புதிய புரட்சியாளன்

எனக்கு சக மனிதர்களிடத்தில் சலித்துப் போய்விட்டது.வெறும் தன் பிரச்சனைகளுக்காக சுயநலத்திற்காக மட்டும் பேசும் மனிதர்களைப் பார்த்து வெறுப்படைந்து வருகிறேன்.மனதில் ஆயிரம் ஆசைகளை வைத்துக்கொண்டு அதை வெளிக்கொணரவும் முடியாமல் வெளிக்கொணர வாய்ப்பும் கிடைக்காமல் இருப்பதைக் கண்டு என் உள்ளம் வெதும்புகிறது.

என் ஆசைகள் அனைத்தும் எனக்கானவை அல்ல.என் மக்களுக்காகவும் மொழிக்காகவுமே.என் பெரிய பெரிய கனவுகளை என்னுடன் இருப்பவர்களிடத்தில் கூறினால் எனக்கு வரும் விடை பெரிதாக ஆசைபடாதே!சாதரணமாக நிம்மதியான வாழ்வை வாழ்ந்துவிட்டு போ என்கின்றனர்.

என் கனவுகள் யாவும் அதீத ஆசைகள் என்று கூறிவிடமுடியாது.என் மக்கள் துன்பம் அன்றி மற்றவர்களை போல் உரிமையுடன் வாழ வேண்டும்,என் மொழி உலகம் முழுவதும் போய்ச் சேர வேண்டும்.மனிதன் தன் உரிமைகளோடு நல்ல வாழ்வை வாழ்வதே பெரிய கனவு ஆகிவிட்டதே என்பதை பார்த்து சிரிப்பதா கவலை அடைவதா என்று எனக்கு விளங்கவில்லை.பாரதி போன்ற யுகப் புரட்சியாளர்களின் கவிதைகளை படிக்கும் போது ஒரு மாபெரும் உணர்வெழுச்சி மனதுள் உருவாகுகிறது.ஆனால்,அவை யாவும் மனதென்ற பெட்டிக்குள் மற்ற மனிதர்களை பார்த்த உடன் பூட்டப்படுகிறது.

இதற்கு உவமையாக கடலடியில் இருக்கும் எரிமலையைக் கூறலாம்.எங்கோ தரையில் இருக்கும் எரிமலை வெப்பமானால் உலகமே அதைப்பார்த்து அஞ்சுகிறது.அதே கடலுக்கடியில் இருக்கும் எரிமலைகளை நாம் நினைத்து கூட பார்ப்பதில்லை.

இந்த புதிய புரட்சியாளர்களின் மனம் கடலடியே இருக்கும் எரிமலை போல அதில் தீ கொதித்தாலும் சமூகம் என்ற கடல் அதை அடக்குகிறது.அவ்வப்போது நீரின் மேலே வரும் நீர்க்குமுளி போல் உணர்வுகள் வெளிப்பட்டாலும் உனக்கு ஏன் இந்த தேவையற்ற வேலை என்னும் சொல் ஊசியால் அதை உடைத்து விடுகின்றனர்.இன்றுள்ள புதிய புரட்சியாளர்களின் நிலைமை இதுவே.அடக்கவும் முடியாமல் வெளிக்கொணரவும் முடியாமல் சில வருடங்கள் பிடிக்காத வாழ்க்கையை மற்ற வேடிக்கை மனிதரைப் போல் வாழ்ந்துவிட்டு மடிகின்றனர்.