Queenland
Queenland
Aug 9, 2017 · 3 min read

#பச்சைபோர்வை

வானிலை அறிக்கை.. வாசிப்பது என்.ராஜாராமன். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் இன்னும் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். டீக்கடை ரேடியோ பேசியது..

பனி சூழ்ந்த கொல்லிமலையின் செம்மேடு மழை கிராமத்திற்கு வந்து இன்றோடு ஏழு நாட்களாகிறது. இங்கு வரும்போதே நல்ல மழை. வரும்வழியில் ஓரிரு இடங்களில் கார் டயர் சேற்றில் சிக்கிக்கொண்டது. இரண்டு மணி நேரபயணம் ஐந்து மணிக்கும் அதிகமாகிதான் வந்து சேர்ந்தோம். மீண்டும் கிளம்பும்போது தெரியபடுத்துமாறு காரும் ட்ரைவரும் கிளம்பிவிட்டனர். வந்ததிலிருந்து ஒரு நாள் விடாமல் தினமும் மழை தான். விடியற்காலையிலும் கூட மழை பெய்த வண்ணமாகவே இருந்தது. உறங்குவதற்கு முன்னும் காலை எழும் போதும் மழையும் தூறலும்தான்.

எங்குபார்த்தாலும் நிலம் சேறும் சகதியாகதான் இருக்கும். அங்கிருக்கும் பெரும்பாலான கான்கிரீட் வீடுகள் தொடர் மழையால் நன்கு ஊறியிருந்தது. ஆங்காங்ஙே விரிசல் வழி மழைநீர் ஒழுகியது.. ஆச்சர்யம் என்னவென்றால் குடிசைகளில் இதற்கு வாய்பில்லை. ஓட்டைகளின்றி நீர்கசியாது கூரைகள் நேர்த்தியாக வேயப்பட்டிருந்தன. உள்ளே இதமாகவும் இருக்கும். நண்பரின் தாவரவியல் ஆராய்ச்சிக்காக கொல்லிமலை கிராமங்களான செம்மேடு முதல் சோளக்காடு வரையிலான பகுதிகளில் முகாம் அமைத்திருந்தோம். மழை அதிகமா இருப்பதால் வாடகைக்கு ரூம் எடுத்து தங்க நேரிட்டது. சிறிய அறைதான் ஆனால் இரண்டுபேர் தங்குவதற்கு வசதியாக இருக்கும். பெரும்பாலும் அங்கு வெளிய எங்காவது செல்ல வேண்டுமெனில் குடை அத்தியாவசியம். மொபைல் வைத்திருப்பது போல் எல்லோரும் குடை வைத்திருப்பார்கள். மத்தாப்பு சத்தம்போல குடைமீது விழும் மழைத்துளிகளின் ஓசை கேட்காத நாட்களே இருக்கமுடியாது. கீழிருந்து பார்க்கும்போதுதான் சிறிய மரங்கள் நெருங்கவளர்ந்து மலையின் மீது பச்சை போர்வை போர்த்தியது போலிருக்கும். ஆனால் அவைகள் பெரிய பெரிய மரங்களின் போர்வை. அதாவது மூன்று மாடி நான்குமாடி அளவு உயரமான மரங்கள் சர்வ சாதாரணமாக வரிசையாக வளர்ந்து நிற்கும். உண்மையில் மலைகளின் உருவம் சற்று சிறிய அளவுதானோ என சில நேரம் தோன்றும். உதாரணத்திற்கு ஒரு ரோமம் அதிகமுள்ள பொமேரியன் நாய்குட்டியை சாதாரணமாக பார்ப்பதற்கும் தொப்பலாக நனைந்தபின் பார்ப்பதற்கான வித்தியாசம்தான். அந்த உயரமான மரங்களே மலைகளை இன்னும் பூதாகரமாக்கி காட்டுகின்றன.

பழங்களுக்கு இங்கு பஞ்சமில்லை..போதும் போதும் என்ற அளவிற்கு கிடைத்தன. கேள்விபடாத பழங்களையெல்லாம் ருசிக்க முடிந்தது. தூறல் நின்று வெளிச்சம் பரவும் நேரங்களில் வெளியே கிளம்புவோம். அங்கிருக்கும் தெரிந்தவர் ஒருவர் மூலம் பைக் ஒன்றை பயன்பாட்டுக்கு வாங்கியிருந்தார் நண்பர். உண்மையில் அவருக்கு உதவியாளராக வந்தேன் என சொல்லிகொண்டாலும் பெரும்பாலான நேரங்களில் ஊர்சுற்றி பார்க்கவும் போட்டோ எடுக்கவும் நான் தனியே கிளம்பிவிடுவேன். அவரும் கண்டுகொள்ள மாட்டார். யாரிடமும் வழி கேட்காமல், செல்லும் வழி சென்று கொண்டே இருப்பது புது அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு இடத்தையும் கண்கள் அலசி ஆராய்வதால் வந்த வழி மறப்பதும் இல்லை. சந்தேகமாக இருந்தால் மட்டும் இது சோளக்காடு போகும் வழிதானே என்று விசாரித்துக்கொள்வேன். உண்மையில் அங்கு வேண்டுமென்றே தொலைந்து போவதில் எதோ ஒரு ஆர்வம். மலைகளின் மீது பவனி வரும் மேகங்களுக்கு நடுவில் பைக்கில் சென்றிருக்கின்றீர்களா? பாதை தெரியாத அளவுக்கு முழுக்க முழுக்க வெண்மேகங்கள் சில நொடிகள் சூழும் நேரம் தேவலோகம் காண்பீர்கள். பைக்கில் அமர்ந்தபடி இடுப்பளவு வரை குவியும் மேகத்தினுள் கைகளை விரித்தபடி பறவையை போல் பயணிப்பது பேரனந்தம்.! மலைமுடுகளில் சென்று அமர்ந்துகொண்டால் நகரும் மேகங்களும் விரியும் மலைத்தொடர்களும் ஜில்லென்ற காற்றுமாய் சினிமா தியேட்டர்களில் காணக்கிடைக்காதவைகளை பைசா செலவில்லாமல் பார்த்துவிட்டு வரலாம்.

அன்று நடைபயணமாக நானும் அந்த ஏரியா வழிகாட்டி ஒருவரும் எங்கோ அரைமைல் தூரத்தில் பேரிசைச்சலுடன் விழுந்து கொண்டிருந்த அருவி ஒன்றை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். தங்கியிருக்கும் பகுதிக்கு வந்து சேர்கையில் லேசாக துவங்கிய தூறல் அதிகமாகி மழைபிடித்தது. டீக்கடை பக்கம் ஒதுங்கினோம். நேரம் மாலை 3.30 இருக்கும். ரேடியோவில் பாடல்களும் மழைக்கு தகுந்தாற் போல் அணிவகுத்தது. நான் நின்று கொண்டிருந்த பவளமணி தேநீர்விடுதி மழைக்கு ஏதுவாகவே வடிவமைக்கபட்டிருந்தது. விசாலமான பனை பந்தலுக்கு மேலே பெரிய ரக பேனர் இழுத்துகட்டபட்டு பேனருக்கும் பனை கூரைக்கும் இடையே மூன்று அங்குல இடைவெளியாவது இருப்பது போலவும் மழை நீர் தங்காமல் தொடர்ந்து கீழிறங்கும்படி செய்திருந்தார்கள். அதன் மேல் விழும் மழையின் ஓசை டம டம டம வென நனைந்த அட்டைபெட்டியின் மீது குச்சியால் அடிப்பதை போலிருக்கும். அதை கேட்டுக்கொண்டே டீக்குடிப்பதும் ஒரு ஆனந்தம். மழை நிற்கும் போகலாம் என்று இத்தோடு இரண்டு டீ குடித்துவிட்டேன் மழை நின்றபாடில்லை. முன்விழுந்து தெறிக்கும் சாரலும் அடிக்கடி முனகும் இடியோசைகளுடன் தேநீர்குடிப்பது வரம்!

மழை சற்று குறைவது போலிருந்தது.. இப்போதே சென்றுவிடலாமென உடன் வந்தவரிடம் விடைபெற்றுகொண்டு வெளியே வந்து வேகமாக நடந்தேன். மழைநீர் தேங்கியிருந்த சிறுசிறு பள்ளங்களை தத்தி தாண்டி தங்கியிருந்த அறைக்கு வந்துவிட்டேன். நண்பர் எங்கோ வெளியே சென்றிருப்பார் போல.. ஆள் இல்லை.. மழையில் நனைந்து கொண்டிருந்த பைக்கை நகர்த்தி உள்ளே வைக்கலாம் என எடுத்தேன்..மின்சாரத்தை தொட்டுவிட்டேனோ என நினைக்க வைக்கும் அளவு குளிர்ந்திருந்தது. மெல்ல நகர்த்தி மழை படாமல் நிறுத்திவிட்டு பக்கத்துவீட்டில் சாவியை வாங்கி அறையை திறந்து உள்ளே நுழைந்தேன்.

ரெயின்கோட்டினை கலட்டி நீர்வடிய வாசல் பக்கம் மாட்டிவிட்டேன். நீரேறிய செறுப்பை எப்படா கலற்றி எறிவோம் என்றிருக்கும். வந்த நாள் முதல் சேற்றுபுண்களுக்கு கால்விரல்களுக்கு நண்பர்களாகிவிட்டன. பிரிவதேயில்லை. விறகடுப்பில் இருந்த சுடுநீரில் முகம் கழுவிக்கொண்டு அந்த நீரை காலுக்கு ஊற்றிக்கொண்டேன். ஆஹா.. அப்படி ஒரு இதம்! அடுப்பிற்கு பக்கத்திலேதான் எப்பவும் தேங்காய் எண்ணெய் வைக்கபட்டிருக்கும். குளிரில் அடிக்கடி உறைந்துவிடுவதால் அந்த தண்டனை. ஒரு ஜன்னல் மட்டுமே உள்ள அந்த அறையில் ஜன்னல் பக்கம் பார்த்தவாரே நாற்காலியை போட்டுகொண்டு மேசையின் அருகே அமர்ந்தேன். நாற்காலி ஜில்லென இருந்தது. உள்ளங்கைகளை நன்கு உரசி சிறிது வெப்பத்தை ஏற்படுத்தினேன். மாலை மங்கும் வேளையை சீக்கிரம் இருட்டிவிட்டிருந்தது மழை. வெயிலும் வெயில் சார்ந்த இடத்திலிருந்து வந்த எனக்கு இந்த மலையும் மழையுமான பிரதேசம் புதிய அனுபவமாய் இருந்தது. எவ்வளவு பெய்தாலும் மழை சலிக்கவேயில்லை. எப்போதும் என்னை சுற்றி ஈரம்தான். காளான் வாசமும் அட்டை வாசமும் அடிக்கடி வந்துபோகும். மிக அழகான எப்போதும் கிடைத்திடாத நேரமும் காலநிலையையும் இயற்கையும் அந்த இடத்தின் வசீகரத்தை கூட்டின. ஐன்னலுக்கு வெளிய ஒழுகும் மழைநீர் மனதினை தூய்மையாக்கியது.. அந்த குளிரும் அமைதியும் மழையின் ஓசையும் அதன் மீதான ரசனையை எழுத தூண்டியது.. பேனாவையும் பேப்பரையும் எடுத்து அடுக்கினேன். பாட்டிலில் கிட்டதட்ட உறைந்துவிட்டதை போலிருந்த இங்’கை எடுத்து பேனாவில் நிரப்பினேன். எழுத துவங்கினேன்.. எதிலிருந்து துவங்குவது என சிந்திக்கும் போது அந்த ரேடியோவின் சத்தம் காதில் விழுந்தது..

வானிலை அறிக்கை வாசிப்பது என்.ராஜாராமன்..

~தேவன்

    Queenland

    Written by

    Queenland