பட உதவி : Precision Pro Events/YouTube

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்

கலை கொலை செய்யப்படும்போதெல்லாம் கண் திறக்கும் க(ட)வுல்?

மே 8, 2008 —

இந்து/இந்தியக் கடவுள்களை தனது ஓவியத்தின் மூலம் முஸ்லிம் ஓவியர் எம் எஃப் உசைன் (M F Hussain) அவமதித்தார் என்ற வழக்கில் தீர்ப்பு எழுதப்படுகிறது.

புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ கூறியது, “கலை என்பது எப்போதுமே ஒழுக்கமான (chaste) ஒன்றாக இருந்ததில்லை. அறிவிலிகளிகளுக்கும் முழுமையாக ஏற்கத் தயாராக இல்லாதவர்களுக்கும், கலை என்பது தடுக்கப்பட்ட (forbidden) ஒன்றாகவே இருக்கவேண்டும். ஆம், கலை ஆபத்தானதே. கலை ஒழுக்கத்தோடு இருக்கும்போது, அது கலையாகவே இருக்காது.”

இது இதற்குமுன் நடந்திருக்காத ஒன்று. கலைச் சுதந்திரம் (artistic freedom) குறித்த நீதிமன்றத்தின் எந்த ஒரு தீர்ப்பும் அதுவரை ஒரு கலைஞரைக் குறித்துக் காட்டி எழுதப்பட்டிருக்கவில்லை.

வழக்கோ தற்கால கலை (contemporary art) பற்றியது. (ஆனால் அவ்வழக்கு, மிகவும் கேவலமான ஒரு தொனியையும் கொண்டிருந்தது. இஸ்லாமியனான உசைன் ஏன் இந்துக் கடவுள்களையே வரைகிறார் என்று) ஏன் நீதிபதி பண்டைய இந்தியாவின் கலைகள் குறித்து தீர்ப்பில் கூறுகிறார் என்று நினைப்பவர்களுக்காகவே அவர் தனது முதல் பத்தியை எழுதியது போல் நான் கருதிக்கொண்டேன். 😂 அவரது தீர்ப்பே காலாகாலத்துக்கும் கொண்டாடப்படும் கலைப் படைப்பு (art work) என்பதை அவர் அறிந்திருந்திருக்கிறார்.

பண்டைய இந்தியக் கலை காமக்கிளர்ச்சியை (eroticism)வெளிக்காட்டுவதில் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. அது ஆண் — பெண் இணைவைத் தோற்றங்களில் வெளிப்படுத்துவதை (graphical representation) ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தது. (எடுத்துக்காட்டுகள் பட்டியலிடப்படுகின்றன). பண்டைய காமக்கிளர்வூட்டும் இந்தியக் கலை வேலைப்பாடுகள் முற்றிலும் மதத் தொடர்புடையவையாகவே இருந்திருக்கின்றன. மேலும், உணர்வுப் பரவசம் (heightened delight) என்றோ ஆனந்த நிலை என்றோ வர்ணிக்கப்பட்டு ஆன்மாவால் மட்டுமே உணர்ந்துகொள்ளப்படும் என்று அறுதியிடப்பட்டவை.

ஒரு கலைப் படைப்புக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு எழுதுகையில் உலகம் முழுதும் ஐயத்திற்கிடமற்ற வகையில் இவ்வாறு நடந்திருக்கும் என்பதை அந்தப் பேனா மறந்துவிடவில்லை. இன்னும் அறுதியூட்ட இந்தியர்கள் விரும்பும் அமெரிக்கர்களை ஒப்பீட்டுக்குக் கொண்டுவருகிறார்.

அமெரிக்க அரசியலமைப்பின் முதலாவது சட்டத்திருத்தத்தைப் (First Amendment)பேணுவதில் அமெரிக்க நீதிமன்றம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. அந்தத் திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கருத்துச் சுதந்திரத்தின் மேல் முழுமையான தடையை இடுவதன் மூலம் அது சட்டத்தை மீறியோர் தங்களது சட்டமீறலை (transgression) நியாயப்படுத்தும்பொழுது மிகவும் சுமையைத் தருகிறது. எனவே, அரசியலமைப்பில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத நிலையில் (no exceptions), இவை நீதித்துறை சார்ந்த முடிவுகளின் மூலமே வளர்த்தெடுக்கப்படவேண்டும் (had to be evolved by judicial decisions).

மேலும், அங்கு நடந்த பல வழக்குகளின் தீர்ப்புகளையும் எடுத்துரைக்கிறார். இந்தியச் சட்டத்தின் மீதே புரிதலின்றி வழக்கு தொடுத்தோருக்கு அமெரிக்கச் சட்டத்தின் போதனைகள் புரியவா போகின்றது என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

அந்த முதல் சட்டத்திருத்தத்தின் இறுதி வரியை அவர் நம்புகிறார்.

ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்குக்கும் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் அரசியலமைப்பில் இல்லாத நிலையில் அது நீதித்துறை சார்ந்த முடிவுகளின் மூலமே வளர்த்தெடுக்கப்பட வேண்டும்!
Since the constitutional provision contained no exceptions, these had to be evolved by judicial decisions!

