ஏழ்மையில் படிப்பதே மேல்!

அந்த ஏழ்மையிலும், நற்மதிப்பெண் பெறுவது அதனின்னும் மேல் !

கடின உழைப்பால் இலக்கை எட்டியபோதும், தன் கனவு நிறைவேற,

பரிச்சியமே இல்லாத பரீட்சை எழுத வேண்டுமாம் என் தங்கை அனிதா!


மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைந்தது அவள் தவறா ?

தரம் குறைந்தது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த நம் தவறா?

இல்லை, நாடெங்கும் ஒரே தரமுள்ள பாடத்தை முதலில் தராமல்

தேர்வை மட்டும் சீர் செய்வோம் என்னும் அறியாமையின் பிழையா?

இவை அனைத்தையும் அவள் தூக்கிட்ட பிறகு கேட்கிறேனே, என் தவறு தான்!


ஏனடா மானிடனாய் பிறந்தோம் ?

நம் தலைமீது வைத்து கொண்டாட வேண்டிய நம் தங்கையை,

நான்கு தோள்களில் தூக்கிச் செல்லும் அவலத்தைக் காணவா ?


ஏனடா மானிடனாய் பிறந்தோம் ?

இணையத்தில் பொருளை தேர்ந்தெடுப்பதில் உள்ள முனைப்பில் பாதி கூட

நம்மை ஆளுபவர்களை தேர்ந்தெடுப்பதில் இல்லையே என குற்றவுணர்வு கொள்ளவா ?


ஏனடா மானிடனாய் பிறந்தோம் ?

இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஜாதியில்லை என மார்தட்டும் நாம்,

அதே ஜாதி பள்ளி விண்ணப்பங்கள் முதல் கல்லூரி இடஒதுக்கீடு, கல்யாண வீடு என

அன்றாட வாழ்வின் அங்கமாய் இருப்பதை எண்ணி வெட்கப்படவா?


ஏனடா மானிடனாய் பிறந்தோம் ?

அநியாயங்களைக் கண்டு மக்களிடத்தில் பொங்கும் எழுச்சிகள் பல வெறும்

சமூக வலைதள ஏடுகளாய் மட்டும் மாறுவதை கண்டு வேதனைக்கொள்ளவா?


ஏனடா மானிடனாய் பிறந்தோம் ? மாடாய் பிறந்திருக்கலாம்!

அப்போதும் நான் வாடிவாசல் வழியே சீறிப்பாய லட்சக்கணக்கான

இளைஞர்கள் மெரினா கடற்கரை வாசலில் திரள வேண்டும்!


தற்போதைய அரசியலால் ஏற்பட்ட தலைகுனிவால்

நம்மால் தலைநிமிர்ந்து சமூக பிரச்னைகளை காண முடியவில்லையோ?

மானிடா தலைநிமிர்ந்திடு! மானிடனாயிரு!