நாலு கால் நண்பன்

Bavany SANDIRESSEGARANE
Nov 7 · 2 min read

சியாமளாவிற்கு பார்வை கிடையாது. அவளின் தாய், தந்தை இறைவன் திருவடிக்கு சென்றுவிட்டனர். உடன்பிறப்பும் கிடையாது.

ஆனால், சொத்துக்கள் ஏறாளமாக இருந்தன. சியாமளா ஒரு குருடி என்பதால், அவள் உறவினர்கள் சியாமளாவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர்…

கொஞ்ச காலமாக சியாமளா வத்திக்குச்சி factory இல் வேலை செய்கிறாள். ஒரு சிறிய வீட்டில் அவள் தன் நாய் ஜிம்மியுடன் வசித்து வருகிறாள். ஜிம்மி மீது சியாமளாவிற்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஜிம்மி தனக்கு துணையாக இருக்கும் போது அவளுக்கு பார்வை இல்லாதது ஒரு குறையாக தோன்றுவதில்லை.

இன்று சியாமளா factory இல் மாதச்சபளம் வாங்கினாள். அதை தன் கைப்பையில் வைத்தாள். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாள். கைப்பையை டேபில் மீது வைத்துவிட்டு , நேராக கிச்சனுக்கு சென்று காபி போட்டாள். கதவு திறந்து கிடந்தது…அந்நேரம் பார்த்து ஒரு திருடன் வீட்டுக்குள் புகுந்து கைப்பையை எடுத்து சென்றான்…ஜிம்மி அவன் ஓடுவதைப் பார்த்து, குரைத்தபடி திருடனை துரத்தியது…

சியாமளா : “ஏய் ! ஜிம்மி என்னாச்சு?”

அவள் ஜிம்மி..ஜிம்மி என்றழைத்தாள். ஜிம்மி குரல் கொடுக்கவில்லை, ஜிம்மியையும் காண வில்லை. திடீரென எங்கு போனது ! போய் கதவை மூடிவிட்டு வந்தாள். சம்பளப்பணத்தை எடுத்து வைக்க கைப்பையை எடுக்கப் போனாள். டேபில் மீது கைப்பை இல்லை ! அவளுக்கு பகீரென்றது… ஓ ! திருடன் வந்து பையை எடுக்க அதைப் பார்த்து ஜிம்மி அவனை துரத்திச் சென்றிருக்கிறதா? அப்போதுதான் சியாமளாவிற்கு விளங்கியது.

மாலை ஆனது ஜிம்மி வரவில்லை. சியாமளாவிற்கு ஒரே டென்ஷன். ஜிம்மி குரைக்கும் சத்தம் கேட்டது…சியாமளா ஓடி போய்…கதவைத் திறந்தாள். ஜிம்மி அவள் மீது பாய்ந்தது. என் கண்ணே, ராஜா வந்திட்டியா கூறி முத்தமிட்டாள்.

“ஏய், பணம் போனால் போகட்டும். நீ தொலைந்து போய் இருந்தால் என் நிலை என்ன ? சரி வா டா, சாப்பிட” என்றழைத்தாள்.

சியாமளா ஜிம்மிக்கு சாப்பாடு கொண்டு வந்து வைத்தாள். ஜிம்மி ரெண்டடி பின்னால் போய் உட்கார்ந்து குரைத்தது…

“என்ன ஜிம்மி இன்று வெள்ளிக்கிழமை கறி சோறு கிடையாது, சாப்பிடு !” என்றாள்.

மீண்டும் ஜிம்மி குரைத்தது…

“ஓ சாரி, தண்ணீர் வைக்கலியா?”

தண்ணீரை கொண்டு வந்து வைத்தாள். ஜிம்மி குரைப்பதை நிறுத்தவில்லை. சியாமளாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் ஜிம்மியைப் பார்த்து,

“என்னடா என்ன?”என்றாள்.

ஜிம்மி அவள் ஆடையை பிடித்து இழுத்தது.

“இப்போ என்ன வேண்டும் உனக்கு?”

ஜிம்மி அவளை கதவருகே அழைத்து சென்றது. சியாமளாவிற்கு புரிந்தது.

“ஓ ! போலீஸில் புகார் கொடுக்கணுமா? சரி வா. ஆனால், எனக்கு வழி தெரியாது. நீதான் என்னை கூட்டிகிட்டு போகணும்.”

வீட்டை பூட்டிவிட்டு ஜிம்மி பின்னே நடந்தாள். ஜிம்மி தடுமாறாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சியாமளாவை அழைத்து வந்தது. இன்ஸ்பெக்டர் பிரபு சியாமளாவை வரவேற்றார்.

“இப்படி உட்காருங்க. என்னம்மா? உங்களுக்கு என்ன பிரச்சனை?”

“சார், காலையில் ஒரு திருடன் என் வீட்டில் புகுந்து என் கைப்பையை எடுத்துக்கிட்டு ஓடினான். அதில் இந்த மாதச்சபளம் இருந்தது”

“கொஞ்சம் இருங்கம்மா. கான்ஸ்டபில், காலையில் கிடைத்த அந்த கைப்பையை கொண்டு வாங்க ! இந்தாங்கம்மா இது உங்க பைதானானு பாருங்க” என கூறி சியாமளாவிடம் கொடுத்தார்”

அவள் பையை வாங்கி தடவிப் பார்த்தாள். பின் பையை திறந்து உள்ளே இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தாள்.

“சார், பணம் சரியாக இருக்கு! ரொம்ப தாங்ஸ். அந்த திருடனை பிடித்தீர்களா ?” ;

“ம், அவன் பிடிப்பட்டுக் கொண்டான். நீங்க இதில் ஒரு கையெழுத்து போட்டு போங்க”

இரவு வீட்டில் சியாமளா கட்டில் மீது படுத்துக் கொண்டிருந்தாள். ஜிம்மி ஓடி வந்து அவள் மீது ஏறி படுத்துக் கொண்டது. சியாமளா ஜிம்மியை வருடியபடி சிந்தித்துப் பார்த்தாள். நாய் ஒரு நல்ல நண்பன்; நல்ல காவல்காரன்; நன்றியுள்ள ஜீவன். ஆனால், மனிதர்கள் ஒருவரை திட்டும்போது ச்சீ…போடா நாயே என்று ஏசுகிறார்களே! அதனிடம் இருக்கும் சிறப்பை, ஆறு அறிவு கொண்ட மனிதர்கள் ஏன் இதை அறிவதில்லை? சே என்ன மனிதர்களோ…