அப்பனைப் பாடும் வாயால்…

பொதுவாக இணையத்தில் சண்டை போடுவதை பெருமளவு குறைத்துக் கொண்டு விட்டேன். அதனால் ஆகப் போவது எதுவுமில்லை என்ற ஞானம் கொஞ்சமேனும் கிடைத்திருக்கிறதுதான் காரணம். ஆனாலும் சமயங்களில் அந்த நிதானம் இழந்து எங்கேயாவது எதையாவது சொல்லத்தான் செய்கிறேன். நேற்றும் அப்படித்தான்.

விட்டல்தாஸ் ஸ்வாமிகள், இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பிரபல இஸ்லாமியப் பாடலை நாமசங்கீர்த்தன முறையில் பாடியிருப்பதைப் பற்றி ஒரு பதிவு. அதில் அதே போல் அல்லாவை நாம் தொழுதால் பாடலை டிஎம்கிருஷ்ணா பெஹாக் ராகத்தில் பாடி இருப்பதன் சுட்டியை அளித்திருந்தேன்.

அங்கு ஒரு பெண்மணி வந்து கர்நாடக சங்கீதத்தில் ஹிந்து மதக் கடவுளார்களைத் தவிர மற்ற எதையும் பற்றிப் பாடக்கூடாது. அப்படி எல்லாம் செய்தால் ஆண்டவன் தகுந்த கூலி கொடுப்பான் என்றெல்லாம் பேசினார். அதைக் கடந்து போக முடியாமல் நானும் தர்க்கத்தில் இறங்கினேன். சரி ஒன்றும் தெரியாத நான் சொன்னதைத்தான் கேட்க மறுக்கிறார். அவர் மரியாதை வைத்திருக்கும் யாரேனும் ஒருவர் சொன்னாலாவது கேட்பார் என்று நினைத்து ஒரு சுட்டியைத் தந்தேன். ம்ஹூம் அவர் கண்மூடிப் பூனையாய் தன் இருட்டு உலகத்திலேயே உழன்று கொண்டு இருக்கிறார். போகட்டும்.

அவருக்கு நான் தந்த சுட்டி திருமதி வேதவல்லி அவர்களின் ஒரு லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன். அவருக்கு ஏறத்தாழ எண்பது வயதான பொழுது அவர் பேசியது இந்நிகழ்வு. பாரம்பரிய பிராமணக் குடும்பத்துப் பெண்மணி, தன் வாழ்நாள் முழுவதும் அந்த சமூகத்தினரிடையே புழங்கி வந்தவர், கர்நாடக இசையின் பல உச்சங்களை அடைந்தவர், சங்கீத கலாநிதி என்ற பட்டம் பெற்றவர். பொதுவாக இப்படியானவர்கள் கர்நாடக இசையின் மேன்மையும் அதனை பக்தி மார்க்கத்தில் ஒரு பங்காகப் பார்ப்பவராகவே இருப்பார்கள் என்பது பொதுப்புத்தி. ஆனால் இவரது கருத்துகள் மிகவும் பரந்த மனத்தையும் நவீன எண்ண ஓட்டத்தை உடையவராக இருப்பதை நமக்குக் காட்டும்.

உதாரணமாக கர்நாடக சங்கீதத்தில் பக்தி என்பதைப் பற்றி அவர்கள் பேசும் பொழுது, “ராகம் பாடும் பொழுது ராமா கிருஷ்ணா என்று நினைத்தா பாடுகிறோம்? அழகாகப் பாடுவதன் மூலம் தானும் சுகமடைந்து கேட்பவரையும் சந்தோஷப்பட வைப்பதே நல்ல இசை” என்கிறார். இந்த நாற்காலிக்கு ஏன் வெள்ளை நிற உறை இல்லை என்று சங்கராபரணத்தில் பாடினாலும் அது நல்ல இசைதான் என்று தீர்மானமாகச் சொல்கிறார்.

எனக்குச் சொல்லித்தரப்பட்ட முறையில் நான் பாடி வருகிறேன். அந்த பாடங்களை மாற்றலாமே என சிலர் நினைத்து அதனைச் செய்தால் அதன் பின்னிருக்கும் இசை சேதமாகாத வரை அவர்கள் செய்வது அவர்களின் சுதந்தரம் என்று பெருந்தன்மையாக சொல்வது அவரது பண்பை பிரதிபலிக்கிறது. அதே சமயம் ராகங்களின் இயல்பு மாறாமல் இருக்க வேண்டும் என்னும் பொழுது அவரினுள் உள்ள கண்டிப்பான ஆசிரியர் வெளியே வருகிறார். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்று பேசும் பொழுது அவரது பணிவு போலித்தனமாக இல்லாமல் அவரின் உண்மை இயல்பு அதுவே என்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தனை வயதிலும் தனக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் கடத்தி விடவேண்டும் என்ற ஆர்வமும், தன் கலையின் மீதி கொண்ட பரிபூர்ண ஈடுபாடும் இருக்கும் திருமதி வேதவல்லி நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

விடியோவிற்கு நன்றி: பரிவாதினி குழுமம்

மற்றபடி, திருமதி. வேதவல்லி, தன் பேச்சினூடே, எதைப் பத்தி வேண்டுமானாலும் பாடலாம், தரஸ்தாயி போய் கத்த வேண்டாம்,மந்திரஸ்தாயியில் எவ்வளவு கீழே வேண்டுமானாலும் போகலாம், விளம்ப காலத்தில் பாடுவதே அழகு என்பதெல்லாம் கேட்டு குறிப்பிட்ட ஒரு பாடகர் உங்கள் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது!

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.