எனவேதான், இது போன்ற வழக்குகள் பின்னாட்களில் வராமல் இருக்க வேண்டும் என்று எட்டாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் தலைநகரில் சஞ்சய் கிஷன் கவுல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு எழுதினார்.

அதன் இறுதி பத்திகளில் (epilogue) அவர் இவ்வாறு கூறி முடிக்கிறார்.

பன்முகத்தன்மையே மக்களாட்சியின் உயிர்.
நாம் வெறுக்கும் எண்ணத்திற்கு, ஒரு சுதந்திரத் தன்மை இருக்க வேண்டும். (The thought we hate, should have a freedom)
கருத்து கூறிய பின் சுதந்திரம் இல்லையெனில் கருத்துச் சுதந்திரம் என்பதில் அர்த்தமே இல்லை. மக்களாட்சியின் சுதந்திரப்போக்கையும் இசைவுத்தன்மையையும் (extent of liberty & accommodation) வைத்தே அதன் மெய்த்தன்மை (reality) அளக்கப்படவேண்டும்.
ஒரு வேற்றுக் கருத்தின் மீது பெரும் சகிப்புத்தன்மை (tolerance) இருப்பது எந்த விதமான சேதத்தையும் ஏற்படுத்திவிடாது. மாறாக அது ஒரு மிகப்பெரிய தன்னடக்கத்திற்கு (self-restraint) வழிவகுக்கும். எழுத்திலோ ஓவியத்திலோ அல்லது காட்சி ஊடகத்திலோ ஒரு கருத்தை வெளிப்படுத்தும்போது பன்முகத்தன்மை இருக்கும்போது (diversity in expression of views) அது ஒரு விவாதத்தை மேற்கொள்ள ஆதரவளிக்கிறது. ஒரு விவாதம் எப்போதும் நிறுத்தப்படக்கூடாது. ‘நான்தான் சரி’ என்பதால் ‘நீங்கள் தவறு’ என்று எப்போதும் பொருள் படாது. நமது பண்பாடு (heritage) சகிப்புத்தன்மையை வளர்க்கிறது — நமது எண்ணங்களிலும் செயல்களிலும். படைப்பாக்கத் துறையின் மீதான (creative field) மிகப்பெரிய ஒரு சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தவும் அனைத்தையும் விசாலப் பார்வை (broader thinking)கொண்டு நோக்கவும் ஒரு முன்னுரையாக எனது தீர்ப்பு இருக்கும் என்ற நன்னம்பிக்கையிலேயே இதை எழுதுகிறேன்.
90 வயதான ஓர் ஓவியர் அவரது இல்லத்தில் இருக்க வேண்டியவர் — தூரிகையால் துணியில் வரைந்துகொண்டு… 
A painter at 90 deserves to be in his home — painting his canvass…

எட்டாண்டுகள் கழித்து, சூலை 5, 2016 —

குறிப்பிட்ட சாதியினரையும் பெண்களையும் கடவுள் சார்ந்த நம்பிக்கைகளையும் தனது எழுத்தின் மூலம் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவமதித்தார் என்ற வழக்கில் தீர்ப்பு எழுதப்படுகிறது.

“நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் சொல்வதற்கான உனது உரிமையை உயிருள்ள வரை போராடிக் காப்பேன்” எழுத்தாளர் வோல்ட்டயர் இவ்வாறு கூறினார்.

இதுவும் இதற்குமுன் நடந்திருக்காத ஒன்று. கலைச் சுதந்திரம் (artistic freedom) குறித்த நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு, அந்த கலைச் சுதந்திரத்தைப் பற்றி அதே நீதிபதி எழுதிய இன்னொரு தீர்ப்பினைச் சுட்டிக்காட்டித் தொடங்குவது இதுவே முதன்முறை.

நமது அரசியலமைப்பின் மிகவும் சிறந்த உரிமைகளுள் ஒன்று ஒருவரின் மனதில் இருப்பதைப் பேசவும் (to speak your mind) ஒருவரின் எண்ணத்தில் இருப்பதை எழுதவும் (to write your thoughts) அனுமதிப்பதே. இதில் நியாயமான சில தடைகள் இருப்பினும், ஒருவர் செய்ய முடிந்த அளவு (ambit) என்பது அகன்ற ஒன்றாகும்.
ஒரு புத்தகத்தைப் படித்து அதிலிருப்பதை ஒரு சமூகம் தாக்கப்படாமல் உணர்ந்துகொள்ள தயாராக உள்ளதா எனும் வலுவான வாதம் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது.
காலங்கள் மாறிவிட்டன. முன்னர் எவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தனவோ அவையெல்லாம் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ‘லேடி சாட்டெர்லியின் காதலர்’ ஒரு செவ்விய எடுத்துக்காட்டு.
ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமா எனும் விருப்பம் எப்போதும் அதனைப் படிப்போரிடமே உள்ளது. உங்களுக்கு ஒரு புத்தகத்தைப் பிடிக்கவில்லையெனில், தூக்கி எறிந்துவிடுங்கள். அப்புத்தகத்தைப் படிப்பதற்கு உங்களுக்கு எந்த விதமான கட்டாயமும் இல்லை. இலக்கிய இரசனைகள் (literary taste) ஒருவருக்கொருவர் மாறுபடலாம் — ஒருவருக்கு எது சரியோ அது மற்றவருக்குத் தவறாகப் படலாம்.
என்ன இருப்பினும், எழுதுவதற்கான உரிமை என்பது மறுக்கப்படாத ஒன்று. 
(Yet, the right to write is unhindered one)
உங்கள் எழுத்து அரசியலமைப்பைக் கேள்விகேட்டு அதன் மதிப்புகளையே எதிர்க்க நினைக்கும்போதும், இனச் சிக்கல்களை (racial issues) எழுப்ப நினைக்கும்போதும், சாதிகளைத் தாக்கிப்பேசும்போதும் (denigrate caste), கடவுளுக்கு எதிர்ப்பான கருத்துகளைக் கொண்டிருக்கும்போதும்(blasphemous content), ஒவ்வாத காம உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும்போதும் இன்னும் சொல்லப்போனால், உங்கள் எழுத்து நமது நாட்டிற்கே எதிராக போர் தொடுக்கச் செய்வதாய் இருந்தாலும் சரி, ஐயமே வேண்டாம், அரசு தலையிடும்.

இந்த இடத்தில் கவுல் கருத்துச் சுதந்திரத்தின் வரம்புகளைக் கூறும் அதே வேளையில் எந்த அளவிலெல்லாம் அது எதிர்பார்க்கப்படும் என்பது போன்ற தொனியில் எழுதியுள்ளார். ஆனால், இதன் உண்மை நோக்கம் எனக்குச் சரியாகப் புரியவில்லை.

உசைன் வழக்கைப் போலவே இங்கும் வழக்கு தொடுத்தோர் எண்ணியிருப்பர் — ஏன், இந்த நீதிபதி தேவையில்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று…

உசைனின் வழக்கில் மதச்சாயம் இருந்ததைப் போலவே, இதில் சாதிச்சாயம் பூசப்படுவது கண்கூடு. இன்னொன்றையும் இதில் கருத்தில் கொள்ள வேண்டும். வழக்கு தொடுத்த அத்தனை பேரையும் தாக்கியது என்னவோ, “நாயகி குழந்தை பெறுவதற்கு தன் கண்ணான கணவனை விடுத்து இன்னொருவனை நாடுவது தவறு” என்பதாகத்தான் இருக்கும்.

அதெப்படி ஒரு பெண் இன்னொருவனுடன் உறவு கொண்டு குழந்தை பெற முடியும்? கணவன் மலடனாகவே இருந்தாலும் கூட அவனோடு அல்லவா அவள் படுக்க வேண்டும், அவனோடல்லவா அவள் உறவு கொள்ள வேண்டும், அதுவல்லவோ தமிழ்ப் பண்பாடு, அதுவல்லவோ திருச்செங்கோட்டுக் கலாச்சாரம் — உயிரணுக்களே இல்லையென்றாலும் மலடனின் குறியையே அவள் ஏற்க வேண்டும், அதெப்படி இன்னொருவனுடன் குழந்தை பெறச் செல்லலாம்?

அவள் மலடாக இருந்திருந்தால் பாதி நாவலில் நாயகி கொல்லப்பட்டிருப்பாள், அம்மா வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பாள் அல்லது தெருவில் விடப்பட்டிருப்பாள். கதையின் முடிவில் நாயகன் வேறொருத்தியை மணந்து குழந்தை பெற்று மகிழ்ச்சியுடன் இருந்திருப்பான் — திருச்செங்கோட்டுச் சிங்கங்களும் மகிழ்ச்சியோடு இருந்திருப்பர்.

ஆனால், இந்த முட்டாள் பேராசிரியர் பெருமாள் முருகன் ஒரு பெண்ணையல்லவா குடும்ப வாரிசினை உருவாக்கச் சொல்கிறார் — அதுவும் விழாவுக்கு வந்தவன் விந்திலிருந்து. அதையெப்படி ஏற்பது?

நீதிபதி கூறுவதைப் பார்ப்போம்.

வழக்கு தொடர்ந்தவர், மாதொருபாகனில் வருவதற்கு அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை என்று கூறுகிறார் — அதாவது ஒரு மக்கட்பேறற்ற (infertile)பெண் எவ்வாறு 14ஆம் நாள் தேர்த்திருவிழாவில் வேறொருவனோடு உறவு கொண்டு குழந்தை பெற முடியும் என்று கேட்கிறார். ஆனால், யாருக்கு குழந்தை பெறும் தகுதி இல்லை என்பதைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை — அப்படியிருக்கையில், எழுத்தாளர் மீது அறிவியல் பூர்வமாக குற்றம் சுமத்துவேன் என்பது முரணாக (absurd) உள்ளது. 😂
மாதொருபாகன் சாகித்திய அகாடெமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும் முனைவர். பெருமாள் முருகன் அவரது கொங்கு பகுதியின் வரலாறையும் அப்பகுதியின் பெருமைகளையும் தனது எழுத்தில் கொண்டுவந்ததற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பதையும் அறிகிறேன். இந்திய மொழிகள் திருவிழாவில் (Indian Languages Festival) 2015இற்கான சிறந்த எழுத்தாளர் பரிசையும் இவர் வென்றுள்ளார் என்று அறிகிறேன். இந்த நாவலின் மொழிபெயர்ப்பான One Part Woman-உம் பல பாராட்டுகளையும் மொழிபெயர்த்த அனிருத்தன் வாசுதேவன் தனது பணிக்காக விருது பெற்றிருப்பதையும் அறிகிறேன்.
மேலும், இந்த நாவல் சமூக வரலாற்றைச் சுற்றி, மிகவும் அழுத்தமான மனிதர்களின் கதைகளைக் கலைத்திறனுடன் கூறுவதன் மூலம் திருச்செங்கோடு பகுதியில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்தாள்கிறார்.
(இங்கு நீதிபதி தமிழில் வெளியான பல வயதுவந்தோர்க்கான நூல்களையும் குறிப்பிடுகிறார்)
இந்த நாவல், அவமதிக்கிறதா— அசிங்கமாக இருக்கிறதா என்பதற்காக சோதனை செய்யும்போது, அது போன்ற ஒரு சோதனையை ஓர் உணர்ச்சிப் பொங்கியெழும் மனிதனிடம் விடமுடியாது — அவனது கண்கள் அதிலுள்ள அசிங்கத்தை மட்டுமே பார்க்கும். கலையழகைத் தவிர்த்துவிடும், ஏனெனில் அவனது எண்ணங்கள் ஏற்கனவே சிறைபடுத்தப்பட்டுவிட்டன.
கத்தி, பி.கே., (PK) ஒரே ஒரு கிராமத்திலே, தி டாவின்சி கோட், குஷ்பு கருத்து கூறிய விவகாரம், ஃபைன்டிங் ஃபேன்னி (Finding Fanny), எ டேல் ஆஃப் 4 சிட்டிஸ் — போன்ற பல வழக்குகளை எடுத்துக்காட்டி இவற்றில் எவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது என்று கூறுகிறார்.
இந்தப் புத்தகம், எழுத்தாளரின் ஓர் இலக்கியப் படைப்பு. ஓர் ஓவியர் தனது எண்ணத்தை வரைகிறார்; ஒரு சிற்பி தனது உளி கொண்டு தனது எண்ணத்தைச் செதுக்குகிறார்; அதேபோல, ஓர் எழுத்தாளர் எழுதுகிறார்.
ஏற்கனவே ஓர் ஓவியம் தொடர்பான வழக்குக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு, எதிர்த்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஒரு புத்தகம். ஓவியத்தை ஒப்பிடுகையில், ஒரு புத்தகம் இன்னும் அதிகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும். ஒரு கருத்தாக்கத்தை (theme)உண்டாக்கும். எனவே,
ஒரு புத்தகத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, உடனேயே இது அசிங்கமான ஒன்று என்று ஒதுக்கிவிடக் கூடாது, அது முழுமையாக படிக்கப்பட்டு, முழுமையாக புரிந்துகொள்ளப்பட்டு, முழுமையாக ஆராயப்படவேண்டிய ஒன்று. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சொற்றொடர்களை எடுத்து ஒரு புத்தகத்தை மதிப்பிடுவது தவறு. மேலும் இது ஒரு வரலாற்றுப் புத்தகமன்று; இது ஒரு நாவல் — இதில் கலை உணர்வே மேம்படும்.
இந்தியாவின் காமக்கிளர்ச்சியூட்டும் அதிகபட்சமான இலக்கியங்களெல்லாம் இந்துக் கடவுளான கண்ணனையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன.
(இங்கு நீதிபதி மாதொருபாகன் கதையின் பெரும்பகுதியை அனிருத்தனின் ஆங்கில வரிகளில் விவரிக்கிறார்)
நாடு விடுதலை அடைந்தபிறகு, பல தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட சமூக மாற்றங்கள் பலவும் நடந்தேறின. விரும்பத்தகாத சமூக வழக்கங்களான சதி (Sati)போன்றவை இந்த இயக்கங்களுக்கு வித்திட்டன. இந்தியாவின் அரசியலமைப்பு தோன்றியதிலிருந்து கருத்துச் சுதந்திரம் பரவலாக நீதிமன்றங்களால் உறுதி செய்யப்பட்டது.
