செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

அறிவியலாளர்கள் பல ஆண்டுகளாக தானாக சிந்திக்கும் திறன் உள்ள இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கணிணிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே இத்தகைய ஓர் இயந்திரம் சாத்தியமா என்ற கேள்வியை அனைவரும் தங்கள் மனதில் அசைபோட்ட வண்ணமே இருந்தனர். அவர்களின் கனவு மெய்ப்படும் வண்ணம் இன்று செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) வெகு வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாக மாறியுள்ளது. மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய சிறு பணிகளை தானியக்கவும், பேச்சு, எழுத்து அல்லது படங்களை புரிந்து கொள்ளவும், மருத்துவத் துறையில் நோய்களை கண்டறியவும், அடிப்படை அறிவியல் ஆய்வுகளில் உதவி புரியவும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் பயன்படுகிறது. இன்று எளிதில் பல துறைகளில் பயன்படுத்தப் படுவதோடு, பல வல்லுனர்கள் ஆய்வு மேற்கொள்ளும் ஓர் தலைப்பாகவும் இது விளங்குகிறது. அயல் நாடுகளில் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தன்னிச்சையாக இயங்கக்கூடிய மகிழ்வுந்துகளையும் (self driving car) தயாரித்து வருகின்றனர்.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய உலகின் மூத்த மொழியாகிய தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. பல்லாயிரம் ஆண்டுகள் முதுமை கொண்ட மொழியாயினும் அதே அளவிற்கு இளமையும் உடையவள் நம் தமிழ் தாய். சுயமி (selfie), பணமதிப்பிழப்பு (demonetization), கீச்சு (tweet), முகநூல் (facebook), பகிறி (messenger) என பல புதிய வார்த்தைகளையும் தந்து நமது இளைய இணைய தமிழர்களின் திறன்பேசியிலும் விளையாடி வருகிறது நம் தமிழ் மொழி. பல வெகுவாக பேசப்படும் மொழிகளே இணையத்தில் தன் இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்க அங்கும் தன் கொடியை நாட்டி ஆதிக்கம் செலுத்த தமிழை தாயாக மதிக்கும் நம் தமிழர் படையே காரணம்.

மென்பொருள் நிரலாக்கம் (Software programming), தரவு அறிவியல் (Data Science), பெரிய தரவு (Big Data), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence),
இயந்திர கற்றல் (Machine Learning), கணினி தோற்றம் (Computer Vision), இயற்கை மொழி நிறையாக்கம் (Natural Language Processing) போன்ற துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களில் நமது தமிழர்களே சிறந்து விளங்குகின்றனர். இந்த துறையில் சிறந்து விளங்க கணிதம், அறிவியல், கணிணியியல், மொழியியல், உளவியல் என பல துறையின் அறிஞர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும், அல்லது பல்துறை அறிஞராக இருத்தல் வேண்டும். இதற்கான சிறு முயற்சியே இந்த பதிவு. மேலும் இத்துறை குறித்து எனது கருத்துகளை பகிர முயற்சிக்கிறேன்.

நாம் இந்த தொழில் நுட்பங்களை தமிழில் கொண்டுவரவும், இதன் மூலம் நமது தொன்மையான இலக்கியங்களையும், அறிவியலையும் மின் வடிவில் எளிதில் அடையும் வண்ணம் செயலிகள் (apps), துணைவி (assistants), வாயாடி (chatbots) என அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உயிரினும் மேலான தமிழ் மொழியினை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஆவண செய்தல் நம் தலையாய கடமையாகும்.

தமிழ்ப்பணி தொடரும்…