பொறியியல் வரைபடம் (Engineering Drawing) — பாகம் 3

அளவு காட்டுதல் (Dimensioning)

ஒரு பாகத்தைத் தெளிவாக முழுவதும் விவரிப்பது தான் அளவு காட்டுதலின் நோக்கம். அளவுகளின் முழுத் தொகுப்பை வைத்து அந்த பாகத்தை ஒரே ஒரு விதமாகத்தான் புரிந்து கொள்ள முடிய வேண்டும். அளவு காட்டுதலுக்கு இதுதான் முக்கிய வழிகாட்டி.

  • துல்லியம்: சரியான அளவுகள் கொடுக்க வேண்டும்.
  • தெளிவு: அளவுகளை சரியான இடத்தில் போட வேண்டும்.
  • முழுமை: எதையும் விட்டு விடவும்கூடாது. எதையும் இரண்டு விதமாகவும் போடக் கூடாது.
  • படிக்கத்தக்கது: கோடுகளைத் தேவையான தரத்தில் போட்டால் தெளிவாகப் படிக்க இயலும்.

அளவுகள் காட்டுவதின் அடிப்படைகள்

அளவுக் கோடு மெல்லியதாக அம்புக்குறியுடன், இடையில் அளவு எழுத இடம் விட்டுப், போட வேண்டும் படம் 23.

படம் 23 அளவு போட்ட வரைபடம்

அம்புக்குறியின் தலை சுமார் 3 மிமீ நீளம் 1 மிமீ அகலம் இருக்க வேண்டும்.

பாகத்தின் அம்சத்திலிருந்து நீட்டல் கோடு போட்டு அளவுக் கோடு போட வேண்டும். முதல் அளவுக் கோடு பாகத்திலிருந்து 12 மிமீ தூரத்தில் போட வேண்டும். நீட்டல் கோடு பாகத்திலிருந்து 1.5 மிமீ தூரத்தில் தொடங்கி கடைசி அளவுக் கோட்டிலிருந்து 3 மிமீ வரை வெளியில் இருக்க வேண்டும்.

படம் 24 — சுட்டுக் கோடு போட்ட வரைபடம் எடுத்துக்காட்டு

பாகத்தின் ஒரு பகுதியின் அளவைக் காட்ட படம் 24 இல் கண்டவாறு சுட்டுக் கோடு போடலாம்.

அளவுகளை எந்த இடத்தில் காட்டுவது?

ஒரு அம்சத்தை மிகவும் தெளிவாக விவரிக்கும் முகத்தில் அதன் அளவைக் காட்டுவது நல்லது. அளவுகளைப் பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற இடங்களில் காட்டுவதன் எடுத்துக்காட்டுகளைப் படம் 25 இல் காணலாம்.

படம் 25 — பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற இடத்தில் அளவு காட்டுவதன் எடுத்துக்காட்டு

அளவு காட்டுவது பற்றி புரிந்து கொள்ள நாம் ஒரு எளிய செவ்வக பாகத்தில் தொடங்கலாம். இந்த எளிமையான பாகத்தை முழுமையாக விவரிக்க மூன்று அளவுகள் மட்டுமே தேவை (படம் 26). இதன் அளவுகளை எங்கே காட்டுவது என்று யோசிக்கப் பல இடங்கள் கிடையாது.

படம் 26 — எளிய பாகம்

நாம் ஒரு காடி வெட்டுக்கு அளவு காட்ட வேண்டுமெனில் சில முடிவுகளைச் செய்ய வேண்டும் (படம் 27). ஒரு பொதுவான கோடு அல்லது தளத்திலிருந்து அளவு கொடுப்பது இதற்குச் சிறந்தது. இதை அடிப்படைக் கோடு அல்லது தளம் (datum line or surface) என்று சொல்கிறோம். இந்த அணுகுமுறையில் சங்கிலித் தொடராக அளவு கொடுப்பதில் வரும் கூட்டுப் பிழைகளைத் தவிர்க்கலாம்.

எல்லா அளவுகளும் அடிப்படைத் தளத்திலிருந்து தொடங்குவதைக் கவனிக்கவும். நாம் ஒரு அடிப்படைத் தளத்தை படம் 27 இல் தேர்வு செய்தோம், படம் 28 இல் வேறொரு தளத்தைத் தேர்வு செய்தோம். இவை முரணற்றதாக இருந்தால் போதும். (படத்தில் மேல் தோற்றத்தை மட்டுமே காட்டுகிறோம்).

படம் 27 — அடிப்படைத் தளம் எடுத்துக்காட்டு
படம் 28 — அடிப்படைத் தளம் மற்றொரு எடுத்துக்காட்டு

படம் 29 இல் நாம் ஒரு துளையின் விட்டத்தை இடதுபக்கம் காட்டியுள்ளோம். பொறியியல் வரைபடங்களில் விட்டத்தை “Ø” குறியீட்டால் காண்பிப்பது வழக்கம். இக்குறியீட்டை நாம் விட்டம் (dia) என்றே படிக்கலாம்.

படம் 29 — துளையின் அளவு காட்டுவது எடுத்துக்காட்டு
படம் 30 — நேரடியாகத் துளையின் அளவு காட்டுவது எடுத்துக்காட்டு
படம் 31 — நேரடியாகத் துளையின் அளவு காட்டுவது மற்றொரு எடுத்துக்காட்டு

இந்த வரைபடம் கிடைமட்ட மையக்கோட்டிலிருந்து சமச்சீராக உள்ளது. அதாவது எல்லா பக்கங்களிலும் ஒரே மாதிரி உள்ளது. மையக்கோடுகள் (சங்கிலிப் புள்ளியிட்டவை) சமச்சீர் பாகங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வட்டங்கள் மற்றும் துளைகளின் மையத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. நாம் நேரடியாக மையக்கோட்டில் அளவு கொடுக்கலாம். சில நேரங்களில் இம்முறை தளங்களுக்கு இடையில் அளவு கொடுப்பதை விட தெளிவாக இருக்கக்கூடும்.

வரைபடக் கருவிகள்

துல்லியமான பொறியியல் வரைபடங்களின் (engineering drawing) அடிப்படைகளை விளக்குவது தான் இந்தக் கையேட்டின் நோக்கம். முன்னர் வரைபடத்தைத் தயாரிப்பதற்குக் கையால் வரையும் கருவிகளைப் (படம் 12) பயன்படுத்தினர். முதலில் T வடிவ வரைகோல் (T-square), மூலைவிட்டங்கள் (set square), கோணமானி (protractor) தேவைப்பட்டன. அடுத்து இவற்றுக்குப் பதிலாக உருவரைவான் (drafter or mini-drafter) வந்தது. இவை தவிர கவராயம் (compass), பிரான்சிய வளைவுகளும் (French curves) தேவைப்பட்டன. இப்பொழுது கணினி உதவியுடன் வடிவமைப்பும் உருவரைவும் செய்கிறோம் (Computer Aided Design — CAD). அடிப்படை வரைபடத் தரங்களும், மரபுகளும் நீங்கள் என்ன கருவியைக் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்ததல்ல. ஆகவே வரைபடங்களின் அடிப்படைகளைப் பயிலும் போது கையால் வரையும் கண்ணோட்டத்தில் இருந்தே அணுகுவோம்.

படம் 32 — T வடிவ வரைகோல், மூலைவிட்டங்கள், உருவரைவான்

பெயர்த்தொகுதி (Title Block)

ஒரு பொறியியல் வரைபடத்தில் முக்கிய தகவல்கள் செறிந்த இடம் அதன் பெயர்த்தொகுதி. இது அந்த வரைபடத்தையும் அதன் நிறுவனத்தையும் புரிந்து கொள்ளவும், அடையாளம் காணவும், சரியானபடி சேமித்து வைக்கவும் முக்கிய நுழைவாயிலாகப் பயன்படுகிறது. வரைபடத்தின் வலது கீழ் மூலையில் எல்லைக் கோட்டுடன் இதை வரைவது வழக்கம்.

படம் 33 — பெயர்த்தொகுதி

பன்னாட்டுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (ISO) படி வரைபடத்தின் உரிமையாளர் நிறுவனப் பெயர் அல்லது வணிகச் சின்னம், பாகத்தின் பெயர், அடையாள எண், கச்சாப் பொருள் போன்ற 8 தரவுகள் கட்டாயம் கொடுக்க வேண்டும். மற்ற சில தரவுகள் தேவைக்கேற்பக் கொடுக்கலாம்.

இயந்திரவியல் வரைபடங்களில் இவை தவிர சில தரவுகள் வடிவமைப்பாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் அவசியம் தேவை. வெப்பப் பதனிடல் (heat treatment), குரும மின் பூச்சு (chrome plating) போன்ற மேற்பரப்புச் சீர்மை (surface finish), பாகத்தின் எடை, பொதுவாக அனுமதிக்கும் பொறுதி (general tolerances) போன்ற தரவுகளை பெயர்த்தொகுதிக்கு வெளியில் கொடுக்கலாம்.

இது படைப்பாக்கப் பொதுமங்கள் (Creative Commons Attribution-NonCommercial-ShareAlike CC BY-NC-SA) அனுமதிபடி பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
These MIT OpenCourseWare course materials have been translated into Tamil by R. Asokan. Neither the MIT Faculty Authors, MIT, nor MIT OpenCourseWare warrant the accuracy or completeness of the translations. Any inaccuracies or other defects contained in this material, due to inaccuracies in language translation, are the sole responsibility of R. Asokan and not MIT OpenCourseWare.

இயந்திரவியல் கட்டுரைகள்: