'ஆதி யோகி' என்னும் செக்யூலர் சிவன்

சிவனை ‘ஆதி யோகி’ என்று ஜக்கி வாசுதேவ் அவர்கள் அழைக்கிறார். சிவனை பாரதத்தின் ஒரு தொன்மைக்கடவுள் என்று சொல்ல முடியாத நிலையில் அவர் உள்ளார். தெய்வம் என்று சொன்னால் ஈஷா யோக மையம் இந்துத்துவ முத்திரை குத்தப்படும். (இப்போதும் அப்படித்தான் சொல்கிறார்கள்). அதனால் ஈஷாவின் பன்மைத்தன்மை குறீத்துக் கேள்வி வரும் என்பதாக இருக்கலாம்.

யோகக்கலை பாரதப் பண்பாட்டுடன் இணைந்தது. பாரத வேறில் இருந்து யோகத்தைப் பிரித்தால் அது வெறும் உடற்பயிற்சியே. ‘சூரிய நமஸ்காரம்’ என்பதை என்னவென்று சொல்வது? அதனை ‘செக்யூலர்’ ஆக்குகிறேன் என்று ‘இன்சாட் 1-ஏ நமஸ்காரம்’ என்று சொல்லலாமா? ‘சூர்யாய நம:’ , ‘ஆதித்யாய நம:’ என்னும் போற்றி வரிசைக்குப் பதிலாக ‘இன்சாட் 1-ஏ போற்றி’, ‘கார்ட்டோசாட் போற்றி’ என்றால் அது செக்யூலர் ஆகிவிடுமா?

செக்யூலரிசம் என்னும் பெயரில் நமது பண்பாட்டை அழித்ததை மனதில் கொள்வோம். தமிழகத்தில் பகுத்தறிவு என்னும் பெயரில் அரசுகள் பண்டை இலக்கியங்களையே இழிவு செய்ததை நாம் அறிவோம். நமது கலைப்பொக்கிஷங்களான கோவில்களைப் பாழ்படுத்தியதை நாம் அறிவோம். இன்றும் அதன் தாக்கத்திலிருந்து கோவில்களை வெளிக்கொணர முடியவில்லை.

ஜக்கி வாசுதேவ்ஜி ‘ஆதி யோகி’ பம்மாத்தை விடுத்து ‘சிவன்’, ‘ருத்ரன்’ என்று அழைக்க வேண்டும். ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்பது நமது தமிழ் மக்கள் நிலை. ‘ஆதியோகி’ போன்ற பம்மாத்துகள் நாளை திருமாலை ‘ஆதி விளையாட்டுப் பிள்ளை’ என்று அழைத்தால் தான் ‘செக்யூலர்’ பார்வை கிடைக்கும் என்பதில் கொண்டு விடும்.

நீங்கள் எவ்வளவுதான் ஹிந்து தர்மத்தில் இருந்து பிரித்துக் காட்டினாலும், பாரத கலாச்சாரத்தில் இருந்து பிரிக்க முடியாதது சிவன் என்னும் தொன்மைக் கடவுள்.

அந்த அலகிலா விளையாட்டுடையவன் அனைவருக்கும் நல்லறிவு வழங்கட்டும்.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.