தாயன்
Aug 22, 2017 · 2 min read

தரமணி

“எனக்கு ஐம்பது வயதாகும் போதும் ‘ஷார்ட்ஸ்' அணிய விருப்பமிருந்தால் அணிவேன்.”

“ஒரு பெண்ணை அவளது உடைகளுக்காக அல்லாமல் செயல்களுக்காக மதிக்கத் தெரிந்தவனாக என் மகனை வளர்ப்பேன்” — சிலவருடங்களுக்கு முன் 'ட்விட்டரில்' தன் மீதான ஆடை சுதந்திரம் குறித்த விமர்சனங்களுக்கு நடிகை கனிஹா கூறியதாக 'இண்டியா டுடே’ வாரஇதழில் வெளியான செய்தி.

உலகமயமாக்கலோடு இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் பெண்ணியச் சிந்தனையைக் குறித்துப் பேசும் படைப்பு என்கிற ரீதியில் முன்னேறிக் கொண்டிருக்கும் சமூகத்தின் கால்களை மீண்டும் பின்னோக்கி இழுக்கும் அவலம்.

கணவனைப் பிரிந்து வாழும் Single mother-கள் மீது சமூகம் சுமத்தும் அத்துணை குற்றச்சாட்டுகளையும் உண்மையென்றே சொல்ல வைக்கும் ஆரித்தியா ஜான்ஸனின் (ஆண்ட்ரியா) பாத்திரப் படைப்பு. சர்ச்சைகளுக்கு பயந்து ஆரித்தியாவை ஆங்லோ-இண்டியன் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாகக் காட்டியிருக்கிறார். ஆனால் ஆங்லோ-இண்டியன் சமூகத்தைப் பொறுத்தவரையிலுமே குட்டைப் பாவாடையும், விவாகரத்திற்குப் பின் ஒரு பெண் தனித்து வாழ்வதும் பெரும் குற்றமாகப் பார்க்கப்படுவதில்லையே என்ற கேள்வி எழும்போதே இப்படைப்பு தர்க்கரீதியாகத் தோற்றுவிட்டது.

ஆரித்தியாவின் மேலாளர் அங்கித் என்கிற பாத்திரம் அவளை நோக்கிச் சொல்லும் வசனமொன்று //என் மனைவி ஒன்ன மாதிரி இல்ல, Tradition.. Saree கட்டுற டைப்//, படத்தில் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் காட்சிப் பிண்னணியில் வரும் வசனமொன்று //சென்னைக்குள்ள வர்ற வரையும் நானும், கூவமும் நல்லாத் தான் இருந்தோம்//, மற்றொரு காட்சியில் ஸ்டேஷன் மாஸ்டராக வரும் அழகம் பெருமாள், நாயகன் வசந்த் ரவியுடன் உரையாடும் காட்சியில் //அதெப்படி நீங்க மட்டும் சாப்டீங்களா, தூங்கிட்டீங்களானு போன் பண்ணி கேட்குற பொண்ணை கல்யாணம் பண்ணிப்பீங்க, நாங்க மட்டும் சென்னை பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கணுமா?// என்பதாக வசனம். சென்னையிலேயே பிழைப்பு நடத்தி அதே சென்னையையேப் பழிக்கும் இதுபோன்ற மனிதர்களே சென்னையின் களங்கத்திற்குக் காரணமாக இருக்கிறார்கள் என்பதை இயக்குனர் ராம் ஏனோ மறந்துவிட்டார் போலும். படத்தில் இதுபோன்று தர்க்கரீதியான பிழைகளும், கருத்தியல் புரிதலின்றி அமைக்கப்பட்ட காட்சிகளும் அநேகம்.

குற்றங்களற்ற சமூகம் என ஒன்று உலகில் இல்லவேயில்லை ஆனால் இப்படத்தின் இயக்குனர் ஒட்டுமொத்த பெண் சமுதாயமும் பாலியல் வறட்சியால் பிறழ்ச்சி அடைகிறார்கள் என்பதுபோல் காட்டியிருப்பது மிகப் பெரும் அபத்தம். பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல்களுக்கும், வன்முறைகளுக்கும் அப்பெண்களின் நடையும், உடையுமே காரணமென ஆணாதிக்கச் சிந்தனையிலேயே படம் முழுக்க பயணிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பெண், தனது உடலை ஒரு ஆணுடன் பகிர்ந்து கொண்டதும் அல்லது அணுக அனுமதித்ததும் அப்பெண்ணானவள் தன்னுடைய மொத்த ஆளுமையையும் ஆணிற்கு சமர்ப்பணம் செய்துவிட வேண்டும் என்கிற கருத்தாக்கத்தை முன்வைக்கிறது கதாநாயகனுக்கும், நாயகிக்கும் இடையில் ஏற்படும் பிளவு.

நாற்பது வயதினைக் கடந்தவரான ராமிற்கு சமூகம் சார்ந்த தெளிவின்மையைப் போலவே காமம் சார்ந்த புரிதல்களும்கூட இல்லையென்பதை எண்ணிப் பார்க்கையில் தான் உண்மையில் இச்சமூகத்தின் தோல்வி பார்வையாளர்களின் முகத்தில் அறைகிறது. இனியும் தமிழ்த் திரைத்துறையில் இதுபோன்ற ‘ராம்’களும், தரமணிக்களும் உருவாகாமல் இருப்பதற்கான பெண் சார்ந்தப் புரிதல்களையும், பாலியல் சார்ந்த தெளிவுகளையும் ஏற்படுத்துவதே இத்தமிழ் சமூகத்தின் முக்கியமானப் பணி.

பின்குறிப்பு: பெண்ணியம் என்பது உலகமயமாக்கலால் நுழைந்த அந்நியச் சிந்தனை என்ற கருத்தாக்கத்திலிருந்து தெளிவுற/விடுபட கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் ஆண்பால் பெண்பால் அன்பால் கட்டுரையை வாசிக்கவும்.

-முற்றும்.

)
    தாயன்

    Written by

    Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
    Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
    Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade