விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யலாமா?

சிறு குறு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் விதித்த ஆணைக்கு ஆதரவும் எதிர்ப்பும் என கலந்த பார்வைகள் வருவதைப் பற்றிய ஒரு பார்வை.

Courtesy: http://in.reuters.com/article/india-protest-idINKBN1751FR (Used without permission under educational and purposes. All rights reserved to Cathal McNaughton for Reuters.

நாட்டுடைமை வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் ஐந்து ஏக்கரும் அதற்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் தருவது அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கத்தான். மழை பொய்த்து வறட்சி பொங்கும் இந்தக் காலத்திலும் எனக்கு “வட்டியும் அசலும்தான் முக்கியம்” என்று அவ்வங்கிகள் வளம் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பது தவறான முன்னுதாரணம்.

எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் இப்படி இருப்பதில் வியப்பேதுமில்லை, ஆனால், அரசிடம் பணம் பெற்றுப் பகிர்ந்தளித்து இந்தியாவின் பொருளாதார ஓட்டத்தில் ஒன்றரக் கலந்துள்ள வங்கிகள் இப்படி இருப்பது மிகவும் தவறு.

மதுரை உயர்நீதிமன்றம் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ளவர்களின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதைப் பல மனசாட்சியற்ற நடுநிலை நக்கிகள், “அதெப்படி நீதிமன்றம் இப்படிச் சொல்லலாம்? அரசியலமைப்பில் இதுபோன்ற முன்னுதாரணம் எதுவும் இல்லையே” என்று முதலைக்கண்ணீர் விடுகிறார்கள். “அனைத்துக் குடிமகன்களுக்கும், சமூக, பொருளாதார, அரசியல் நீதியை வழங்குவதை உறுதி செய்கிறோம்” என்றுதான் அரசியலமைப்பின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலுமான இந்த ஆணையைக் கூட எப்படி வெறும் எண்கள் சார்ந்தே பார்க்க அப்படிப்பட்ட ஆட்களுக்கு மனம் வருகிறதோ?

எண்களால் ஆனது பொருளாதாரம் என்று பார்க்கும் எந்த ஒரு நாடோ, மாநிலமோ, சிறு நிலம் சார் அரசியல் அமைப்போ என்றைக்குமே அதன் குடியைப் புரிந்துகொண்டதில்லை. மேலும், அது போன்ற ஆட்கள்தான் இன்று நம்மை ஆள்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பொருளாதாரத்தை வெற்று எண்களாகப் பார்த்த ஒரு முட்டாள்தான் பணமதிப்புநீக்கம் என்ற ஒரு மிகப்பெரும் பேரழிவை உண்டாக்கியது; அதே முட்டாள்தான் பின்னர், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு ரூ. 46,000 கோடியை ஒதுக்கிப் பாவத்திற்குப் பரிகாரம் தேடிக்கொண்டது. இதுபோன்ற எண் கணித மேதைகள் பொருளாதாரத்தின் அதிகார மையமொன்றில் இருக்கும்வரை இது போன்ற மனிதத்தன்மையற்ற செயல்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும்.

ஒரு குடிவாழ் நிலத்தின் பொருளாதாரம் வெறும் எண் கணிதமில்லை; இந்த மதிப்பைக் குறைத்தால் அந்த மதிப்பு உயரும் என்று நேர்மாறல் எதிர்மாறல் கணக்குகள் போட்டு மேலாண்மை செய்வதற்கு; அது அந்நிலக்குடிகளின் வாழ்வு, கையிருப்பு, சேமிப்பு, செலவாணி, வரவு, கடன், வட்டி, முதல், புழங்கல், வைப்பு எனப் பலவற்றையும் உள்ளடக்கியது.

நிர்வாக ஒதுக்கீட்டில் பொறியியல் படித்து, கேட் எழுதி ஐஐஎம்-இல் எம்.பி.ஏ. படித்து, இதையெல்லாம் அறியாது நிதித்துறைச் செயலாளரோ ரிசர்வ் வங்கி ஆளுனரோ ஆகி என்ன பயன்?


பிடித்திருந்தால் 💚 அழுத்தவும் அல்லது நண்பர்களுடன் பகிரவும்.