கொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும், ஆடிக் கறத்தலும்.

Arun Nedunchezhiyan
18 min readApr 1, 2020

--

(இந்தக் கட்டுரையானது “கொரோனா வைரசுக்கு எதிராக நாம் ஏன் செயாலாற்ற வேண்டும்” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக தாமஸ் பியுயோ எழுதியுள்ளார். இவரது முந்தைய கட்டுரையை சுமார் நான்கு கோடி மக்கள் படித்துள்ளார்கள்,சுமார் 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்தக் கட்டுரையை சென்ற வாரம் வரையிலும் சுமார் நாற்பது லட்சம் மக்கள் படித்துள்ளனர்)

கட்டுரையின் சாராம்சம்:கொரோனா வைரஸ் பரவலின் கடுமையைத் தணிக்க உலக நாடுகள் சில வாரங்களாகவே தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.லட்சக்கணக்கான உயிர்களை காப்பற்றுவதன் பொருட்டு ஒட்டுமொத்த சமுதாயமும் பெரும் விலை கொடுக்கின்றனர்.ஒருவேலை இந்த கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ளவில்லைஎன்றால் பல லட்சக்கணக்கான மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும்.சுகாதார அமைப்புகளிடம் குறைவான எண்ணிக்கையிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளதால்,சுகாதார கட்டமைப்பு நிலைகுலைவிற்குள்ளாகி பல ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள்.

கொரோனா வைரசால் என்ன நேரப் போகிறது? இது ஒரு பெரிய பிரச்சனையல்ல எனப் பேசிய நாடுகள், அடுத்த ஒரு வாரத்திலேயே தங்களது நாட்டில் எமெர்ஜென்சி நிலையை அறிவிக்கின்ற நிலைக்கு போய்விட்டன. ஆனால் இன்னும் சில நாடுகள் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்காமல் உள்ளன. இது ஏன்?

நாம் எப்படி இந்த பிரச்சனைக்கு வினையாற்றுவது என்ற ஒரே கேள்வியைத்தான் அனைத்து நாடுகளும் கேட்கின்றன.இக்கேள்விக்கான விடையோ அவர்களுக்கு கண்கூடாக தெரியவில்லை!

பிரான்ஸ்,பிலிபைன்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள்,தங்களது நாடுகளில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துகின்றது..ஆனால் அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் நெதர்லேந்து போன்ற நாடுகள் பெரும் தயக்கக்கதுடனேயே சமுதாய விலக்கு போன்ற நடவடிக்கையை மேற்கொள்கிறது.

நிறைய புள்ளி விவரங்கள், பட விளக்கக் குறிப்புகளைக் கொண்டு கீழ்வரும் விஷயங்களை பற்றித்தான் நாம் இக்கட்டுரையில் தற்போது பேசப் போகிறோம்.

  1. சமகால நிலைமை (கொரோனா தொற்று குறித்த) என்ன?
  2. என்னென்ன வாய்ப்புள் நம்முன்னே உள்ளன?
  3. நேரம்:அனைத்து நடவடிக்கைக்கும் முன் நிபந்தனையாக உள்ளது.
  4. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஏற்ற சரியான செயலுக்திகள் என்னவாக இருக்கலாம்?
  5. கொரோனா வைரசின் சமூகப் பொருளாதார விளைவுகள் குறித்து நாம் என்ன கருதுகின்றோம்?

நீங்கள் இந்த கட்டுரையை படித்து முடித்தப் பிறகு, கீழ்வரும் முடிவுக்கு வருவீர்கள்:

  • நமது சுகாதாரக் கட்டமைப்பு ஏற்கனவே நிலைகுலையத் தொடங்கிவிட்டது.
  • தற்போது அனைத்து நாடுகளிடமும் இரு வாய்ப்புகள் உள்ளன.ஒன்று கொரோனா வைரசுக்கு எதிராக கடுமையாக போராடுவது அல்லது மாபெரும் கொள்ளை நோயால் இன்னல்படுவது.
  • போராடாமல் இருந்தால் இந்த மாபெரும் கொள்ளை நோய்க்கு நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் இரையாகும்.சில நாடுகளில் லட்சம் பேர் கூட மரணமடையலாம்.மேலும்,அடுத்த கட்ட தொற்று அலையைக் கூட தவிர்க்க முடியாது!
  • நாம் கடுமையாக போராடினால்,உயிரழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.
  • நமது சுகாதார கட்டமைப்பு, நிலைகுலைவிற்கு உள்ளாவதை தடுத்திட முடியும்
  • இன்னும் நம்மை நன்றாக தயார்படுத்திக் கொள்ளமுடியும்.
  • நாம் கற்றுக் கொள்ளமுடியும்.
  • இந்த உலகம் எதுகுறித்தும் விரைவாக அறிந்துகொள்ளாது.ஆனால் நாம் விரைவாக அறிந்துகொள்ள வேண்டும்.ஏனெனில் இந்த வைரஸ் பற்றி சிறிதளவே நாம் அறிவோம்.
  • இதன் மூலமாக சிக்கலான ஒரு பிரச்சனைக்கு எதிராக ஏதேனும் நாம் சாதிக்க முடியும்.

நாம் போராடுவதற்கு தேர்ந்துகொண்டால்,உடனடியாக போராட்டத்தை தொடங்க வேண்டும்.பின்னர் நிதானமாக படிப்படியாக தொடரவேண்டும்.

நாம் சில வாரங்களுக்கு தனிமைப்பட்டிருக்கலாம்,சில மாதங்கள் கூட இது நீடிக்கலாம்.

ஆனால்,பின்னாளில் மேலதிக சுதந்திரம் நமக்கு மீண்டும் கிடைக்கப்பெறும்.

இயல்புநிலை உடனடியாக திரும்பிடாது. கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக இயல்பு நிலைமைக்கு நாம் திரும்புவோம். இவையாவற்றையும் நாம் செய்யலாம், நமது பொருளாதாரத்தையும் இவ்வாறு சரி செய்யலாம்.

  1. தற்போதைய நிலைமை என்ன?

கடந்த வாரத்தில் கீழ்வரும் படத்தை பகிர்ந்திருந்தேன்.

சீனாவிற்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள நாடுகளின் நிலைமையை இப்படம் காட்டியது. அதில் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நிலைமையை பார்த்தோம். தற்போது வலது ஓரத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளின் நிலைமையை பார்ப்போம்.

நாம் நினைத்தது போல,சுமார் ஒரு டசன் நாடுகளில் கொரோனா தொற்று புதிதாக பரவியுள்ளது. தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்த நாடுகளில் மட்டுமே தற்போது கவனத்தை குவித்துள்ளேன்.

  • இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் அதிகளவில் தொற்று பரவியுள்ளது. இந்நாடுகள் தற்போது ஊரடங்கை அறிவித்துள்ளது.
  • இவை போக சுமார் 16 நாடுகளில் தொற்றின் எண்ணிக்கை சீனாவின் ஹூபே மாகாண எண்ணிக்கையை தாண்டி விட்டது. இந்நாடுகளில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான், மலேசியா, கனடா, போர்சுகல், ஆஸ்ட்ரேலியா, பிரேசில், செசியா போன்ற நாடுகள் ஹூபே எண்ணிக்கையை கடந்து விட்டன ஆனால் ஆயிரத்திற்கு குறைவாக உள்ளன. சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரியா, பெல்ஜியம் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

மேற்கூறிய நாடுகளின் பட்டியலில் சில குறிப்பிடத்தக்க அம்சம் தென்படுகிறதா? சீனா மற்றும் ஈரானுக்கு வெளியே பெரும் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பெரும்பாலும் வளமான நாடுகளாகவே உள்ளனவே? இதனால் இந்த வைரஸ் பணக்கார நாடுகளை மட்டுமே தாக்கும் எனக் கருதமுடியுமா? அல்லது பணக்கார நாடுகளால் மட்டுமே இந்த தொற்றை கண்டுபிடிக்க முடிந்தது எனக் கருத முடியுமா? இல்லை

விஷயமென்னவென்றால் ஏழை நாடுகளை இதுவரை இந்த வைரஸ் தாக்கவில்லை. வெப்ப சீதோஷன நிலைமையால் கூட தாமதமாக தாக்கக் கூடும். ஆனால் தொற்றில் இருந்து தப்புவது கடினம். தட்பவெப்பம் சீதோஷணம் தொற்றிலிருந்து காத்துவிடும் எனக் கருதினோம் என்றால் சிங்கபூர், மலேசியா மற்றும் பிரசில் போன்ற நாடுகள் கூட பாதித்திருக்காது அல்லவா?

பல நாடுகளில் கொரோனா தொற்று தாமதமாக தொடங்குவதற்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று பாதிக்கப்பட்ட நாடுகளுடன் குறைவான போக்குவரத்து உறவைப் பரமாரித்திருக்கலாம். குறைவான பிணைப்பு தாமதத்திற்கு காராணமாக இருக்கலாம். சில நாடுகளில் பாதிப்பு, முன்னரே தொடங்கியிருக்கலாம். குறைவான பரிசோதனை நடவடிக்கையால் தொற்று இன்னும் கண்டறியப்படாமல் கூட இருக்கலாம்.

