நீ தானே என் காதலி

Haripriya Madhavan
Sep 5, 2018 · 1 min read

நீ தானே என் காதலி
இன்று உன் நினைவுகளில் திளைத்தேனடி..

அன்னம் பழகி நடை நடந்தபோது
அன்பாய் என்னை தாலாட்டினாய்..
பள்ளிக்கூடம் செல்லும் வயதில்
பல நூறு கதைகளால் காதோரம் வருடினாய்..
பருவமெய்தி பல வேஷம் போட
பகுத்தறிவை என்னுள் புனைந்தாய்!

நீ தானே என் காதலி
இன்று உன் நினைவுகளில் திளைத்தேனடி..

கனவுகள் வளர்த்தேன்
காதலை விதைத்தேன்
அன்று நேயர் விருப்பமாய் நான் உன்னை கைபிடித்தேன்..
இன்று ஒரு தகவல் வந்து சேர்ந்தது
சிறு ஊடல் ஒன்று நம்மை தூரத்தில் பிரித்து வைத்ததென்று..

நீ தானே என் காதலி
இன்று உன் நினைவுகளில் திளைத்தேனடி..

பலமுறை உன்னை தேடியும் கண்முன் தோன்றவில்லை
உன்னை மீண்டும் அடைந்த நொடி மனதிலிருந்து மறையவில்லை..
என் குரலை உன்னுள் கேட்டேன்..
நம்மை பலர் ரசிக்க, என்னையே மறந்தேன்!

நீ தானே என் காதலி
இன்று உன் நினைவுகளில் திளைத்தேனடி..

பொக்கிஷமாய் நீ கிடைத்தபோதும்
உன்னை பாதுகாக்க தெரியவில்லை..
உன்னை பிரிந்து செல்ல மனமுமில்லை
நீயோ இன்று என்னுடன் இல்லை..

உன்னை போல் ஒரு ஒலிச்சித்திரம் என் வாழ்வில் இனி இல்லை..
காற்றில் வரும் உன் அலைவரிசை இன்னும் அழியவில்லை.
உன்னை கை பிடிக்க தெரியாமல் ஏன் போனேனோ
ஒரே ஒரு முறை உன்னுள் மீண்டும் சேர்வேனோ..

என் ஒரு பட பாடல் நீ
பிரிந்திருந்தாலும் ..இன்றும்,இனியும்,எப்பொழுதும்
நீ தானே என் காதலி..
வானொலி..நீ தானே என் காதலி..!

Haripriya Madhavan

Written by

Cause Marketing; Media and Communications Professional; Brand Solutions; Radio Fanatic