அதென்ன KG Basin Scam!

Krishna Godavari Basin Scam!

அரசுத் துறை நிறுவனமான குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (GSPC) கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் ஆழ்கடலில் நிலவாயு இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி 2005 ஜூன் 26-ல் அறிவித்தார். அந்த வாயுவின் அளவு ரூ.2,20,000 கோடி மதிப்புள்ள 20 லட்சம் கோடி கன அடி (2 Million Cubic Feet) என்றார். 2007 டிசம்பரில் உற்பத்தி தொடங்கும் என்றும் நிலவாயு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுவிடும் என்றும்கூட மோடி அறிவித்தார். இப்போது ஆண்டு 2016. மோடி அறிவித்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகின்றன. அந்த வடிநிலத்திலிருந்து இன்னமும் ஒரு கன அடி நிலவாயுகூட எடுக்கப்படவில்லை.

இல்லாத வாயுவைக் கண்டுபிடித்து, வெளியில் எடுப்பதாக ‘பாவனை செய்ய’ அசாதாரணத் திறமையும், சூழ்ச்சி செய்யும் மனமும் தேவை. நடந்ததையெல்லாம் எவர் கண்ணிலும் படாமல் மறைக்க மிகுந்த திறமைசாலியாக இருக்க வேண்டும். இதுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநில வாயு மோசடியின் கதைச் சுருக்கம். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG of India) 5 அறிக்கைகளில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.19,700 கோடி மதிப்புள்ள இந்த ஊழலை, நாடே அறியாதபடி பார்த்துக்கொண்ட திறமைக்காகப் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டலாம்.

ஏன்? ஏனென்றால், அங்கு நிலவாயுவே கிடையாது! ஜி.எஸ்.பி.சி. என்ற நிறுவனம் இத்தனை ஆண்டுகளில் நிலவாயுவைத் தேட, தேடமட்டும்… ரூ.19,700 கோடியைச் செலவிட்டுள்ளது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை நிலவாயு ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் பல உலக அளவில் இதைப் போலத் தோல்வியில் முடிந்துள்ளன. உலகின் மிகச் சிறந்த நிறுவனங்கள்கூட இப்படி முயற்சி செய்து வெறுங்கையுடன் திரும்பியுள்ளன. எனவே, இதில் மோசடி எங்கே வந்தது? எண்ணெய் அல்லது நிலவாயுவைக் கண்டுபிடித்து எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே நிச்சயம் வெற்றிதரும் என்று கூற முடியாதவை, அதிக செலவுபிடிப்பவை. நிச்சயமாக நிலவாயு அல்லது எண்ணெய் கட்டுப்படியாகும் அளவுக்குக் கிடைத்துவிடும் என்பது நிச்சயமில்லைதான். நிலவாயுவோ எண்ணெயோ எதிர்பார்த்தபடி இல்லை என்று தெரிந்தால், உடனே துரப்பணப் பணியை (Exploration) நிறுத்திவிடுவார்கள் அல்லது சோதனை முயற்சிக்கு ஆகும் செலவைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வருவார்கள். ஜி.எஸ்.பி.சி. மேற்கொண்ட முயற்சி அப்படிப்பட்டதல்ல என்பதைத்தான் கீழே விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் தெரிவிக்கின்றன.

மிகுந்த முக்கியத்துவமும் மிக நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டியதுமான இந்த ஆய்வுப் பணிக்கு தொழில்நுட்பப் பங்குதாரராக ‘ஜியோகுளோபல் ரிசோர்சஸ்’ என்ற நிறுவனத்தைத்தான் ஜி.எஸ்.பி.சி. சேர்த்துக்கொண்டது. இந்நிறுவனம் 2 தனி நபர்களுக்குச் சொந்தமானது. கேரி சோபர்ஸ், கார்லோஸ் பிராத்வெயிட் என்ற 2 கிரிக்கெட் பிரபலங்களின் நாடான பார்படாஸ் தீவைச் சேர்ந்தது. ஜியோகுளோபல் நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் உள்ள ராய் குழுமம் என்ற நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. மொரீஷியஸ் நாடு எண்ணெய்த் துரப்பணப் பணிக்காக அல்ல, வரி ஏய்ப்பு செய்வோருக்கு சொர்க்கபுரி என்று அறியப்பட்ட நாடு. கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் நிலவாயுவை அகழ்ந்தெடுக்கும் சோதனை முயற்சி ஆரம்பத்திலிருந்தே ஏதோ துர்வாடையுடன்தான் தொடங்கியது.

2005 ல் இயற்கை நிலவாயு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், 2007 முதல் தயாரிப்பு தொடங்கிவிடும் என்று நரேந்திர மோடி 2005-லேயே அறிவித்தார். அறிவித்தபடி 2007-ல் அல்ல 2009-ல்தான் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலத்தில் நிலவாயுவை அகழ்ந்தெடுப்பது தொடர்பாகக் ‘கள வளர்ச்சித் திட்டம்’ தயாரித்து அளிக்கப்பட்டது.

வடிநிலத்திலிருந்த இயற்கை நிலவாயு எப்படி அகழ்ந்தெடுக்கப்படும் என்று சில நூறு பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை விவரித்தது.

நிலவாயு அகழப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு, எப்படி அகழப்படும் என்ற விளக்கமான அறிக்கை தயாரிக்கப்பட்ட காலம்வரையில் GSPC நிறுவனமானது அரசுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.4,800 கோடி கடன் வாங்கியிருந்தது.

வெறும் அறிக்கை தயாரிக்க ரூ.4,800 கோடி செலவு பிடித்திருக்க முடியாது!

வடிநிலத்தின் ஆழத்திலிருக்கும் எரிவாயுவைக் கண்டுபிடித்து எடுப்பதற்கு முன்னதாகவே இத்தனை கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது ஏன் ?

2009-ல் வெளியான திட்ட அறிக்கை, மோடியின் அறிவிப்பு அதிகப்படியான எதிர்பார்ப்பு என்று தெரிவித்துவிட்டு, அதில் 90% அளவைக் குறைத்தது. இந்த நிலவாயு அகழ்வுத் திட்டமே வீணான முயற்சி, ஒரு அலகுக்கு (எம்.எம்.பி.டி.யு.) 5.7 டாலர் என்று இந்த நிலவாயுவை விற்க முடியாதென்றால், நிலவாயு அகழ்வுப் பணியையே நிறுத்திவிடலாம் என்று வளர்ச்சித் திட்ட அறிக்கை கூறியது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட நிலவாயு விற்பனை விலை ஒரு அலகுக்கு 4.2 டாலர்கள்தான். எனவே, அந்த முழு திட்டமும் கட்டுப்படியாகாதது, பணத்தையும் நேரத்தையும் உழைப்பையும் விரயமாக்குவது. அப்போதைய நிலையிலேயே இந்த அகழ்வுப் பணி முயற்சியை அரசு கைவிட்டிருக்க வேண்டும். அப்படியிருந்தும் அப்போது குஜராத்தில் ஆட்சியில் இருந்த மோடி அரசு. GPSC யின் இறக்கைகளின் கீழ் அடைக்கலம் புகுந்த, சந்தேகத்துக்கிடமான பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க விரிவான திட்டத்தை வகுத்தது.

கிருஷ்ணா-கோதாவரி வடிநிலத்தில் இல்லாத வாயுவுக்காக எண்ணெய்த் துரப்பண மேடைகளில் பொருத்துவதற்காகத் துரப்பணக் கருவிகளை வாங்க கூட்டுச் செயல்பாட்டு நிறுவனம் முடிவெடுத்தது. துரப்பணக் கருவிகளை அளித்தே பழக்கப்பட்டிராத ‘டஃப் டிரில்லிங்’ (Tuff drilling) என்ற நிறுவனத்துக்குத் துரப்பண மேடைக் கருவிகளுக்கான ஒப்பந்தத்தை அளித்தது. இந்தியாவிலேயே மிகப் பெரிய நிலவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக மோடி அறிவித்ததற்கு வெகு நாட்களுக்குப் பிறகு, அதாவது 2007-ல்தான் ‘டஃப் டிரில்லிங்’ நிறுவனம் நிறுவப்பட்டது.

2015 மார்ச் வரையில் மட்டும் டஃப் டிரில்லிங் மற்றும் அதே போன்ற பிற நிறுவனங்களுக்கு ரூ. 5,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதி நிலவாயு உற்பத்திப் பணிக்காக ரூ.19,700 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது. அப்படியே நிலவாயு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதை நஷ்டத்துக்குத்தான் விற்றிருக்க முடியும். காரணம், அதை வெளியே எடுப்பதற்கு ஆகும் செலவைவிட மிகக் குறைந்த விலையில்தான் சர்வதேசச் சந்தையில் நிலவாயு கிடைத்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தி விலையைவிட விற்பனை விலை குறைவாக இருக்கும்பட்சத்தில் தயாரிப்பை மேற்கொள்வதைவிட சும்மா இருக்கலாம் என்பதை பணமும் வர்த்தகமும் தன் ரத்தத்தில் ஊறியவை என்று அறிவித்துக்கொண்ட தலைவரும் உண்மையிலேயே அறிந்திருப்பார். ஜி.எஸ்.பி.சி.க்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது?

1979-ல் குஜராத் மாநில அரசால் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.பி.சி. நிறுவனத்துக்கு 2007 மார்ச் 31 வரையில் கடன் என்பதே ஏற்படவில்லை. 2008 தொடங்கி 2015 வரையில் மொத்தம் ரூ.19,720 கோடியை 13 அரசுத் துறை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கிறது. இந்தப் பணம் முழுவதும் சந்தேகத்துக்கிடமான நிறுவனங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களின் உள்நோக்கம் என்னவென்பது தெரியவில்லை.

பிரதமரான பிறகு வாராக் கடன்கள் குறித்து வருத்தப்படவும் அரசு வங்கிகளிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்கள் குறித்துப் பேசவும் அவரால் முடிகிறது. உண்மையான வர்த்தகத்துக்கு அல்லாமல் வேறு எதற்காகவோ கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ள ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்களால்தான் அரசு வங்கிகளே வாராக் கடன் சுமையில் ஆழ்ந்து கிடக்கின்றன.

கிருஷ்ணா-கோதாவரி வடிநில ஊழல் என்பது, நிலவாயு கிடைத்துவிட்டது என்ற போலியான அறிவிப்பு மூலம், மாநில அரசுத் துறை நிறுவனத்தைப் பயன்படுத்தி நிலவாயுவை அகழ்வதற்காக அல்ல, கோடிக்கணக்கான ரூபாயை அரசு வங்கிகளிடமிருந்து கறப்பதற்காக என்று புரிகிறது. 2015-ல் தனது தணிக்கை அறிக்கையில் கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாக வாங்கிக்கொண்டு தேவையற்ற, பயனற்ற நிலவாயு அகழ்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதை தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பக்கம் பக்கமாகத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், செய்தி ஊடகத்திலோ மின்னணு ஊடகத்திலோ இதுகுறித்து ஒரு செய்திகூடக் கண்ணில் படவில்லை. இது அரசியல் நோக்கில் கூறப்படும் குற்றச்சாட்டு அல்ல. இவை அனைத்துமே ஆதாரபூர்வமான பல ஆவணங்களிலிருந்து திரட்டப்பட்டவை.

செபி நிறுவனத்திடம் ஜி.எஸ்.பி.சி. நிறுவனம் அனுமதி கோரி அளித்த ஆரம்பகால பங்கு விற்பனை உட்படப் பல சான்றுகள், ஜியோ குளோபல் நிறுவனம் செபியிடம் அமெரிக்காவில் தாக்கல் செய்த தகவல்கள், கம்பெனிகள் நடவடிக்கைக்கான துறை அமைச்சகப் பதிவேடுகள் உள்ளிட்ட பல ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இந்த ஊழல் பற்றி — ஊழல் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் இதை அழைக்க முடியாது -உச்ச நீதிமன்றத்தில் இப்போது பணிபுரியும் நீதிபதியைத் தலைவராகக்கொண்டு உடனடியாக விசாரிக்க வேண்டும்.

பணமும் வர்த்தகமும் என் ரத்தத்தில் ஊறியவை — 2014-ல் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது அந்நாட்டு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமைப்படப் பேசியது இது. அந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அவர் தன்னைப் பற்றி மிகையாகவோ ஜோடனையாகவோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இந்த அரிய குணத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் நடந்த இயற்கை நிலவாயுக் கண்டுபிடிப்பு மோசடி.

Reference: Jayaram Ramesh, Article on KG Scam, The Hindu

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.