எங்கள் ஆசிரியர்
“சார், இவன் உங்ககிட்ட ஒன்னு சொல்லணுமாம்”, தேக்கு மர நாற்காலியில் முழுவதுமாய் ஆக்கிரமித்து கம்பீரமாய் அமர்ந்து இருந்த எங்கள் வாத்தியாரிடம் மற்ற நண்பர்களுடன் நானும் போய் நின்றேன்.
அவர் எங்கள் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு “ம்ம்ம்…” என்றார். அந்த காந்த உறுமல் எங்கள் காதுகளில் விழுந்தவுடன் ஒருசேர “ஹாப்பி டீச்சர்ஸ் டே” என்று எல்லோரும் கத்த, ஒரு சிறிய புன்னகையுடன் “உஸ்ஸ்….” என்று உட்கார சொல்லி சைகை புரிய, சிரித்துக்கொண்டே போய் அமர்ந்து விட்டோம்.
“என்ன வாயில பபுள்கம், சிகரெட் பிடிச்சுட்டு வந்தியா” எனக்கு சிகரெட் பிடிக்கும் வழக்கம் இல்லை, அந்த கேள்வி எனக்கானது இல்லை என்பது தெரியும். இருந்தும் ஒன்பதாம் வகுப்பில் கேட்ட அந்த கேள்விக்காக இன்று வரை பபுள்கம் தவிர்த்து வந்துள்ளேன். “நாம எதாவது முயற்சி பண்ணிட்டே இருக்கனும் சந்திரா, அப்போதான் ஜெயிக்க முடியும்”, விளையாடும் போது சொன்ன இந்த வார்த்தை என் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் பொருந்தியே வந்துள்ளது. நீச்சல், கேரம், கிரிக்கெட், ஷட்டில் காக் இன்னும் நிறைய விஷயங்களில் அவர் உடனிருந்தே கற்றுக்கொண்டது அதிகம். நேர்த்தியுடன் டெகரேஷன் செய்வது, பசியறிந்து பந்தி பரிமாறுவது,…
முழுவதும் என் மனதில் நிறைந்து போன எனது சார், எனது ஆசிரியர் “மு.பிரபாகரன்” அவர்களுக்கு இன்று தமிழ்நாட்டின் மரியாதையான “நல்லாசிரியர்” விருது கிடைத்துள்ளது. மகிழ்ச்சி…




