Written by

To us all towns are one, all men our kin

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade