Queenland
Queenland
Jul 28, 2017 · 3 min read

#அஃதொருநாள் காலை

தூக்கம் கலைந்த பொழுது விடியற்காலை 3.45 மணி. இரயில் ஹைதராபாத்தை நெருங்கிக் கொண்டிருந்து. என்னை தவிர்த்து அனைரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். எனக்கு அதற்கு மேல் தூக்கமும் இல்லை.. காலை குளிரில் நகரும் ரயிலில் அனைவரும் உறங்க விழித்திருப்பதோர் அற்புதம். அந்த உணர்வை சிறிது நேரம் ரசித்துவிட்டு பாத்ரூமுக்கு சென்று அன்றைய காலை வேலைகளை முடித்துகொண்டு திரும்பியவன் கதவின் அருகிலேயே சற்று நேரம் நின்றுவிட்டேன்.. சற்று வெளியே எட்டி பார்த்தேன் நல்ல இருட்டு.. அதாவது விடியற்காலை இருட்டு. தூரத்தில் ஓங்கி வளர்ந்த ஒரு எறும்பு புற்றுக்குள் சிறு சிறு மினிமினி பூச்சிகள் வரிசையாக அமர்ந்திருப்பதைபோல் தொழிற்சாலை கோபுரங்கள் மஞ்சள்நிற விளக்கில் மின்னியது.. அந்த பனிகாற்றும் இரயில் வண்டியின் தடக் தடக் சத்தத்திலும் கிடைத்த அமைதி நிகரில்லாதது. அமைதி என்றால் சத்தமின்மை என்பது வெறும் பேச்சுவழக்காகவே அப்போது தோன்றியது.

பின் மெதுவாக எழுந்து என் இருக்கைக்கு திரும்பும்போதுதான் கவனித்தேன் இரவு படுக்கும் முன் வரை காலியாக இருந்த பக்கத்து அறை ஜன்னலோர இருக்கையில் யாரோ முழுக்க போர்த்தி உறங்கி கொண்டிருந்தார். இரவு பொழுது நிற்கும் ஸ்டேசனில் ஏறியிருப்பார், இல்லையேல் சீட் காலியாக இருப்பதால் அதே பெட்டியை சேர்ந்த யாரேனும் படுத்துக்கொண்டிருப்பார் என்று என் இருக்கை தேடி அமர்ந்தேன்.

என்னவோ யோசித்தபடி சிறிது நேரம் படுத்திருந்தவன் இரயில் நாட்டிய ஒலிகள் தாலாட்டு பாடுவதை போலிருக்க என்னையறியாமல் ஒரு குட்டிதூக்கம் போட்டுவிட்டேன். ஒன்றரைமணிநேர தூக்கம் குட்டிதூக்கத்தில் வருமோ என்னவோ.. “தாமிரபரணியில் நீந்தி வந்த’ என்ற பாட்டுடன் மொபைல் ரிங்டோன் எழுப்பியது.. எடுத்துபேசினேன்.. மறுமுனையில் நண்பன் ஒருவன்.. ஸ்டேஷன்லதான் இருக்கேன். இன்னும் அரைமணிநேரம் ஆகும்.. தூங்கிருப்பியேனு எழுப்பலாம்னு பண்ணேன். உடனே எழுந்துட்ட?

முன்னாடியே எழுந்துட்டேன்டா.. சும்மாதான் படுத்தேன் திரும்பி தூங்கிட்டேன். சரி கோச் S5 ல இருக்கேன். வெளிய நிக்கிறதுனா நில்லு வந்துட்றேன்.

ம்ம் சரி மச்சி.

போனை கட் செய்ததும் முகம் கழுவிட்டு வரலாமென எழும் போது எதிர் அறையில் அந்த ஜன்னலோர சீட் காலியாக இருந்தது. யாரோ படுக்க இடம் கிடைக்காதவர்தான் படுத்திருப்பார் என உறுதியாதால் அதை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எழுந்து முகம் கழுவியபின் சிறிது நேரம் கதவருகே நின்று வேடிக்கை பார்த்துவிட்டு லக்கேஜ்களை சரிபார்த்து வைத்துக்கொண்டு என் சீட்டில் வந்து அமர்ந்தேன்.

அப்போது முன்பு காலியாக இருந்த இருக்கையில் ஒரு பெண்ணுருவம் தென்பட்டது. சிறுவயது பெண்தான். 24 க்குமேல் மேல் இருக்காது. மனதில் ஒரு குதுகலம்.. முகத்தை பார்க்கவேண்டும் என மனம் துடித்தது. ஐன்னலின் வழி வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். குளிருக்கு இதமாய் போர்வை ஒன்றை கழுத்தோடு சுற்றியிருந்தாள். அவள் அமர்ந்திருந்த ஜன்னலோர கதவு பாதி மூடபட்டிருந்தது. ஐன்னற்கதவின் நிழல் சரியாக அவள் நெற்றியிலிருந்து மூக்கின் பாதி வரை மறைத்திருந்து.இதழ் மட்டுமே மங்கலாக தெரிந்தது. சற்றுமுன்தான் முகம் கழுவிவிட்டு வந்திருப்பாள் போல.. ஒவியம் போலான இதழும் கண்ணங்களையும் இரயில் போகும்போதுவழி தென்படும் சிறு சிறு வெளிச்சங்களில் மட்டும் தெளிவாக பார்க்கமுடிந்தது. அதற்கருகில் உள்ள ஜன்னல் முழுவதும் திறந்திருந்ததும் அப்போதுதான் விடியும் சூரிய வெளிச்சமும் நல்ல ஆறுதல்.

கவனித்தேன்.. என் இருக்கைக்கும் அவள் இருக்கைக்கும் இடையேயுள்ள சிறிய தூரம் பெரியதாய் பட்டது. இருவருக்கும் இடையில் நடைபாதை. விழிந்துக்கொண்ட மக்கள் செல்வதும் வருவதுமாய் இருந்தனர். தெளிவாக பார்க்க சிரமபட்டேன். கிடைக்கும் சந்தர்பங்களிளெல்லாம் என் கண் அவள் இதழில் குடிகொண்டது. அவள் முகத்தில் பெரியதாய் ஏதும் அசைவுகள் இல்லை. ஜன்னலுக்கு வெளியே ஒரே பக்கமாய் பார்த்துகொண்டும் சமயங்களில் நேர்எதிராக என்னை பார்ப்பது போலும் அவள் முகம் இருக்கும். மொபைல் பயன்படுத்தவே இல்லை. ஒரு வேளை அவள் கண்கள் என்னைதான் பார்க்கின்றதோவென்று ஒரு சிறியதோர் தயக்கம்.

விடியல் கூட கூட வெளிச்சத்தில் அவள் கண்களை காணமுடிந்தது.. தன் கதிர் கரம் கொண்டு அவள் முகம் வரைந்து கொண்டிருந்தான் கதிரவன்.. அவள் தென்படுகிறாள்.. Wow.. அடர்த்தியான பிருவம்.. ஆழமான கண்கள். காதனிகளையெல்லாம் இப்படி நான் ரசித்ததேயில்லை.. முடியை பின்னி முன்பக்கம் இட்டுக்கொண்டிருந்தாள்.. அழகோ இல்லையோ என யூகிக்கமுடியாத மனநிலை.. கண்டிப்பாக ஒரு மூன்று நிமிடமாவது கண் இமைக்காமல் அவளை பார்த்துகொண்டிருந்திருப்பேன். சற்றும் எதிர்பார்காத நேரத்தில் ஒரு பார்வை வீசினாள். அவ்வளவுதான்.. இதயம் நின்று பின் துடித்தது. தெருமுனையில் திரும்பும் வண்டியின் முகப்பு விளக்கு நொடிபொழுதில் நம்முகத்தில் பட்டுதிரும்புவதை போலிருந்தது.. என்னவொரு பார்வை!

நன்றாக விடிந்துவிட்டது. மெல்லிய காலை கதிர்களில் அவள் நன்றாக ஜொலிக்கிறாள்.. நேர்த்தியான முகம். சுருட்டைமுடியாதலால் பெரிதாக நெற்றிமுன் நாட்டியங்கள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறு முடிக்கூட்டம் மட்டும் காலை வெயிலில் தங்க இழைகள் போல் நெற்றியை வருடிக்கொண்டிருந்தன. இதைதான் வசீகரம் என்பார்கள் போல. போதாதைக்கு அந்த மஞ்சள் சல்வாரும் அம்மங்கை கூந்தலும் இதயதுடிப்புகளை இரட்டிப்பாக்கிவிட்டன.

அவளின் பார்வை பட அடிக்கடி அங்கும் இங்கும் நடந்து கொண்டு பாவனை காட்டிக்கொண்டிருந்தேன். ஆனால் அவள் என்னை கவனித்தாக தெரியவில்லை.. ஆனால் கவனிக்கிறாள் என தெரியும்.

“தாமிரபரணியில் நீந்தி வந்த என் ஆவாம் பூவிலையே.. மொபைல் ஒலித்தது. ஆஹா என்வொரு டைமிங்.. இத்தனை வருடங்களில் இதுதான் ஆகச்சிறந்த ரைமிங் என்பேன். போன் எடுக்காமல் பாட்டு ஒலிக்கட்டும் என விட்டுவிட்டேன். அவளுக்கும் பிடித்தமான பாடல் போலும்.. அவள் திரும்பினாள்.. என்னை பார்த்தாள்.. ஒரு வழியாக கண்கள் சந்தித்தது. எதுவும் பேச தோன்றவில்லை.. மனம் ஒரு பஞ்சுமூட்டையை போல உணர்ந்து பின் அது நீரில் நனைந்ததை போல் கணத்தது. நான் அப்போது எந்த மாதிரியான முகபாவனையில் இருக்கிறேன் என யாராவது என்னிடம் விளக்கினால்தான் உண்டு. அது ஓர் அழகியல். எப்படியாவது அந்த சந்திப்பை நீட்டிக்கும் முயற்சி மட்டுமே நடந்து கொண்டிருந்தது.

அதன் பின் சில ஜன்னலோர வேடிக்கைகள் பிறகு மீண்டும் பார்வை சந்திப்புகள் என்று நிமிடங்கள் ஓடியது. திடீரென தன் கை கடிகாரத்தையும் ஜன்னலையும் நோட்டமிட்டவள் தன் சாம்பல்நிற சிறிய ஹீல்ஸ் உள்ள செறுப்பை தேடி அணிந்துகொண்டாள். அவளிடம் உள்ள அனைத்தையுமே மனம் கவனித்துகொண்டே இருந்தது. பின் தன் ஹேன்பேக்கை எடுத்துகொண்டு எழுந்தாள். எனக்கு முன் ஸ்டாபிங்கிலேயே இறங்கிவிடுவாள் போல. வேகமாகவும் எதோ ஒன்றை இழக்கும் சோகத்துடனும் அவளை பின் தொடர்ந்தேன். இரயில் பெட்டியில் நுழைவு வாயில் பக்கம் நின்றாள். மனசு அடித்துகொண்டது அதற்குள்ளாகவே போகவேண்டுமா? அரைமேணிநேரம் கூட ஆகவில்லையே. கடவுள் என்னிடம் என்னசொல்ல வருகிறார் என தெரியவில்லை.. உனக்கானவளை காட்டிவிட்டேன் இனி உன்பாடு என்கிறாரா? இருக்கலாம்.

இரயில் நின்றது.. மொத்தமே எட்டு பேர் தான் அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கினார்கள். இவளும் இறங்கினாள்.. வேகமாக எதிர் திசையில் நடக்கதுவங்கினாள். நான் கதவருகில் நின்று அவளைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் திரும்பவே இல்லை. வெகு நாட்கள் தேடி கிடைத்த ஒன்றை நொடிப்பொழுதில் தொலைத்தவன் போல் நின்றேன். இரயில் மெதுவாக நகரதுவங்கியது. அதை உணர்ந்தவள் போல மெதுவாக திரும்பி மெல்லியதாய் ஒரு புன்னகை செய்தாள். உடலோ மனமோ ஜில்லென உறைந்ததை உணர்ந்தேன். ஆம் அவள் சிரித்து முதலும் கடைசியுமாய் அப்பொழுதுதான் பார்த்தேன். ஒரு சந்தோஷம்.. நான் கண்டது கனவில்லை என நினைத்துக்கொண்டேன். மெதுவாய் தலையசைத்தேன். அவளும் போய்வருகிறேன் என்பது போல் பாவனையில் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் நடக்கலானாள். விடை பெற்றுக்கொண்டோம்.

இரயில் வேகமெடுத்தது. நான் அந்த மஞ்சள் சந்தன நிற சல்வார் மறையும் திசையை பார்த்துக்கொண்டே நின்றேன். ஒரு ஆறுதல் என்னவெனில் அவளிடம் பெரியதாய் ஏதும் லக்கேஜ்கள் இல்லை. எனில் அடிக்கடி அவள் அங்கு வந்து செல்பவளோ அல்லது வேலைக்கு சென்று வருபவளோ என்று தோன்றியது. யூகம்தான்.. அப்போது ஒரு நம்பிக்கை.. மீண்டும் சந்திப்போம் என்று.

எது எப்படியோ இனி எப்போது ஹைதராபாத் செல்லும் போதும் ஏன் எப்போது இரயில் பயணங்கள் நிகழும்போதும் அவ்விரு கண்கள் என்னை ஆட்கொண்டுவிடும். அழகான சூரிய உதயத்தை பார்த்துகொண்டே நின்றேன். எனக்குள் ஓடிய ஏதேதோ எண்ணங்களை கலைக்கும் நோக்கில் இரயில் ஹாரன் ஒலித்தது.. இதோ ஹைதராபாத்தும் வந்துவிட்டது!

    Queenland

    Written by

    Queenland

    Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
    Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
    Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade