கயெக துருவல் இயந்திரம் (CNC Milling Machine)

இரா. அசோகன்
2 min readDec 15, 2018

--

செங்குத்துத் துருவல் இயந்திரம்

செங்குத்துத் துருவல் இயந்திரத்தில் X, Y மற்றும் Z ஆக மூன்று அச்சுகள் உண்டு. கயெக எந்திரம் எதுவாக இருந்தாலும் Z அச்சு சுழலியின் அச்சுடனே வரும். ஆகவே செங்குத்துத் துருவல் இயந்திரத்தில் Z அச்சு மேலும் கீழுமாகச் செல்லும். நீங்கள் அதன் முன் நின்றால் வழக்கமாக X அச்சு இடம்வலமாகச் செல்லும், Y அச்சு முன்னும் பின்னுமாகச் செல்லும். ஆயங்களின் திசையை உளி வெட்டும் திசையை வைத்தே சொல்கிறோம். நிரலில் நாம் X அச்சு ஆணை கொடுத்தால் உளி வலதுபுறம் நகர்ந்து வெட்ட வேண்டும். துருவல் இயந்திரத்தில் உளி நகராது. ஆகவே எந்திர மேடை அதற்கு எதிராக அதாவது இடது புறம் நகரும். நேர்மறை என்றால் அதுதான் கூறாநிலை (default) என்பதால் “+” குறியீடு தேவையில்லை. எதிர்மறை என்றால் “-” குறியீடு தேவை. எந்திர மேடை வலது புறம் நகரும்.

இம்மாதிரி மூன்று அச்சுகள் கொண்ட செங்குத்துத் துருவல் இயந்திரத்தில் நாம் பணிப்பொருளின் மேற்புறம் செங்குத்தாக துளை போடலாம், காடி வெட்டலாம் மற்றும் முகத்தை சமதளமாக வெட்டலாம். உளியின் அச்சு செங்குத்தாகவேதான் இருக்கும்.

செங்குத்துத் துருவல் இயந்திர அச்சுகள்

கிடைமட்டத் துருவல் இயந்திரம்

கிடைமட்டத் துருவல் இயந்திரத்தில் சுழலி கிடைமட்டமாக இருக்கும். சுழலியின் அச்சுடனே இருக்கும் இயக்கத்தின் அச்சு எப்பொழுதும் Z- அச்சு என்பது ஞாபகம் இருக்கட்டும். நீங்கள் கிடைமட்டத் துருவல் இயந்திரத்தின் முன் நின்றால் வழக்கமாக X அச்சு இடம்வலமாகச் செல்லும், Y அச்சு மேலும் கீழுமாகச் செல்லும்.

கிடைமட்டத் துருவல் இயந்திர அச்சுகள்

சுழல் அச்சுகள்

இப்போது, நாம் நான்காவது அச்சைச் சேர்த்தால், அது பொதுவாக இடம்வலமாகச் செல்லும் X அச்சை மையமாக வைத்துச் சுழலும். எனவே நமது பணிப்பொருளின் முன் மற்றும் பின்புறங்களில் துளைகள் போடலாம் மற்றும் காடிகள் வெட்டலாம். இந்த சுழல் அச்சை A அச்சு என்று சொல்கிறோம். படத்தில் உள்ள செங்குத்துத் துருவல் இயந்திரத்தில் எந்திர மேடை X அச்சை மையமாக வைத்து சுழலக்கூடியது என்பதைக் காணலாம்.

சுழல் அச்சுகள்

இதேபோல் எந்திர மேடையின் வட்ட நடு பாகம் Z அச்சை மையமாக வைத்து சுழலக்கூடியது. இதையே C அச்சு என்று சொல்கிறோம்.

இது படைப்பாக்கப் பொதுமங்கள் (Creative Commons Attribution-NonCommercial-ShareAlike CC BY-NC-SA) அனுமதிபடி பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

நன்றி தெரிவிப்புகள் (Acknowledgements)

மற்ற இயந்திரவியல் கட்டுரைகள்:

--

--