கூட்டிலிடு

நட்பையும் காதலையும் சொல்லும் ஒரு தமிழ் காதல் சஸ்பென்ஸ் புதினம் பற்றிய சிறு பதிவு


நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே! நட்பாய் பழகுவதற்கு யாரும் சொல்ல வேண்டியது இல்லை ஆனால் காதலை யாராவது முதலில் சொல்ல வேண்டும். அப்படி வார்த்தைகளால் சொல்ல வேண்டிய நேரத்தில் உணர வேண்டியது ஒன்று தான், காதல் இன்னொரு மனதில் இன்னும் பிறக்கவில்லை என்பதே. அதைச் சொல்லாத நேரத்தில், மனம் அந்த உறவை நட்பாய் நினைக்கும் என்றால் அந்த நினைப்பே இருவருக்கும் வலியைத் தரும்.

மழை எல்லாருக்கும் எதிரி அல்ல. அவர்களின் கதை வேறுவிதமானது. மழை அவர்களின் எதிரி. அது அவர்களின் முகமூடியை ஈரமாக்கும். முடிச்சுகளை வலுவாக்கும். இருவர் மனதிலும் ஒரே முகத்தை தோன்ற வைக்கும். தன் ஆயிரம் கைகளால் அவர்களை பலவீனமாகும்.

நான் அழுவதற்குள் வந்து பேசிவிடு என்று தனிமையில் துளைந்த மனங்களும், அன்பினால் அடிமையான பிறகு இருவருக்கும் சம அளவில் தண்டனை கொடுக்க நினைக்கும் இதயங்களும் வேறு வேறு திசையில் இருக்க, அந்த டைரி, முகவரியைத் துளைத்துவிட்டு பல மலைகள் தாண்டி மழை நாட்களில் அதன் முகங்களைத் தேடும் கதை. நட்பினை படித்துவிட்டு பாதியில் முடிய கைகளுக்கு தன் கடைசி பக்கங்களில் காதல் இருப்பதை காட்ட அவர்களைத் தேடி தெரியும் கண்ணில் தெரியும் ஒரு கதை.


லிட்டில் ஹார்ட் பைன் ஆர்ட்ஸ்

அவளை காண்பவர்கள், அவள் வாழும் உலகம் மிகப்பெரியது என்று எண்ணும் வண்ணம் அவள் கைகளும் கதையும் வண்ண மயமானது. செராமிக் பானைகளையும் ஜாடிகளையும் காதலித்து அவளுக்கான வாழ்க்கையைத் தேடிக்கொண்டாள். பார்வை இல்லாமல், தொடுதலில் அனைத்தையும் உணரும் அவள், தொடாமலே உணருவது அவனை மட்டும் தான். அவள் அவ்வளவு ஆழமாய் எதையும் தொட்டதில்லை.

அன்பு காட்டி யாரையும் அடிமையாக்க கூடாது. நீ ஏங்குற அன்பு உன்ன எதார்த்தமான வாழ்க்கையை வாழ விடாது. — எதார்த்தமானவர்களை தான் அவனும் இப்பொழுது தேடுகிறான்.


மியூசிக் ட்ரூப்

சந்தோஷமான கொஞ்சம் நாட்கள் வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நாட்கள். அந்த பெயரில்லாத மியூசிக் ட்ரூப்பின் அறைகள் அவர்கள் இன்றி ஒரு நாளும் அழகாய் இருந்ததில்லை. அதன் சுவர்களிடம் பேசினால் பல உண்மைகள் தெரியும். நூலகத்திற்கு அப்பறம் அந்த கல்லூரியில் அந்த மியூசிக் ட்ரூப் தான் பல ரகசியங்களைக் கண்டிருக்கிறது. மறக்க முடியாத நினைவுகளால் இசை அங்கு இரைந்து கிடக்கிறது. அதற்கு சொந்தமானவன் இன்னும் அங்கு தான் இருக்கிறான். இசையோடு அவளுக்காக.

