‘வீடு’ தந்த சுகம்

நான் சாலையில் வண்டியோட்டிக்கொண்டிருக்கும் போதெல்லாம் என் முன்னால் யாரேனும் மெதுவாக, வழிவிடாமல் சென்றுகொண்டிருந்தால் கடுப்பாகி, ஹாரன் ஒலியெழுப்பி, அவனை(ரை)த் திட்டிக்கொண்டே வேகமாகக் கடந்து சென்றுவிடுவது வழக்கம். அலுவலகத்திற்கு தாமதமாகக் கிளம்பினாலும், நேரமாகக் கிளம்பினாலும் அப்படித்தான். தமிழ் சினிமாவிலும் வெகு வேகமாக நகரக்கூடிய திரைக்கதை கொண்ட படங்கள் பரவலாக வெற்றிபெற்றுவிடுகின்றன. காரணம் பார்க்கிற மக்களான நாமே நடைமுறையில் அப்படித்தானே. நம் வாழ்வியலே அப்படித்தானே மாறிவிட்டிருக்கிறது. சமையல் சிக்கிரம் ஆகணும், இண்டர்நெட் ஸ்லோவா இருந்தா எரிச்சலடையறோம்; ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்துவிட்டு அது சீக்கிரம் அடுத்த நாளே டெலிவரி ஆக 50 ரூபாய் அதிகமாக ஆனாலும் தர முன்வருகிறோம். பத்து செகண்டில் இருபது சேனல்களை மாற்றுகிறோம். ஆனால் நம்முடைய முன் தலைமுறை தூர்தர்ஷனை மட்டுமே பொறுமையாகப் பார்த்து ரசிக்க முடிந்திருக்கிறது. பைக்கில் அடித்து, பிடித்து 2 சீன் கழித்து படம் பார்க்கப் போகாமல், நடந்தோ பேருந்திலோ சென்று ஆற அமர படம் பார்த்திருக்கிறார்கள். விவசாயம் செய்ய பருவங்களுக்காக காத்திருந்திருக்கிறார்கள். காதலைச் சொல்ல யுகங்களாகக் காத்திருந்திருக்கிறார்கள்.

நான் சொல்ல வருவது இதைத்தான். இந்த தலைமுறை நிதானம் இழந்து தவிக்கிறது. எதையுமே வேகமாகச் செய்துவிடவேண்டும் என கங்கணம் கட்டுகிறது. கல்லூரி முதல் வருடத்துக்குள்ளாகவே ஐந்து பெண்களை காதலித்து பரஸ்பரம் ‘அனுபவித்த’ இந்த தலைமுறை பையனை எனக்குத் தெரியும். காதலைச் சொல்லவே (அ) நீலப்படம் பார்க்கவே முப்பது வயதான போன தலைமுறை இருக்கிறார்கள். அப்போதும் வேகம் இருந்திருக்கலாம், ஆனால் ஒப்பீட்டு விகிதாச்சார அளவில் இப்போது மிக அதிகம்.

இன்று (13–02–2015) வீடு படம் பார்க்கையில் என்னை இந்த உண்மை மின்னல் போல வெட்டியது. இன்று பாலுமகேந்திராவின் முதலாமாண்டு நினைவஞ்சலி காரணமாக தலைமுறை திரைப்படம் ஏவிஎம் ப்ரிவியூ திரையரங்கில் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் பாலுமகேந்திராவுக்கு அவரது படைப்பில் பிடித்த படமான, அவரது படைப்பின் உச்சமான ’வீடு’ திரைப்படம் திரையிடப்பட்டது. சீட்டில் அமரும் வரை எனக்குத் தெரியாது ’வீடு’ தான் போடப்போகிறார்கள் என்று. இதே வீடு திரைப்படம் சரியாக ஒரு வருடம் முன்பு அவரது சினிமாப் பட்டறையில் அவரோடு அமர்ந்து பார்த்த அனுபவமுண்டு எனக்கு. கிட்டத்தட்ட அதே போன்ற (அ) அதைவிட அதிகமான உணர்வுகளை தீண்டிச்சென்றது இந்த வீடு படம். போன வருடம் பார்த்த போது, பதேர் பாஞ்சாலியை விட, யதார்த்ததிலும், நேர்த்தியிலும், உணர்வுகளை இலகுவாக கையாண்டதிலும் ‘வீடு’ படம் முன்னிற்கிறது என்றேன், வெவ்வெறு காலக்கட்டத்தில் வந்த இரு படங்களை ஒப்பிடுவது தவறென்ற போதிலும். இரண்டு நாள் முன்பு தான் பதேர் பாஞ்சாலி பார்த்திருந்தோம். அவரோ மௌனமாக என்னைப் பார்த்துவிட்டு; புன்னகைத்து வேறு கேள்விக்கு பதிலளிக்கச் சென்றுவிட்டார்.

