பிலீவ்

மழை நின்றபின் கார்கள் தன் சிகப்பு மஞ்சள் விளக்குகளுடன் செல்லவில்லை என்றால், கண்ணாடி வழியாக மழையை ரசிப்பவர்களுக்கு பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் போகும். அருண், அவனை விட பெரிய மர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கண்ணாடியில் வழியும் மழை துளிகள் சிவப்பு மஞ்சள் என்று நிறம் மாரி வடிவத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.

அதிகம் ஒளி இல்லாத அந்த குளிரூட்டப்பட்ட அறை அவனை பலவீனமாகியது. நீண்ட நேரம் அவன் டேபிளுக்கு யாரும் வரவில்லை. அவனே எழுந்து சென்று அவன் ஆர்டரை சொன்னான்.

“ஒரு ரெஸ்பிபெர்ரி ரிப்பில் ”.. “ஒகே சார் ”

“இன்னைக்கு எதும் ஆபர் இல்லையா ?”

இவன் வறட்சியாய் சிரிக்குறான். கடைக்காரன் ஒரு விதமாய் விழிக்கிறான்.

“இன்னைக்கு தான இந்த கடையை ஆரமிச்சிங்க ? ஆரமிச்சு அஞ்சு வருஷம் ஆச்சுல்ல ”

கடை சிறுவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். அருகில் இருந்த பெரிய ஆள், வியப்பாய் பார்த்தான்.

“நான் முதல் கஸ்டமர் இல்ல , ஆனா உங்க கடைக்கு வந்த முதல் காதல் ஜோடி நாங்க தான்.” பெரிய சிரிப்பு. சின்ன அமைதி ..

“சொல்லப்போனா அன்னைல இருந்து தான் நாங்க காதல் ஜோடிகளானதே ” இதை மனதிற்குள் சொல்லிக்கொண்டு மெனு கார்டை பார்த்தான்.

“அவங்க வரலையா ?” சிறுவன் முகம் எல்லாம் சிரிப்பாய் கேட்டான்.

“நாங்க ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே சேர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடுறத விட்டுட்டம் ” அருண் சிரித்துக்கொண்டே அவன் டேபிளை கை காட்டிவிட்டு சென்று அமர்ந்தான்.

கண்ணாடியில் இப்பொழுது நீர் இல்லை. அவன் வரும் வரை அது காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், இமைகளில் இருக்கும் துளிகள் தொலைவில் இருக்கும் விளக்கின் ஒளியை பிரதிபலித்தது.

“சார் ..”

அவன் நிமிர்ந்து அமர்ந்தான். அந்த பெரிய ஆள் வந்து ஒரு தட்டை வைத்துவிட்டு சென்றான்.

அதில் இரண்டு ஐஸ் கிரீம் கப்புகள் இருந்து. அருகில் ஒரு சிறு காகிதம் இருந்தது. அவன் எடுத்து விரித்து பார்க்கையில் “Believe” என்று எழுதிருந்தது.

வாசலில் யாரோ கதவை திறக்க, மேலே இருந்த மணி அடித்தது.

- esu.

Show your support

Clapping shows how much you appreciated esu eswaran’s story.