எந்த ஒரு சுதந்திரமும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படக் கூடாது (not in absolute sense). எனவே கருத்துச் சுதந்திரமும் சில கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மாதொருபாகனைப் பொறுத்தவரையில், அது அசிங்கமாக (obscene)உள்ளது என்பதே முதன்மையான எதிர்ப்பு.
சரி, எவ்வாறு அசிங்கத்தன்மையைச் சோதிப்பது?
அ) ஒரு புத்தகம் முழுமையாக படிக்கப்படும்பொழுது மிகவும் காம உணர்வு கொண்டதாகவும், இச்சையைத் தூண்டக்கூடியதாகவும் இருக்கிறது.
ஆ) ஒரு புத்தகம் எந்த ஒரு இலக்கிய, கலை, அறிவியல் மதிப்பையும் பெற்றிராததாக இருக்கிறது. இந்த மதிப்புகளெல்லாம் இல்லையென்று கூறுவது வழக்கு போட்ட தரப்பினரின் வேலை என்பது ஒரு புறம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் 😈
ஒழுக்கமும் ஒழுங்கீனமும் (decency & obscenity) தொடர்புடைய சொற்கள். ஒரு புத்தகம் இதில் என்ன கூறுகிறது எனும் முடிவு நீதிமன்றத்திடம் விடப்பட வேண்டுமா அல்லது அதனைப் படித்து உணர்பவர் உணர வேண்டுமா ?
திரைப்படம் என்று வரும்போது இது குழந்தைகளுக்கு ஏற்றதன்று, அது ஏற்றது என்று வரைமுறைகள் உள்ளன. ஆனால், புத்தகங்களுக்கு என்று அவ்வாறு ஏதும் இல்லை.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் மனிதர்கள் சமூக பொருளாதார வகைகளில் பின் தங்கியவர்கள் — எனவே, அவர்கள் பயன்படுத்தும் தமிழ் மொழியின் வழக்கை (rustic language) அவர்களின் பார்வையிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு உட்த்தா பஞ்சாப் (Udta Punjab)படத்தின் வழக்கையும் கருத்தில் கொள்ள வேண்டும். தணிக்கைத் துறை (CBFC)அந்தப் படம் பார்ப்போர் மனதைப் பாதிக்கும் என்று கூறியிருந்தது. ஆனால், ஒரு பாதிப்பைப் பற்றிக் கூறுகையில் அது எவ்வளவு உண்மையானதாக (reality) இருக்கிறது என்பது முக்கியமானது.
நானும் நீதிபதி புஷ்பா சத்யநாரயணாவும் இந்த நாவலை முழுமையாகப் படித்தோம். அசிங்கமாக உள்ளது என்று குறிப்பிடப்படும் தமிழ் பதிப்பையே நீதிபதி புஷ்பா படித்தார். முடித்தவுடன் நாங்கள் எங்களுக்குள் கேட்டுக்கொண்டது —
இந்த நாவல் குழந்தையற்ற ஒரு தம்பதியரின் பாவப்பட்ட நிலையை விளக்குகிறதா இல்லை காம இச்சையைத் தூண்டுகிறதா?”
இது வெற்றியாளர்களையும் தோல்வியுற்றோரையும் பற்றிக் கூறும் வரலாற்றுக் கதையில்லை. இது, குழந்தையற்ற ஏழ்மையான ஒரு தம்பதியின் வாழ்க்கையில் நாளுக்குநாள் நடைபெறும் நிகழ்வுகள் — அவர்கள் இருவரும் அன்பாக இருந்தும், சமுதாயத்தின் பார்வையில் குழந்தை பெறுவதே (progeny)முதன்மையானதாகக் கருதப்படுவதால் அவர்கள் படும் பாடே (struggle) கூறப்பட்டுள்ளது.
இந்த நாவலின் பல பகுதிகளையும் (excerpts) நாங்கள் எங்கள் தீர்ப்பில் எடுத்துக்காட்டியுள்ளோம். ஆனால், இந்த நாவலை அட்டை முதல் அட்டை வரை படித்தால்தான் அதன் சாரம் புரியும்.
இந்த நாவல் உங்களை அதிரவைக்கும், எதிர்தரப்பினர் கூறுவதைப் போல் அல்ல. 😂 ஏனெனில், அது ஒரு குழந்தையற்ற தம்பதியரின் சொற்களில் சோகத்துடன் கூறப்பட்டுள்ளது. இதுவே நாங்கள் அந்நாவலில் இருந்து எடுத்துக்கொண்டது. (Our take-away)
எங்களுள் ஒருவர் மாதொருபாகனின், ஆங்கில மொழிபெயர்ப்பையே படிக்க முடிந்தது — மொழிச் சவாலினால். (language handicap) ஆனால், நாங்கள் இருவருமே, அனிருத்தனின் ஆங்கில மொழிபெயர்ப்பு, வெறும் மொழிபெயர்ப்பில்லை. அது இக்கதையின் ஆழத்தை (heart of the story)அழகாய்க் காட்டுகிறது என்று ஒப்புக்கொண்டோம்.
இந்தப் புத்தகம் நான்கு ஆண்டுகளாக கடைகளில் இருக்கிறது. ஆனால், அதன் ஆங்கிலப் பதிப்பு வந்த பிறகுதான் பலரது உணர்வுகளும் தலைதூக்கின.
எல்லா நிலைகளிலும், புத்தகக் கடையின் அலமாரிகளில் பல வயதினருக்கும் ஏற்ற பல வகையான புத்தகங்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஒரு புத்தகம் பிடிக்கவில்லையெனில், அதை மூடி வைத்துவிடுங்கள், அவ்வளவுதான். புத்தகத்திற்கே தடை விதிப்பது என்பது ஒரு தீர்வில்லை. 🙏
காமம் என்பது விரும்பத்தகாத ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அதுதான் மனித இனத்தின் ஒரு ஒன்றிணைந்த பகுதி என்பதும் மறுக்க முடியாதது.

பிறந்து வளர்ந்து தொழில் செய்தது எல்லாம் வட இந்தியாவில். மொழி முதல் தொழில் வரை எல்லாமே சம்மந்தமில்லாத ஒன்று. இருந்தாலும் ஒரு கலைஞர் மேல் மத — சாதி — பால் காழ்ப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு என்பதை முற்றிலும் அறிந்திருந்த கவுல், உசைன் வழக்கைத் தனியாகக் கையாண்டது போல் இல்லாமல், இவ்வழக்கின் சாராம்சமாக “திருச்செங்கோட்டுப் பெண்கள் அவமதிக்கப்படுகின்றனர்” என்ற கருத்து இருப்பதால் நீதிபதி புஷ்பா அவர்களை உடன் இணைத்துக் கொள்கிறார்.

எம் எஃப் உசைன் வழக்கினை ஓர் இந்தியன் என்ற பார்வையில் தனியே தீர்த்து வைக்கிறார்.
பெருமாள் முருகன் வழக்கினை அந்தப் புத்தகத்தின் தலைப்பினைப் போன்றே, மாதை ஒரு பாகமாகக் கொண்டு, ஒரு கலை ஆர்வலராகத் தீர்த்து வைக்கிறார்.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தீர்ப்பின் முடிவுரைகள் மிகவும் ஆழமானவை, அரசியலமைப்பின் பல பாகங்களையும் அலசுபவை, உலக நீதி வரலாற்றை எடுத்தாண்டு ஒரு முழுமையான நீதியை (universal justice) வழங்கத் துணிபவை, அரசியலைப்பின்பால் என்னைப் போன்ற ஒரு சாதாரண குடிமகன் பற்றிழக்காமல் இருக்கத் தூண்டுபவை, ஏன் இந்தியாவின் அரசியலமைப்பு மிகச் சிறந்தது என்று அடித்துரைப்பவை, எவ்வாறு அது உலகத்தின் மக்களாட்சிகளை பல வகைகளிலும் ஒத்திருக்கிறது என்று பாடம் கற்பிப்பவை.

தமிழகத்தில் கலைஞர்களாலும் கலை ஆர்வலர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்தீர்ப்பின் முடிவுரையைக் (epilogue) காண்போம்.