ஒரு காட்சியில் சொக்கலிங்க பாகவதர் ஆலாபனை ஒன்று பாடிக்கொண்டிருக்க ஒரு 4 வயதுமிக்க சிறுமி அவர் பாடுவதை முழுக்க நிதானமாகக் கேட்டுவிட்டுப் பின்னர், “போ தாத்தா, எப்பப் பாரு ஆ..ஆ..ஆ…ஆ..ங்கற… பாட்டுனா, பொன்மேனி…உருகுதே.. இப்படி இருக்கனும் தாத்தா” என்று சொல்லுவாள். இது ரசனை அடிப்படையிலான தலைமுறை இடைவெளி என்றாலும், 84 வயது வயது தாத்தா பாடுவதை 4 வயது குழந்தை பொறுமையாகக் கேட்கிற மனப்பக்குவம் அப்போது இருந்திருக்கிறது. எனக்கு இருந்தது என்பதுகளில்; இப்போது பழைய பாடலை சேனல் மாற்றும் போது இரண்டு வினாடி கூட கேட்கத்தாயாரக இல்லை இந்த தலைமுறை பிள்ளைகள்.

வீடு படத்தில் மழைக் காட்சிகள் அதிகமுண்டு; அவை செயற்கையாக உருவாக்கிய மழை அல்ல. அவரே எதிர்பாரமல் இயற்கை நன்கொடையாகக் அவருக்குக் கொடுத்த மழை. அப்போதைய அகன்ற, மரங்கள் அதிகமிருந்த தெருக்களில் மழை பொழிவதை திரையில் பார்க்க அத்தனை மகிழ்வாக இருந்தது. மனசு இலவம்பஞ்சாகிப் பறந்தது. இயற்கையாக மழை பொழிந்துகொண்டிருப்பதை பாலு படம் பிடித்திருந்த விதம் அற்புதத்தின் உச்சம். மழையை அணுஅணுவாக காதலிப்பவனால் மட்டுமே அப்படி ஃப்ரேம் வைக்க முடியும். அது போன்ற மழையை இளம்பிராயத்தில் நான் பார்த்தது; உருண்டு விளையாண்டது. இருபது வருடங்கள் கழித்து வீடு படத்தில் மழை பொழிவதை, பெய்து முடித்த ஈர மண்ணைப் பார்த்தது மயிர்க்கூச்செறியச்செய்தது. இசையால் மட்டுமே அப்படியொரு சுகானுபவத்தைக் கொடுக்கமுடியுமென்று நினைத்திருந்தேன். அதை படமே செய்தது. அவர் மழைக்கு வைத்த ஒரு ஃப்ரேமை என்னால் வைக்க முடிந்தால் கண்டிப்பாக மார்த்தட்டிக்கொள்வேன் நான் ஒரு இயக்குனரென்று. சுதா (அர்ச்சனா)-வுக்கு அவர் வைத்த டைட் ஃப்ரேம் ஒவ்வொன்றும் இலக்கியத்தரமான காட்சிகள்.

இளம்பெண்ணின் வீடு கட்டுகிற கனவை, பொறுப்பை, இயலாமையை, இடர்களை படம்பிடித்தது, பெரும்பாலோனோரின் மனவோட்டத்தோடும்/யதார்த்ததோடும் ஒத்துப்போனதுதான் அவரது/படத்தின் வெற்றி. சுதா-கோபி (அர்ச்சனா — பானுசந்தர்) -யுடனான காதல் போன்று வெகு யதார்த்தமான/புரிதல் மிகுந்த/அன்பு செறிவுள்ள காதலை வேறெந்த படத்திலும் நான் பார்த்திருக்கவில்லை. வீடு தளம் போடுவதற்கு சுதா பணமில்லாமல் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கையில், கோபி (பானுசந்தர்) தன் தங்கைகள் திருமணத்திற்காக வைத்திருந்த பத்தாயிரம் பணத்தைக் கொண்டு அவரே தளம் போடுகிற வேலைகளை ஆரம்பித்து கவனித்துக்கொண்டிருப்பார். அப்போது சுதா அங்கு வந்து, “என்னங்க இது” என்பது போல கண்களால் கேட்க, கோபி அவளை அதிகாரத்தோடு மென்மையாக கண்டிக்க, சுதா சில வினாடிகளில் சமாதானமடைந்து அவன் தோள் பற்றுகையில் வருகின்ற புரிதல், ஒரு ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான புரிதல். இத்தகைய புரிதலே நம் நாட்டிலுள்ள திரு(இரு)மணங்களின் ஆயுட்காலத்தை நீட்டித்து வைத்திருக்கின்றன.

இது போன்ற உணர்வுகளை(புரிதல்களை) கவுண்டமணி, வடிவேலு புகைப்படம் மூலமாக (ரியாக்‌ஷன்களாக) வாட்ஸப்/ட்விட்டரில் தெரிவிக்கிற இந்த தலைமுறைக்கு (என் உட்பட) புரிவது சற்று கடினமே.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.