சந்தோசம் என்பது வாழ்க்கையில் அவன் தலைக்கு மேல் தெரியும் விண்மீன் போல் இந்த இருளில் அது எங்கோ மின்னி மறைகிறது. ஏதோ அது இருப்பதாய் நம்மிடம் காட்டிக்கொள்கிறதே என்பதில் இங்குப் பலருக்கு சந்தோசம்.


துளைந்தவன்

அழகானவன். காதலைக் காதலாய் செய்தவன். தன் மூன்றாவது கண்ணால், உலகைப் படம் பிடித்தவன். கடலின் மறு கரையில் ஏதோ ஒரு கை அவனுக்காக மணலில் கோலமிட, மழையில் நனைந்த படி இந்தக் கரையில் அவன் காத்திருக்கிறான். அவனைத் தேடிப்பிடித்து ஒரு மன்னிப்பும் ஒரு நன்றியும் சொல்ல பலர் நினைக்க, அவன் தானாக துளைந்து விட்டான்.

கற்பனை கதைகளில் வருபவர்களைக் கண்டு தான் மனிதர்கள் அதிகம் கவலைப் படுகிறார்கள்.


ஆண்டவரின் பெயரால்

அவன் பாதர் ஆக வேண்டும் என்று யாரோ நினைத்தார்கள். அவன் காதலிக்க கூடாது என்று பாதர் நினைத்தார். அவன் செய்ததை காதல் தான் என்று அவள் நினைத்தாள். இவன் இந்த மூன்றையும் வெறுத்தான். விதி அவனை வெறுத்தது. அவன் வாழ நினைக்கும் பொழுதில் அந்த கடிதம் வந்தது.

நான் காமத்தில் மிதக்கிறேன் நீ கரையில் எனக்காக காத்திராதே. நான் நீ காதலிக்கும் படி நடந்திருந்தால் தண்டனையை உன்னை நேசிப்பவன் ஏன் தாங்கிக்கொள்ள வேண்டும். உன் வாழ்க்கையை அவனிடம் குடு. என் சந்தோசம் நீ வாழ்வதில் இருக்கிறது.


காதலன், நண்பன்

தண்டனைகள் தர வேண்டும் என்றால் இவனுக்குத் தர வேண்டாம். நட்பாய் காதலாய், அன்பைக் காட்டும் ஒரு பெரிய உறவாய், விதி வாழ்வில் சிலரை காட்டும். அந்த சிலரை மட்டும் தான் நாம் ஒதுக்குவோம். அதில் ஒருவன் இவன். குங்பு மாஸ்டர் என்றால் தெரியும். இவனை வேறு விதமாகவும் அழைக்கலாம் ஆனால் கோவப்படுவான்.

அவ உன்ன காப்பாத்துனா, உனக்கு தான் அவள காப்பாத்திக்க தெரியல


நட்பாய் இருந்தால் என்ன காதலாய் இருந்தால் என்ன ஆரம்பத்தில் இனிப்பாய் இருக்கும். கண்கள் மூடி சுவைக்க தோன்றும். கண்கள் திறக்கும் பொழுதில் சிறு சிறு தவறுகள் தெரியும். அதை மற்ற சொல்லி உரிமை கிள்ளும். அன்பினால் மாற்றவும் தோன்றும். கண்களுக்குத் தெரியாத படி கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிவிட்டு இறுதியில் நான் ஆரம்பத்தில் பழகியபடி நீ இன்று இல்லை மொத்தமாய் மாறிவிட்டாய் என்று சொல்லி பிரியும்.

சுயநலம் இல்லாத அன்பு எங்கும் இல்லை. இருப்பதை இருக்கும் படி விரும்புவதிலே அன்பு நிலைத்திருக்கிறது. நமக்குத் தகுந்தாற்போல் மாற்ற நினைக்கையில் அன்பு நம்மை மாட்டிவிடுகிறது. மோசமான ஒன்று தான் அன்பு.

அவர்கள் சேர்ந்து விட்டார்கள். அந்த அவர்கள் யார் என்பது தான் கேள்வி .

-அடைவோருக்கமுதன்

kootilidu, adaivorukamuthan, tamil novel.