To Whomsoever it may concern
Please send Kumbalangi Nights as India’s entry to the Oscars.
Thank you! — பிண்ணனிப்பாடகி சின்மயி ஸ்ரீபதா. (sic) on Twitter.
சமீபமாக மலையாள திரைப்பட தமிழ் பார்வையாளர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம், ஒன்னுமே இல்லாத படத்துக்கு இவ்ளோ கூவுறாங்கப்பா. அப்படி சமீபத்தில் அதிகமாக கொண்டாடப்பட்டு, அதற்காகவே விமர்சிக்கப்பட்ட படங்களுல் ஒன்று ‘கும்பளங்கி நைட்ஸ்’. இயக்குனர் மது.சி.நாராயணன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், சௌபின் சஹிர், ஸ்ரீநாத் பஸி, ஷானே நிகம், ராம் திலக், அன்னா பென் மற்றும் ஷீலா போன்றோர் நடிப்பில் வெளியான படம். குடும்ப அமைப்பு, காதல், சுற்றுச்சூழல், பெண்ணியம், ஆணாதிக்கச் சிந்தனை, மேட்டுமைத்தனம், உளவியல் சிக்கல்கள் என பல்வேறு விசயங்களை இனம், மொழி, பாலின மற்றும் வர்க்கப் பேதங்கள் அடிப்படையில் நுட்பமாகப் பேசிய படம்.
படத்தில் பல்வேறு கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றிருப்பினும், குறைவான காட்சிகளில் தோன்றும் ஷம்மி பாத்திரமே கதையின் முக்கியமான அதேவேளை மற்ற பாத்திரங்களின் தன்மையிலிருந்து முற்றிலும் மாறுபடும் பாத்திரம். ஆணாதிக்க மனம், மேட்டுமைத்தனம், உளவியல் சிக்கல், குடும்பத்தின் மூத்த மருமகனுக்குரிய ஆதிக்க மனப்பான்மை போன்ற பிற்போக்குத்தனங்களை உள்ளடக்கிய கதாப்பாத்திரத்தை ஃபகத் மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறார். அதுபோல் ஷஜியாக வரும் சௌபின் சஹிர் மனநல மருத்துவருடன் உரையாடும் காட்சி, காயல் கரையில் ராம் திலக்குடன் அமர்ந்து பேசும் காட்சி என நடிப்பில் வெவ்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார். ஏனைய நடிகர்களின் நடிப்பு குறித்தும் பேசுவதை விட படம் குறித்து பேசலாம்..
படத்தின் ஆரம்ப காட்சியொன்றில் பாபி(Bobby)யின் நண்பராக வரும் ப்ரஷாந்த்தை காதலித்து மணம் செய்து கொள்ளும் சுமிஷா பாத்திரம் மூலமாக இயக்குனர் மது.சி.நாராயணன் படத்தின் மையக்கருவை நுட்பமாக முன்வைக்கிறார். அதாவது புறத்தோற்றத்தை சீர்செய்வதை விடவும் அகத்தை சீர்படுத்துதலே முக்கியம் என்பது படம் முன்வைக்கும் கருத்து. இப்படத்தில் புற அழகை சீர்செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஷம்மி, அகத்தை சரியாகப் பேணுவதில்லை. ஆனால், புற அழகிற்கு முக்கியத்துவம் தராத ஏனைய பாத்திரங்கள் அகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஒவ்வொரு முறை கண்ணாடி முன் நின்று தன் தோற்றப்பொலிவை கண்டு பெருமைகொள்ளும் ஷம்மி, ஒரு மேட்டுமைத்தனத்தின் குறியீடு. அதோடு, தான் ஆண் என்கிற கர்வமும் அவனுள் ஆழமாக உள்ளது அதனால் தன் குடும்பப் பெண்களே தன்னை எதிர்த்து பேசுவதையோ, எதிர்கருத்து தெரிவிப்பதையோ அவன் விரும்பவில்லை. இந்த ஆண்மன கர்வத்தை, ஷம்மி பாத்திரத்தின் அறிமுகக் காட்சியில் தனது மீசையை ஒழுங்குப்படுத்திக் கொண்டே, கண்ணாடியில் ஒட்டியிருக்கும் பெண்கள் இட்டுக் கொள்ளும் நெற்றிப்பொட்டை Bladeஆல் நீக்கும் காட்சியை சொல்லலாம். மேலும், தன் மனைவி சிமியின் சித்தப்பா வீட்டில் நடக்கும் விருந்தில் சிமியின் சித்தப்பா, தான் வீட்டில் மனைவிக்காக சமைப்பதை அக்கம்பக்கத்தினர் கேலி பேசினர் எனினும் தான் அதை ஒருபோதும் கண்டுகொண்டதில்லை ஆகவே நீங்களும் அக்கம்பக்கத்தினர் கிண்டல் செய்தாலும் சமையல் செய்வதற்கு தயங்காதீர்கள் என்று சொல்லும்போது பதிலுக்கு அவரை ஷம்மி பரிகசிக்கும் இடம் அப்பாத்திரத்தின் ஆணாதிக்க மனநிலை குறித்த நுட்பப் பதிவு. ஆனால் அதேநேரம், ‘சதி’யாக வரும் ஷீலாவின் பாத்திரம் வீட்டிலிருக்கும் போதும் ஷஜி சமையல் செய்துகொண்டிருக்கும் காட்சி மற்றும் படத்தில் ‘விஜய்’ என்ற பாத்திரமாக வரும் ராம் திலக்கின் அறிமுகக் காட்சியில் பெண்கள் பயன்படுத்தும் இடைக்கம்பி அற்ற ‘Ladybird’ cycle கையாள எளிதாக இருக்கும் பட்சத்தில் அவ்வகை மிதிவண்டிகளை ஆண்களும் பயன்படுத்துவதில் தவறில்லை என்று ஷஜி சொல்லும் காட்சி ஆகியவை ஷம்மி-ஷஜி பாத்திரங்களின் மனநிலை ஒப்பீடுகள்!
மேலும், 90களில் தமிழில் வெளியான ‘ஆசை’, மற்றும் ‘காதல் கோட்டை’ ஆகிய படங்களில் அக்கா கணவர் என்ற பாத்திரம் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் ‘ஆசை’ ப்ரகாஷ்ராஜின் பாத்திரம் கண்டுகொள்ளப்பட்ட அளவிற்கு ‘காதல் கோட்டை’யில் வரும் ராஜீவன் பாத்திரம் கவனிக்கப்படவில்லை. ‘ஆசை’ திரைப்படத்தில் கொளுந்தியாளின் மீதான அக்கா கணவனின் காம ஈர்ப்பும், அதனால் எழும் வில்லங்கத்தனங்களும் இயக்குனர் வஸந்தால் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதுவே, இயக்குனர் அகத்தியனின் ‘காதல் கோட்டை’யில் தந்தையையிழந்த மனைவியின் தங்கைக்கு மற்றுமொரு தந்தையாக நின்று வாழ்வு அமைத்துக் கொடுக்க நினைக்கும் பாத்திரமாக ராஜீவன் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் கும்பளங்கி நைட்ஸில் மாமனார் இல்லாத குடும்பத்தில் வரும் தல மருமகனின் ஆதிக்க மனப்பான்மை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பொதுவாக தந்தையில்லாத மற்றும் பெரியப்பா, சித்தப்பா இல்லாத வீடுகளில் முடிவுகள் என்பது வீட்டிற்கு வரும் மூத்த மருமகன்களை கலந்தாலோசித்தே எடுக்கப்படும். குறிப்பாக சுப காரியங்களுக்கான முடிவுகளில் அவர்களின் தலையீடு நிச்சயம் இருக்கும். அதைத் தாண்டி, கொளுந்தியாளின் கணவன் வருகைக்குப் பின் தனக்கான கவனிப்பு குறைந்து விடுமோ என்கிற அச்சத்தில் சகலை குறித்து மூத்த மருமகன்(கள்) மற்ற மருமகனை Character assassination செய்து, தன்னை சிறந்தவனாக காட்டிக் கொள்ள முயல்வது இயல்பு. அதன்படி, கும்பளங்கி நைட்ஸிலும், கொளுந்தியாளின் வருங்கால கணவன் மீது அக்கா கணவனுக்கு இருக்கும் பொல்லாப்பு எண்ணங்கள் நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதுபோல், கைம்பெண்ணான சதி, பொனியின் இணையராக அமெரிக்க-ஆப்ரிக்கை பெண் பாத்திரம், கிறித்துவ குடும்பத்தைச் சேர்ந்த பேபி என இனம், மொழி, மதம் கடந்து அன்பை மட்டுமே முன்வைக்கும்படியான பாத்திரப் படைப்பும், சிக்கல்கள் எழும்போது தந்தையை எண்ணியபடி ஷஜியும், பாபியும் புலங்காகிதம் அடையும் காட்சிகளும் படத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று.
இவைத் தவிர, படம் குறித்த முக்கியமானப் புரிதல்களில் ஒன்று, தனக்கு மனாழுத்தம் ஏற்பட்டதை அறிந்தவுடன் ஒரு மனநோய் மருத்துவரை அணுகி தனது உளவியல் சிக்கலைத் தீர்த்துக் கொள்கிறார் ஷஜி ஆனால் தன்னைத் தான் வியந்துகொள்ளும் ஷம்மி தன்னுடைய மனநோயை தீர்த்துக்கொள்ள எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருப்பதன் வழி மேட்டுமைத்தன மனப்பான்மையை இயக்குனர் பதிவு செய்கிறார். மேலும், தன்னுடைய உழைப்பு ஷஜியால் சுரண்டப்படுவதை விஜய் தன்னிடம் சொல்வதைக் கேட்டதும் ஷஜியின் மனதில் எழும் குற்றவுணர்வு மிகமுக்கியமானது. ஆம்! வேளைகளில் முதலில் எழும் குற்றவுணர்வுகளே நம்மை நாம் சீர் செய்துகொள்ள உதவும் உந்துசக்திகள். அதை கடத்தலில் உள்ளது மனப்பக்குவம். இது படத்தில் ஷஜி பாத்திரத்தின் வழி சொல்லப்பட்டிருக்கும்.
இப்படத்தின் உணர்வுகளை கடத்துவதில் பின்ணணி இசைக்கு பெரும் பங்குண்டு. அதுபோல், கதாப்பாத்திரங்களுக்கான ஒப்பனையும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று. ஷம்மியின் சீர்மையான தோற்றப் பொலிவு, திருமண வயதைக் கடந்த ஷஜியின் வழுக்கைத் தோற்றம், பொனி(Bonny)யின் Bun Hair style மற்றும் பாபியின் ஒழுங்கற்ற கேசம் என அந்தந்த கதாப்பாத்திரங்களின் தன்மைக்கேற்ற சிகைத் தோற்றங்கள்.
மேலும், படத்தில் குறிப்பிடுவது போல கும்பளங்கி என்பது கேரளாவின் கொச்சி நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறு தீவுக்கிராமம். மாங்க்ரோவ் காடுகள் சூழ்ந்த பகுதி. அதோடு மீன், இறால், நண்டு போன்ற நீர்வாழ் உயிரினங்கள் செழித்து வாழும் நீர்ப்பரப்பு. இதைத்தாண்டி, இந்தியாவில் ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டத்தின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட முதல் மீன்வள கிராமம் என்ற பெருமையும் கொண்டது. தவிர, பாபி(Bobby) தன் காதலி பேபி(Baby)யிடம் இருவரும் பிரிந்துவிடலாம் என சொல்லி நகரும் காட்சியில், ‘சரி வரும்போது அந்த தண்ணீர் பாட்டிலை அங்கேயே விட்டுவிடாமல் கையோடு எடுத்துக்கொண்டு வா’ என்பதில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புஉணர்வும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில், இதுமாதிரியான காட்சி தமிழ்சினிமாவில் காண இயலாத ஒன்று!
இவைத் தவிர, தாய்மை என்ற சட்டகத்திலிருந்து வெளியேறி நிற்கும் பொனியின் தாயார் பாத்திரம், கணவன் இறப்பிற்கு காரணமானவனை மன்னித்து ஏற்கும் சதி (‘தளபதி’யில் வரும் பானுப்ரியாவின் கதாப்பாத்திரத்தை ஒத்த பாத்திரம்), நாடு, இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைக் கடந்து வாய்ப்பேசும் திறனற்ற பொனியை நேசிக்கும் அமெரிக்க-ஆப்ரிக்கை பெண், தயக்கமின்றி தனது காதலை வெளிப்படுத்தும் பேபி, புற அழகை விடவும் அகத்தை நேசிக்கும் சுமிஷா, தனது கணவனே ஆயினும், உறவின் பெயரால் பேபியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை கண்டிக்கும் சிமி என படத்தில் இடம்பெறும் பெண்பாத்திரங்கள் யாவும் நேர்த்தியான வார்ப்புகள்!
ஷஜியின் குடும்பப் பிண்ணனி முதலில் ஒழுங்கற்றதாக இருந்தாலும் பின்னர் சீர்பட்டுக் கொள்கிறது. மேலும் பெண்களால் சூழப்படும்போது சீரற்ற கவிதையொன்று முழுமையடைவதுபோல் அவர்களின் வாழ்வு அழகு பெறுகிறது. இதன்வழி குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் குறித்தும் படம் பேசுகிறது.
ஆழமான புரிதலைக் கோரும் அதேநேரம் பல்வேறு உணர்வுகளையும் உள்ளடக்கிய படைப்பாயினும், இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ‘கும்பளங்கி நைட்ஸ்’ இடம்பெறாமல் போனது வருத்தம்!
-முற்றும்.