ஒரு நாவலைத் தடை செய்வதன் மூலம் மட்டும் அதன் கதை கூற விழையும் உண்மையான பார்வை இச்சமூகத்தில் பேசப்படாமல் போய்விடுமா ?
புத்தகத்தினைத் தவிர்த்த இன்ன பிற ஊடகங்களின் இலாபத்தன்மையும் பிரபலமும் (profitability & popularity) மிக அதிகம் என்றாலும், புத்தகங்களே நமது வரலாறைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், நல்ல புத்தகங்கள் ஏன் அதிகாரத்தன்மை மிக்கும், சரியான நியாயப்படுத்துதலோடும், விவாதிக்கத்தக்கதாகவும் இருக்கின்றன என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. அப்புத்தகங்கள் அவற்றின் கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு ஆணித்தனமான கொள்கைகளைக் கொடுக்கின்றன. இத்தகைய மதிப்புகளற்ற சில புத்தகங்களும் ஒரு சில வேளைகளில் இது போன்ற தாக்கங்களை (splutter) ஏற்படுத்தக்கூடும். ஆனால், அவை காலத்தால் நிலையானவை அல்ல. ஆனால், நல்ல புத்தகங்கள் இந்தக் கலை எனும் கடலில் என்றும் நிலைத்து நீந்தும் தன்மை பெற்றவை.
இந்த வழக்கில் ‘முதலில் தண்டனை வழங்கு; பின்பு விசாரி ’ (‘Sentence First; Trial Next’) என்பது போன்ற தொனியே மேலோங்குகிறது.
தைரியமாகச் சிக்கலான ஒரு கருத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்படும்போது அது பற்றிப் பல தளங்களிலும் பேசப்படுகிறது. அந்தப் பேச்சுகளெல்லாம், விற்பனைக்கு (sales)வழிவகுக்கின்றன. புத்தகத்தைப் பதிப்பிப்பது என்பது ஒரு வணிகச் செயல்பாடு மட்டுமில்லை, அது சில வேளைகளில் சமூகத்தின் மேம்பாட்டிற்ககவும் கூட செய்யப்படுகிறது. ஒரு பதிப்பகம் என்பது அவர்களின் எழுத்தாளர்களின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டு அவர்களின் கலை ஆர்வத்தையும் ஆதரிக்க வேண்டும். இல்லாவிடில் பதிப்பகத்திற்கு வேண்டியவை கிடைக்காமல் போகக்கூடும்.
மாதொருபாகனையும் தடை செய்யக் கோரும் அனைத்து எழுத்துப்பூர்வ மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். 😝
எம் எஃப் உசைனின் வழக்கில் தீர்ப்பு (இக்கட்டுரையின் முதல் பத்தி) பாப்லோ பிக்காசோ “கலை என்பது எப்போதுமே ஒழுக்கமான (chaste) ஒன்றாக இருந்ததில்லை. கலை ஒழுக்கத்தோடு இருக்கும்போது, அது கலையாகவே இருக்காது.” எனும் வரிகளோடு தொடங்கியது. அதே வழியில், எழுத்துகள் தனிமனித வெளிப்பாட்டின் தூதுவர்கள். (Writings are vehicles of personal expressions) அவை புரிந்துகொள்ளப்பட்டு பாராட்டப்பட வேண்டியவை. அவை உணர்வுகளைத் தூண்டுவதாக இருந்தாலும், நமது சீரிய பண்பாட்டின் பழமையைக் கருத்தில்கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை.
சமூகத்தில் ஒரு சாராருக்கு முரணாக இருக்கும் அனைத்து எழுத்துகளையும், அவை அசிங்கமானவை, ஆபாசமானவை, இழுக்கிழைப்பவை, காமக்கிளர்வூட்டுபவை, அநீதியானவை என்று கூறி ஒதுக்கிவிடக்கூடாது. அதே நகரில் பிறந்து வளர்ந்த ஓர் எழுத்தாளார் பெருமாள் முருகன் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
இந்த வழக்கில், முன்னோரை (ancestors) அசிங்கப்படுத்திவிட்டார் என்று ஒரு சாரார் தொடர்ந்த வழக்கின் நிலை இப்போது என்ன ? புனைவு நாவல் (fiction novel) என்பதால் ‘திருச்செங்கோடு ’ எனும் பெயரே அடுத்த பதிப்புகளில் இடம்பெறாது, அக்கதை எந்த இடத்தை வேண்டுமானாலும் அமைவிடமாகக் கொண்டு எடுத்துக்கொள்ளப்படலாம் எனும் அளவுக்கு பெருமாள் முருகன் பாதிக்கப்பட்டோருக்காக இறங்கியதில் மேல்குறிப்பிட்ட நோக்கமே தோற்றுவிட்டது. ‘நமது எழுத்தில்லை ’ (not-our-kind) என்ற போதும் ஆண்டாண்டுகாலமாக இருந்துவந்த ஓர் எழுத்துவகை தற்போது எழுதப்படுகையில் அதன் மீது ஒரு சகிப்புத்தன்மை (tolerance)வேண்டும். பெருமாள் முருகனைப் போன்ற எழுத்தாளர்களையும் பிற கலைஞர்களையும், படைப்பில் ஏதாவது சிறு தவறு நேர்ந்தாலும் பெரிதாக பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற தொடர் நடுக்கத்திலேயே இருக்க வைப்பது தவறு.
இந்த நாவலின் ஆசிரியர் முனைவர். பெருமாள் முருகன் பயப்படத் தேவையில்லை. அவர் எழுத வேண்டும். அவர் எழுத்துகளின் பாணியின் மீது பலருக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பினும் அவர் எழுத்துகள் இலக்கியக் கொடையாகும். (literary contribution)
பெருமாள் முருகன் எனும் எழுத்தாளர் இறந்துவிட்டதாக அவர் எடுத்த முடிவு அவருடையதில்லை என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அது அவருடைய முழுச் சுதந்திரமான மனநிலையில் எடுக்கப்பட்ட முடிவில்லை. அது அவர்மீது வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு திணிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையினால் வந்த விளைவு.
காலம் ஒரு மிகச்சிறந்த வலி நீக்கி. இந்த உண்மை பெருமாள் முருகனுக்கு மட்டுமன்றி அவரது எதிர்ப்பாளர்களுக்கும் பொருந்தும். இரு தரப்பினரும் அவர்கள், முன்னேறும் ஒரு பலம்வாய்ந்த மக்களாட்சியின் குடிமக்கள் (citizens of a progressive and vibrant democracy) எனும் கருத்தை உணர்ந்து இந்தச் சிக்கலை இத்தோடு விட்டொழித்து அவரவர் துறையில் முன்னேற வேண்டும்.
மேலும், பாதிப்புகளைத் தாண்டி, காலம் நமக்கு மறக்கவும் மன்னிக்கவும் கற்றுத்தருகிறது. (to forget & forgive) காலத்திற்கு அது செயல்படத் தேவையான இடத்தைக் கொடுத்தோமானால், அது நம்மை மிகவும் அழகிய சாலைகளுக்குக் கூட்டிச்செல்லும்.
இந்த வழக்கை நாங்கள் இவ்வாறு முடிக்கிறோம் —
இந்த எழுத்தாளர் எதில் சிறந்தவரோ, அதில் உயிர்த்தெழட்டும். எழுதட்டும்
Let the author be resurrected to what he is best at. Write

இது ஒரு சாதாரண தீர்ப்பில்லை. அவரது வரிகளில் எதிர்த்தரப்பினை எவ்வாறெல்லாம் எழுத்துகளில் சாட முடியுமோ அவ்வாறெல்லாம் சாடுகிறார். பல வேளைகளில், “இது எதிர்த்தரப்பினர் வேலை என்று கூற கடமை பட்டுள்ளேன்” என்று அவர்களைக் கிண்டலடிக்கிறார். அவரது எம் எஃப் உசைனின் கலைச் சுதந்திரம் குறித்த தீர்ப்பைப் பற்றி அறியாத கும்பலிடம்தான் பேசுகிறோம் என்பதை அறிந்து, எழுத்தாளருக்கும் எதிர்தரப்புக்கும் மட்டுமன்றி, இனிமேல் இது போல் வழக்கு தொடர விழைவோருக்கும் அறிவுரைகளை முடிவுரையில் காலம் எனும் கருவி கொண்டு கூறுகிறார். ஆம், 2008ஆம் தரப்பட்ட தீர்ப்பை மறந்ததாலேயே மீண்டும் இதுபோன்ற வழக்குகள் இன்னும் தொடரப்படுகின்றன என்பதை உணர்கிறார். அதனையும் மன்னிக்கிறார், அவரது மொழியில் சொல்லப்போனார் சகித்துக்கொள்கிறார்.

இந்தத் தீர்ப்பின் முதல் பத்தியில் கூறிய வோல்ட்டையரின் வார்த்தைகள் போன்றுதான், அவர் இருக்கிறார். எந்த இடத்தில் கலை கொலை செய்யப்பட்டாலும் அதனைக் காக்க ஒரு க(ட)வுல் இருக்கிறார் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

பெருமாள் முருகனுக்கே இந்தத் தீர்ப்பின் கடைசி வரிகள் முழு உணர்வுடன் விளங்கும். மீண்டெழுங்கள், உயிர்த்தெழுங்கள், அதே சிறப்புடன் திரும்பிவாருங்கள் — எழுதுங்கள்.

பெருமாள் முருகனின் காயம்பட்ட மனத்திற்கு நீதிபதி சஞ்சய் கவுலின் தீர்ப்பு கண்டிப்பாக ஒரு வலி நீக்கி. அதைத்தான் தனது முதல் வரியிலிருந்து இறுதி வரி வரை அவர் கூறுகிறார். தான் மட்டுமே இது போன்ற வழக்குகளை எடுத்தாளக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நீதிபதி புஷ்பாவையும் தன் கூட்டணி ஆக்குகிறார் — மாதொருபாகன்! 😊

ஆக மொத்தம், ஒரு பரந்த மனப்பான்மை (liberal society) கொண்ட சமூகத்தை உருவாக்குவதில் அவர் குறிக்கொண்டிருக்கிறார். என்னிடம் வந்தால் நீதி மட்டுமே ஒரே முடிவு என்று தனது எழுத்துகளில் முழங்குகிறார் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்.

இந்த இரு தீர்ப்புகளையும் வரிக்குவரி படிக்கும்போது மேலும் பல முற்போக்கான வழக்குகளின் தீர்ப்பதிகாரம் அவரது கைகளில் இருக்கக்கூடாதா என்ற ஆவலே மேலோங்குகிறது.

(கவுல் தீர்ப்பு வழங்கலாமே என நான் எதிர்பார்க்கும் வழக்குகள், 
Decriminalizing Homosexuality/தற்பாலீர்ப்பை குற்றமற்றதாக்குதல், Common Civil Rights Act/பொதுக் குடியுரிமைச் சட்டம் &
Restructuring Press Rights/ஊடக உரிமைகளை மறுஆய்தல் etc)


குறிப்புகள்

  1. நான் மாதொருபாகன் நாவலையோ அதன் மொழிபெயர்ப்பான One Part Woman-ஐயோ இன்னும் படிக்கவில்லை. அந்நாவலைப் பற்றிய மதிப்புரைகளையும், அதன் பொதுவெளிக் குறிப்புகளையும், தீர்ப்பின் முழு நகலையும் மூலமாகக் கொண்டே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். பிழை இருப்பின் சுட்டவும் — திருத்திக்கொள்கிறேன்.
  2. எம் எஃப் உசைனின் வழக்கு இந்தியா முழுமையும் எந்த அளவு தாக்கம் உண்டாக்கியது என்பதை முழுமையாக அறியும் வயது எனக்கு அப்போது இல்லை. எனவே, அவ்வழக்கின் தீர்ப்பின் முழு நகலையும், ரெடிஃப் தளத்தில் இருந்த அதன் மீதான ஒரு கட்டுரையையும் மூலமாகக் கொண்டே இக்கட்டுரையின் முதற்பகுதி எழுதப்பட்டுள்ளது. பிழை இருப்பின் சுட்டவும் — திருத்திக்கொள்கிறேன்.
  3. நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் குறித்து தி நியூஸ் மினிட் தீர்ப்புக்கு அடுத்த நாள் வெளியிட்ட கட்டுரை (என்னை முந்திவிட்டனர்)
  4. ழுத்தாளர் பெருமாள் முருகன் தான் மீண்டும் எழுதப்போவதாய் அறிவித்தது — தி நியூஸ் மினிட்

பிடித்திருப்பின் 💚 என்ற குறியை அழுத்தவும். மிகவும் பிடித்திருப்பின் நண்பர்களோடு பகிரவும்!