ராமா, ராவணா! :: விக்ரம்-வேதா
விக்ரம்-வேதா, சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் அதிகம் உரையாடப்படும் மற்றும் விவாதிக்கப்படும் திரைப்படம்.
இரு கதாநாயகர்களுக்கும் திரைக்கதையில் சமநிலை அளிக்கும்படியான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படம் இதுவரையில் தமிழ் சினிமாவில் வந்ததில்லை என்று பாராட்டுகள் ஒருபுறமும், இன்றும் வடசென்னை பகுதியை குற்றங்கள் சம்பவிக்கும் இடமாகவே சித்தரிக்கவேண்டுமா என்ற விமர்சனங்கள் மற்றொரு புறம் என கலந்து கட்டிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் போன்ற முதன்மை கதாப்பாத்திரங்கள் மட்டுமன்றி கதிர், வரலட்சுமி, ஹரீஷ் பரேடி, ப்ரேம் போன்ற துணை கதாபாத்திரப் படைப்புகளும் சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கிறது. அதோடு காட்சியமைப்பு குறித்த வகையிலும் இத்திரைப்படம் பாராட்டிற்குரியது.
ஒரு திரைப்படமோ, புத்தகமோ அல்லது வேறு எந்தவொரு கலை வடிவின் வெளிப்பாடோ அதில் காண்போர் தங்களை தொடர்புபடுத்தி ஆய்த்துணர்ந்து கொள்ளும்படியோ அல்லது முன்பே அவர்களுக்கு பரிச்சயமான கதை வேறொரு புது வடிவில் பரிணமிக்கும் பொழுதோ அப்படைப்பு மக்களிடம் அதிக கவனத்தைப் பெறுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமென பாகுபலியைச் சொல்லலாம்.
திரைக்கதை அமைப்பு:
திரைக்கதையின் ஒன்-லைன் விக்ரமாதித்தியன்-வேதாளம் கதையின் அடிப்படை அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. விக்ரமிடம் நிலைபெற்றிருக்கும் சமூகம் பற்றிய பார்வைகளை விசாலப்படுத்தி நன்மை, தீமை பற்றிய கருத்தாங்களை தெளிவுபடுத்துவதே வேதாளம் பாத்திரத்தின் அடிப்படை அம்சம். விக்கிரமாதித்யன்-வேதாளம் எனும் ஒன்லைனில் கதை பிடித்து, முதன்மைப் பாத்திரங்கள் தொடர்பான காட்சியமைப்புகளில் இராமாயணம் என்ற புராதனக் கதையின் மைய அம்சங்களை தன்னுள் புதைத்து நகர்கிறது படத்தின் திரைக்கதை.
படத்தில் விக்ரம், வேதா, ப்ரியா, புள்ளி என்ற மையப் பாத்திரங்கள் தொடர்பான காட்சியமைப்புகளில் இராமாயணம் என்கிற படைப்பின் அம்சங்களைக் கொண்டுவர முயன்றுள்ளனர், இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி. நேர்மையான காவல்துறை அதிகாரியின் மகனாகப் பிறந்து, நேர்மையாக பணிபுரியும் காவல்துறை அதிகாரியாக வரும் 'வெள்ளைத் தோல்' மாதவன், சட்டத்தின் ஓட்டைகள் வழியே தப்ப நினைக்கும் குற்றவாளிகளை, சட்டத்தின்படியே அழிக்க நினைக்கும் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட். பிழைப்பிற்காக குற்றச்செயலில் ஈடுபட்டு பின்னாளில் வடசென்னை தாதாவாக உருமாறும் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் முதல் காட்சியில் அறம் குறித்த இருவரது கருத்தாங்களிலும் ராமன்-ராவணன் பாத்திரங்களின் அம்சங்கள் வெளிப்படுகிறது. அதர்மத்தைக் அழிக்க வாள் சுழற்றும் விக்ரமின் பாத்திரமும், துரோகம், குற்றங்களுக்கு பதிலடி தர நினைப்பது தவறில்லை என வேதாளமும் தத்தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் காட்சிகளை இங்கு நாம் ராமாயணத்தோடு தொர்புப்படுத்திக் கொள்ளலாம்.
இராமாயணத்தில், சிரச்சேதம் செய்யப்பட்ட தனது தங்கை சூர்ப்பணகைக்கு நியாயம் வேண்டி ராமனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் ராவணன் போல, தனது தம்பி புள்ளி (கதிர்) மீது வன்முறையை ஏவி கையை சேதப்படுத்தும் தாதாவை கொலை செயகிறான் வேதாளம். ராவணணால் கவர்ந்து செல்லப்பட்டப்பின் ஒருவேளை அவன்பால் சீதைக்கு பரிவு ஏற்பட்டிருக்குமோ என ராமனுக்குள் சந்தேகம் எழுகிறது. வேதாளத்தின் வழக்குரைஞனராக பணியாற்றும் தனது மனைவி ப்ரியாவின் காரை உலவுப் பார்க்கும் வேலையில் ஈடுபடுகிறான் விக்ரம். போலவே, 'உங்க ரெண்டு பேர் சண்டையில என்னை ஏன் உள்ளிழுத்தீங்க, வேதா?' என்று ப்ரியா, வேதாளத்தைக் கடிந்து கொள்வதும் அதன்பின் வேதா தன் பக்க நியாயங்களை அவளிடம் எடுத்துரைக்கும் விதமான காட்சிகளும் ராமாயணத்தில் வரும் ராவணன்-சீதை தொடர்பான காட்சிகளை ஒத்துள்ளது.
இந்தியாவெங்கிலும், ராமாயணக் கதை என்பது இலக்கிய வடிவிலும் வாய்மொழிக் கூறல்களிலும் வெவ்வேறு பார்வைகளில் சொல்லப்பட்டு வருகிறது. இத்திரைக்கதையோடு ஒத்துப்போவதாக சொல்லப்படும் காட்சிகள் யாவும் அக்கதைகளின் பார்வைகளின் ஊடாகவே காணவேண்டியிருக்கிறது. அதேநேரம், இது முழுக்கவே ராமாயணத்தை பின்புலமாகக் கொண்ட கதையும் அல்ல, சில அம்சங்களில் மட்டுமே
மீட்டுருவாக்கம்:
சிறுவயதிலிருந்து காதால் கேட்டும், கதைகளாகப் படித்தும் வந்த இராமாயணம் என்கிற இறவாத்தன்மையுடைய கதையின் சில அம்சங்களை மற்றொரு புதிய பரிணாமத்தில் மீட்டுருவாக்கம் செய்து வெற்றி பெற்றிருக்கிறது விக்ரம்-வேதா.