இதில் எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து தப்பவே முடியாது. இவை யாவுமே காலத்தை பொறுத்தது.பெரும் பாதிப்பு வெடிப்பதற்கு முன்னர் பாதுகாப்பு நடவடிக்கையை தொடங்கிட வேண்டும்.

வெவ்வேறு நாடுகள் என்னன்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன?அடுத்து பார்ப்போம்

  1. நம்முன்னே உள்ள வாய்ப்புகள் என்ன?

எனது முந்தைய கட்டுரையின் போதிருந்த நிலைமை இப்போதில்லை. சென்ற வாரத்திற்கு பிறகு நிலைமை நிறைய மாறிவுள்ளது.சில நாடுகள் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கிவிட்டன.உதாரணமாக சிலவற்றை பார்ப்போம்.

ஸ்பெயின் மற்றும் பிரான்சின் நடவடிக்கைகள்

கொரோன வைரசின் பாதிப்பு குறித்து ஸ்பெயின் அதிகாரிவர்க்கம் குறை மதிப்பிட்டுள்ளது என்ற வாதத்தை ஸ்பெயின் ஜனாதிபதி 12/3 அன்று மறுத்தார். அதற்கடுத்த நாளான வெள்ளியன்று ஸ்பெயின் அரசு எமெர்ஜென்சி நிலைமையை அறிவித்தது.

  • வேலை, மருந்து வாங்க செல்வது, மருத்துவமனைக்கு செல்வது மற்றும் வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனங்களுக்கு செல்வது என்பதைத் தவிர வேறெந்த காரணங்களுக்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.
  • குறிப்பாக குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே நடப்பதோ அல்லது நண்பர்களைக் காண கூட்டிச் செல்வது தடைசெய்யப்பட்டது.
  • மதுபானக் கடைகள் மற்றும் உணவங்களை மூட உத்தரவிடப்பட்டது.உணவை வீட்டிற்கு பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றே உண்ணவேண்டும்.
  • விளையாட்டு,சினிமா,கண்காட்சியகம் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் மூடப்பட்டன.
  • குறைவான விருந்தினர்களுடன் திருமண நடத்த அனுமதிக்கப்பட்டன..இறப்பு நிகழ்வுகளையும் குறைவான நபர்களை கொண்டு நடத்தவேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
  • பெருவிரைவு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன.
  • திங்களன்று நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன.

சிலர் மேற்கூறியவற்றை ஆயத்த நடவடிக்கைகளின் பட்டியலாக பார்த்தனர். சிலர் நம்பிக்கையின்மையில் ஓலமிட்டனர்.இந்த முரண்களுக்கான தீர்வைக் இக்கட்டுரையில் காண முயற்சிக்கின்றேன்.

பிரான்சு நாட்டின் நடவடிக்கையும் கிட்டத்தட்ட ஸ்பெயின் மேற்கொண்ட நடவடிக்கைகளையே ஒத்திருந்தன.ஆனால் இந்த நடவடிக்கைகளை தாமதமாக மேற்கொண்டன. ஆனால் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன.உதாரணமாக சிறு நிறுவனங்களுக்கான வரி , வாடகை போன்ற கட்டணங்களுக்கு விலக்கு அளித்துள்ளன.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைகள்:

அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை வேண்டா வெறுப்பாகவே மேற்கொள்ளத் தொடங்கின.அமெரிக்கா மேற்கொண்ட காலவரிசைப் படியான நடவடிக்கைகள் வருமாறு

  • 11–03–2020 புதனன்று பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
  • வெள்ளியன்று நாட்டில் எமெர்ஜென்சி நிலைமை அறிவிக்கப்பட்டது. சமுதாய விலக்கு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
  • திங்களுன்று உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் போன்ற பொது இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டது.பொது நிகழ்சிகளில் பத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறான சமுதாய விலக்கு அறிவுறுத்தல்கள் உத்தரவாக அறிவிக்கப்படாமல் பரிந்துரைகளாக கூறப்பட்டது.

சில மாகானங்களும் நகரங்களும் தாமாகவே சில கட்டுப்பாடு முன்முயற்சிகளை மேற்கொண்டன.

இங்கிலாந்தும் இதேபோல நடவடிக்கைகளை மேற்கொண்டன.நிறைய பரிந்துரைகளும் குறைவான உத்தரவுகளும் வழங்கப்பட்டன.

இந்த இரு தொகையான நாடுகளும்(ஸ்பெயின்,பிரான்சு ஒரு பக்கம்,அமெரிக்கா இங்கிலாந்து இன்னொரு பக்கம்) முற்றிலும் வெவ்வேறான முறைகளில் கொரோனா வைரசை அணுகின.அம்முறைகளை நோயாற்றுதல்(MITIGATION) மற்றும் அடக்குதல் (SUPPRESION) எனலாம்.

வாய்ப்பு 1:எதுவும் செய்யாதிருத்தல்

இந்த முறைகளை ஆராய்வதற்கு முன்பாக.எதுவுமே செய்யாதிருந்தால் அமெரிக்கா போன்ற நாடுகளில் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

எதுவுமே செய்யாதிருந்தால்,அமெரிக்காவில் நிகழும் தொற்று மற்றும் மரணம்

எதுவுமே செய்யாதிருந்தால்,நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு தொற்று ஏற்படும்.நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நிலைகுலைவு ஏற்படும்,இறப்பு வீதம் அதிகரிக்கும்.சுமார் ஒரு கோடி மக்கள் உயிரழப்பார்கள்.அதாவது நாட்டு மக்கள் தொகையில் சுமார் 75 விழுக்காட்டு மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால்,சுமார் 4 விழுக்காட்டு மக்கள் உயிரழப்பார்கள்.அதாவது ஒரு கோடி பேர்.இந்த எண்ணிக்கையானது இரண்டாம் உலகப் போரில் உயிரழந்த அமெரிக்கர்களைக் காட்டிலும் 25 மடங்கு அதிகமாகும்.

நீங்கள் ஆச்சரியமடையலாம்.இந்த தொகை மிகையாக உள்ளது.இதைவிட குறைவாக இருக்குமென நான் எங்கோ படித்தனே எனலாம்.எண்ணிக்கையை பொறுத்தவரை,ஒருவர் எளிதாக குழப்பமடையாலம்.மக்களுக்கு தொற்று ஏற்படும் வீதமும் மரண வீதமும் எந்தளவிற்கு ஏற்ற இறக்கமாக உள்ளதோ அந்தளவிற்கு எண்ணிக்கையும் மாறிக் கொண்டிருக்கும்.எண்ணிக்கையை பொறுத்தவரை,25 விழுக்காட்டு மக்களுக்கு தொற்று ஏற்பட்டால் மரண வீதம் 4 விழுக்காட்டிற்கு மாறாக 0.6 விழுக்காடாக இருக்கும்.அவ்வாறானால் அமெரிக்காவில் சுமார் ஐந்து லட்சம் பேர் மரணமடைவார்கள்.

நாம் எதுவமே செய்யவில்லை என்றால் இறப்பு வீதம் மேற்கூறிய இரு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட ஒன்றாக இருக்கலாம்.ஆக இறப்பு வீதத்தை பொறுத்தே அனைத்து இழப்புகளையும் ஊக்கிக்க முடியும்.இறப்பு வீதத்தை எவ்வாறு புரிந்துகொள்வது.

இறப்பு வீதம் குறித்து நாம் என்ன கருதவேண்டும்?

மேற்கூறிய அதே பட மாதிரியை எடுத்துக் கொள்வோம்.ஆனால்,இங்கு .நோய்த்தொற்று மற்றும் மரண எண்ணிக்கைக்கு மாறாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மட்டுமே கவனத்தில் கொள்வோம்.

வெளிர் நீளமுடைய பகுதியானது,கொரோனா பாதிப்பால் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய தேவையுள்ள மக்கள் ஆவர்.அடர் நீளமுடைய பகுதியானது,அவசர சிகிச்சை தேவைப் படுகிற மக்களின் எண்ணிக்கையாகும்.இந்த எண்ணிக்கை சுமார் முப்பது லட்சத்தைத் தொடுவதை பார்க்கின்றோம்.

தற்போது இந்த எண்ணிக்கையை அமெரிக்காவில் எவ்வளவு அவசர சிகிச்சை பிரிவு உள்ளது என்ற எண்ணிக்கையோடு ஒப்பிட்டுக் கொள்ளவேண்டும்.தற்போது அமெரிக்காவில் ஐம்பதாயிரம் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது.சிவப்புக் கோட்டில் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அதாவது அவசர சிகிச்சை படுக்கையின் எண்ணிக்கையை காட்டுகிறது.அப்படியானால்,இந்த சிவப்பு கோட்டை தாண்டிய எண்ணிக்கை வந்தால்,அம்மக்கள் பிரிவினருக்கு அவசர சிகிச்சை உதவி கிடைக்காது என அர்த்தமாகும்.அவர்கள் மரணமைடையவேண்டியதுதான். அதேபோல அமெரிக்காவில் அவசர கால செயற்கை சுயாவசக் கருவிகளும் ஒரு லட்சம் மட்டுமே உள்ளது.

மேற்கூறிய காரணத்தாலேயே சீனாவின் ஹூபெயிலும் இத்தாலியிலும் ஈரானிலும் பலர் மரணமடைந்தனர்.அதேநேரம்,ஹூபெயில் ஒரு இரவில் இரண்டு மருத்துவமனைகளை சீன அரசு கட்டியதால்,அங்கு மரண வீதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தோற்று ஏற்பட்டவர்களில் 5 விழுக்காட்டு மக்களுக்கு அவசரகால சிகிச்சை அளிக்க இயலவில்லை என்றால் அங்கு மரண வீதம் அதிகரிக்கும்.

புள்ளி விவரங்களைப் பார்த்தால்,சீனாவை விட, அமெரிக்காவில் அதிக ஆபத்து ஏற்படும் எனத்தெரிகிறது.

மாபெரும் சேதம் :

மேற்கூறிய எண்ணிக்கைகள்,கொரோனா வைரசால் மட்டும் ஏற்படக் கூடியது.அத்நேரம் இதர நோயால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பது?ஒருவருக்கு தற்போது மாரடைப்பு வந்தால்,கொரோனா முன்னுரிமையால், ஆம்புலன்ஸ் வருவதற்கு ஐம்பது நிமிடங்கள் தாமதமாகலாம்.அவர் என்ன செய்வார்?அவருக்கு அவசர சிகிச்சை படுக்கை வேண்டும்.மருத்துவர் வேண்டும்.

அமெரிக்காவில் ஓராண்டில் மட்டும் சுமார் நாற்பது லட்சம் மக்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.அதில் ஐந்து லட்சம் மக்கள் மரணமடைகிறார்கள்(13 விழுக்காடு).தற்போது அவசர சிகிச்சைப் வசதி கிடைக்கப்பெறாமல் போனால் மரண வீதம் 80விழுக்காடு அதிகரித்துவிடும்.50 விழுகாட்டு மக்கள் மரணமடைந்தாலும் அந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.இது மாபெரும் சேதமாகும்.

அமெரிக்காவில் இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவிறனால்,அமெரிக்க சுகாதார அமைப்பே நிலைகுலைவை சந்திக்க நேரிடும்.மரண வீதம் பத்து மில்லியனைக் கூட நெருங்கலாம்.

மேற்கூறிய நிலைமை உலகில் தொற்று பரவியுள்ள அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும்..அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள்,மருத்துவர்கள் ,செவிலியர்கள் போன்ற வசதிகள் கிட்டதட்ட அமெரிக்காவின் எண்ணிக்கையையே பிற நாடுகளும் ஒத்துள்ளன.சில நாடுகளில் இன்னும் மோசமாக உள்ளன.கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படாமல் போனால்,பொது சுகாதார அமைப்பு நிலைகுலைவிற்கு உள்ளாகும்.பெரும் மரணங்கள் ஏற்படும்.

ஆகவே,இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என தற்போதாவது நாம் உணர்ந்திருப்போம் என நம்புகிறேன்.அப்படி கட்டுப்படுத்துகிற முயற்சியில் இரு முறைகளை/வாய்ப்புகளை(முன்னர் குறிப்பிட்டது) நாடுகள் தேர்ந்துகொள்கின்றன.ஒன்று நோயாற்றுதல் மற்றொன்று அடக்குதல்.இதை அடுத்தப் பார்ப்போம்.

வாய்ப்பு –2 : நோயாற்றுகிற உக்தி(Mitigation strategy)

“தற்போது கொரோனா வைரஸ் பரவலை நம்மால் தடுக்கமுடியாது.போகிற வரையில் போகட்டும்.நமது பொது சுகாதார அமைப்பால் கட்டுப்படுத்தமுடிகிற அளவில் தொற்றுபரவல் வீத கோட்டை கொஞ்சமேனும் தட்டையானதாக்க முடியுமா என வேண்டுமானால் முயற்சிக்கலாம்” என்பதே கொரோனா பரவலுக்கு எதிரான நோயாற்றுகிற உக்தியாக உள்ளது.

மேலே கொடுக்கப்பட்ட படவிளக்கமானது,அண்மையில் இம்பீரியல் கல்லூரியின் ஆய்வுக் கட்டுரையேட்டில் பிரசுரிக்கப்பட்ட விளக்கமாகும்.இந்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்த பிறகு இங்கிலாந்து அமெரிக்கா அரசுகள், கொரோனா குறித்த தங்களது போக்கை மாற்றிக் கொள்வதற்கான நெருக்கடியை உருவாக்கிவிட்டது.

இதில் கருப்பு கோடானது “ஏதும் செய்யவில்லையென்றால்” என்ன விளைவு நேரிடம் எனக் காட்டுகிறது.மற்ற நிறக் கோடுகள்,எவ்வளவு தீவிரத்துடன் சமூக விலகல் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகின்றன என்பதை பொறுத்து எவ்வாறு விளைவுகளும் மாறுகின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறது.நீல நிறக் கோடுதான் மிகவும் தீவிரமான சமூக விலகல் நடவடிக்கையின் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது.

தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்துதல்,பிறகு அவரது தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து வீட்டிலேயே தனிமைப்படுத்துதல்,வயதானவர்களை தொற்றிலிருந்து காத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஏற்படுகிற விளைவுகளை நீலக் கோடு காட்டுகிறது.தற்போது நீல நிறக் கோட்டைத்தான் கொரோனாவிற்கு எதிரான செயலுக்தியாக இங்கிலாந்து தற்போது கடைபிடிக்கின்றது.அதுவும் கட்டாயமென்றில்லாமல் பரிந்துரையாக அறிவிக்கின்றது.

படத்தில் காட்டப்பட்டுள்ள சிவப்புக் கோடானது இங்கிலாந்தில் தற்போதுள்ள அவசர சிகிச்சை படுக்கையின் எண்ணிக்கையை காட்டுகின்றது.கொரோனா தொற்று பாதிப்புடைய மக்களின் எண்ணிக்கையானது சிவப்புக் கோட்டை தாண்டிய பகுதியில் வந்தால், அவசர சிகிச்சை பிரிவின் பற்றாக்குறை காரணமாக அவர்கள் இறக்க வேண்டியதுதான்.அவசர சிக்கிச்சை அமைப்பே நிலைகுலைவதோடு சேதங்களும் உயரும்.

நீங்கள் அதிர்ச்சியடையலாம்.நாங்கள் நோயாற்றுகிற முயற்சியில் ஈடுபடுகிறோம் என ஒருவர் சொல்கிறார் என்றால் அவர் சொல்வதன் உண்மையான பொருள் இதுதான்:

“அவசர சிகிச்சை அமைப்பின் நிலைகுலைவு சூழலை நாங்கள் தெரிந்தே உருவாக்குகின்றோம்.குறைந்தபட்சமாக மரண வீதத்தை பத்தின் பெருக்காக ஆக்குகின்றோம்”

இது எவ்வளவு மோசம் என கற்பனை செய்துபாருங்கள்.

”குழு தடுப்பாற்றல்” குறித்த அவதானிப்பே நோயாற்றுதலை செயலுக்தியாக தேர்வு செய்வதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

குழு தடுப்பாற்றலும் வைரசின் வகை மாற்றமும் (Herd Immunity and Virus Mutation)

கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு குணமானவர்கள் அனைவரும்,வைரசுக்கு எதிரான தடுப்பாற்றலுடையவர்களாக இருப்பார்கள் எனக் கருதுவதே இந்த உக்தியின் சாரமாகும்.

இதோ பாருங்கள்,இது மிகவும் கடினமான காலம் என்பதை நானறிவேன்.ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் என்ன நடந்திருக்கும்?சில லட்சம் மக்கள் மரணமடைந்திருப்பார்கள்.இந்த வைரசை எதிர்கொண்டவர்கள் தடுப்பாற்றலுடையவர்களாக மீதமிருப்பார்கள்..ஆகவே இந்த வைரஸ் பரவலும் இதோடு நின்று விடும்.இந்த கொரோனா வைரசை பார்த்து கையாட்டி போகச் சொல்லிவிடலாம்.இப்படி செய்துவிட்டால்,கடினமான காலத்தை ஒருமுறை கடப்பதோடு போய்விடும்.இதற்கு மாற்றாக,ஒரு வருட காலத்திற்கு கடுமையான சமுதாய விலக்கு நடவடிக்கையில் ஈடுபட்டு வைரஸ் பரவலை தற்காலிகமாக கட்டுப்படுத்தினாலும் பின்னாளில் இது மீண்டும் வருவதற்கே நிறைய வாய்ப்புள்ளது

மேற்கூறிய கருத்தாக்கமானது, கொரோனா வைரஸ் வகைமாற்றமடையாது என ஊகிக்கிறது.ஒருவேளை இந்த வைரஸ் வைகமாற்றமடையாதது என்றால் தடுப்பாற்றலால், இதை எதிர்கொள்ளலாம்.இந்தக் கொள்ளை நோய் தானாகவே செத்தொழிந்துவிடும்.

அப்படியானால்,இந்த வைரஸ் வகைமாற்றமடையுமா?

ஏற்கனவே ஆகிவிட்டது என்றே தெரிகிறது.

இந்த வைரசின் பலவேறு வகைமாற்றங்களை மேலே கொடுக்கப்பட்ட படம் காட்டுகிறது.முதலில் சீனாவில் இன்னல் கொடுத்து ஊதா நிறத்தில் தொடங்குகிற இந்த வைரஸானது பின்னர் பல்வேறு நாடுகளில் பரவுகிறது.

இப்போது இடது பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.ஒவ்வொருமுறையும் சிற்சில வைகைமாற்றதுடன் வெவ்வேறு கிளைகளாக பிற நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதை காட்டுகின்றது.

இதில் ஆச்சர்யமொன்றுமில்லை.ஏனெனில் கொரோனா வைரசானது ப்ளூ வைரசைப் போன்றே R.N.A வை அடிப்படையாக கொண்டவை.அதனால் D.N.A வை அடிப்படையாக கொண்ட வைரசை விட நூறு மடங்கு வேகமாக வகைமாற்றமடையும்.அதேநேரம் கொரோனா வைரசானது,குளிர் ஜுர ப்ளூ வைரசைவிட மெதுவாக வகைமாற்றமாகிறது.

ஆக,இந்த வைரஸ் வகைமாற்றமடைவதற்கு பல லட்சம் வாய்ப்புகள் உள்ளன. இந்த நோயாற்றுதல் உக்தியானது லட்சக்கணக்கான மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு வித்திடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான குளிர் காய்ச்சல்கள் நம்மைத் தாக்குகின்றன.ஒவ்வொரு முறையும் புதிதாக வகைமாற்றமடைந்த வைரசானது மக்களுக்கு இன்னலைக் கொடுக்கின்றது.

நோயாற்றுதல் உக்தியானது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் லட்சக்கணக்கான மக்களின் மரணத்தை முன்னரிவிக்கின்றது.கொரோனா வைரசைப் பற்றி எதுவும் தெரியாமலேயே,இந்த வைரஸ் வகைமாற்றமடையாது என ஊகித்துக் கொண்டு லட்சகணக்கான மக்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுகிறது.உண்மையிலேயே வைரஸ் வகைமாற்றமடைவற்கே இந்த உக்தி வழிவகை செய்கிறது.சில லட்சம் மக்கள் மரணமடைந்த பிறகு அடுத்தாண்டும் சில லட்சம் மக்கள் மரணமடைவதற்கு வாய்ப்பாகிறது.

ப்ளூ காய்ச்சல் போல கொரோனா வைரசும் நமது வாழ்கையுடனேயே தொடரப் போகிறது.ஆனால் ப்ளூ காய்ச்சலைப் போல பல மடங்கு ஆபத்துடன் தொடரப்போகிறது.

ஆக,எதுவுமே செய்யாதிருந்தாலும் ஆபத்துதான்,நோயாற்றுதல் உக்தியும் ஆபத்துதான்.பிறகு என்ன வழிதான் உள்ளது?வழி உள்ளது.அதனைக் “அடக்குதல் உக்தி” யென அழைக்கலாம்.

வாய்ப்பு -3 :அடக்குதல் உக்தி (Suppression Strategy)

நோயாற்றுதல் உக்தியானது கொள்ளை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வகையிலும் உதவவில்லை.அதேநேரம்,அடக்குதல் உக்தியின் வழியே விரைவாக மேற்கொள்ளப்படுகிற கடுமையான நடவடிக்கைகள்,கொள்ளை நோயை கட்டுக்குள் கொண்டுவருகிறது.

  • தற்போது கடுமையாக செயல்படுவது.தீவிரமான சமூக விலகல் நடவடிக்கைக்கு உத்தரவிடுவது.சூழ்நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது.
  • பிறகு சமூக விலகல் உத்தரவை திரும்பப் பெறுவது.சுதந்திரம் மீண்டும் கிடைக்கப்பெற்ற மக்கள்,அன்றாட சமூகப் பொருளாதார வாழ்க்கைக்கு மெல்ல திரும்புவார்கள்.

இது எவ்வாறு இருக்கும்?

அடக்குதல் உக்தியில் நோய்த் தொற்றும் இறப்பு வீதமும்

அடக்குதல் உக்தியின்கீழ் மரணங்களை லட்சங்களில் உயரவிடாமல் சில ஆயிரங்களில் கட்டுப்படுத்தலாம்.

இதன் மூலமாக நோய்த் தொற்று பரவல் கோட்டை தட்டையாக்கலாம்.பொது சுகாதார அமைப்பு நிலைகுலையாததால்,இறப்பு வீதமும் குறையும். உதாரணமாக,தற்போது தென்கொரிய அரசு,அடக்குதல் உக்தியை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதால் ,இறப்பு வீதமானது 0.9 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பிறகேன் (மற்ற நாட்டு அரசுகள்)மூளையில்லாதவர்கள் போல செயல்படுகிறார்கள்?தென்கொரியாவின் உக்தியை பிற நாடுகளும் கடைபிடிக்கலாமே?ஏன் மற்ற நாடுகள் தயக்கம் காட்டுகின்றன?

கீழ்வரும் மூன்று காரணங்களுக்காகத்தான் அச்சப்படுகிறார்கள்

  1. ஊரடங்கு பல மாதங்களுக்கு நீடிக்கலாம்.இதை மக்கள் விரும்பமாட்டார்கள்.
  2. மாதக்கணக்கிலான ஊரடங்கானது,பொருளாதாரத்தை அழித்துவிடலாம்.
  3. சமூக விலகல் போன்ற நடவடிக்கைகள் சிக்கலைத் தீர்க்காது. வேண்டுமானால் இந்தக் கொள்ளை நோயை தற்காலிகமாக தள்ளிப்போடலாம்.சமூக விலகல் நடவடிக்கைகளை திரும்பப் பெற்ற பின்னர்,மக்களுக்கு மீண்டும் நோய்த் தொற்று ஏற்பட்டு பலர் இறக்கலாம்.

இம்பீரியல் கல்லூரியின் ஆய்வானது கீழ்வருமாறு அடக்குதல் உக்தியின் மாதிரியை உருவாக்கியுள்ளது.

பச்சைக் கோடும் மஞ்சள் கோடும் அடக்குதல் உக்தியால் ஏற்படும் வெவ்வேறு சாத்தியங்களை காட்டுகிறது.ஆனால் அப்போதும் கோடு இன்னும் உயரமாகவே உள்ளதே,இதற்காகவா இவ்வளவு சிரமப்படவேண்டும் என நினைக்கலாம்.

இந்தக் கேள்விக்குள் செல்வதற்கு முன்பாக,மிக முக்கியமான விஷயமொன்றை பார்க்கவேண்டும்.பெரும்பாலானவர்கள் இந்த அம்சத்தை விட்டு விடுகிறார்கள்.

நோயாற்றுகிற உக்தி மற்றும் அடக்குதல் உக்தி ஆகிய இரு முறைகளுமே நம்பிக்கையூட்டுகிறவிதமாக இல்லையே எனத் தோன்றலாம்.

(நோயாற்றுதல் உக்தியில்)தற்போது நிறைய மக்கள் மரணமடையலாம் ஆனால் பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் நேரக் கூடாது அல்லது (அடக்குதல் உக்தியில்)பொருளாதாரம் தற்போது நசிந்தாலும் பரவாயில்லை,மக்களின் மரணத்தை தள்ளிப் போட்டால் போதுமானது.

இந்தக் இருக் கருத்துகளுமே முக்கிய அம்சமான “நேரத்தை” கவனத்தில் கொள்வதில்லை!

  1. நேரத்தின் முக்கியத்துவம்

தடுப்பு நடவடிகைகளை மேற்கொள்வதற்கு தாமதிக்கின்ற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரத்திலும் தொற்றுப் பரவலின் ஆபத்து செங்குத்துக் கோடாக அதிரித்துச் செல்கிறது.அதேவேளையில்,ஒரே நாளில் தொற்றுப் பரவலின் எண்ணிக்கை 40 விழுக்காடிற்கு குறைந்ததையும் இறப்பு வீதம் குறைந்ததையும் கூட நாம் பார்த்தோம்.

ஆக,நேரமே அனைத்திற்கும் முதன்மையானதாகின்றது.

கடந்த காலத்தை விட தற்போதுதான் நமது சுகாதார அமைப்பு மிகப்பெரிய நெருக்கடி அலையை எதிர்கொள்ளப்போகிறது.நாம் இதற்கு முற்றிலும் தயாராகவே இல்லை.நமது எதிரியைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக இப்போரை எதிர்கொள்கிறோம்.போர் முனையில் இது ஒரு மோசமான நிலையாகும்!

எதிரியை பற்றி கொஞ்சமாகவே அறிந்துள்ள நிலையில்,எப்படி அந்த மோசமான எதிராளியை எதிர்கொள்வீர்கள்?உங்களிடம் இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.ஒன்று எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த எதிரியை எதிர்கொள்வது.இரண்டாவது.சற்று பின்வாங்கிக் கொண்டு,அந்நேரத்தை நம்மை ஆயத்தப்படுத்துக்கொள்ள பயன்படுத்துவது.இதில் எதை தேர்வு செய்வீர்கள்?

இதுதான் தற்போது நமக்கு தேவைப்படுவதாகும்.உலகம் விழித்துக் கொண்டது. ஒவ்வொரு நாளும் கொரோனா பரவலை தடுக்கிற பணியில்,நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ள முடியும்.என்ன வகையிலெல்லாம் ஆயத்தப்படுத்துக் கொள்ளலாம்?அடுத்து பார்ப்போம்.

தொற்றுப்பரவலின் எண்ணிக்கையை குறைக்க முடியும்:

தீவிரமான அடக்குதல் உக்தியால் ஒரே நாளில் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.கடந்த வாரத்தில் சீனாவின் ஹூபெயில் இதைப் பார்த்தோம்.

ஹூபெயில் அடக்குதல் உக்தி

ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட ஹூபே மாகாணத்தில் தற்போது ஒரு புதிய கொரொனோ வைரஸ் தொற்று கூட இல்லை.

தொற்று எண்ணிக்கை குறைந்ததால்,இறப்பு வீதமும் குறைந்தது.சுகாதார அமைப்பு நிலை குலையாததால் கொரோனா பாதிப்பில்லாத பிற நோயாளிகள் குறைவான எண்ணிக்கையிலேயே இறந்தார்கள்.ஆக,மாபெரும் சேதமும் குறைந்தது.

அடக்குதல் உக்தியால் கீழ்வரும் விளைவுகளைப் பெறலாம்;

  • கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையை குறைக்கலாம்
  • பொது சுகாதார அமைப்பின் நிலைகுலைவை தவிர்க்கலாம்.
  • இறப்பு வீதத்தை குறைக்கலாம்
  • மாபெரும் சேதங்களை குறைக்கலாம்
  • நோய்த் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சுகாதாராப் பணியாளர்கள் பாதிப்பில்லாமல் மீண்டும் வழக்கமான பணிக்குத் திரும்பலாம்.இத்தாலியின் மொத்த தொற்று எண்ணிக்கையில் 8 விழுக்காட்டினர் மருத்துவப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையான பிரச்சனையை புரிந்துகொள்வது:பரிசோதனையும் கண்டறிதலும் (Testing andTracing)

உண்மையென்னவென்றால்,தற்போது இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் தங்களது நாட்டின் உண்மையான தொற்று எண்ணிக்கையே தெரியாது.நமக்கும் இந்த எண்ணிக்கை தெரியவில்லை.அரசு கூறுகிற எண்ணிக்கையானது பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.உண்மை நிலவரம் ஆயிரக்கணக்கில் இருக்கும்.ஏனெனில் நாம் கொரொனோ பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை,கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறியவும் இல்லை!

  • இன்னும் சில் வாரங்களில் பரிசோதனைத் திட்டங்களை முறைப்படுத்தினால்,அனைவரையும் பரிசோதனை செய்யலாம்.இந்த பரிசோதனை முடிவுகளைக் கொண்டு,சிக்கலின் முழுப் பரிமாணத்தை புரிந்துகொள்ள இயலும்.எந்த இடத்தில இன்னும் வேகமாக செயலாற்றலாம் என்பதை கண்டுணரமுடியும்.மேலும் ஊரடங்குகளை தளர்த்துவதற்கும் முடிவெடுக்க முடியும்.
  • புதிய பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும்.பரிசோதனை செலவையும் குறைக்கவேண்டும்.
  • சீனாவும் இதர கிழக்காசிய நாடுகளும் செய்ததைப் போல தொற்று ஏற்பட்டவர்களுடன் நேரடி தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.பின்னாளில், சமூக விலகல் நடவடிக்கையை தளர்த்த இம்முயற்சி பலனளிக்கும்.வைரஸ் எங்குள்ளது எனக் கண்டறிந்தால்,அந்தப் பகுதியில் மட்டும் நமது கவனத்தைக் குவிக்கலாம்.இது ஒரு பெரிய ராக்கெட் அறிவியல் அல்ல:கிழக்காசிய நாடுகள் சமூக விலகல்கள் போன்ற கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலேயே தீவிரமான பரிசோதனை மற்றும் கண்டறிகிற உக்தியால் பெரும் தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.இதர நாடுகளும் இம்முறையை பின்பற்றவேண்டும்.

சமூக விலகல்களை மேற்கொள்ளாமல்,பரிசோதனை மற்றும் கண்டறிகிற உக்தியை பயன்படுத்தியே தென்கொரிய அரசானது கொரோனா கொள்ளை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடக்கத்தது.

தாங்குதிறனை பலப்படுத்திக் கொள்வது(Build up capacity)

அமெரிக்கா அரசானது,ஆயுதமே இல்லாமல் போர்முனைக்குப் போகின்றது.

அமெரிக்காவிடம் குறைவான அளவிலேயே சுவாசக் கவசங்கள் உள்ளன;அவசர சிகிச்சை படுக்கை வசதிகள்,செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் யாவுமே போதுமானதாக இல்லை.இதனால்தான்,நோயாற்றுதல் உக்தியில் இறப்பு வீதம் மிகவும் அதிகமாக உள்ளது.

ஆனால் நமக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தால்,இதையெல்லாம்கூட மாற்றலாம்

  • அடுத்த அலை வருவதற்குள் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு நேரம் கிடைக்கும்
  • சுவாசக் கவசம்,அவசர சிகிச்சை படுக்கைகள்,செயற்கை சுவாசக் கருவிகள் என இறப்பு வீதத்தை குறைக்கின்ற உயிர் காக்கும் கருவிகளை உற்பத்தி செய்து கொள்ளலாம்

இந்த ஆயுதங்களையெல்லாம் தயார்செய்து கொள்வதற்கு நமக்கு ஆண்டுக்கணக்கில் அவகாசமில்லை. சில வாரங்களே உள்ளன.நம்மால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்யலாம்.மக்கள் எப்போதுமே புதியதை கண்டறிகிறார்கள்.முப்பரிமான வரைபடத்தின் மூலமாக சில உயிர்காக்கும் சுவாசக் கருவிகளை உருவாக்குகிறார்கள்.நம்மால் செய்ய முடியும்.கொஞ்சம் நேரம்தான் வேண்டும்.சக்திமிக்க எதிரியை எதிர்கொள்வதற்கு முன்பாக ,சிறந்த ஆயுதங்களை தயார் செய்வதன் பொருட்டு சில வாரங்கள் தாமதித்தால்தான் என்ன?

மேற்கூறிய தாங்கு திறன் மட்டுமே போதாது.நமக்கு சுகாதாரப் பணியாளர்களும் விரைவாக தேவைப்படுகிறார்கள்.இவர்களை எப்படிப் பெறுவது?செவிலியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு நமக்கு மருத்துவர்கள் வேண்டும்,அதற்கு ஓய்வு பெற்ற மருத்தவர்களை உதவிக்கு அழைக்கலாம்.சில நாடுகள்,இம்முயற்சிகளை முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால்இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும்.

அனைத்தும் நிலைகுலைவதற்கு முன்பாக சில வாரங்களிலேயே இவற்றையெல்லாம் செய்யவேண்டும்.

பொதுமக்களின் தொற்றை குறைப்பது:

பொதுமக்கள் அச்சமுற்றுள்ளனர்.இந்த கொரோனா வைரஸ் புதியது.இந்த வைரஸ் குறித்து நிறைய விஷயம் நமக்குத் தெரியாது.கைகுலுக்குவதை எப்படி தவிர்ப்பதென மக்களுக்குத் தெரியவில்லை.தற்போதும் மக்கள் கட்டியனைக்கின்றனர்.

போதிய சுவாசக் கவசம் இருந்தால்,அதை மக்கள் பரவலாக பயன்படுத்துவார்கள்.சுகாதார அமைப்பிற்கு வெளியே மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.முதலில் மருத்துவ பணியாளர்களுக்கு சுவாசக் கவசம் பற்றாக்குறையின்றி கிடைக்க வேண்டும்.இவை போக அன்றாடவாழ்க்கையில் மக்கள் சுவாசக் கவசத்தை பயன்படுத்துவதும் நல்லதுதான்.இதன் மூலமாக தொற்று பிறருக்கு பரவுவதை குறைக்கலாம்.

இதுபோன்ற விலைகுறைவான தடுப்பு நடவடிக்கைகளை மூலமாக தொற்றுப் பரவல் வீதத்தை கட்டுப்படுத்தலாம்.சில சின்ன சின்ன நடவடிக்கைகள் கூட வைரஸ் தொற்றின் பரவலை தடுக்கலாம்.இதுகுறித்தெல்லாம் மக்களுக்கு போதிய விழுப்புணர்வு வழங்குவதற்கும் தயார்படுத்துவதற்கும் நமக்கு கொஞ்சம், கால அவகாசம் வேண்டும்.

வைரசை புரிந்துகொள்வது:

நமக்கு இந்த வைரசைப் பற்றி இதுவரை குறைவாகவே தெரியும்.ஆனால் ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸ் குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துகொண்டுள்ளது.

இந்த உலகம் இறுதியாக தனது பொது எதிரிக்கு எதிராக ஒன்றினைந்துள்ளது.உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுவருகின்றனர்.

இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

வைரஸ் தொற்றுப் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

அறிகுறி தெரிந்திடாத தொற்றுள்ளவர்களின் வீதம் எவ்வளவு?

இதற்கு என்ன மருத்துவ முறைகள் உள்ளன?

இந்த வைரஸ் எவ்வாறு உயிர் வாழ்கிறது?எந்தெந்த பகுதியில் வாழ்கிறது?

சமூக விலகல் நடவடிக்கைகள் நோய்ப் பரவலை எந்த வீதத்தில் கட்டுப்படுத்துகின்றன?

நோய்த் தொற்றுடையவர்களை கண்டறிவதற்கான சிறந்த வழிமுறைகள் என்ன?

நமது நோய்த் தொற்றுப் பரிசோதனைகளின் உறுதித் தன்மையென்ன?

மேற்கூறிய கேள்விகளுக்கான சரியான பதில் கிடைக்கின்ற பட்சத்தில்,நமது சமூகப் பொருளாதார இழப்புகளை குறைக்க முடியும்.

மருத்துவ சிகிச்சையை கண்டுபிடிப்பது

அடுத்த சில வாரங்களிலேயே நமக்கு நல்ல மருத்துவ சிகிச்சை முறை கிடைத்துவிடலாம்.ஒவ்வொரு நாளும் அதை நெருங்கிக் கொண்டுள்ளோம். தற்போது Favipiravir, Chloroquine போன்றவை வரிசையில் உள்ளன.இன்னும் சில மாதங்களில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறிந்துவிட்டால் எப்படியிருக்கும்?நோயாற்றுதல் உக்தியால் பல்லாயிரம் மக்கள் இறந்துவருகிற நிலையில்,இது எவ்வளவு முட்டாள்தனமானது எனக் கருதுவோம் இல்லையா?

லாப சேத விவரங்களை புரிந்துகொள்வது:

மேற்கூறிய காரணிகள் யாவுமே பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பதற்கு உதவும்.ஆனால் கெடுவாய்ப்பாக,நமது அரசியல் தலைவர்கள் மக்களின் உயிரைப் பற்றி மட்டுமே யோசிப்பதில்லை.தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான சமூக விலகல் நடவடிக்கைகள்,ஒட்டும்மொத்த மக்கள் மீதும் என்னவித விளைவுகளை ஏற்படுத்துகின்றன என யோசிப்பார்கள்.தற்போதைய சமூக விலகல் நடவடிக்கைகள். எந்தளவிற்கு இந்த வைரசின் பரவலைத் தடுக்குமெனத் தெரியவில்லை.இந்த நடவடிக்கையின் சமூகப் பொருளாதார விளைவுகள் குறித்து முன்னறிய முடியவில்லை.

இந்த நடவடிக்கையால் லாபமா சேதமா எனத் தெரியாததால், நீண்ட கால நடைமுறை குறித்து முடிவெடுப்பது கடினமாகிறது.

தற்போது கிடைக்கின்ற சில வாரங்களானது,இதையெல்லாம் புரிந்துகொள்ள நிறைய நேரத்தை வழங்குகிறது.எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது,எதைப் பின்பற்றுவது என முடிவு செய்யலாம்.

எந்த உக்தியுமே இல்லாமல் கண்மூடித்தனமாக எதிரியுடன் சண்டையிடுவதற்கு மாறாக சிக்கலை புரிந்துகொண்டு,நம்மை தயார் செய்துகொண்டு,தாங்கு திறனை வளர்த்துக்கொண்டு,மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு இந்த வைரசுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

4. அடித்து நொறுக்குவதும் ஆடிக் கறத்தலும்

நோயாற்றுதல் உக்தியானது கொடுமையான தேர்வென்றும்,அடக்குதல் உக்தியானது உடனடி நலனைக் கொண்டுள்ளதெனவும் தற்போது புரிந்துகொண்டிருப்போம்.

அதேநேரம் பொதுமக்களுக்கு ‘அடக்குதல் உத்தி” குறித்து கீழ்வரும் ஐயங்கள் எழுகின்றன

  • இந்த நிலைமை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்?
  • அதற்கு எவ்வளவு விலை கொடுக்க நேரிடும்?
  • நாம் எதுவுமே செய்யாதிருந்தாலும் இரண்டாவது உயர்வு வருமா?

இதற்கு விடை காண்பதற்கு,அடக்குதல் உக்தி குறித்து இன்னும் விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.இதை அடித்து நொறுக்குவதும் ஆடிக் கறத்தலும் எனஅழைக்கலாம்.

அடித்து நொறுக்குவது(Hammer):

எல்லோருக்கும் எழுகிற ஒரு முக்கியமான கேள்வியானது,இது எவ்வளவு நாளைக்கு நீளும் என்பதுதான்.

மாதக்கணக்கில் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்பட்டிருந்தால் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல பிரச்சனைகள் எழும் என ஒவ்வொருவரும் அச்சமடைகின்றனர். துரதிர்ஷ்டவசமாக இம்பீரியல் கல்லூரி ஆய்விலும் கூட இவ்வாறு காட்டப்பட்டுள்ளது.

மேலே உள்ள இம்பீரியல் ஆய்வுப்படத்தில்,அடித்து நொறுக்குகிற காலம் வெளிர் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.இந்தக் காலமானது கடுமையான சமூக விலகல் போன்ற அடக்குதல் உக்தியை மார்ச் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையிலும் நீடித்து காட்டுகின்றது.

ஒருவேளை நீங்கள் ஒரு அரசியல்வாதியாக இருந்தால்,நோயாற்றுதல் உக்தியை தேர்வு செய்வதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதற்கு விட்டுவிடுவீர்கள் .அல்லது அடக்குதல் உக்தியை தேர்வு செய்து நோய்த் தொற்றும் மரணமும் உச்சமடைவதை தடுத்து பல மாதங்களுக்கு பொருளாதாரத்தை முடக்கி வைத்திருப்பீர்கள்.வலுக்காட்டாயமாக இந்த இரண்டு வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என உங்களுக்குத் தோன்றலாம்.ஆனால் அப்படியில்லை.

சில ஆய்வுகளானது,பரிசோதனை,தொற்று உள்ள தொடர்புகளை கண்டறிவது,கூட்டத்தை தவிர்ப்பது(சீனா,சிங்கபூர்,தென் கொரியா போன்ற நாடுகள் கடைபிடிக்கின்ற தடுப்பு நடவடிக்கைகள்) உள்ளிட்ட தடுப்புக் காரணிகளை கவனத்தில் கொள்ளாமல் இவ்வாறான முடிவுகளை(நீண்ட கால ஊரடங்கு) முன்னரிவிக்கின்றன.

ஆக,அடித்து நொறுக்குதல் காலகட்டத்திற்கு சில வாரங்களே ஆகும்.மாதக் கணக்கில் நீளாது.

மேலே உள்ள படமானது, ஆறுகோடி மக்கள் தொகை கொண்ட சீனாவின் ஹூபெயில் 23/1 ஆம் தேதிக்கு பிறகான நாட்களில் முதன் முதலாக ஒரு புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை வராமல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது.அடுத்த இரு வாரங்களில் ஹூபெ, தனது அன்றாட வேலைகளுக்கு திரும்பி விட்டது.ஐந்து வாரங்களில் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது. சீனாவின் இந்த மாகாணம் நோய்த் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி என்பதை மறந்திட வேண்டாம்.

இதேபோன்ற நடவடிக்கைகளை பிரான்சு,ஸ்பெயின்,இத்தாலி போன்ற நாடுகளும் மேற்கொண்டன.பாதிப்புள்ளவர்களை தனிமைப்படுத்துவது,தொடர்புகளை கண்டறிவது,அவசியமான தேவைக்கு மட்டுமே மக்கள் கடைகளுக்கு வரவேண்டும் என அறிவுறுத்துவது,பரிசோதனைகளை மேற்கொள்வது,அவசர சிகிச்சை பிரிவுகளை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன.

ஆனால் எவ்வளவு தீவிரத்துடன் இதை மேற்கொண்டன என்பதுதான் கேள்வி!

சீனா இதை கடுமையாக கடைபிடித்தது.உதாரணமாக,அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும்.அதுவும் வீட்டுக்கொருவர் மட்டுமே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நடைமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.இதனால்தான் இந்தக் கொள்ளை நோய் விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஆனால் பிரான்ஸ்,இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளவில்லை.மக்கள் வீதிகளில் சாதரணமாக நடமாடினார்கள்.யாரும் சுவாசக் கவசம் அணியவில்லை.இதை பட்டும் படாமல் அடித்து நொறுக்குவதாக கொள்ளலாம்.,இதனால் இங்கு கொள்ளை நோய் கட்டுக்குள் வருவதற்கு நீண்ட காலம் ஆகலாம்.

சீனாவிற்கு வெளியே,தென்கொரியா நாடுதான் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று பாதிப்பை பல வாரங்களாக எதிர்கொண்டது.ஆனால் தற்போது நிலைமை அங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனக் கூறாமலேயே இதை அவர்கள் சாதித்துள்ளார்கள்.தீவிரமான பரிசோதனைகள்,தொடர்புகளை கண்டறிந்து தனிமைப் படுத்துவது போன்ற நடவடிக்கைகளைக் கொண்டே அவர்கள் இதை சாதித்தார்கள்.

கொள்ளை நோய் பரவாமல் தடுப்பதற்கு,உலக நாடுகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகளை கீழ் உள்ள அட்டவணை எடுத்துக் காட்டுகிறது.

வெவ்வேறு நாடுகள் எடுத்த தடுப்பு நடவடிக்கைகளை இப்பட்டியல் காட்டுகிறது.சமூக விலக்கு,பயணத் தடை என தொடக்கத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்த நாடுகள் பின்னாளில் இக்கொள்ளை நோய்க்கு பெரும் விலை கொடுக்காமல் தப்பித்தன.

ஆனால் தொடக்கத்தில் அசிரத்தையாக இருந்த பிரான்சு ஸ்பெயின் போன்ற நாடுகள்,பின்னாளில் கடுமையான அடித்து நொறுக்குகிற நடவடிக்கைகளுக்கு வழியின்றி சென்றன.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் எதுவுமே செய்யாதிருந்ததைப் பார்க்கிறோம்.குறிப்பாக அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும் தொற்று எண்ணிக்கை செங்குத்தாக உயரத் தொடங்கிய போதும் கூட சிங்கபூர்,அல்லது தாய்வான் போல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.ஆனால் காலம்கடந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின.ஒன்று இந்த கொள்ளை நோயால் துன்புறுவது அல்லது காலம் கடந்தேனும் தவறை உணர்ந்து,விட்டதை பிடிக்க மேலும் கடுமையான அடித்துநொறுக்குகிற நடவடிக்கைகளை மேற்கொண்டாகவேண்டும்.இதிலிருந்து யாரும் தப்பித்து ஓட முடியாது.

எல்லாம் சாத்தியம்தான்.கடுமையான சமூக விலகல் நடவடிக்கைகளை அமலாக்கமலேயே தென்கொரியா சில வாரங்களில் தொற்றை கட்டுப்படுத்தியது.தற்போது மேற்குலக நாடுகள் தீவிரமான சமூக விலகல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.ஆகவே நிலைமை இன்னும் சில வாரங்களில் கண்டிப்பாக கட்டுக்குள் வரும்.இவையாவுமே அரசின் உத்தரவை மக்கள் எவ்வாறு கடைபிடிக்கிறார்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தது.

முதலில் அடித்து நொறுக்குதலை அமல்படுத்தி, பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்னர்,அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கவேண்டும்.அதுதான் ஆடிக்கறத்தல்

ஆட்டம் அல்லது ஆடிக்கறத்தல்(The Dance):

கடுமையான அடித்து நொறுக்குதல் உக்தியால் சில வாரங்களில் கொள்ளை நோயை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால்,இச்சிக்கலை முறையான வகையிலே நம்மால் கையாள முடியும்.இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறிகிற வரையில் தொற்று பரவாமல் தடுக்கின்ற நீண்டகால நடவடிக்கைகளில் கவனத்தை குவிக்கலாம்.

இந்தப்படத்தில் காட்டப்பட்டுள்ள நீண்டகால அடித்து நொறுக்குதல் காலகட்டத்தை, பெரும்பாலான மக்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள்.மருந்து கண்டறிகிற வரையிலே நீண்டகாலமாக வீட்டிலேயே அடைந்துகிடக்க வேண்டியதுதானா என அச்சமடைகிறார்கள்.ஆனால் அப்படியிருக்க வேண்டியதில்லை.மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாகவே திரும்பிடுவோம்.

கொரோனா வைரசை வெற்றிகரமாக ஆடிக்கறந்த நாடுகள்:

நீண்டகாலமாக கொரோனா தொற்று பாதிப்பு நிலவிய சிங்கப்பூர்,தைவான்,தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் எவ்வாறு இதிலிருந்து மீண்டன? அதிலும் குறிப்பாக ஆயிரக்கணக்கான வைரஸ் தொற்று ஏற்பட்ட தென்கொரியா,ஊரடங்கை அமல்படுத்தாமலேயே எவ்வாறு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது?

இந்த கானொளி இணைப்பில் https://www.bbc.com/news/av/world-asia-51897979/coronavirus-south-korea-seeing-a-stabilising-trend தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் அதை விளக்கமாக எடுத்துரைக்கின்றார்.மிக எளிமையான வகையில் அவர்கள் இதை செய்கிறார்கள்:பரிசோதிப்பது,கண்டறிவது,தனிமைப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை முறையாக செய்தார்கள்.

சிங்கப்பூர் மேற்கொண்டுவருகிற நடவடிக்கைகளை இந்த இணைப்பு https://academic.oup.com/jtm/advance-article/doi/10.1093/jtm/taaa039/5804843 எடுத்துரைக்கின்றது.

தென்கொரியாவைப் போலவே சிங்கபூரும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக பொருளாதார உதவிகளையும் சிங்கப்பூர் அரசு செய்தது.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை.அடித்து நொறுக்குகிற உக்தியால் மற்ற நாடுகளுக்கு மேற்கூறிய நடவடிக்கைகளை கடைபிடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது.

ஆனால் இந்த நடவடிக்கைகள் போதுமானதா?

R காரணியின் ஆட்டம்:

கொள்ளை நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காலம் முதலாக வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிக்கின்ற காலம் வரையிலுமான காலத்தையே நான் ஆடிக் கறத்தல் காலம் என அழைக்கின்றேன்.அடக்குதல்(அடித்து நொறுக்குதல்) காலத்தில் உள்ளதுபோல கடுமையான நடவடிக்கைகள் இக்காலகட்டத்தில் இருக்காது.முன்பு நோய்த் தொற்று பரவிய அதே பகுதிகளில் மீண்டும்கூட தொற்று அலை உருவாகலாம். சில பகுதிகளில் நீண்ட காலத்திற்கு வரமாலும் போகலாம்.இது,புதிய தொற்று எவ்வாறு ஏற்படுகிறது என்கிற தன்மையைத் பொறுத்ததாகும்.இதை அடிப்படையாகக் கொண்டே சமூக விலகல் நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுவதா அல்லது தளர்த்துவதா என முடிவு செய்ய முடியும்.

R என்பது(Reproductive Factor) வைரசின் மறுத் தொற்று பரவல் வீதம் எனலாம்.இந்தக் கொள்ளை நோய்க்கு தயாராகத நாட்டில் R இன் பரவல் வீதம் 2 ஆக இருக்கும். தொற்று ஏற்பட்ட ஒருவர்,அடுத்த ஒருவாரத்தில் அடுத்தடுத்த இருவருக்கோ அல்லது மூவருக்கோ தனது வைரஸ் தொற்றை பரப்ப இயலும்.

R இன் வீதம் ஒன்றுக்கு மேலாக இருந்தால்,கொள்ளை நோய் பரவல் செங்குத்தாக உயரும். R இன் வீதம் ஒன்றுக்கு கீழே இருந்தால்,தொற்று கட்டுக்குள் வந்து மடியும்.

அடித்து நொறுக்குகிற காலத்தில், R இன் வீதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக கொண்டு வரவேண்டும் என அரசு இலக்கு நிர்ணயக்கிறது.சீனாவின் வூஹானில் தொடக்கதில் R இன் வீதம் 3.9 ஆக இருந்தது.பின்னர் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் சுய தனிமைப்படுதல் நடவடிக்கையின் மூலமாக R இன் வீதம் 0.39 ஆக குறைக்கப்பட்டது.

அடித்து நொறுக்குகிற காலகட்டத்திலிருந்து ஆடிக்கறக்கிற காலத்திற்கு வந்தபின்னர்,கடுமையான நடவடிக்கைகளை தொடர வேண்டும் என அவசியமில்லை.

ஆடிக்கறத்தல் காலத்தில் R வீதத்தை ஒன்றுக்கு கீழாக வைப்பதில் கீழ்வரும் சில முறைகளை கடைபிடிக்கலாம்.

வைரஸ் தொற்று ஏற்படுகிற ஒவ்வொருவருக்கும் என்னமாதிரியான விளைவுகள் ஏற்படலாம் என்பதை மேலே உள்ள படத்தில் தோராயமாக கூறப்பட்டுள்ளது.இது இந்த வீதத்தில்தான் இருக்கும் என்பதை இதுவரை யாருமே துல்லியமாக கூறியது கிடையாது.ஆனால் தற்போதுவரை வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகளில் வந்த தகவல்களைத் தொகுத்து இது எவ்வாறு இருக்கலாம் என மேற்கூறிய படத்தில் கூறியுள்ளோம்.

முதல் கட்டத்தில், அறிகுறி தென்படாத கட்டத்திலேயே பலருக்கு தொற்று ஏற்படும் நம்பப்படுகின்றது.இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்தில் அறிகுறி தென்பட்டு(மருத்துவமனை சென்றோ செல்லாமலோ) தொற்று மறைகிறது.

முதல் கட்டத்திற்கு உதாரணம் கூறவேண்டுமென்றால்;உங்களுக்கு தொற்றின் அறிகுறி தெரியாத நிலையில் சாதரணமாகவே உணருவீர்கள்.அப்போது வேறு ஒருவர்களுடன் நீங்கள் பேசுகையில்,வைரசை அவருக்கு பரப்புகிறீர்கள்.உங்கள் மூக்கை தொட்டு பின்னர் கதவுப் பிடியை திறந்திருப்பீர்கள்.உங்களுக்கு அடுத்த வருபவர் கதவுப் பிடியை தொடுகிற போது அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும்

வைரஸ் அதிகமானால் அறிகுறி தெரியத் தொடங்கும்.வேலைக்கு போவதை தவிர்ப்பீர்கள்.உங்களது படுக்கையில் ஓய்வெடுப்பீர்கள்,மருத்துவரை பார்க்கப் போவீர்கள்.தொற்று அதிகரிக்கத் தொடங்கிய வேளையில்,மற்றவருக்கு தொற்று பரவிடாமல் இருப்பதன் பொருட்டு சுய தனிமைப்படுத்திக் கொண்டால்,வைரஸ் பரவலை தடுக்கலாம்.

நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டால் வைரஸ் பரவாமல் தடுக்கலாம்.

சிங்கபூர் அல்லது தென்கொரியா நாடுகளில் கடைபிடிக்கப்படுகிற இக்கொள்கைகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியதை பார்க்கின்றோம்.

  • பெருமளவில் பரிசோதனைகளை(Mass Testing) மேற்கொள்ளும்போது,அறிகுறி தென்படுவதற்கு முன்பாகவே தொற்று கண்டறியப்பட்டு பரவல் கட்டுப்படுத்தப்படுகின்றது.
  • அறிகுறி தென்படுவதற்கு முன்பே நோய்த் தொற்றை கண்டறிவதற்கு நாம் கற்றுக் கொண்டால் நீல நிற நாட்களை குறைக்க முடியும்.ஓட்டுமொத்த பரவலையும் கட்டுப்படுத்த முடியும்.
  • அறிகுறி தென்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டால்,ஆரஞ்சு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள தொற்றின் கட்டமே மறைந்துவிடும்.
  • சமூக விலகல்,சுவாசக் கவசம் அணிதல்,கைகளை கழுவுதல் ஆகிய நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால்,நீண்டகாலத்திற்கு வைரஸ் பரவலை தடுத்திட முடியும்.

மேற்கூறிய நடவடிக்கைகளில் தோல்வி ஏற்பட்டால்,தீவிரமான சமூக விலகல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

சமூக விலகல் உக்தியால் R ஐ குறைப்பது:

மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தபின்னரும் R இன் வீதத்தை ஒன்றுக்கு கீழே வைக்கமுடியவில்லை என்றால் பரவல் வீதத்தை கட்டுப்படுத்தும் விதமாக நபர்களை நபர்கள் நெருக்கமாக சந்திப்பதை தடுக்கின்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

உதாரணமாக,அதிக எண்ணிக்கையில் நிகழ்சிகளில் மக்கள் கூடுவதை தடைசெய்யலாம்.அதேசமயம் பள்ளிகளை மூடுவது,வர்த்தகத்தை மூடுவது,அனைவரையும் வீட்டில் இருக்கச் சொல்வது போன்ற நடவடிக்கைககளை மேற்கொண்டால், மிக அதிக சமூகப் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இந்தப் படத்தில் கூறப்பட்ட அம்சங்கள் குறித்து இதுவரை யாரும் ஆய்வு செய்யவில்லை.

இப்படம் போன்ற ஒன்றை அரசியல்வாதிகள் பார்த்தாலே,அவர்கள் முடிவு எடுத்தாக வேண்டிய அவசியத்தை உணருவார்கள்.தற்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதும் தெரியும்.

அடித்து நொறுக்குதல் காலகட்டத்தில், R வீதத்தை எந்தளவிற்கு குறைக்க முடியுமோ அந்தளவிற்கு குறைக்கவேண்டும் என அரசியல்வாதிகள் கருதுவார்கள்.ஹூபெயில் 0.32 ஆக குறைக்கப்பட்டது.அந்தளவிற்கு இல்லையென்றாலும் 0.5 அல்லது 0.6 ஆகவாவது குறைக்கலாம்.

ஆனால் ஆடிக்கறத்தல் காலகட்டத்தில்,நீண்ட காலத்திற்கு Rஐ 1 க்கு கீழே வைத்திருக்க வேண்டும். R கட்டுக்குள் இருந்தால்தான்,பெரும் சமூக விலகல் நடவடிக்கைகளையும் கொள்ளை நோய் மீண்டும் பரவுவதையும் தவிர்க்கலாம்.

இதனாலேயே நமது அரசியல்வாதிகள் தெரிந்தோ தெரியாமலோ கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

  • R ஐ குறைக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பட்டியலிடுகின்றனர்.
  • R ஐ குறைக்கின்ற நடவடிக்கையால் என்னவிதமான நன்மைகள் கிடைக்கும் என யோசிக்கின்றனர்.
  • இந்த நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சமூகப் பொருளாதார விளைவுகள் குறித்தும் யோசிக்கின்றனர்.
  • குறைவான பொருளாதார சேதாரத்தில் Rஐ ஒன்றுக்கு கீழே குறைக்கின்ற வழியொன்றை தேர்வு செய்கின்றனர்.

R குறித்த எண் விளையாட்டை விரைவாக நாம் கற்றுக் கொள்ளவேண்டும். R ஐ குறைக்க மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைகளால் ஏற்படுகிற சமூகப் பொருளாதார விளைவுகளையும் விரைவாக அறிந்துகொள்ள வேண்டும்.

இதுகுறித்தெல்லாம் தெரிந்துகொண்டால்தான் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும்.

முடிவாக:நேரத்தை பெறுவது

கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கிலும் பரவியுள்ளது.152 நாடுகளில் தற்போது கொரோனா தொற்று பாதிப்புள்ளது.

கொரோனா வைரசின் பாதிப்பை இதுவரை சந்திக்காத நாடுகளோ,எங்கள் நாட்டிலெல்லாம் வைரஸ் வருமா என அலட்சியம் காட்டுகின்றன.ஆனால் அங்கு வைரஸ் ஏற்கனவே வந்திருக்கலாம்.கண்டறியப்படாமல் வேண்டுமானால் இருக்கலாம்.இந்த வைரஸ் தாக்குகிற போது,சுகாதார அமைப்பு கடுமையான சிக்கலுக்குள்ளாகும்.ஆகவே தீவிரமடைவதற்கு முன் தடுப்பது அவசியம்.

கொரோனா ஏற்கனவே வந்துள்ள நாடுகளைப் பொருத்தவரைக்கும்,என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்பது தெளிவு.

சில நாடுகள்,நோயாற்றுதல் உக்தியை தேர்ந்துகொண்டு கொள்ளை நோய்ப் பரவலை அதிகமாக்குகின்றன,சுகாதார அமைப்பிற்கு நிலைகுலைவை ஏற்படுத்துகின்றன.வைரஸ் வகைமாற்றமடைவதற்கு வாய்ப்பை வழங்குகின்றன,பல்லாயிரக்கணக்கன மக்களின் மரணத்திற்கு காரணமாகின்றன.

வேறு சில நாடுகள்,கொரோனாவுக்கு எதிராக போராடுகின்றன.சில வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்துகின்றன.செயல்படுத்துவதற்கான நேரத்தை பெற்றுக்கொண்டு செயல் திட்டத்தை உருவாக்குகின்றன.தடுப்பு மருந்து கிடைக்கின்ற வரையில் நோயை கட்டுப்படுத்துகின்றன.

தற்போது அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகள் நோயாற்றுதல் உக்தியை தேர்ந்துகொண்டுள்ளன.

மற்ற நாடுகள் கொரோனாவிற்கு எதிராக போராடுகிற வேளையில்,இவர்களோ “எங்களால் அதை செய்ய முடியாது” என போராடுவதை கைவிட்டு விட்டார்கள்.

ஐரோப்பா எங்கிலும் நாசிக்கள் நுழைந்துவிட்டார்கள்.ஆகவே நாம் போராட முடியாது.என வின்ஸ்டன் சர்ச்சில் சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும்?பெரும்பாலான நாடுகள் இதைத்தான் செய்கின்றன.ஆகவே போராடுவதற்கான வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது.நாம்தான் அரசை செயல்பட வைக்க வேண்டும்.

கட்டுரையாசிரியர் குறிப்பு:

இந்த கட்டுரையானது ஒரு சிறு குழுவின் நீண்ட நேர கடுமையான உழைப்பால் எழுதப்பட்டதாகும்.கொரோனா வைரஸ் குறித்து வெளிவந்த பல்வேறு ஆய்வு முடிவுகளை ஒன்றாக இக்கட்டுரையில் தொகுத்துள்ளோம்.

மொழிபெயர்ப்பு: அருண் நெடுஞ்சழியன்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

இக்கட்டுரையானது இதுவரை 32 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முதலாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

--

--