Street Food — Asia (Netflix)

Suthanthiranathan Anuthinan
2 min readApr 5, 2020

--

உணவை சமைக்கத் தெரிவதும், அதனை ருசிக்கத் தெரிவதும் மாத்திரம் பெருமையாக இருக்க முடியாது. அந்த உணவுகளுக்கு பின்னாலிருக்கக் கூடிய கதைகளுடன், உணர்வு ரீதியாக ஒன்றிப்போவதன் மூலமாக அந்த உணவுகளை சரிவர புரிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு பெருமைமிகு உணவுக்கும் பின்னால் ஒரு சொல்லப்படாத கதை இருக்கும். ஒவ்வொரு மிகபபெரும் chefக்கு பின்னாலும் ஒரு உணர்வு ரீதியான கதை இருக்கும். அவற்றை எல்லாம் தொகுத்து 6 அங்கங்களில் Netflix ஒரு கதையாக சொல்லி இருக்கிறது. ஒவ்வொரு அங்கமும் 30 நிமிடங்கள். அந்த 30 நிமிடங்களில் அந்தந்த நாடுகளின் பெருமை மிகு உணவுகள் மற்றும் சமையல்காரர்களின் பின்னாலிருக்கும் கதையை சொல்லி இருக்கிறார்கள்.

என்னுடைய உணவுகளின் பின்னாலிருக்கும் தேடலுடன் இது நிறையவே ஒத்துபோவதால், மிக நெருக்கமாக உணர முடிந்தது. ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு நாட்டுக்கு பயணப்பட வேண்டுமென நாங்கள் ஜோடியாக முடிவெடுத்தபோது, அந்த பயணத்தில் இந்த உணவு சார் தேடலும், ஒரு மிகப்பெரும் அங்கமாய் இருந்திருக்கிறது. 😉

எங்கள் ஒருவருட பயணத்தில் தாய்லாந்தை தேர்ந்தெடுத்தபோது கேட்கப்படாத கேள்விகள் இல்லை. ஆனால், அதனையும் தாண்டி, அங்கே சொல்லப்படாத கதைகளும், உணவுகளின் இரசனையும் அதிகம். அதை அறியவும், உணரவும் அந்த பயணம் சிறந்ததாக இருந்தது. இந்த Netflix தொடரில் சொல்லப்படும் Michelin Star Chef Jay Fai யின் உணவுக்காக ஒரு இரண்டு மணிநேரம் வீதிகளில் காத்திருந்திருக்கிறோம். பயணங்களின் நடுவே, இந்த காத்திருப்புத்தான் அதிக வலிமையான உரையாடல்களை ஏற்படுத்தி கொடுக்கும். அதன்பின்னான உணவு சொர்க்கமானதாக இருக்கும். அந்த உணவின் பின்னால் இருக்கும் கதைகளும் இன்னும் வீரியமாக புரியும்.

பெரும்பாலான தெற்காசிய நாடுகளின் signature உணவுகளின் தோற்றம் வீதியோர Street foodகளாகத்தான் இருக்கும். வியட்நாமின் போர்க்கால உணவுகள் இன்று உலகம் அறியும் உணவாக இருக்கிறது. அதுபோல, எந்தவொரு நாட்டின் street foodலும் ஒரு ஒசாக்கியன் (Japan) சமையல்காரராக இருந்தால், அவர்களின் உணவில் வயிறு மட்டுமல்ல, மனதும் நிறையும். காரணம், அத்தனை நகைச்சுவையான Crazy Chefs ஆக இருப்பார்கள். மலேசியர்கள் , இந்தனோசியர்கள் உணவை மட்டுமல்ல அவர்களின் கதைகளையும் சொல்ல தயாராக இருப்பார்கள். இங்குதான் பெரும்பாலான உணவுகளின் வரலாறையும், உணவை பரிமாறுபவர்களின் வரலாறையும் நிறைவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒரு Tom Yum Seafood Soupஜ எங்கு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதன் சுவையை தாய்லாந்திலிருந்து இலங்கை வந்து கடை வைத்திருக்குமொருவரால் தரக் கூடியதாகக் கூட இருக்கலாம். ஆனால், உண்மையான சூப்பையும், அதன் பூர்வீக கதையையும் உணர, தாய்லாந்தின் வீதியோரத்தில் காத்திருந்து, அதனை தயாரித்து தரும் சமையல்காருடன் பேசியபடியே உண்பதுதான் உண்மையாண மன நிறைவாக இருக்கும். அப்படி மனதுக்கு நெருக்கமான தொடராகவே இது இருக்கிறது. 😍

#Netflix #StreetFood #StreetFoodAsia

--

--

Suthanthiranathan Anuthinan

Finance Mental, Cricket Alcoholic, Cinema Addicted & all etc 😉🤦🏼‍♂️