கயெக பின்மாற்றுப் பொருத்தல் (CNC Retrofitting)

இரா. அசோகன்
3 min readJan 14, 2019

--

நான் ஒரு ஆவணத்தை வெளிநாட்டுக்கு அவசரமாக அனுப்ப வேண்டியிருந்தது. தகவல் பாதுகாப்புக்காக அவர்கள் மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதில்லை. தொலைநகலி அல்லது வழக்கமான அஞ்சல் மூலமாகத்தான் அனுப்ப முடியும். தொலைநகலி சேவை பெருநகரில் எங்குமே இல்லை. சில வருடங்களாகவே எவரும் தொலைநகலி சேவையைப் பயன்படுத்துவதில்லையென்று கூறினர். புகைப்படம் எடுத்து வாட்சப் போன்ற செயலி மூலமாகவோ அல்லது வருடியில் PDF கோப்பாக நகல் எடுத்து மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி விடுகிறார்கள் என்று கூறினர்.

இவ்வாறு தொழில்நுட்பம் விரைவாக மாறிவரும் காலத்தில் இன்னும் கையால் இயக்கும் எந்திரங்களைப் பயன்படுத்துவது வணிக ரீதியாக நியாயப்படுத்த முடியாது. ஆனால் பெரு முதலீடு செய்து வாங்கிய எந்திரம், நல்ல பராமரிப்பில் வைத்திருக்கிறீர்கள். இன்னும் சில பத்தாண்டுகள் மிக நன்றாக வேலை செய்யும். இவ்வாறிருக்க கையால் இயக்கும் எந்திரங்களை எப்படிக் கழித்துத் தள்ளிவிட்டுப் புது கயெக எந்திரங்களில் முதலீடு செய்வது என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்வி!

ஆகவே மேற்கண்ட பிரச்சினைக்கு கயெக பின்மாற்றுப் பொருத்தல் நல்ல தீர்வாக அமையும். புதிய எந்திரம் வாங்கத் தேவைப்படும் முதலீட்டில் ஒரு சிறு பாகம் மட்டுமே செலவு செய்து உங்களிடம் இருக்கும் கையால் இயக்கும் எந்திரங்களைக் கயெக எந்திரங்களாக பின்மாற்றுப் பொருத்தல் செய்ய இயலும்.

ஆனால் இது செய்யக் கூடியது தானா? நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரம் வீணாகி விட்டால் என்ன செய்வது என்று கவலைப் படுகிறீர்களா? நியாயமான கவலை!

நீங்களே செய்ய முடியும் (Do It Yourself — DIY) திட்டத்தின் கீழ் தயார் செய்யப்படும் கயெக எந்திரங்கள்

கயெக எந்திரங்கள் தயார் செய்வதும் மாற்றங்கள் செய்வதும் எளிதாகிக் கொண்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, கனடா நாட்டு ராக்ளிஃப் நிறுவனம் நீங்களே செய்ய முடியும் (Do It Yourself — DIY) என்ற திட்டத்தின் கீழ் கயெக எந்திரங்கள் செய்வதற்கான வரைபடங்களை மிகக் குறைந்த விலையில் விற்கிறார்கள். பலர் இந்த வரைபடங்கள்படி கட்டுமான பாகங்கள் செய்து, குண்டுத் திருகு, படிநிலை மின்பொறி போன்ற பொழுதுபோக்கு (hobby) கயெக பாகங்களை வாங்கித் தாங்களே எந்திரத்தை சேர்த்து இணைத்துக்கொள்கிறார்கள். இம்மாதிரி தயார் செய்யப்பட்ட ஒரு கயெக எந்திரத்தின் படத்தை இங்கே காணலாம்.

கயெக திசைவி (CNC Router)

கயெக பின்மாற்றுப் பொருத்தல்

பின்மாற்றுப் பொருத்தல் செய்த கடைசல் எந்திரம்

தானியங்கியாக ஓடுவதால் ஒரு பாகம் தயாரிக்க ஆகும் சுழற்சி நேரம் குறையும் மற்றும் துல்லியம் கூடும். ஊட்டத்தை நன்கு கட்டுப்படுத்த முடியும். தவிர கணினி கட்டுப்பாட்டில் ஊட்டம் கொடுப்பதால் மேற்பரப்புச் சீர்மை நன்றாக இருக்கும். திரும்பத்திரும்ப ஒரே மாதிரி செய்ய நம்பத்தகுந்தது. திறமை வாய்ந்த தொழில் வினைஞர் மட்டும்தான் இயக்க முடியும் என்று இருக்கவேண்டியதில்லை. பழைய எந்திரங்கள் பல்சக்கரம் மூலமோ அல்லது கப்பிகள் மற்றும் வார்ப்பட்டைகள் மூலமோ ஓடுவதால் உராய்வு அதிகம். இதனால் ஓடும்போது இரைச்சல் அதிகம், மின்சாரமும் அதிகம் செலவாகும் மற்றும் அடிக்கடி உயவிட (lubrication) வேண்டும். அதிக திருப்புத் திறன் கொண்ட மின்விசைகளை (High Torque Motors) நேரடியாக சுழல் தண்டில் (shaft) பயன்படுத்துவதால் இரைச்சல் குறைவு, அடிக்கடி உயவிட வேண்டாம் மற்றும் மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.

விற்பனையாளர் மதிப்பீடு

சந்தையில் பல விற்பனையாளர்கள் கயெக பின்மாற்றுப் பொருத்தல் செய்வதாகச் சொல்கிறார்கள். விற்பனையாளரை மதிப்பீடு செய்வது முக்கியம். நம்பகமான மற்றும் நல்ல தரமான பாகங்கள் பயன்படுத்துவதும் முக்கியம். அவர்கள் எவ்வளவு நிறுவனங்களில் எத்தனை எந்திரங்கள் இம்மாதிரி பின் மாற்றுப் பொருத்தல் செய்திருக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த வாடிக்கையாளர்களை அணுகி அவ்வெந்திரங்கள் திருப்திகரமாக வேலை செய்கின்றனவா என்று விசாரிக்கவும். மேலும் பாகங்களுக்கு நியாயமான காலத்துக்கு பொறுப்புறுதியும் தேவை. கயெக எந்திரங்களில் உங்கள் ஊழியர்களுக்கு விற்பனையாளர் பயிற்சி தருவதும் முக்கியம்.

சுழல் தண்டுக்கு மாறு அலையெண் இயக்கி (Variable Frequency Drive — VFD)

கடந்த சுமார் நாற்பது ஆண்டுகளில், மின்திறனுக்கான மின்னணுவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பல வந்துவிட்டதால் மாறு அலையெண் இயக்கியின் செலவு மற்றும் அளவைக் குறைத்து, செயல்திறனை மேம்படுத்திவிட்டன. இதைப் பயன்படுத்தினால் சுழல் தண்டின் வேகத்தை மாற்றுவதற்கு எடுக்கும் நேரம் மற்றும் வேலை மிச்சமாகும். தவிர இரைச்சல், பராமரிப்பு மற்றும் மின்சார செலவும் குறையும். இது எந்த அளவு உங்களுக்குப் பயன்படும் என்பதையும் மதிப்பிடவும்.

சுற்று வேலைகளைத் தானியங்கியாக்குவதும் சாத்தியம்

கயெக பின்மாற்றுப் பொருத்தல் செய்யும் விற்பனையாளர்களே சுற்று வேலைகளையும் தானியங்கியாக மாற்ற உதவக்கூடும். தானியங்கி உயவிடல் அமைப்பு (Automatic Lubrication System), தானியங்கி உளி மாற்றி (Automatic Tool Changer), பாகக் கூடை மாற்றி (Pallet Shuttle) ஆகியவற்றுக்கு எவ்வளவு செலவாகும் என்ன பயன் தரும் என்றும் மதிப்பிடவும்.

இது படைப்பாக்கப் பொதுமங்கள் (Creative Commons Attribution-NonCommercial-ShareAlike CC BY-NC-SA) அனுமதிபடி பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

நன்றி தெரிவிப்புகள் (Acknowledgements)

மற்ற இயந்திரவியல் கட்டுரைகள்:

--

--